ஜேர்மன் விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானமானது தீப்பிடித்து எரிந்ததில் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளன.
ஜேர்மன் நாட்டில் உள்ள லேய்ப்ஜிக் என்ற விமான நிலையத்தில் கோழிக்குஞ்சுகளை எடுத்துச் சென்ற சரக்கு விமானம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து குறித்து செய்தி தொடர்பாளர் யுவ் ஸ்ச்கார்ட்(Uwe Schuhard) கூறுகையில், இந்த விபத்தில் அதிகமான தீப்பிழம்புகள் வெளியானதால் 1000 கோழிக்குஞ்சுகள் பலியாகின.
தீப்பிடித்து Antonov A12 விமானம் வெடித்ததையடுத்து 15 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 60 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர் என்று கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த விசாரணையானது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர் முதலிடம் பெற்று, உலகச் சம்பியன் என்கிற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார்.
நூறு மீட்டர் ஓட்டத்தை அவர் 9.77 நொடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடம் அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டினுக்கு சென்றது. அவர் ஓடிய நேரம் 9.85 நொடிகள்.
வெண்கலப் பதக்கத்தை உசைன் போல்ட்டின் சக நாட்டவரான நெஸ்டா கார்ட்டர் வென்றார்.
இந்தப் போட்டியில் முதல் 50 மீட்டர்கள் வரை ஜஸ்டின் கால்டின் போல்ட்டைவிட சற்று முன்னணியின் இருந்தார். எனினும் அடுத்த 50 மீட்டர்களில் போல்ட் தனது வேகத்தைக் கூட்டி வெற்றி பெற்றார்.
நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதியில் ஓடிய எட்டு பேரில் நாலவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவின் டேகு நகரில் இடம்பெற்ற உலகத் தடகளப் போட்டிகளின் இறுதி ஓட்டத்தின் போது, துபாக்கிச் சுடப்படுவதற்கு முன்னரே ஓடத் தொடங்கியதால் போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தப் போட்டியில் அவருடன் பயிற்சி பெறுபவரும் சக நாட்டவருமான யொஹான் பிளேக் வென்றார்.
மாஸ்கோவில் உசைன் போல்ட் 200 மற்றும் 100 மீட்டர் தொடரோட்டத்திலும் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரையே கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்து வந்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட வேலு இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது மனைவி சின்னமுனியம்மாள்(35), மகள் முத்துச்செல்வி(12) மகன் முனியாண்டி(10) ஆகியோரை அரிவாளால் சரமரியாக வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி சின்ன முனியம்மாள், மகள் முத்துச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மகன் முனியாண்டி கையில் வெட்டுக் காயங்களுடன் உறவினர் வீட்டிற்கு தப்பித்து சென்றுள்ளான். அங்கும் சென்ற வேலு தன் மகனையும், உறவினரான மூதாட்டி தனலட்சுமியையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனை அறிந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து திருச்சி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்பு காயம் அடைந்த முனியாண்டி மற்றும் மூதாட்டி தனலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த சின்ன முனியம்மாள், முத்துச்செல்வி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து வேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு காமெங்க் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் 4வது பட்டாலியன் படைப்பிரிவு முகாமிட்டுள்ளது.
நேற்று இந்த படைப்பிரிவைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 5 பேர் ஜெய்ஜோசா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 5 பேரும் தனித்தனியாக வேட்டையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தூரத்தில் கரடி நடமாடும் சத்தம் கேட்டது.
இதனையடுத்து சத்தம் கேட்ட பகுதியை நோக்கி சுட்ட போது, அங்கிருந்த வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.
ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது.
இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராஜா, தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தவில்லை என்று கூறினார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு களமாக அமையும் என்ற காரணத்தினாலேயே இந்தத் தேர்தலில் பங்கு பெறுவதாகவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், அஹிம்சை வழி போராட்டம், ஆயுதப் போராட்டம் என்ற வகையில் மூன்றாம் கட்ட போராட்டமாக மாகாண சபைத் தேர்தல் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டத்தின்போது, அது ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்று கூறி, சர்வதேசம் அதனை ஏற்கவில்லை என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேர்தலின் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டிருக்கின்றோம் என்பதை சர்வசேத்திற்கு எடுத்துக் காட்டி அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சியை சென்றடைந்தன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.
கிளிநொச்சிக்கான புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் காலம் கோடைக் காலமென்பதால் குறித்த போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றது என கால்பந்து சங்கத் தலைவர் க்ரெக் டைக் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த காலப்பகுதிக்கு ஏற்றவாறு போட்டிகளை நடாத்த தயார் என கட்டார் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் அரங்குகள் முழுவதும் குளிரூட்டப்பட்டு காணப்பட்டாலும் , ரசிகர்களுக்கான வசதிகள் போதுமானதாக அமையாது என க்ரெக் டைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து போட்டிகள் இடபெறுவதற்கான திகதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரேன் எலண்ட் என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றும் வல்லமை பொருந்தியவர்.
இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே அவற்றினை தத்துரூபமான ஓவியங்களாக மாற்றிவிடுவாராம்.
ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை வைத்து இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
கிரான் கனேரியா தீவுக்கு விடுமுறைக்காகச் செல்லும் நடுத்தர வயது பெண் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற விபரத்தை கூறும் ‘லாஸ் பால்மாஸ்’ என்ற குறுந்திரைப்படத்திற்கான ட்ரைலரே இதுவாகும்.
கவர்ச்சி நடிகை மறைந்த சில்க்ஸ்சுமிதாவின் வாழ்க்கை “சில்க் சக்கத் ஹாட்” என்ற பெயரில் கன்னடத்தில் படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே இந்தியில் டேட்டி பிக்சர் என்ற பெயரில் வந்தது. இதில் சில்க்ஸ்சுமிதா வேடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் நடித்துள்ளார்.
கடந்த வாரம் இப்படம் கர்நாடகா முழுவதும் ரிலீசானது. இதற்கு ஸ்ரீராம சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரி நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் நடித்துள்ளதால் இப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டங்கள் நடத்தினர்.
மங்களூர், மைசூர், பெல்காம் பகுதிகளில் தியேட்டர்களில் புகுந்தும் ரகளையில் ஈடுபட்டனர். தியேட்டர் அதிபர்களும் மிரட்டப்பட்டார்கள்.
இதையடுத்து கோர்ட்டிலும் ஆபாச காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்க் சக்கத் படத்துக்கு செப்டம்பர் 10ம் திகதி வரை தடை விதித்து தீர்ப்பு கூறினார். இதனால் படத்தின் இயக்குனர் திரிசூல் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடிகை நடித்தார் என்பதற்காக எனது படத்தை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
வீரேந்த ஷேவாக் மிகச் சிறந்த அதிரடி வீரர். கெளதம் கம்பீரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர். ஆனால் இருவரும் தற்போது அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ஷிகர் தவான், ரோகித் சர்மா சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதனால் ஷேவாக், கம்பீரை தேர்வு குழுவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
கடைசியாக ஷேவாக் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐதராபாத் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடினார். கம்பீர் ஜனவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
இந்த நிலையில் ஷேவாக், கம்பீர் எதிர்காலம் முடிய வில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிரண் மோரே கருத்து தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஷேவாக், கம்பீர் ஓட்டங்களை குவிக்க சிரமபட்டதால் நீக்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகின்றனர். ஷேவாக் எதிரணி பந்துவீச்சை நிலைகுலைய வைக்கும் திறமை உள்ளவர். தற்போதும் அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதே நிலையில்தான் கம்பீரும் உள்ளார்.
அவர்களது எதிர்காலம் இன்னும் முடியவில்லை. ரோகித் சர்மா திறமையான வீரர்தான். ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அதிக பயிற்சி தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.
ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது..
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டதும் துடித்துபோய்விட்டேன். வாழ வேண்டிய ஒரு இளம் தளிர் இன்று சருகாகி கிடக்கிறது.
என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன்.
விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மையென்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மட்டுமே செலுத்த முடியும் என புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர முச்சக்கரவண்டிகளை செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விதிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கமைய வலது புறமாக முச்சக்கரவண்டிக்குள் பிரவேசிக்கவே அதிலிருந்து இறங்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை முச்சக்கர வண்டியில் பின்புறம் இடது பக்கத்தில் மிகவும் தெளிவாக காட்சிபடுத்த வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதிற்கு குறைவான இரண்டு சிறுவர்களை ஒரு பயணி என்ற அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிக்குள் நேர் எதிரே ஆசனங்களை பொருத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சாரதியை தவிர்ந்த வேறு நபர்கள் சரதிக்கான ஆசனத்தில் அமர்ந்துச் செல்வதற்கு முச்சக்கரவண்டிக்குள் இருந்தவாறு கையேடுகளை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிக் கருவிகள் அல்லது வேறு உபகரணங்களை முச்சக்கரவண்டியில் பயன்படுத கூடாது விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து பயணிகளும் சாரதி வினவும் பட்சத்தில் செல்வதற்கு உத்தேசித்துள்ள பயணம் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் மானியில் குறிப்பிடப்படுகின்ற மொத்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டுமெனவும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முச்சக்கரவண்டியை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் மானிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையம் 2200 கோடி இந்திய ரூபாயில் அண்மையில் கட்டப்பட்டது. இந்தநிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
300 அடி நீளமும் 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மழை மற்றும் ஏசி தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னால் இதே பகுதியில் மேற்கூறை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.