கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் கண்களை நீண்ட பேராட்டத்தின் பின்னர் பெற்றோர் தானம் செய்துள்ளார்.தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கடும் சனநெரிசலுக்கு மத்தியில் தொடருந்தின் கூரையில் குறித்த இளைஞன் பயணித்த நிலையில் பாலத்தில் மோதுண்டு கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்தில் இரத்மலானை தேசிய பயிலுனர் கல்லுாரியில் கல்வி பயின்ற கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த டொன் டினித் இந்துவர என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருந்தார்.
இதனை தொடர்ந்து இராகமை போதனா வைத்தியசாலை முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக இராகமை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஐ.எஸ். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது கண்களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்துள்ளனர்.இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் வழங்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.மேலும், வேலை நிறுத்தம் காரணமாக நேற்று (12) முதல் தொடருந்து நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார் நெய்ல் பரா அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன் பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.
இந்நிலையில் நெய்ல் பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது – சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளதுடன் , நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்த நிலையில் தற்போதுதான் இனிப்பான செய்தியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.
போலி பொலிஸார் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பொருட்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்வது போன்று நடித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சோதனை அல்லது தேடுதல் நடவடிக்கையின் போது சீருடையில் காணப்படுவார்கள் என தெரிவித்துள்ளபொலிஸார் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாதவர்கள் தங்கள் உடமைகளை வீடுகளை சோதனையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் பொது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று (12.09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதியில் வரவேற்பு பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாதையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழியும் காணப்படுகின்றது. தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பல்கலைக்கழகமும், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் உள்ள வன்னிக்கான பல்கலைக்கழகமுமான வவுனியாப பல்கலைக்கழகம் ஆரம்பித்து,
இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னரே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களுத்துறையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.களுத்துறை கலிடோ கடற்கரையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர்களில் களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பெண் ஒருவரும் சிறுமியும் தங்கியிருந்த நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பெண் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில் கடந்த சில நாட்களாக, திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது பேத்தியான சிறுமியும், வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.
மேலும் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள் தற்கொலை செய்வதாக எழுதப்பட்ட கடிதமொன்றும் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,திருகோணமலை, கடற்கரையை சேர்ந்த நாகபூசணி சிவநாதன் (53) என்பவரே உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி முதல் அவர்கள் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். 12 வயதான சிறுமிக்கு மனநல பிரச்சினை உள்ளதாகவும், அதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்ததாகவும் குறிப்பிட்டே, அவர்கள் விடுதியில் அறையெடுத்துள்ளனர்.
மறுநாள் பெண் மாத்திரம் ஒருமுறை வெளியில் சென்று வந்த பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை.இதனையடுத்து நேற்றையதினம் (12) அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதி ஊழியர்கள் அறையை தட்டியுள்ளனர்.
பதிலில்லை. இதையடுத்து, யன்னல் பகுதியை உடைத்து உள்ளே பார்த்தபோது, கட்டிலில் இருவரும் அசைவற்று படுத்திருந்த நிலையில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
இருவரும் உயிரிழந்து விட்டார்கள் என கருதிய விடுதி ஊழியர்கள் உடனடியாக கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்தனர்.விரந்து வந்த கோப்பாய் பொலிசார் அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
இதன்போது, சிறுமியின் உடல் இலேசாக அழுகியிருந்தது. அடுத்த கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் உடலில் இலேசான அசைவு தென்பட்டது.உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு, அதில் அவரை ஏற்றியபோது , “என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?“ என அவர் வினவினார்.
அதன்பின்னர் எந்தப் பேச்சுமில்லை.இந்நிலையில் மூதாட்டி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த அறையில் ஒரு தற்கொலை குறிப்பும் காணப்பட்டது. இருவருக்கும் மனநோய் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சிறுமியின் பெயர் கேமா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமியுடன் வந்தவர் தாயாரா, பாட்டியா என்பதில் குழப்பம் நிலவிய நிலையில் அவர் தாயாராக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த பெண் இரண்டு திருமணம் செய்தவர் என்றும், உறவுச்சிக்கல்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
அழகிய முருகன், அலங்கார வடிவில், தமிழ் கடவுளாக, தமிழர்கள் வாழும் வட பகுதியில், நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
இந்தத் திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புண்ணிய ஸ்தலம்.முருக அடியார்கள் பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட அற்புத திருத்தலமும் ஆகும்.
வடபகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் திருப்பதி.
முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
வேல் மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்கும் நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.
