சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து : இருவர் மாயம்!!

பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தர பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆட்களை ஏற்றி சென்ற சுற்றுலாப் படகு ஒன்றும் பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகு ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தர பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் படகிலிருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரவு நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதால் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

வீடின்றி குழந்தைகளுடன் காட்டில் வாழ்ந்த குடும்பத்திற்கு கைகொடுத்த நபர்கள்!!

ஹந்தான பிரதேசத்தில் வீடு இல்லாத காரணத்தால் புதிதாக பிறந்த மூன்று குழந்தைகளுடன் மரத்தில் கட்டப்பட்ட குடிலில் இரவைக் கழித்த தம்பதியினருக்கு நேற்று (22) புதிய வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்த பெற்றோருக்கு மற்றொரு மகள் உள்ளதால், புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகளை சரியான முறையில் கவனித்துக் கொள்ள பொருத்தமான வீடொன்று இருக்கவில்லை.

அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட குடிசைக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மரத்தின் மேல் இரவைக் கழிக்க அழைத்துச் செல்கிறார்கள்.

கடந்த காலங்களில் குறித்த குடும்பத்தின் அவலநிலை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

நிலையில் குறித்த குடும்பத்திற்கு வீடமைக்கும் பணியினை ஹந்தான சந்தகிரி சே விகாரையின் விகாராதிபதி கங்கசிரிபுர தம்மாலோக அந்த நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பங்களிப்பைப் பெற்று, 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டின் நிர்மாணப் பணிகளை மூன்று மாதங்கள் கடப்பதற்குள் பூர்த்தி செய்ய ஹந்தான சந்தகிரி சே தேரரால் முடிந்தது.

அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த மண் குடிசையில் குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை. அதேவேளை குழந்தைகளின் தந்தை மரத்தில் கட்டப்பட்ட குடிலில் இருந்து விழுந்து காயமடைந்தும் உள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு புதுவீடு வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு!!

உலகின் இரண்டாவது பாரிய வைரம் தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப்( Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவிலுள்ள கெய்ரோ (Cairo) சுரங்கத்திலே 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1905 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 கரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய வைரம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1758 கரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வைரத்தை பிரான்ஸ் பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது. ஆனால், அதன் விலையை வெளியிடவில்லை.

முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 கரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஒரு பிரித்தானிய நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போட்ஸ்வானா உலகின் மிகப்பாரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளதோடு, உலகின் வைரத்தில் 20% இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் 97 வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண் : குவியும் பாராட்டு!!

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

களனி ரஜமஹா விகாரையின் தலைவரும், களனி பல்கலைக்கழக வேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரோபா இந்த முதுகலைப் பட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.

லீலாவதி அசிலின் தர்மரத்ன என்பவர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்ப கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.

இதன்பின்னர் உயர்தரத்தில் சித்திப்பெற்று ஆசிரியர் பணியில் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை என்றும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

யாழில் பரிதாபமாக உயரிழந்த ஒரு வயதுக் குழந்தை!!

யாழில் (Jaffna) காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது.

இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 

மனைவியும் மகனையும் கத்தியால் குத்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!!

இரத்தினபுரியில் மனைவியும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் மனைவி உயிரிழந்ததுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிவிதிகல தெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் உயிரை மாய்த்துள்ளார்.

மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மூத்த மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் அந்த நபர் வீட்டின் மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

48 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது மனைவியான 39 வயதுடைய பெண்ணுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மகனுக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் பலத்த வெட்டுக்காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர். நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடற்கூற்று பரிசோதனையில் தாமதம் : பெற்றோர் ஆதங்கம்!!

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிசுவின் தந்தை கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி வவுனியா, செட்டிகுளம், பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதி ஒருவர் பிரசவத்திற்காக வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சத்திரசிகிச்சை மேற்கொண்டு சிசுவை எடுத்துள்ளனர்.

எனினும் சிசு உயிரிழந்துள்ளது. வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்களின் அசமந்தப்போக்கே தமது சிசு மரணமடையக் காரணம் என தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (21.08) மாலை வவுனியா மாவட்ட நீதிபதி சிசுவின் உடலை பார்வையிட்டதுடன், தந்தையின் வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார்.

நேற்று (22.08) யாழ் வைத்தியசாலையில் கடமையர்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தை ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க வவுனியா நீதிமன்று உத்தரவிட்டது.

எனினும், குறித்த சிசுவின் உடலை கொண்டு செல்ல வவுனியா வைத்தியசாலையினர் நோயாளர் காவு வண்டியையோ அல்லது வேறு வாகனத்தையோ கொடுக்க மறுத்துள்ளதால் சிசுவின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவில்லை.

