தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சியான தகவல்

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை…

கேகாலை, கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித் குமார் சூரியஆராச்சி என்ற இளைஞனே இந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

நாங்கள் குடும்பமாக ஸ்ரீ பாத சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு உணவு சாப்பிட இடம் தேடினோம்.

அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கிவிட்டது. கித்துல்கல வீதியில் ஏதோ துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

எனினும் அதற்கு மேல் வாகனத்தை ஓட்டி வந்துக் கொண்டிருந்த போது திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வானை நிறுத்தி பரிசோதித்த போது ஒரு கைக் குழந்தை ஒன்று உயிருடன் இருந்தது.

எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை எப்படி இந்த வழியில் விழுந்தது என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வீதியோரம் காடு. மிருகத்திடம் சிக்கியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழந்தையை கித்துல்கல பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

எனினும் பின்னர் தான் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கைகளில் இருந்து குழந்தை வீதியில் விழுந்தமை தெரிய வந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு…

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அந்தந்த நாடுகளில் இருந்து வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சிவில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவில் அமைப்பின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் சாதகமான பதிலை வழங்கியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார்.’

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

ஆகவே எவராக இருந்தாலும் தமிழர்களின் தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் : திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து புதிய உலக சாதனை படைத்த திருகோணமலை மாணவன்!!

திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார். குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் திஇ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தன்வந்த்திற்கு அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மீள் பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருத்தப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை பாடசாலைகள் ஆரம்பிக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சு, தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளிலேயே படிவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 07, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்! ரி.ஐ.டி விவகாரத்தை மறுக்கும் காவல்துறையினர்

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்…

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 சந்தேக நபர்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த பகுதிக்கு அதிகளவிலான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்கவை தொடர்புகொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “காத்தான்குடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சஹ்ரானின் உறவினர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த தரப்பினர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் காத்தான்குடி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம், கைது செய்யப்பட்ட 30 பேரும் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை“ என தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு! ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு

அரச ஊழியர்களின் அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும் என அதிபர் சுட்டிக்காட்டினார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

“கடந்த ஆண்டு முதல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை அறிய இன்று வில்கமுவவிற்கு வந்தேன்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்தடைந்த தருணத்தில் தான் நான் அதிபர் பொறுப்பை ஏற்றேன். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை.

இத்தகைய வங்குரோத்து சூழலில், மக்கள் தங்கள் தொழில்களை இழந்து, பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். எனவே, நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன

அதன்படி நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அதன்பிறகு, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தோம்.

அதன்படி அஸ்வெசும மூலம் சமுர்தித் திட்டத்தை விட மூன்று மடங்கு உதவிகளை மக்களுக்கு வழங்க முடிந்தது. இதன்படி, அஸ்வெசும நிவாரணம் தேவைப்படும் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.

கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து செயற்படுவதன் மூலம் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளது. நம் நாட்டில் சுமார் 16 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருந்தனர். ஆனால் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும்.

2015ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன். அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம்.

மேலும் நாங்கள் ‘உறுமய’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். 1935 ஆம் ஆண்டு முதல் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரித்து பெற்ற அனைவருக்கும் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழுமையான காணி உரிமையைப் பெறுவர்.

சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வந்த பிரச்சினை தீரும். உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும்.

இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் கீழும் மக்களுக்குப் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இப்போது நாட்டின் பொருளாதாரம் சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

எனவே, இந்த மாகாணத்தில் வருமான வழிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பிரதேசமாக இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும். நவீன விவசாயம் மற்றும் ஏற்றுமதிக்கான பலசரக்குப் பொருள் கைத்தொழிலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொக்கோ மற்றும் கோப்பித் தோட்ட அபிவிருத்திக்கு புதிய முதலீட்டாளர்களுடன் புதிய தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாணவர் வரவேற்பு

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்…

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் ஏ.கே.உபைத் தலைமையில் இன்று (01.03) இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து பாடசாலை பான்ட் அணி வகுப்பு மரியாதையுடன் புதிதாக தரம் 6 இல் கல்வி கற்க வரும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டதுடன், தரம் 7 மற்றும் தரம் 8 மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

அத்துடன், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் விடயத்தில் பெற்றோர்களின் பங்கு தொடர்பில் கருத்துரைகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் வருகையை நினைவுபடுத்தி பாடசாலை கற்றல் சூழலை மேலும் மெருகூட்டும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது.

இதில் பாடசாலையின் ஆசிரியர்கள், இஸ்லாமிய மதகுருமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையை வந்தடைந்த சாந்தனின் பூதவுடல் : ஞாயிறுக்கிழமை இறுதிக் கிரியை!!

சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (01.03.2024) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில் சாந்தனின் உடல் வழமையான பயணிகள் விமானத்தில் நாட்டுக்கு எடுவரப்பட்டதாவும், அவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காலை 10.38 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் (28.02) காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு சென்று சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

 

வவுனியா பூந்தோட்டத்தில் புதிய மதுபானசாலை – மக்கள் எதிர்ப்பு

வவுனியா பூந்தோட்டத்தில் புதிய மதுபானசாலை – மக்கள் எதிர்ப்பு

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் குறித்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

கிராம மட்ட பொது அமைப்புக்கள் என்று உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளில் பூந்தோட்டம் சந்தியை பிரதானமாக்கொண்ட கிராம எல்லைகளுக்குள் மதுபானசாலைக்கான அனுமதியை வழங்காதே என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

வவுனியா – புதூர் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி

வவுனியா – புதூர் பகுதியில் தொடருந்தில்…

வவுனியா – புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்த த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடருந்தானது புதூர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணின் சடலம் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல் : உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்!!

சிறையல்ல சிறப்புமுகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பது போகப் போகத்தான் விளங்கியது என ராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் ஒருவரான இராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இன்றைய தினம் (29.02.2024) உலகத் தமிழர்களுக்கு எழுதியுள்ள முக்கிய கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத் தான் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம்.

கடைசியாக தனது கையால் தன் மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்த மகனுக்கு கடைசியாக வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார் என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன் : வெளியான சர்ச்சைக்குரிய தகவல்கள்!!

பிரித்தானியாவில் வசித்த வந்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 16 வயதான டினால் டி அல்விஸ் என்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் என்ற பாடசாலையில் கல்வி பயின்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.

பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார்.

இந்தக் கனவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அவர் உயிரிந்தார். டினாலின் மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தன.

தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுமாறு சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவில் இருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலம் உரிய கப்பம் கோரிய நபர், அவருக்கு இரண்டு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மீது மோதிய பேருந்து : ஒருவர் பலி!!

கொழும்பு தெஹிவளையில் முச்சக்கரவண்டி மீது மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் முச்சக்கரவண்டியில் மோதி இந்த விபத்து சம்பவத்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அதேவேளை இன்றுகாலை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வெள்ளைக்கோட்டில் மோட்டார்சைக்கிளில் காத்திருந்த இளைஞரை வான் ஒன்று மோதியதில் இளைஞர் படுகாயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது.

கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் அதிரடியாக கைது!!

களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளதாக கூறி பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

எனினும் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்தனர். இதற்கமைய 10 மாதணங்களின் பின்னர் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.