இந்திய வீரர் வசிம் ஜாபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

jaffer

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வு திட்ட அடிப்படையில் மும்பை வீரர் வசிம் ஜாபருக்கு 60 லட்ச ரூபாய் கிடைக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில், கடந்த 2004-05ம் ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஒரே முறை மட்டும் ஓய்வூதிய திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி கபில் தேவ், கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் பலன் அடைந்தனர். இப்போது குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெறவில்லை என்றாலும் பணம் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் படி 31 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 211 முதல் தர போட்டிகளில் பங்கேற்று, இன்னும் ஓய்வு அறிவிக்காத வசிம் ஜாபருக்கு 60 லட்சம் கிடைக்கவுள்ளது.

இதேபோல சஞ்சய் பங்கர் 50 லட்சம், சுழற்பந்து வீச்சாளர் சாய்ராஜ் பகுதுலே 30 லட்சம், அமோல் மஜூம்தார் 30 லட்சம், தமிழக வீரர் ஸ்ரீராம் 30 லட்சம் பெறவுள்ளனர்.

500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெண்ணை ஆண் என்று கூறிய ஊழியர்!!

bbay

தமிழ்நாட்டில் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்ட ஊழியர் ஒருவர் ஆண் குழந்தையை பெண் குழந்தை என்று கூறியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாநகரைச் சேர்ந்தவர் கொத்தனார் பழனிக்குமார். பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது மனைவி தேவிகாவுக்கு நேற்றுமுன்தினம் குழந்தை பிறந்தது.

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் 500 பெண் எனில் 300 என லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. பழனிக்குமாருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி மருத்துவமனை ஊழியர் முனியம்மாள் 500 வாங்கிக் கொண்டார்.

பின்னர் குழந்தையைப் பார்க்கும் ஆவலில் வார்டுக்குள் சென்று மருத்துவர்களிடம் கேட்டபோது பெண் குழந்தை பிறந்தது என்றனர்.
அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் தனது குழந்தையை மாற்றி விட்டதாகக் கூறி மருத்துவமனை பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டீன் மோகன் உத்தரவில் விசாரணை நடத்தியதில் பணத்திற்கு ஆசைப்பட்டு முனியம்மாள் பொய் சொன்னது தெரிந்தது.
டிஎன்ஏ சோதனை நடத்தி உறுதி செய்தால் மட்டுமே பெண் குழந்தையை ஏற்பேன் என பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோர் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகளை சேகரித்து சோதனை மூலம் குழந்தை உறுதி செய்யப்பட்டது. 500 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் முனியம்மாள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பிக்கள்!!!

London

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அவர்களது உதவியாளர்களும் கூட ஆபாச படம் பார்த்துள்ளனர்.

கடந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆபாச இணையதளங்களை பார்த்துள்ளதாக பிரபல நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு 820 ஆபாச இணையதளங்களை இவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அதேசமயம் இவர்கள் வேண்டும் என்று இவற்றைப் பார்க்கவில்லையாம்.
மாறாக ஏதாவது இணையதளத்தைத் திறக்கும்போது வரும் போப் அப் சைட்களைத்தான் போய்ப் பார்த்தார்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதிலிருந்து ஆபாச தளங்களை பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது உதவியாளர்களும் நிறைய நேரத்தை செலவிடுவதாக தெரியவந்துள்ளது என இங்கிலாந்து வரி கட்டுவோர் அமைப்பை சேர்ந்த மாத்யூ சின்க்ளேர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை விட்டு விட்டு மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க நேரத்தை செலவிட்டால் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

வயது ஒரு தடையல்ல : யுவராஜ் சிங்!!

Yuvraj-Singh

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலகக் கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருது வென்றார்.
இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்ட 31 வயதான இவர், 2012 T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது போம் இல்லாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2015 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இவர் சமீபத்தில் பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 32வது வயதை எட்ட உள்ள இவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் விரைவில் 32வது வயதை எட்டப் போகிறேன். இருப்பினும் டெஸ்ட், ஒருநாள் T20 என்று மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். தற்போது உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

ரஞ்சிக் கிண்ணத் தொடருக்கு முன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன். இதன் மூலம் இழந்த போமை மீட்டு விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்.

இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் நிறைய உள்ளனர். இவர்கள், இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு நிறைய உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளம் வயதில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை. எந்த வயதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, வேகப்பந்துவீச்சாளர் ஷகிர் கானுக்கு தாமதமாகத் தான் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் நிறைய போட்டிகளில் வெற்றி தேடித் தந்தார் என்றும் 2015ல் நடக்கவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனவும் கூறினார்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு!!

Vishwaroopam-2

கமலஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்துக்கும் இதுபோல் சர்ச்சைகள் ஏற்பட்டன. முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிய பிறகு படம் வெளியானது. அதுபோல் விஸ்வரூபம் 2 படமும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த படத்தையும் கமலே இயக்கி நடித்துள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் 2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும் விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.

சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும் காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் 2 திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து (வீடியோ, படங்கள்)!!

இங்கிலாந்தில் 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுவதால் பகல் வேளையிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் முகப்பு வெளிச்சத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இவ்வாறு 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 200 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1

2 3 4 5 6 7

விஷாலின் மதகஜராஜா படத்துக்கு சிக்கல் : ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு!!

madha gaja raja lyrics magicalsongs

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மோதலால் மதகஜ ராஜா படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்துள்ளனர். சுந்தர். சி இயக்கியுள்ளார். இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பு கடந்த ஜனவரியிலேயே முடிந்து விட்டது.

பொங்கல், தமிழ்புத் தாண்டு என எதிர்பார்த்தும் படம் ரிலீசாகவில்லை. நிதி நெருக்கடியால் தள்ளிப் போவதாக கூறப்பட்டது. இறுதியாக நாளை ரிலீசாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடந்தது.

இதற்கிடையே மதகஜ ராஜா படத்தை பெரும் தொகைக்கு விலைபேசி விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் வெளியிட வாங்கி விட்டார்.இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஜெமினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ரிலீஸ் செய்யக் கூடாது என்று விநியோகஸ்தர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மீதியை கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கூறுகிறார்களாம். விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு தரப்பினருக்கும் இரு தினங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்கிறது.

குஷ்பு தனது டுவிட்டரில் மதகஜராஜா படம் ஒரு நாள் தாமதமாக நாளை (7ம் திகதி) ரிலீசாகும் என குறிப்பிட்டு உள்ளார். விஷாலுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.

செப்.7ம் திகதி பிரபல தயாரிப்பாளர் இராம.நாராயணன் இயக்கத்தில் உருவான ஆர்யா- சூர்யா என்ற படமும் ரிலீஸ் ஆகிறது.

ஆணையிறவு விபத்தில் இராணுவ வீரர் பலி ,15 பேர் காயம்(படங்கள்)!!

கண்டி நெடுஞ்சாலையில் ஆணையிறவுக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார் 15ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆணையிறவுக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிரில் வந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் நேற்று இரவு 9.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஆனையிறவு பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் உழவு இயந்திரத்தை மோதி தள்ளியது.

இதனால் நிலை தடுமாறிய உழவு இயந்திரம் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது இதனால் இ.போ.ச. பஸ் தலைகீழாக தடம் புரண்டது.

இவ் விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதில் 7 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1

2

3

தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ்!!

swiss-flag

உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் 10வது இடத்திலும் உள்ளது.

ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி காணப்படுவதாக WEF உலகளாவிய நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதில் எவற்றையும் குறிப்பிட்டு கூற இயலாது. இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தெரிவு செய்வதற்கு 12 காரணிகளை கையாண்டுள்ளோம்.

அதில் தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள், சந்தை திறன், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

செப். 9ம் திகதிவரை நாட்டில் பரவலாக மழை!!

rain

நாட்டில் செப்டெம்பர் 9ம் திகதிவரை காற்றுடனான மழை பாங்கான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் மழை பரவல் அடையும் எனவும் நாட்டிலும் நாட்டின் அண்மித்த பகுதிகளிலும் கடும் காற்று மணிக்கு 60கி.மீ வரை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தில் பருவகால காற்று தென்மேற்கு திசையில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சத்யராஜை கஷ்டப்பட்டு கலாய்த்தேன் : சிவகார்த்திகேயன்!!

siva

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இப்படத்தில் இவருடன் சூரி, சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது அழகான கிராமத்தில் நடக்கும் காமெடியான கதை இது. நான் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவராக நடிக்கிறேன். இந்த சங்கத்தின் செயலாளராக சூரி நடித்திருக்கிறார்.

அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் நாங்கதான் முன்னால நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான் கொடிகட்டி பறக்கும். இது பிடிக்காமல், எங்களுக்கு எதிராக முறுக்கிட்டு நிற்கிறார் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ். அதன்பிறகு எங்கள் இரண்டு அணிக்கும் நடக்கிற ஜாலியான மோதல்கள்தான் படத்தோட கதை.

சத்யராஜ் சாரை பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவரோ ரொம்பவும் சகஜமாக பழகினார். ஒரு சீன்ல அவரை கலாய்க்கலாம்னு என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று அவர் ஸ்டைல்ல சொன்னேன். அவர் ரொம்பவும் ரசிச்சார்.

ரொம்பவும் தெனாவட்டாக, கெத்தாக திரியுற என்னோட கதாபாத்திரமும், எனக்கு எதிராக இருக்கிற சத்யராஜ் சார் கதாபாத்திரமும் ரொம்பவும் பேசப்படும். இந்த படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. இடைவெளியே இல்லாம சிரிக்க வைக்கும் என்றார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் : மு.க.ஸ்டாலின்!!

mk-stalin-stills-photos-01-2

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,

கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து

பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை.

ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும் தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது.

எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள் பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால் உனக்கு அது என்ன லாபமா என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று கருத்து கூறியுள்ளார்.

கேள்வி: நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?

பதில்: நடிகர்கள் மட்டுமல்ல வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.

இது ஜனநாயக நாடு. இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் கைது!!

arrest1

பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த, கொட்டாவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெஹேரஹெர பிரதேச விடுதியொன்றில் பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இவரை கைதுசெய்துள்ளனர்.

முதலாம் ஆண்டுக்கு பிள்ளையை சேர்த்துக் கொள்வதற்காக தாய் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐநா தலைமையகத்திற்கு முன் தமிழர் தீக்குளித்து மரணம்!!

Man-on-fire

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று அதிகாலை தீக்குளித்த தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற தமிழர் ஒருவர் உடலில் தீயைப் பற்றவைத்துள்ளார். அந்தப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று குறித்த நபரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தீக்குளித்தவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகள் நடந்துவருவதாகவும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்திருந்த நிலையில் தீக்குளித்த நபர் மரணமடைந்துள்ளதாக ஜெனிவா பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீக்குளித்தவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ பாதுகாப்பு துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

எனினும் உயிரிழந்தவர் 35 வயதான செந்தில்குமரன் ரட்ணசிங்கம் என தமிழ்நெட் இணையம் தெரிவித்துள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வல்லிஸ் – செயின் நகரில் வசித்து வந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகை சூடவா படத்திற்கு புதுச்சேரி மாநில விருது!!

Vaagai_Soodava

மத்திய அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தியத் திரைப்பட விழா-2013 என்ற நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள முருகா திரையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் 2012ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது. இதில் புதுவை முதலமைச்சர் ந.ரங்கசாமி கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைப்பதோடு விருது வழங்கியும் சிறப்புரையாற்றவுள்ளார்.

இவ்விழாவில் 2012ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது விமல், இனியா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த வாகை சூடவா படத்திற்கு கிடைத்துள்ளது. இதற்காக அப்படத்தின் இயக்குனர் எ.சற்குணத்திற்கு 1 லட்சம் ரூபாய் பரிசு பணமும், வெள்ளி கேடயமும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது வாகை சூடவா சிறந்த திரைப்படத்திற்காக புதுச்சேரி அரசின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

103 வயது முதியவருக்கு எலும்பு மாற்று சிகிச்சை : மருத்துவர்கள் புதிய சாதனை!!

bone

ஆந்திர மாநிலத்தில் 103 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

1910ம் ஆண்டு சஹீராபாத்தில் பிறந்தவர் மணிக்யம். தற்போது 103 வயதாகும் இவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மணிக்யமிற்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மணிக்யம் வீதியில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று துரத்தியதில் கீழே விழுந்து இடுப்பில் அடிபட்டுள்ளது.

அவரைப் பரிசோதித்த செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவரது இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

103 வயதான அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதே மிகவும் சவாலான காரியமாக இருந்தபோதும் கட்டாயம் அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அவரது உடல்நிலை.

மணிக்யத்தின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மருத்துவர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று, அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு மணிக்யத்திற்கு லேசான ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு தவிர உடல் கோளாறு எதுவும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர்கள் அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.