பெற்றோர் அதனை தாம் கொண்டு செல்ல முடியாது எனவும் வைத்தியசாலையின் தவறுக்கு அவர்களே கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சிசுவின் சடலத்தை பொறுப்பேற்கவில்லை.

இதனால் பிறந்து ஒரு நாள் கூட மண்ணில் வாழாத சிசு மரணித்த பின் இரண்டாவது நாளாகவும் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ளது. இது குறித்து பெற்றோர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தென்னிலங்கை வைத்தியசாலையொன்றில் சிறுவனுக்கு நேர்ந்த கதி : ஆத்திரமடைந்த தந்தை!!

இலங்கையின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் மாத்தறை கிளையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக சிகிச்சை பெற சென்ற சிறுவன் ஒருவருக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். சிறுவனின் கையில் ஏற்பட்ட முறிவிற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரின் தந்தை சிறுவனை குறித்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அத்துடன், அதற்கான கட்டணமாக 4,000 ரூபாவும் அவரால் செலுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, சிறுவனுடன் சிகிச்சை அளிக்கும் பகுதியில் காத்திருக்குமாறு வைத்தியசாலை ஊழியர்களால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், 4 மணிநேரத்திற்கு பின்னரும் சிறுவனை பார்வையிட வைத்தியர் எவரும் வராததால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.

இதன் பின்னர், சிறுவனின் தந்தை அனுமதிக் கட்டணமாக செலுத்தப்பட்ட 4,000 ரூபாவையும் ‘X-Ray’ அறிக்கையையும் தருமாறு வைத்தியசாலை ஊழியர்களிடம் கேட்டு அதனை நேரலையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு இவ்வாறு இரண்டாவது முறையாக இதே வைத்தியசாலையில் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கவனயீன பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (22.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 752,843 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 212,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 194,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,240 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 185,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் மேலாடையின்றி தோசை தயாரித்தமையால் சர்ச்சை!!

கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், இரண்டு குற்றச்சாட்டுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்துள்ளனர்.

“கமே கடை, தோசை கடை” உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படும் பல உணவுக் கடைகளுக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேனவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரித்தல், அசுத்தமான முறையில் உணவை சேமித்தல், பூச்சிகள் கொண்ட உணவு விற்பனை செய்தல், அசுத்தமான நிலையில் உபகரணங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்தல், கழிவுகள் வடிகாலில் செல்வதைத் தடுத்தல், குப்பைத் தொட்டிகளைத் திறந்து வைத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாம்பை கடித்துக் கொன்ற குழந்தை!!

பாம்பென்றால் படையும் நடுங்கும் எந்பது பழமொழி. ஆனால் இந்தியாவின் பீகாரில் ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த நிலையில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விளையாட்டுப் பொருள் என பாம்பை கடித்த குழந்தை
வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.

குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். குழந்தை கடித்ததில் பாம்பின் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதேளை அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் , குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவில் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த பெண் சடலமாக தோண்டியெடுப்பு!!

நுவரெலியா (Nuwara Eliya) – ஹங்குராங்கெத்த பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 6 மாதங்களாக காணாமல்போயிருந்த நிலையிலேயே இன்றைய தினம் (21.08.2024) கோனப்பிட்டிய – சீனாக்கொலை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதான, மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

இவர் அக்கரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் இடமாற்றம் காரணமாக கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறிருக்கையில், அவர் காணாமல்போயுள்ளதாக அவரது கணவரால் ஆறு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைக் கைது செய்ததுடன், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர், பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி இன்று வலப்பனை நீதவான் சியபத் விக்ரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்ய உள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா – விளக்கு வைத்த குளம், ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (21.08.2024) இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் ரக வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பத்தின் போது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்!!

தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் 9 ஆவது கிமீ 80 தூண்களுக்கு இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும், மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்கத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது 21 வயது மகன் காரை செலுத்தி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்!!

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை கைதுசெய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட பொருட்களுடன் வெளியேற முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் மருத்துவர் தடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் அங்காடியின் நிர்வாகத்திடம் அழைத்துச்செல்லப்பட்டு சோதனையிடப்பட்டபோது, அவரது பையில் இருந்து பணம் செலுத்தப்படாத சொக்லேட்டுகள், ஒரு பால் பவுடர் டின் மற்றும் சொசேஜ் என்பன மீட்கப்பட்டன.

இந்தநிலையில் அவர் ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பொருட்களை திருடிய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மருத்துவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 200,000 சரீரப்பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் உடலை பார்வையிட்ட நீதிபதி!!

வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று (21.08.2024) மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.