வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு…..

வவுனியா நகர சபையினால் வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் மரக்கறி விற்பனை சந்தைக்கு முன்பாக திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நகர சபையின் செயலாளர் இராசையா தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தபி.ஏ.சரத்சந்திர அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வ.சுரேந்திரன், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.கிருபாகரன், நகர சபை அலுவலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது வாரத்தின் ஏழு நாட்களும் மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை திறந்திருக்கும்

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம் திறந்து வைப்பு – நியமனக்கடிதமும் வழங்கி வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம்…

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலமைக்காரியாலம் இன்று (13.03.2024) மாலை 4.00மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா அமைப்பாளர்களான பிரியதர்சினி ரசிக்கா மற்றும் ச. நிரேஷ்குமார் , அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுக்கு தேர்தல் தொடர்பிலான விளக்கங்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கியிருந்தார்.

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு….

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடி நீர் திட்டம் ஒன்று இன்று (13.03) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் ஊடகவியலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் அற்புதராஜன் விஜயகுமாரி என்பவரின் நிதி உதவியில் ஊடக உறவுகளின் பாலம் அமைப்பின் ஊடாக குறித்த குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

செட்டிகுளம், நேரியகுளம், 5ஆம் குறுக்கு வீதியில் 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று நீண்ட நாட்களாக குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர் நோக்கியிருந்ததுடன், வீட்டுடன் கூடிய வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்தும் நீர் இல்லாமையால் வீட்டுத் தோட்டம் செய்ய முடியாது, பெண் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தி வந்தார்.

இக் குடும்பத்தின் நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு மற்றும் நீர் தொட்டி என்பன அமைத்து கொடுக்கப்பட்டது. இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். அத்துடன் குறித்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக குறித்த காணியில் பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

செட்டிகுளம், நேரியகுளம் கிராம அலுவலர் தேவகி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பூசணிப்பிட்டி அ.த.க பாடசாலை அதிபர் இ.சற்சொரூபன், செட்டிகுளம் பிரதே செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், நேரியகுளம் சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் அற்புதராஜன் விஜயகுமாரி மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா புளியங்குளத்தில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து! ஒருவர் காயம்!

நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து…

வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் – 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்நிலையில் அவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துச்செல்லும் அந்த காட்சியினை பார்த்து நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற அவர்களின் உறவினர்கள் எந்தவொரு குற்றமும் செய்யாமல் இறைவனை வழிபட்டமைக்கு இவ்வாறு சிறைவாசம் அனுப்பவிப்பதாக தெரிவித்து கண்ணீர் மல்கி அழுதிருந்தனர்

அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இன்றையதினம் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!!

வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் மரதன் ஓடிய மாணவனின் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!!

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் மாணவனின் மரணம் குறித்து இன்றைய தினம் (12.3.2024) அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி..!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சற்று முன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில்

சற்று முன் விசாரணை நீதிமன்றில்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த (09.03) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றினுள் சென்றுள்ளனர்

படுகொலை செய்யப்பட்ட 17 வயது யுவதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தல்கஹவத்த – கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவரும் சந்தேகநபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக யுவதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். உயிரிழந்த பெண் தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான பின்னணி!!

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்த அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நட்பின் அடிப்படையில் அவருக்கு உதவ தனுஷ்க விக்கிரமசிங்க முன்வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள அவர் முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனுஷ்க விக்கிரமசிங்க தாக்குதலில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றில் இடம்பெற்ற விருந்து : இளம் யுவதிகள் உட்பட 19 பேர் கைது!!

ஹோமாகம – மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 பேரையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 3 பேரிடம் இருந்து ஹாஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேகநபர்களிடம் இருந்த போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்!!

கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த இளைஞன் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றின் இளம் தாய் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் குடும்பத்துடன் வசித்து வந்த மற்றுமொருவருமே உயிரிழந்துள்ளனர். கொலையை செய்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞனும் இவர்களுடன் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தாரின் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் உயிரை மாய்க்கும் எண்ணத்தில் இருந்ததாக தாக்குதலுக்கு இலக்காகி உயிர் பிழைத்த குடும்பத்தின் தந்தை பிரதேச பௌத்த விகாரையின் தலைவர் மற்றும் அவரது மற்றுமொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்…

வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(5) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.

எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பராடே சட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டாலும் தற்போதும் வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானவர்கள் தங்களின் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை மீள செலுதத முடியாது என தெரிவித்து, கடன் மறுசீரமைப்புக்கு சென்றிருக்கிறது.

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தில் அவர்களால் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக ஆவது அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில்….

5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்தூவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை! கல்வி அமைச்சிற்கு பறந்த கடிதம்

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை…

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்தவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேவைக்காலங்கள் பூர்த்தியான பின்னர், முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும், என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கத்தினால் கையொப்பமிடப்பட்டு கல்விச் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றங்களினை தாமதப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களை உளரீதியாக வதைத்து அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைத் தடுத்து அதன்மூலம் மாணவர் கல்வியை அழிக்க நாம் இடமளிக்க முடியாது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆண்டு வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தாபனவிதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின்படி இடமாற்றம் வழங்கப்படுவது சட்டரீதியானது என்றும், அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் இடமாற்றத்தின் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களைச் சமப்படுத்துவதும். தேடுவதும் திணைக்களத்தின் கடமை என அதில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

தவிரவும் அந்தக் கடமைகளைச் செய்ய பலர் நியமிக்கப்பட்ட்டுள்ளனர், விண்ணப்பித்த ஆசிரியர்களை விடுவிக்கும் காலம்வரை இழுத்தடித்து அவர்களுக்குப் பதிலீடாக பிழையான தரவுகளோடு ஆசிரியர்களைத் தேடியலைவது நிர்வாகச் செயற்பாட்டிற்கு முரணானது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைசார் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் இவ்வாறு நடைபெறுவதில்லை என்பதனால் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் வழங்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர்களாகவே ஒரு முடிவினை எடுப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எனக் கூறி அந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.