களுத்துறை பகுதியில் துறவரத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி குறித்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
14 வயதுடைய இந்த சிறுமி பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் தெரிவித்தார்.
குறித்த தாய் பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பேருவளை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.
உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த 34 வயதான கோணேஸ்வர ராசா நிஷாந்தன் என்பவரே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26.04.2024) உயிரிழந்துள்ளார்.
அவருக்கு உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24.04) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டுள்ளார்.
வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (28.04) தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஏ9 வீதி ஓமந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதன்போது இளைஞர் ஒருவரின் உடமையில் 6 கிராம் ஹெரோயின போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்தாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (28.04) தெரிவித்தனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த கடையில் இருந்து 70 போதை மாத்திரைகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வியாபார நிலைய உரிமையாளரான மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்று (27.04.2024) மதியம் பரந்தனில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியில் புறப்பட்ட சிறுவன் இரவாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அச்சமடைந்து அயல் கிராமங்களில் தேட தொடங்கினர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காணாமல்போன சிறுவனை பெற்றோர் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று மதியம் பரந்தன் பகுதியில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
மின்னேரிய – கிரித்தலே பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரித்தலை பகுதியைச் சேர்ந்த ஜே.ஐ.கோசலா சாமோத்ய பண்டார என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மாணவி தனது வீட்டுக்குப் பக்கத்து வீடொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சென்ற போயிங் விமானத்தின் கதவுகள் திடீரென கீழே விழுந்தன. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
நியூயார்க் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துவிட்டது.
இதுகுறித்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. விமானம் புறப்பட்டு பறந்து சென்று, 33 நிமிடங்களுக்கு பிறகு இச்சம்பவம் நடந்தது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்து விமான பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.
இதன் எதிரொலியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் . டெல்டா விமான நிறுவனத்தின் விமான பிரதிநிதி ஒருவர் எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும்.
விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் எனக் கூறியுள்ளார். இது குறித்து அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது.
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியில் சித்ராதேவி தனது மகள்கள் நர்மதா, மீனாவுடன் வசித்து வருகிறார். கணவர் இறந்த பிறகு, சித்ராதேவி ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து தனது இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மீனா கணபதிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மீனாவின் தாய் சித்ராதேவிக்கு மீனாவின் மாமியார் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
மீனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பின், சித்ராதேவி மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், “மீனாவை பரிசோதித்த டாக்டர்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியதால், அங்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சித்ராதேவி வந்து பரிசோதித்தபோது, மீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று யுவராஜ்-மீனா தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மீனா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மீனா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று மீனாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை யுவராஜிடம் போலீசார் விசாரணை நடத்தாததால், மீனா தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிரிழந்த மீனாவின் உறவினர்கள், நண்பர்கள் முறையிட்டனர்.
அதிலும் மீனாவின் அக்கா, “என் தங்கையை ஒரு வாரம் சித்ரவதை செய்தார்கள். அதற்கு முன்பும் அவள் என்னிடம் சொல்லி அழுது கொண்டிருந்தாள்.
எந்த பிரச்சனையும் சரி செய்யப்படும் என்று நான் சொன்னேன். கடைசியில் அவளை இந்த முடிவுக்கு தள்ளினார்கள். . அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட சொல்லுங்கள், அவர்கள் மீது ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என கூறினார் .
இது குறித்து மீனாவின் உறவினர் ஒருவர் கூறும்போது, “எங்கள் இரு குடும்பங்களும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவை. திருமணம் ஆனவுடன் ஒருவரையொருவர் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றார்கள். நாங்கள், ‘இது சரி வராது,
கிராமம் முழுக்க சாதி வெறி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ‘இல்லை, எங்கள் வீட்டு பெண் போல் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். இப்போது இப்படி ஆயிடுச்சு. இவர்களது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கூட ஒருவர் கூட வருல.
எங்கள் குழந்தையை கொல்ல வந்துள்ளனர். எங்கள் குழந்தை என்ன செய்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு, டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன், ‘உங்கள் குழந்தை வேண்டுமானால், எடுத்துச் செல்லுங்கள், இல்லையென்றால் தூக்கி எறியுங்கள்.
