வைத்தியர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்!!

வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட பணிக்குழாமினர் நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் வழங்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பதுளை நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் உள்ளிட்ட பணிக்குழாமினரே இவ்வாறு மக்களுக்கு சேவை செய்கின்றனர்.

குறித்த வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் இவ்வாறு சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அந்த வைத்தியசாலையின், பிரதம வைத்திய அதிகாரி சசித் பண்டார தெரிவிக்கையில், ”கடந்த வருடத்தில் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் தொற்றா நோய் கிளினிக்குகளை மேற்கொள்ளும் போது நான் கண்டது என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களினால் ஒரே இடத்தில் இருப்பவர்களால் எமது வைத்தியசாலைகளுக்கு வரமுடியவில்லை.

அதாவது போக்குவரத்து சிரமங்கள், மலைகளில் இருக்கிறார்கள், கடினமான வீதிகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், பொருளாதார பிரச்சினைகளால் முடியாதவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போதைய பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்குச் வருவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு பரிகாரமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையை வழங்கி அவர்களின் உடலநலத்தை முன்னேற்ற முயற்சித்து வருகிறோம்.

பணிக்குழாமினரும் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்த வேலையைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த நடவடிக்கை அந்த நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு : உயிரிழந்த இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு இளைஞர்களின் சடலங்கள் தற்போது அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கலகொட பிரதேசத்தினை சேர்ந்த பொடி மண்டிஸ் என அழைக்கப்படும் ஹலம்ப உதேஸ் மதுரங்க மற்றும் தடல்லவைச் சேர்ந்த சிதும் சஞ்சனா ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று உயிரிழந்த கவிஷ்க அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

17 வயதுச் சிறுமி கொலை : பிரதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்!!

காலி எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கொலை செய்யப்பட்ட சிறுமி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.

கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி, என்ற சிறுமியே அவரது மைத்துனரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவரது சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹன்சிகாவை அந்த வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அந்த நேரத்தில், அவர் தனது சகோதரியின் கணவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளார். கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வீட்டுக்கு வந்த மருமகன், தனது இளைய மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக ஹன்சிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

பிறகு ஹன்சிகா வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் மறுநாள் வந்து ஹன்சிகாவை மைத்துனர் அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், ஹன்சிகா தொலைபேசி ஊடாக அழைத்து, வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னைக் காப்பாற்றுமாறு தனது தாயிடம் கூறியுள்ளார்.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய ஹன்சிகா தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ​​மேலும் இருவருடன் வந்த அவரது மைத்துனர் அவரை முச்சக்கரவண்டியில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, மற்றொரு முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு : யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்!!

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.

இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானில் இருந்து இவ்வளவு பெரிய பனிக்கட்டி வீழ்ந்தது வரலாற்றில் முதல் தடவை என பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையின் போது சிறிய பனிக்கட்டிகள் விழுவதாக கூறப்படுகின்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பனிக்கட்டி விழுந்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் அதிரடி செயற்பட்டு உயிர்களை காப்பாற்றிய இலங்கை இளைஞன்!!

கொரியாவில் அண்மையில் தீயினால் ஏற்பட்ட பெரும் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை இளைஞருக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரியாவின் உல்சான் நகரில் பணிபுரியும் காலியை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நிபால் என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி கொரியாவின் உல்சானில் உள்ள குளோபல் ஹவுஸின் ஐந்து மாடி ஊழியர் தங்கும் விடுதியின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்த இந்த இளைஞன், மூன்றாவது மாடியில் புகைமண்டலத்தை பார்த்துள்ளார்.

தீயணைப்புத் துறை உடனடியாக நிறுவன அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்த இளைஞன், இரவு பணிக்கு செல்வதற்கு முன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்று அங்கு தங்கியுள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து 30 நிமிடங்களில் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

மொஹமட் நிபால் ஊடகத்திடம் கூறுகையில், கட்டிடம் புகையால் நிரம்பியதைக் கண்டு பயந்தேன், ஆனால் அந்த நேரத்தில் அவர் தனது சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதியில் இன்ப அதிர்ச்சி : சிவனை சுற்றிய வெள்ளை நாகம் : மக்கள் பரவசம்!!

யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெள்லை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த 10ம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தன.

இராணௌவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை தெற்கு பகுதியில் இராணுவத்தினரால் சிறு கோயில் போன்ற அமைப்புக்குள் பிள்ளையார் , சிவலிங்க உருவங்களும் இலட்சுமின் உருவப்படமும் வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில் காணி விடுவிப்புக்கு முன்னரான காலப்பகுதியில் குறித்த சிவலிங்க திருவுருவத்தை வெள்ளை நாக பாம்பு சுற்றியிருக்கும் காணொளியானது இராணுவத்தினரால் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அதேசமயம் குறிப்பாக இந் நாக பாம்பானது வெள்ளி , பௌர்ணமி தினங்களில் ஆலய வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தததாக அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் அபூர்வமானதாக கருதப்படும் வெள்ளைநாகம் சிவலிங்க ம்பெருமானை தருசிக்க வருவதாக கூறப்படும் சம்பவம் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இலங்கையில் சமூக வலைதளங்கள் ஊடாக பாரிய மோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கான விசேட கோரிக்கை ; மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி நாட்டு மக்களுக்கான விசேட கோரிக்கை ; மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும், பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சாதி பாகுபாட்டால் அரங்கேறிய கொலை : இளைஞன் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம், பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு காரணம் கடந்த வருடம் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் ஒருவர், இரண்டு வருடங்களின் முன்னர் சாதி மாறி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2022ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் அவர்களின் பிரதேசத்தில் உள்ள கோயில் திருவிழாவின் போது, அந்த இளைஞன் சுவாமி தூக்க முயன்றார்.

