காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், ரஷ்ய பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புகையிரத கடவையில் உள்ள புகையிரத கேட் இயங்காதது குறித்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நொடி பொழுது சலனம் தான்… எல்லா குற்றத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. தற்கொலை எந்த பிரச்சனைக்குமே தீர்வாகாது. உங்களுக்கு பிரியமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்க.. எல்லா பிரச்சனைகளுக்குமே தீர்வு உண்டு.
விரல் நுனியில் சாத்தானாய் எல்லோர் வீட்டிலும் செல்போன்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது பிடியில்லாத கத்தியைப் போல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்… கெட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்.
தென்காசியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் 22 வயசு தான். கனவுகளோட வாழ்க்கையைத் துவங்கிய தம்பதி.
ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம் வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர்.
அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிய அஜய்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் அவரது மனைவி ஸ்ரீதனா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதைக் கண்டு அவர் கதறி அழுதார்.
பின்னர் ஸ்ரீதனாவின் மரணம் குறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதனா மாஞ்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அஜய்குமார் மாண்டல் கூலிவேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதனா மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவில் 78 வயதான முதியவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளதன் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமன் நாயர் (78).
விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது 65 வயது நண்பருக்கு பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயர் பீனா குமாரியைச் சந்தித்துள்ளார்.
பீனா குமாரிக்கு ஒரே ஒரு மகள். அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தனது கணவனை இழந்த பீனா குமாரி, மகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தார்.
சோமன் நாயரின் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் பீனா குமாரியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பீனா குமாரியின் சகோதரர் ப்ரவீன், சகோதரியின் மறுமணத்திற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நண்பருக்காக பீனா குமாரியை பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயருக்கும் பீனா குமாரிக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் ஒருவருக்கொருவர் பேசி முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.
இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில் சமீபத்தில் மகள்கள், மருமகன் முன்னிலையில் சோமன் நாயர் – பீனா குமாரி திருமணம் இனிதே நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு,
இரண்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களின் நகைகளைக் கொள்ளையடித்தமைக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்; தீர்ப்பளித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த குற்றத்திற்கு எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் எதிரியின் சகோhதரரகிய இரண்டாம் எதிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வியாழனன்று வழங்கப்பட்டது.
இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் எதிரிகள் கைது செய்யப்பட்டு முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன.
முதலாம் எதிரி கொலையுண்டவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவராவார். இறந்துபோன கணவருடன் இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்திற்கு வருமாறு எதிரி அழைத்ததையடுத்து,
அங்கு சென்றபோதே கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டில் வைத்து அவரது மனைவி கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவர்களின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
துண்டாடப்பட்ட விரல்கள் சடலங்களின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி கிணற்றில் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. கத்தி சடலத்தின் அருகில் இருந்து எடுக்கப்பட்டது.
கொலையுண்ட கணவனுடன் எதிரி இறுதியாகத் தொலைபேசியில் கதைத்தது தொடர்பில் வவுனியா நீதவான் நீதிமன்ற நீதவானின் விசேட கட்டளையின்பேரில் டயலொக் நிறுவன அறிக்கை பெறப்பட்டு அதன் மூலம் அந்த அழைப்பை ஓமந்தை தொலைதொடர்பு கோபுரப் பிரதேசத்தில் முதலாம் எதிரியே ஏற்படுத்தினார்,
என்பதும் பொலிஸ் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டு இந்தக் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக ஓமந்தை பொலிஸ் நிலையப் புலனாய்வு பொறுப்பதிகாரி நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் மகள், எதிரியின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் தனது தாய்தந்தையரின் நகைகள் என பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டி சாட்சியளித்ததாகவும்,
வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நகைகள் பின்னர் நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளரினால் களவாடப்பட்டு அவர் தற்சமயம் தலைமறைவாகி இருப்பதாகவும் வவுனியா நீதிமன்றப் பதிவாளர் மன்றில் சாட்சியமளித்தார்.
இறந்தவர்களின் உடல்களில் கொடூரமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், இரு சடலங்களிலும் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும்,
மொட்டையான ஆயுதத்தினால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்ததாகவும் மருத்துவப் பிரசோதனை செய்த வைத்திய நிபுணர் வைத்தியரத்ன அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரட்டைக் கொலை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு முதலாம் எதிரியே குற்றவாளி என அறிவித்தார்.
