வவுனியாவில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து!!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் நேற்று (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை!!

இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெர்ரிஃபீல்ட்ஸ் எனும் இடத்தில் 1700 ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், முட்டையின் உள்ளே மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக பாதுகாக்கப்படும் விடயமானது ஆச்சரியமளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் இங்கிலாந்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடுல்ஃப் கருத்து தெரிவிக்கையில், ‘‘மனித தலையீடு இல்லாமல் 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவைக் கொண்ட உலகின் ஒரே முட்டை இதுவாகும்.

மேலும், இந்த முட்டை எந்த பறவை இனத்தினுடையது என்பது பற்றி மேலும் அறிய ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டபோது முட்டைக்குள் உள்ள திரவ உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த முடிந்தது” என கூறியுள்ளார்.

வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் அடுத்த நாள் சடலமாக மீட்பு!!

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (12.02.2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து வெளியே சென்றதாகவும் சடலமாக மீட்கப்படும் வரை அவரை தேடியும் கிடைக்காததினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கல்முனை பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்பதை அறிந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கே பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் தனது கணவர் தான் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸதரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய ஆயிஷா சிறுமியின் மரணம் : குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!

களுத்துறை – அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.

கோழி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபருக்கு இன்றையதினம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : தவிக்கும் இளம் மனைவி!!

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரான மகேஷ் சமரநாயக்க (30) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருமணமான அவர் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இதன்போது மரம் ஒன்றை வெட்டும் போது அது அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தலையில் அடிபட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரும் அவரது மனைவியும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் கொரியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டனர்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கம்பளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமிலதா மரம் விழுந்ததில் தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அழகு கலை நிலையத்திற்கு சென்ற பெண் செய்த மோசமான செயல்!!

களுத்துறை – மொரகஹஹேன கோனபொல பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அழகு கலை நிலையத்திற்கு கள்ளக்காதலனுடன் வந்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்ற பெண், சம்பவ தினத்தன்றே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரான பெண், வைத்தியசாலையில் இருந்து தப்பி அயல் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் 14,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தப்பியோடி ஒளிந்திருந்த பெண்ணை மொரொன்துடுவ பிரதேசத்தில் வைத்து 19 நாட்களின் பின்னர் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பிலியந்தலை மடபாத பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலன் மீது கொடூரமாக பலமுறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இளம் காதலி!!

கம்பளையில் பல வருட காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய காதலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய சந்தேகநபரை காதலி கம்பளை பதில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கம்பளையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 22 வயதுடைய ஒருவருடன் பல வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களாக காதலன் தன்னை தவிர்ப்பதை அறிந்த இளம்பெண் இது குறித்து காதலனிடம் கேட்க முடிவு செய்துள்ளார்.

காதலன் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறியதும், காதலனை வேறு பெண்ணை காதலிக்க கூடாது என எண்ணி அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை அந்த யுவதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செயலால் ஆத்திரமடைந்த காதலன், அந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு காதலியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த காதலனை சந்திப்பதற்காக காதலியின் தாயும் சகோதரனும் கம்பளை பொதுச்சந்தைக்கு வந்துள்ளனர். ​​காதலியின் சகோதரனை காதலன் தாக்கியதில், படுகாயமடைந்த சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த இடத்தில் இருந்த காதலி மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனை பல தடவைகள் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது கடைக்கு அருகில் இருந்த பலர் அந்த இளம் பெண்ணை கட்டுப்படுத்தி, கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த காதலனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான காதலி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு : இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த அறிக்கையை சிஈஓ வோர்ல்டு இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 105 நாடுகள் குறித்து தகவல்கள் எடுக்கப்பட்டன.

அந்த அறிக்கையின் படி, உலகில் குறைந்த சராசரி சம்பளம் பற்றிய பட்டியலில் இலங்கைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

இதிலே இலங்கை 105 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஆசியக் கண்டத்தில் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைந்த ஊதியம் கொண்ட நாடாகவும் இலங்கை (US$ 143.46) பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுவிட்சர்லாந்து கூடுதல் ஊதியம் வழங்கும் நாடாகவும் ( US$6142.1 ) ஆசியக் கண்டத்தில் சிங்கப்பூர் அதிகூடிய ஊதியம் வழங்கும் நாடாகவும் (US$4350.79) பட்டியலிடப்பட்டுள்ளது.

அதே நேரம் சர்வதேச ரீதியாக 104 நாடுகளை கொண்டு நடத்தப்பட்ட பலம்வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 96வது இடத்தையே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என கூறியுள்ளார்.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரது உடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில்!!