நல்லூரானின் அழகை கண்டு மெய்சிலிர்க்கவும், அருள்மழையில் நனையவும் இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் குறிப்பாக வெளிநாட்டவர்களும் நல்லூரிற்கு படையெடுத்துள்ளனர்.
விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாயமான பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியை அடையாளம் காண்டால் 071-85917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.கழிவறைக்கு சென்ற “ஹரக்கட்டா” தனது கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது போன்று நடித்தவாறு வௌியே வந்தார்.
அப்போது, “ஹரக்கட்டா” தனது பாதுகாப்பிற்கு இருந்த விசேட அதிரடிப்படை அதிகாரியின் துப்பாக்கியை திடீரென பறிக்க முயன்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, ”ஹரக்கட்டா” தனது கைவிலங்குகளை விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு போட முயன்றுள்ளார்.
சம்பவத்தின் போது, குறித்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலிருந்து ஓடி 4வது மாடிக்கு சென்று, தனது கைத்தொலைபேசிக்கு பதிலாக, வேறொரு பொலிஸ் அதிகாரியின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மேல் தளத்தில் இருந்து விசேட அதிரடிப்படை அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அதிகாரிகள் “ஹரக் கட்டாவை” மடக்கிப் பிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பசுமை கட்சி சார்பாக யாழ்.இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலம் சார்பாக யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இ்ந்நிலையில் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரிசோத் செல்வதயாளனை வெற்றி பெற வைப்பதன் மூலம் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையை ஈழத்தமிழர் சார்பாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும் எனவும் ஆர்காவ் மானில ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம் 6,7,8,9,10 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.இப்போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
18வயதின் கீழ் இடம்பெற்ற ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் k.சுபிஸ்கரன் 3ஆம் இடத்தையும், 14வயதின் கீழ் பெண்கள் பிரிவினரின் 100m ஓட்ட போட்டியில் R. டர்சியா 3ஆம் இடத்தையும் 18தின் கீழ் பெண்கள் பிரிவினரின் 800m ஓட்ட போட்டியில் S. லிதுசா 4ஆம் இடத்தை பெற்றிருந்தனர்.
அத்துடன் 20 வயது ஆண்கள் பிரிவில் அ.கோகுலன் தட்டு எறிதலில் 6ஆம் இடமும், பெண்கள் பிரிவில் R.பிரேமிகா உயரம் பாய்தலில் 5ஆம் இடத்தையும் 16வயது ஆண்கள் பிரிவில் Y. சாருஜன் 6ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் அக்கட்டடத்தின் 13ஆவது மாடியிலிருந்து அதிகாலை வேளையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சின்னையா அழகேஸ்வரன் ரொமீனா எனும் 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் சட்டப்பிரிவில் பயின்று வரும் 29 வயதுடைய இளைஞரொருவர் கடந்த வருடம் இலங்கைக்கு வந்து வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்த யுவதியுடன் முகப்புத்தகம் ஊடாக நட்பை ஏற்படுத்தி சுமார் 6 மாதங்களாக காதல் உறவை பேணி வந்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி குறித்த இளைஞரின் அழைப்பின் பேரில் இந்த யுவதி கடந்த மார்ச் 8ஆம் திகதி இலங்கைக்கு வந்து கல்கிஸ்ஸை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் மாநாடொன்றுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு யுவதி இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் செப்டெம்பர் பத்தாம் திகதி தனது நாட்டிற்கு செல்விருந்த நிலையில் ஒன்பதாம் திகதி அதிகாலை 2.40 மணியளவில் குறித்த அடுக்குமாடி தொகுதியின் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தர் யுவதி இவ்வாறு வீழ்ந்து மரணித்திருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்தமைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ந்து சடலத்தை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இச்சம்பவத்தில் காதலன் ஒரு மதத்தவராகவும், காதலி வேறொரு மதத்தவராகவும் இருந்துள்ளனர்.காதலனை தனது மதத்திற்கு மாறுமாறு காதலி வற்புறுத்தியதாகவும் இந்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவ தினத்தன்றும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 8ஆம் திகதி இரவு தங்கள் இருவருக்கும் இடையே இந்த விடயம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து தான் மதுபானம் அருந்திவிட்டு தூங்கிவிட்டதாகவும் எழுந்து பார்த்த போது அவரை காணவில்லை எனவும், பின்னர் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பெண்ணின் காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த யுவதியின் காதலன் என தெரிவிக்கப்படும் வெள்ளவத்தையை சேர்ந்த 29 வயதுடைய குறித்த இளைஞன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி – விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.கடந்த 05.08.2023 முதல் மாணவியை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும், மாணவி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு பெற்றோர்(தந்தை) கேட்டுக்கொண்டுள்ளனர்.
எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.விவசாயத்தில் பட்டதாரியான குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.காதலனும் காதலியும் ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய இந்த காதல் உறவு நான்கு வருடங்களாக தொடர்ந்துள்ளது.
அவர்கள் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.நிட்டம்புவ எல்லக்கல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் காதலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் காதல் தொடர்பு இருப்பதாக காதலன் சந்தேகப்பட்டு, கடந்த 2ம் திகதி வேலை முடிந்து வெளியே வந்தபோது அவரிடம் தகராறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று அதனை சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும் இரவு 8:00 மணியளவில் காதலியை காதலன் தாக்கியது தெரியவந்தது.
ஹோட்டல் அறையில் வைத்து தாக்கப்பட்ட போது காதலன் மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த ஹோட்டல் அறையின் தரையில் பல ரத்தக்கறைகள் இருந்தன.
ஹோட்டல் அறையின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியின் தலை, கை மற்றும் முழங்கால் பகுதியில் குறித்த இளைஞன் தாக்கியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலி சுயநினைவின்றி இருப்பதை அறிந்த காதலன் முச்சக்கரவண்டி ஒன்றை கொண்டு வந்து அவரை வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக பரிசோதனையின் பின்னர் காயமடைந்த பெண் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
யுவதியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பது வாக்கு. சென்ற தலைமுறை வரை பிரசவங்கள் வீடுகளில் பார்த்து கொள்வது தான் சௌகர்யம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வைப்பர்.
ஆனால் தற்போது சுயமருத்துவம் விபரீதத்தில் கொண்டு விடும் என்கின்றனர் மருத்துவர்கள் . மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்பதை பலரும் உணர்வதே இல்லை.
வீட்டில் நடக்கும் பிரசவம், யூடியூப் பார்த்து தனக்குத்தானே பிரசவம் இவைகளால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில் இவரது மனைவி வசந்தி.
இவர்கள் கூலித் தொழிலாளிகள் இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் . உள்ளனர். இந்த நிலையில் வசந்தி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன்படி வசந்திக்கு ஏற்கனவே 5 குழந்தைகளை வளர்க்க சிரமம். இதில் 6வதாக கர்ப்பமானார்.
வீட்டிலேயே சுயபிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து விட்டது. குழந்தை பிறந்த பிறகு வசந்திக்கு ரத்தப்போக்கு நிற்கவே இல்லை. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதில் வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் குழந்தையின் உடல், வசந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தார் முன் அவமானப்படுத்தியதால் 3 மாதம் பிறகு திட்டம்போட்டு உறவுக்கார சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினரின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பூவாசல் என்ற கிராமம். இங்கு ஆதிசேகர் என்ற 15 வயது சிறுவன் ஒருவ தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த மாதம் 30-ம் தேதி சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில், காரின் சக்கரத்திலே நசுங்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து வந்த குடும்பத்தார் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை துரித படுத்திய போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருக்கும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுவனை மோதிய கார், வேண்டுமென்றே அவரை இடித்தது தெரியவந்தது. மேலும் சிறுவன் வரும்வரை காத்திருந்து, அந்த கார் புறப்பட்டதும் கண்டறியப்பட்டது. அதோடு கற் மோதிய பிறகு மீண்டும் பின்னோக்கி வந்து சிறுவன் மீது கார் ஏற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கார் யாருடையது என்று விசாரிக்கையில் சிறுவனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த பிரியரஞ்சன் (35) என்பவரது என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை விசாரிக்க சென்றபோது, பிரியரஞ்சன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தொடர்ந்து உறவினர், சிறுவன் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுவன் ஒருமுறை பிரியரஞ்சனை அவரது மனைவி, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனாலே பழி வாங்க இதுபோல் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பிரியரஞ்சன், அந்த பகுதியில் இருக்கும் கோயில் அருகே அமர்ந்து அருந்தியதாகவும், பின்னர் கோயில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும், அதனை பார்த்த சிறுவன் அனைவர் முன்பும் இந்த சம்பவத்தை சொன்னதால் அவருக்கு அவமானம் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து தற்போது தலைமறைவாகி இருக்கும் பிரியரஞ்சனை 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத்தார் முன் அவமானப்படுத்தியதால் 3 மாதம் பிறகு திட்டம்போட்டு உறவுக்கார சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினரின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.