தந்தை வெளிநாட்டில் : யாழில் தாய் கொலை : 16 வயது மகன் அதிர்ச்சி வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இளம் தாய் சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கைதான சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், சந்தேக நபரான சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு சிறுவன் தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் நித்திரை மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பேருந்தில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்து, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (03.05.2024) வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் பெண் உயிரிழந்த நிலையில் மகள் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு : ஹீட் ஸ்ரோக் ஏற்படும் அபாயம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது வர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும்.

அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப அதிகரிப்பால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.

இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். அதுமட்டுமல்லாது குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும்.

மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, எம்மை காப்பாற்றி கொள்ள ” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.

வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும்.

மேலும் குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.

உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் எனவும் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்

யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!!

யாழ். புத்தூர்(Jaffna) பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழங்கு தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் என்பது தவறான கருத்து என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ அல்லது மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின் போது சூரிய ஒளி படுவதனாலோ ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதாக அவர் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம், உருளைக்கிழங்கை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக Solanine and Chaconine எனப்படும் இயற்கை இரசாயனங்களால் கிளைகோல்கலாய்டுகளின் உற்பத்தி அதிகரிப்பாகும்.

இந்த பச்சை உருளைக்கிழங்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. கடை உரிமையாளர்களுக்கு இது நன்றாகவே தெரியும். கடை உரிமையாளர்கள் 10 கிலோ உருளைக்கிழங்கை ஒரு பையாக வாங்குகிறார்கள்.

அவர்களால் அந்த பைகளில் இருந்து அதனை தெரிவு செய்து எடுக்க முடியாது. மக்கள் ஒரு பை உருளைக்கிழங்கை வாங்கும்போது, ​​​​அதன் அளவு சுமார் 700-1000 கிராமாகும்.

அத்தகைய உருளைக்கிழங்கு இருந்தால், அதனை அகற்றி விடுங்கள். நுகர்வோர் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அதிக கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதேவேளை மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி!!

பரீட்சை எழுதியப் பின்னர் மீண்டும் வீடு திரும்பிய மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பிபிலை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இருந்தே அந்த மாணவி தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சம்பள அதிகரிப்பு கோரி கிராம சேவையாளர்கள் இரண்டு நாள் பணிப் பகிஸ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். குறித்த பணிபகிஸ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம் : மருமகனும் நண்பரும் கைது!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (06.05.2024) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர் கிராமத்திலே இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் அமைந்துள்ள இறந்தவரின் வீட்டில் மாமனார், மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

இதன்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இக்கைகலப்பின் போது மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மண்வெட்டி மற்றும் தலைக்கவசங்களினால் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான மாமனார் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள வீட்டின் வாசலில் வீழ்ந்துள்ளார்.

வீழ்ந்து கிடந்த குறித்த நபரினை அயலில் உள்ளவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை கணேசமூர்த்தி (மோகன்) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளடன்,

குடும்ப தகராறினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை சிதம்பரபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்… இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பகா மகா வித்தியாலயத்தில் ஒரே மாணவியை தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்குதலுக்குள்ளான மாணவன் காதலித்து வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிப்பதை அறிந்த 10ம் தர மாணவன், 9ம் தர மாணவனை பாடசாலை முடிந்ததும் பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கத்தியால் தாக்கியதில் மாணவனின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் நினைவேந்தல்!!

தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் சிறீரெலாே கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது.

1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 38வது நினைவேந்தல் நேற்று (06.05) மாலை 6மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறீரெலாே) தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் அவரே ஏற்றிவைத்திருந்தார்.

அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருந்தார்.

தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் சந்தரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர், பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக நேற்று (06.05) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘பொலிசார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்,

பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்” என பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார். இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன்,

குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பொலிசார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதேவேளை, கடந்த மாதம் 15 ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிசாரும் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை மத்திய நிலையங்களில் 4309 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு!!

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று (06.05.2024) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06.05) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் காேடலியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு காெண்டு செல்லப்பட்ட பாேதும் அவர் அங்கு காெண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மாேகன் என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பாெலிசார் இச்சம்பவம் தாெடர்பில் விசாரணைகளை மேற்காெண்டு வருகிறார்கள்.

வெளிநாடொன்றில் 13 கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த இலங்கை இளைஞனின் காணொளி!!

இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனைப்படைத்துள்ளது.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பின் காரணமாக அன்றாட செலவிற்காக கம்பளை- நுவரெலியா வீதியில் பூங்கொத்துக்களை விற்கும் வியாபாரியான திலிப் மதுசங்க என்பவரின் காணொளியே இவ்வாறு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கமராவில் பதிவான காட்சிகள்

கொத்மலையை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவர் 8 வருடங்களாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் வரை பூங்கொத்துக்களை கையிலேந்தியப்படி வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கு தன் ஓட்டத்தை ஈடுசெய்து வெளிநாட்டு பயணிகளிடம் அப்பூக்கொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தில் தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்திருந்த சீன பெண்ணிற்கு பூக்கொத்துக்களை விற்பனை செய்த போது அப்பெண்ணின் கமராவில் பதிவான காட்சிகள் இப்பொது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

மேலும், இவர் பூக்கொத்துக்களை சுமந்து கொண்டு இருக்கும் கார்ட்டூன் சித்திரங்களும் சீனர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பிரபல்யமாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி!!

இலத்திரனியல் ஊடகக்துறையில் புரட்சியை உருவாக்கி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி நேற்று வழங்கியுள்ளது.

தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய செய்தி ஒளிபரப்பு இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க தேசிய தொலைக்காட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித செயல்பாடுகளை எளிதாக்க இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் முன்னணி தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த வருடத்தின் சடங்குகளை பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியது.

அத்துடன், நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றது.

அதனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேற்று செய்தி ஒளிபரப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பரிதாப மரணம்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை – மாரதென்ன (Balangoda) பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகின.

இந்தநிலையில், பரீட்சை எழுதச் சென்ற குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய நிலையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை மாரதென்ன பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.