அத்துடன் இரண்டு கொலைகளுக்கும் முதலாம் எதிரிக்கு இரட்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்கு தலா 20 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும்,
விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். ஜனாதிபதி தெரிவிக்கும் நேரம், தெரிவிக்கும் இடத்தில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுமாறும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை விதித்தபோது மன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
வவுனியாவில் இன்று (01.12.2022) காலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (30.11.2022) இரவு 8.30 மணியளவில் பாதையினை மாற முற்பட்ட வயோதிபரை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக சென்ற அதிக செயல்திறனுடைய இரு மோட்டார் சைக்கில்கள் குறித்த வயோதிபரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது . இவ் விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
குறித்த இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் பயணித்தாகவும் அவர்களின் வேகமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவித்து விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களினால் பதற்றநிலை காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கேரளாவில் மளிகை கடை வைத்திருக்கும் விதவை பெண் கடந்த 10 ஆண்டுகளில் தனது சேமிப்பு பணத்தின் மூலம் 11 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது தொடர்பில் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மாலி ஜாய். இவர் கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய மளிகை கடையை நடத்த தொடங்கினார். அவர் உயிரிழந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மாலி தொடர்ந்து மளிகை கடையை நடத்தி வருகிறது.
அவருக்கு முக்கிய வருமானம் மளிகைக் கடையில் இருந்து வந்தது. மகனுக்கு வேலை கிடைத்து, மகளுக்குத் திருமணமான பிறகு, அவள் கையில் அதிக பணம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
ஒருநாள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மாலியை தங்களுடன் சுற்றுலா பயணத்திற்கு அழைத்தனர். அதன்படி அவர்களுடன் ஊட்டி, மதுரை, மைசூரு போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டார்.
இதன்பிறகு பயணம் செய்வதில் மாலிக்கு நாட்டம் அதிகரித்தது. அதன்படி 2012ல் முதல் முறையாக ஐரோப்பாவுக்கு மாலி பயணித்தார். பயணத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, அவர் அடுத்த பயணத்திற்காக பணம் சேமிக்க ஆரம்பித்தார்.
அதன்படி பத்தாண்டுகளில் பிரித்தானியா (லண்டன்), மலேஷியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு பயணித்துள்ளார். மாலி தனது பயணத்திற்காக ஒருபோதும் கடன் வாங்கியதில்லை, பெரும்பாலான பணம் மளிகைக் கடை வருமானத்தில் இருந்து வருகிறது.
சில நேரங்களில், தனது தங்க நகைகளை அடகு வைத்தும் பயணித்திற்கான பணத்தை தயார் செய்திருக்கிறார், ஆனால் பின்னர் தனது கடனை செலுத்தி நகைகளை மீட்டிருக்கிறார். பிரித்தானியாவுக்கு 15 நாள் பயணமாகச் சென்ற பிறகு அவளுக்குப் பிடித்தமான இடமாக லண்டன் ஆனது.
இங்கிலாந்து கால்பந்து ரசிகர் ஒருவரை கத்தார் அதிகாரிகள் முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்து இருப்பது உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வரும் வளைகுடா நாடான கத்தார், மைதானத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னங்கள் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது.
ஆனால் கத்தாரின் இந்த திடீர் விதிகளுக்கு உலக நாடுகள் மற்றும் உலக கால்பந்து ரசிகர்கள் முழுமையான எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, Fifa கால்பந்து அமைப்பு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது.
இருப்பினும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பது வளைகுடா நாடான கத்தாரில் சட்டவிரோதமானதாக இருப்பதால், போட்டி முழுவதும் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பல அத்துமீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அல் பேட் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்ற நெதர்லாந்து vs கத்தாருக்கு கால்பந்து போட்டிக்கு முன்னதாக லண்டனை சேர்ந்த இங்கிலாந்து அணி ரசிகர் அந்தோணி ஜான்சன் என்பவர் ரெயின்போ பேஸ்பால் தொப்பியை அணிந்து இருந்ததால் கத்தார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர், தான் கத்தார் அதிகாரிகளால் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து iசெய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார். அதில் தான் ஸ்டேடியத்தின் முக்கிய பாதுகாப்பு பகுதிக்கு வந்தபோது, என்னிடம் கடந்த எட்டு போட்டிகளில் இல்லாத எனது கடிகாரத்தையும், பெல்ட்டையும் கழற்றும்படி என்னிடம் கூறப்பட்டது.
அதையடுத்து நான் மீண்டும் மைதானத்திற்குள் சென்ற போது, மூத்த பாதுகாவலர் என் முகத்துக்கு நேராக வந்து “எங்கள் கலாச்சாரத்தை மதிக்கவில்லை” என்று கத்தினார், அத்துடன் அவர்கள் என்னை கீழே தள்ளினார்கள்.
