கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை! படையெடுக்கும் மக்கள்

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை!…

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் அறிவித்துள்ளார்.

நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

வீடு நிர்மானம் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் பத்து டொலர்களுக்கு காணித் துண்டு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூவாயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் சுமார் 1500 காணித் துண்டுகள் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த பத்து டொலர் காணித் துண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் காணித்துண்டுகளை கொள்வனவு செய்வோரே பகுதியின் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினையும் ஏற்க வேண்டுமென மேயர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவை வந்தடைந்த இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி

இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி…

இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நாளை 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி போட்டி ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் அதன் நான்காம் கட்டமாக இன்று (06.03.2024) திருகோணமலையிலிருந்து வவுனியா விமானப்படை முகாம் வரையிலான துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

திருகோணமலை – வவுனியா 144.5கிலோ மீற்றர் தூரத்தினை ஓடி முடித்து முதலாவது இடத்தினை கடற்படையினை சேர்ந்த பிரபாஸ் மதுசங்க என்பவரும் இரண்டாவது இடத்தினை கதீரான ஸ்பிட் கழகத்தினை சேர்ந்த உமேஸ் விரசிங்க என்பவரும் மூன்றாவது இடத்தினை இந்தியா வீமானப்படையினை சேர்ந்த கிர்ஷ்ண நாணயக்கொடி என்பவரும் பெற்றிருந்தனர்.

குறித்த போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இறுதி நாளான நாளையதினம் 7ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி – மெட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி…

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் நேற்றைய தினம் திடீரென செயலிழந்ததால் அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

எனினும் 2 மணி நேரத்தின் பின் அவை மீண்டும் வழமைக்குத் திரும்பின.

சமூகவலைதளங்கள் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என ‘மெட்டா’ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து மற்றுமொரு அனுமதி: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான செய்தி

வாகன இறக்குமதி குறித்து மற்றுமொரு அனுமதி…

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கால எல்லையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தை 2024 ஜூன் 30 வரை நீடிக்க கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமான Uists மற்றும் Benbecula தீவுகளில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆகவே, பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS, அந்த தீவுகளுக்கு பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 150,000 பவுண்டுகள் சம்பளம் (இலங்கை மதிப்பில் 5,84,77,279.68 ரூபாய்) வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அங்கு பணி செய்யும் மருத்துவர்களுக்கு, வாரத்துக்கு 40 மணி நேர வேலை, போனஸ், 41 நாட்கள் விடுமுறை என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு…

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும்.

இதற்கிடையில், உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்: மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அவசர அறிவிப்பு

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்…

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் பிரதானிகளுக்கு அமைச்சரவை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்பு தொடர்பான உத்தரவுகளை வழங்குவதற்கு நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாததால், இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா இடம்பெறும்

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில்….

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம் அளித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குருந்தூர் மலை விகாராதிபதி எமது ஆலயத்தினை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.இவ்வாறு அவர் நடந்து கொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு ஆலயம். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.

இருப்பினும் எதிர்வரும் மகாசிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின்…

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பேடன் பவல் பிரபுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சாரண மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 10 ஆவது தேசிய ஜம்போறியில் பங்குபற்றிய சாரண மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் குருதி வங்கியில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆணையாளரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிபருமான ம.ச.பத்மநாதன் அவர்களும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் வவுனியா வடக்கு பிரதி கல்விப் பணிப்பாளருமான ம.ஜெயரூபன் அவர்களும், சாரணர் சங்க உபதலைவரும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபருமாகிய தமிழழகன் அவர்களும், உதவி மாவட்ட ஆணையாளர்கள், ஜனாதிபதி சாரணர்கள், திரி சாரணர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் குருதிக் கொடையிலும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில்….

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழப்பு : கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய மருத்துவரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இளம் வைத்திய சடலமாக மீடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்!!

கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவரே இவ்வாறு இசை முலம் சிகிச்சை வழங்கி வருகின்றார்.

அவர் வெளியிட்ட இசைத் தொகுப்புகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஓட்டிசம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜின், மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ரப் இசைக்கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தனது இசை மூலம் விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டிலும் இசைத் தொகுப்புகள் மூலம் ஒரு மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார் – சாரதியை கைது செய்ய முயற்சி

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03.03.2024) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலமை நிலவியது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேச பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொருப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் எனவும் ஊர்தி சாரதியினை வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தமையினால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும் – கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்

சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும்…

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது

இந்நிலையில் சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் புகலுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சிகளின் பிரமுகர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தியமையுடன் கண்ணீர் மல்கி தமது கவலைகளை வெளிப்படுத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புதிய பேரூந்து நிலையம் வரை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

புது மண தம்பதிகளுக்கு ஏற்பட்ட சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

திருமணமான இரண்டே மாத்தில் இந்தியாவின் காஸியாபாத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த இருவரும், திங்கட்கிழமை (பிப்ரவரி 26) டெல்லியில் உள்ள விலங்கியல் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அபிஷேக், 25, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே, மனைவி அஞ்சலி நண்பர்களின் உதவியுடன் அபிஷேக்கை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அபிஷேக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அபிஷேக்கின் நல்லுடல், தம்பதியின் வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் காதல் கணவன் உயிரிழாந்ததை தாங்க முடியாத அஞ்சலி, யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென்று , ஏழாம் மாடியிலிருந்த தங்கள் வீட்டு மாடத்திலிருந்து கீழே குதித்தார்.

கணவரின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் அஞ்சலி திடீரென்று மாடத்தை நோக்கி ஓடியபோது உறவினர்கள் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

மாடியில் இருந்து விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

 

யாழ் விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்.. கண்கலங்க வைத்த வீடியோ!!

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் நேற்று (01.03.2024) காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மாணவனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.