அப்போது சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததால் சுவாமி தூக்க முடியாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். கோயிலில் இருந்து வெளியேறிய அந்த இளைஞன், தனது மூத்த சகோதரனிடம் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பவித்திரன், தனது தம்பியை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டு, வட்டுக்கோட்டை, மாவடியில் வைத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை வாளால் வெட்டியுள்ளார்.

அதன்பின்னர், பிரதேசத்தை விட்டு வெளியேறிய அவர், மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று, மாலை 3 மணியளவில் வட்டு தென்மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அவர் வருவதை அறிந்த குழுவினர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பருடன் சென்றவர் உயிரிழப்பு : நடந்தது என்ன?

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் நண்பருடன் வேட்டைக்கு சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் பலியாகியுள்ளார். இந்நிலையில் அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 வயது இலங்கைச் சிறுவன் புதிய உலக சாதனை!!

5 வயது இலங்கை சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுவரேலியா – தலவாக்கலையைச் சேர்ந்த பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காரைநகர் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த கணவன், மனைவி பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் (12.03.2024) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடலில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதால் மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை மதிய உணவு உட்கொண்டனர் – சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர்

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை…

வவுனியா சிறைச்சாலையில் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் சிறைக்காவலில் உள்ளவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்று வெளிய வந்த பின்னர் அவர்கள் நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படும் போதிலிருந்து தற்போது வரை அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க அவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேனி வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் – கஜேந்திரன்

உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் – கஜேந்திரன்

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் இன்று (13.03) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து பொலிசாரினால் பொய் குற்றச் சாட்டுகள்களின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்குமான விள்ளமறியல் நீடிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடந்த காலங்களில் இதே வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்களுக்கு கட்டுப்பட்டு அந்த தீர்ப்புக்களின் பிரகாரம் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர், ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் என 8 பேரை பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தனர்.

19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரக்தி அடைந்த 8 அப்பாவிகளும் சிறைச்சாலையில் பெரும் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். அதில் 5 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். நேற்று (12.03) காலை முதல் உணவை எடுக்க மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். இதன்காரணமாக என்ன ஆகுமோ என்ற அச்சம் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு அதாவது தொல்பொருள் திணை திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிசார் கூட்டிணைந்து சிங்கள பௌத்தமயமாக்கல் திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற தமிழர்களை விரட்டியடித்து அந்த இடத்தில் பௌத்தமயமாக்க எடுத்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் ஆலய பூசகரையும் பக்தர்களையும் கைது செய்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அச்சநிலையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த பின்னரே தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றிடம் கடிதங்கள் பெறப்பட்டு அப்பாவிகளை குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொய் குற்றச்சாட்டில் உள்ள 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இதில் ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்கள் உடல் மோசமடைவதற்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும். இவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் உடனடியாக வடக்கு- கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கான முன்னெடுப்புக்கள் பொது அமைப்புக்கள் மற்றும் சமய அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளனர்.

பெய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திய நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

உணவு தவிர்ப்பு போராட்டம்…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் 12.03.2024ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்றிருந்தனர். இதன் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு நபர்களின் ஜவர் நேற்று (12.03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன் , சுப்பிரமணியம் தவபாலசிங்கம் , மதிமுகராசா , துரைராசா தமிழச்செல்வன் , விநாயகமூர்த்தி ஆகிய ஐந்துபேரும் நேற்றைதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சங்கத்திற்க்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில் புதிய தலைவியாக சிவானந்தன் ஜெனிற்றா தெரிவுசெய்யப்பட்டார், செயலாளராக துரைசிங்கம் கலாவதி, பொருலாளராக சர்வேஸ்வரன் கலாராணி, உபதலைவராக பேரின்பராசா பாலேஸ்வரி, உபசெயலாளராக பத்மநாதன் சோதிமலர் ஆகியோரும் 11 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.’

குறித்த நிர்வாகத்தெரிவானது வவுனியா மாவட்டத்தின் பொது அமைப்புக்களான தனியார் பேருந்து உரிமையாளர்சங்கம், முச்சக்கவண்டி உரிமையாளர்சங்கம்,தமிழ்விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பு,ஜனனம் அமைப்பு ஆகியவற்றின் முக்கியஸ்தர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றிருந்தது