உங்களுக்காக வழக்கு போட முடியாது என்கிறீர்கள். காரணம் கேட்டதால் இப்படி சொல்கிறீர்கள். மீடியாவைக் கூப்பிடுவோம் என்று சொன்னதும் எல்லாரும் கிளம்பிச் சென்றனர். ஒரு போலீஸ்காரர் கூட எங்களுக்காகப் பேசவில்லை. எங்கள் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டோம். யாரும் தெளிவாக எதும் சொல்ல மாட்றாங்க என ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசினர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், ”வருவாய் கமிஷனர் விசாரணை நடத்தும் போது, தனி புகார் வந்தால், விசாரணை நடத்தப்படும்,” என, விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து மீனாவின் உறவினர்கள் மீனா தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்தனர்.
நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது அதனை பார்த்த சாய் சரண் (17) என்ற சிறுவன் கட்டடத்தின் மீது ஏறி ஜன்னல் வழியாக கயிற்றை கொடுத்து உள்ளே இருந்த 50 தொழிலாளர்கள் வெளியில் வர உதவியுள்ளார்.
தகுந்த நேரத்தில் சிறுவன் துரிதமாகச் செயல்பட்டதால் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பினர். இதன்பிறகு, தீயணைப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்களை காப்பாற்றிய சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி டி.பூர்ணச்சந்தர், “மாலை 5 மணியளவில் எங்களுக்கு தீ விபத்து குறித்த தகவல் வந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் உள்ள குடோனில் இருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 2024 பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கேரளாவில் பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் வாக்களிக்க முடியாமல் உள்ளார்.
கேரளாவில் உள்ள சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் கடந்த 2016 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார்.
அப்போது இவரது இடது கை ஆள்காட்டி விரலில் மை தடவப்பட்டுள்ளது. இந்த மையானது கடந்த 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறையாமலேயே உள்ளது.
இதனால் பிரச்னை ஏற்படும் என்று நினைத்து 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க செல்லாமலேயே இருந்துள்ளார்.
இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வாக்களிக்க முடியவில்லை.
இதுகுறித்து உஷா கூறும்போது தொடர்ந்து தான் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் காணாமல் போன தாய்லாந்து பெண் மொடல், ஓர் ஆண்டுக்கு பின்னர் சவக்கிடங்கில் மீட்கப்பட்டது. தாய்லாந்தைச் சேர்ந்த Kaikan Kaennakam (31) என்ற பெண் மொடல், பஹ்ரைன் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார்.
எனினும் சமூக வலைத்தளம் வாயிலாக தனது குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார். அப்போது அவர் பஹ்ரைனில் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
ஆனால், 2023 ஏப்ரல் மாதம் Kaikan தனது சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடுவதை நிறுத்தினார். இதனால் கவலையடைந்த Kaikan-னின் குடும்பத்தினர், அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும் அணுக முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து சனவரி மாதம் பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் உதவியை மொடலின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 18ஆம் திகதி பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகம், அடையாளம் தெரியாத தென்கிழக்கு ஆசிய பெண்ணின் உடல், கடந்த ஆண்டு முதல் மனமாவில் உள்ள Salmaniya மருத்துவ வளாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக Kaikan குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளது.
ஆல்கஹால் நஞ்சு காரணமாக கடுமையான நுரையீரல் மற்றும் இதய செயலிழப்பு ஏற்பட்டு Kaikan உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினர், Kaikan-யில் உடலில் காயங்கள் இருப்பதை குறிப்பிட்டு அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது.
ஆட்டுக்குட்டி
எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளசம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றியதினம் (26) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவ்வேளை இரண்டு பெண்கள் புகையிரதத்ததில் ஏற முயன்றபோது இரண்டு பெட்டிகள் நடுவில் இருவரும் சிக்குண்டுள்ளனர்.
உடனடியாக புகையிரதம் நிறுத்தப்பட்டு அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் சொந்த மகளையும் மகளின் தோழியையும் குறித்த நபர் துபிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார்.
சம்பவத்தில் 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர். பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பேரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.
இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி, வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, திரவ உரம் உப பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் திரவ உரத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“எனது வீட்டில் சமையல் அறையில் இருந்து சேகரிக்கப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பேரல்களில் போட்டு சில நாட்கள் செரிக்க வைக்கப்படும்” என முகமது பிர்தாவிஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.
இதற்கு சுமார் ஐந்து பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர், அந்த பீப்பாய்களில் குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது.
மீதமுள்ளவை கரிம திரவ உரத்தின் துணை விளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாயு வீட்டில் உணவு சமைக்கப் பயன்படுகிறது.
கரிம திரவ உரங்களைப் பயன்படுத்தி காய்கறி விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும். இந்த தயாரிப்புகளை மேம்படுத்தி நல்ல தொழில் தொடங்கி நல்ல வருமானம் பெறுவதே எனது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்