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கில் மோதியதில் மாணவன் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று (09.02.2024) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

புதிய சாதனை படைத்த இலங்கை அணி வீரர் பதும் நிஷங்க!!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன், இதற்கு முன் அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவின் (189) சாதனையை பதும் நிஷங்க முறியடித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, 139 பந்துகளை எதிர்கொண்ட இவர், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேவேளை, இன்றைய போட்டியில், இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்!!

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கழுதைப்புலிகளுடன் போராடி கணவன் உயிரை மீட்ட பெண்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கணவனைத் தாக்க வந்த கழுதைப்புலி கூட்டத்தை வீரத்துடன் அவரது மனைவி எதிர்கொண்டார். அத்துடன் கழுதைப்புலி ஒன்றைக் கொன்று, கணவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யமனை எதிர்த்து கணவன் சத்தியவானின் உயிரை காப்பாற்றினார் சாவித்திரி என நாடு முழுவதும் ஏராளமான கதைகள் உள்ளன. பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த கதைகள் செவிவழிச் செய்தியாக பரப்பப்படுகின்றன.

பண்டைய தமிழ் நூல்களில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி எனவும் சுட்டிக்காட்டும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய வீரமான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் நுழைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக கால்நடைகளை குறிவைத்து அவ்வப்போது கழுதைப் புலிகளின் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்கேர் மாவட்டத்தின் இங்க்ரா கிராமத்தைச் சேர்ந்த நந்து ராம் யாதவ் (32), தனது மனைவி சுக்னி (28) என்பவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு சுக்னிக்கு குழந்தை பிறந்திருந்தது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் நந்து, சோளப்பயிரை விதைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று அதிகாலை தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு உரம் தெளிப்பதற்காக நந்து சென்றிருந்தார்.

வெளிச்சம் குறைவாக இருந்த சமயத்தில், திடீரென அவரை கழுதைப்புலி கூட்டம் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்து, அலறித் துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுக்னி, கணவனை மீட்பதற்காக தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் கனமான கட்டை ஒன்று கிடைத்ததால், அதைக் கொண்டு கழுதைப் புலிகளை விரட்ட முயற்சித்துள்ளார்.

அவர் அடித்ததில் கழுதைப்புலி ஒன்று சுருண்டு விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து மற்ற கழுதைப்புலிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தன. சுக்னி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், படுகாயமடைந்த நந்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கைகள், முதுகு மற்றும் காலில் கடுமையான காயம் அடைந்திருந்த நந்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் உடல்நிலை தேறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து கழுதைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நந்து மற்றும் அவரது மனைவிக்கு இழப்பீடு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனது கணவனை காப்பதற்காக கழுதைப்புலிகளுடன் வீரத்துடன் சண்டையிட்ட சுக்னியை, நவீன சாவித்திரி என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த ஜோடி… பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகா மாநிலத்தில் தங்கை முறை உள்ள இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களும், உறவினர்களும் முறை தவறிய காதல் உறவைக் கைவிட அறிவுறுத்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் மாகனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பா (24). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவருக்கும், இவரது உறவினர் சசிகலாவுக்கும் (20) இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் அண்ணன் – தங்கை உறவு முறை என்பதால் இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் கொல்லப்பாவும், சசிகலாவும் பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், தகாத உறவு முறை குறித்து கூறி சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது குறித்து கொல்லப்பாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொல்லப்பா, சசிகலாவை சந்தித்து பேசி, இருவரும் வீட்டை விட்டு ஓடினார்.

அதன் பின்னர், கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியது பற்றி அறிந்தவுடன் இருவீட்டாரும் அவர்களை தேடினர்.

இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என நினைத்த கொல்லப்பா மற்றும் சசிகலா கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அறிந்தவுடன் பதறிய குடும்பத்தினர் கிராமத்தின் புறநகர் பகுதிக்கு விரைந்தனர். அங்கு மரத்தில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யாத்ரமி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொல்லப்பா மற்றும் சசிகலா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் 3 கோடி பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சிக்கிய மூவர்!!

இலங்கையில் விற்பனை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆம்பரின் சந்தை மதிப்பு 3 கோடி ரூபாயாகும். ஆம்பர் என்பது திமிங்கலத்தின் உடலில் இருந்து இயற்கையாக வெளியாகும் (Sperm Whale) விந்து மற்றும் வாந்தியாகும்.

இது வாசனைத் திரவியங்களுக்கும், வாசனைத் திரவியங்களின் நறுமணத்தை நீண்ட காலம் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.