மேலும் என்னிடம் உலோகம்(சந்தேகத்திற்குரிய பொருள் அல்லது ஆயுதம்) இருப்பதாக கூறி, என்னை ஒரு தனிப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் முதலில் எனது ஷார்ட்ஸ் மற்றும் காலணிகளை கழற்றவும், பின்னர் என் பேண்ட்டை கீழே எடுக்கவும் உத்தரவிட்டார்கள், பின் எனது உள்ளாடைகளை அகற்ற சொல்லி முழு நிர்வாணமாக நிற்க சொன்னார்கள்.
எனது உடல் மற்றும் உடைமைகளை முழுவதும் சோதித்த அவர்கள் இறுதியில் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள், ஏனென்றால் அவர்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
10 நிமிடங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில், ஃபிபா என்ன சொல்கிறது என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, மைதானத்தில் என்ன வர வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரது செயல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் இளைஞன் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
அதாவது கட்டாரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியை காண உலகளாவிய ரீதியிலுள்ள காற்பந்தாட்ட ரகசியர்கள் குவிந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு அழைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கட்டாரில் பணி புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த நவரட்னம் தனரூபம் என்ற இளைஞனே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் பதாகை ஒன்றின் மூலம் அவர் , உலகமக்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
கத்தார் உலக கோப்பை போட்டியில் அமெரிக்க அணியிடம் ஈரான் அணி தோற்றதை அந்நாட்டு மக்களே ஆரவாரமாக கொண்டாடி தீர்த்துள்ளனர். பெண்கள் ஆடை சுதந்திரத்திற்கு எதிரான கட்டுபாடுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதிலும் மிக முக்கியமாக, ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் Mahsa Amini என்ற பெண் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்தபோதே அவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி அரசுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில், மக்கள்மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு நடத்திவருகின்றன அரசு படைகள். இதில் குழந்தைகள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரையில் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தான் ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணி கத்தாருக்கு சென்று உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவுக்கெதிரான ஆட்டத்தில், 1-0 என்ற கணக்கில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஈரான் தோல்வியுற்றதை, ஆட்டம் பாட்டத்தோடு அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான தோல்வியையடுத்து ஈரான் உலக கோப்பையில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
Iran is a country where people are very passionate about football. Now they are out in the streets in the city of Sanandaj & celebrate the loss of their football team against US. They don’t want the government use sport to normalize its murderous regime.pic.twitter.com/EMh8mREsQnpic.twitter.com/MqpxQZqT20
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கில் 13 ஓட்டங்களிலும், கேப்டன் தவான் 28 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஆனால் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அணியின் ஸ்கோர் 121 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் 49 ஓட்டங்களில் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா (12) நிலைத்து நிற்கவில்லை. இதனால் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்க தடுமாறியது. அப்போது களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அவர் 64 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதம் ஆகும்.
இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் டேரல் மிட்செல், ஆடம் மில்னே தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Washington Sundar's maiden ODI fifty has pushed India to a modest total 👏
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ஈரான் வீரர் அழுததைப் பார்த்து ஓடி வந்து அமெரிக்க வீரர்கள் ஆறுதல் கூறினர்.
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் துமாமா மைதானத்தில் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் கோல் அடிப்பதற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த சூழலில் ஆட்டத்தின் முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் போட்டியை சமன் செய்ய ஈரான் வீரர்களின் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், இறுதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
நேற்றிரவு தோல்வியடைந்த கால்பந்து அணியின் வீரர் சயீத் எஸதுல்லா மைதானத்தில் கதறி அழ தொடங்கினார். அப்போது, அமெரிக்க கால்பந்து அணியின் வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து அமெரிக்க அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
பொலனறுவை – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தமது 15 வயது மகளை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயதான தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை குறித்த தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொலனறுவை மேல்நீதிமன்றம் நேற்றைய தினம் (29.11.2022) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று (30.11.2022) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார்.
அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரணத பரீட்சையில் உயிர்ழந்தவரின் மகள் 9A பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு தமிழக மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (62).
மனைவி சுமித்ரா. ஒரே மகள் மதுமிதா(26). பிலிப்பைன்ஸில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.
மகளின் மருத்துவக்கல்வி மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்காக நாராயணசாமி ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது.
இதோடு நாராயணசாமி, மனைவி மற்றும் மகளை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சுமித்ரா தற்கொலை செய்யப்போவதாக மகளிடம் கூறியபோது அவரும் சம்மதித்தார்.
இதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் மதுமிதா பூச்சிக்கொல்லி மருந்தையும், தாய் சுமித்ரா அதிகளவு சர்க்கரை நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளனர். தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் மதுமிதா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.