பிச்சைக்காரர் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள் : தினமும் சாப்பிட்டு மகிழ்ந்ததாக அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பிச்சைக்காரரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் லிங்காசுகரை சேர்ந்த தியாமப்பா ஹரிஜன் (58). இவர் பிச்சை எடுத்து வரும் நிலையில் திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதையடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது வயிற்றுக்குள் 187 பண நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைகள் மூலம் நாணயங்கள் அகற்றப்பட்டது.

இது குறித்து மருத்துவர் ஈஷ்வர் கூறுகையில், பிச்சை எடுத்து கிடைக்கும் நாணயங்களை வாய்க்குள் போட்டு விழுங்கும் பழக்கம் தியாமப்பாவுக்கு இருந்திருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் அது ஜீரணமாகும் என நினைத்திருக்கிறார்.

அவருக்கு schizophrenia எனப்படும் பிளவுபட்ட மனநோய் இருந்திருக்கிறது. நாணயங்களை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கும் போது ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது. அனைத்து நாணயங்களை வயிற்றில் இருந்து எடுக்க 2 மணி நேரம் ஆனது என கூறியுள்ளார்.

மகளுக்கு கோவில் கட்டிய தந்தை : கண் கலங்க வைக்கும் அன்பின் உச்சம்!!

ஆந்திராவில்..

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கைய்யா – லக்‌ஷ்மி தம்பதியின் 4 வது மகள் சுப்புலக்‌ஷ்மி. செங்கைய்யா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.

2011 ஆம் ஆண்டு செங்கையாவின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் சுப்புலக்‌ஷ்மி மரணமடைந்துள்ளார். இதனால் மன துயரத்துக்குள்ளான செங்கைய்யா,

தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அந்த கோவிலில் தினமும் வழிப்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடலில் விழுந்த காதல் மோதிரம்… உடனே தண்ணீரில் குதித்த காதலன் : பின்னர் நடந்த சம்பவம்!!

அமெரிக்காவில்..

காதல் அறிவிப்பின் போது நிச்சயதார்த்த மோதிரம் தண்ணீரில் தவறி விழுந்து விட சற்றும் தாமதிக்காமல் கடலில் மூழ்கி மோதிரத்தை மீட்ட காதலனுக்கு காதலி அன்பு முத்தத்துடன், காதல் சம்மதம் தெரிவித்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காதலியிடம் விமானத்தில் இருந்து குதித்து கொண்டே காதல் முன்மொழிவு செய்வது, நடுக் கடலுக்குள் மூழ்கி காதலிக்கு காதல் முன்மொழிவை தெரியபடுத்துவது போன்ற வித்தியாசமான முறைகளை சமீபத்தில் காதல் வசப்பட்ட இளைஞர்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் பேஸ்புக்கில் ஸ்காட் க்ளைன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோவில், காதல் முன்மொழிவு ஏற்பாடுகள் சற்று சாதாரணமாக இருந்தாலும், அவை நொடி பொழுதில் அசாதரணமானதாகவும், வேடிக்கை நிறைந்ததாகவும் மாறி காதலன் காதலி இருவருக்குமே வாழ்வில் மறக்க முடியாத தருணமாய் மாறி உள்ளது.

அதில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் க்ளைன் என்ற நபர், தனது காதலி சுசி டக்கருடன் சேர்ந்து படகில் நின்று கொண்டு அழகிய சூரிய அஸ்தமன காட்சிகளை ரசித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அதை சரியான தருணம் என்று கருதிய காதலன் ஸ்காட் க்ளைன், தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்து மோதிர பெட்டியை எடுத்து நீட்ட முற்பட்டார். ஆனால் ஸ்காட் மோதிர பெட்டியை வெளியே எடுக்கும் போது அது அவரது கையில் இருந்து நழுவி கடலுக்கு விழுந்தது.

இருப்பினும் ஒரு நொடி கூட தாமதிக்காத காதலன், கடலில் மூழ்கி மோதிர பெட்டியை கையில் பிடித்த படி தண்ணீரில் இருந்து வெளியே தென்பட்டான். பிறகு இந்த காட்சிகளை படம் பிடித்து கொண்டு இருந்த நண்பர் ஒருவர், க்ளைனிடம் இருந்து மோதிர பெட்டியை வாங்கி பாதுகாப்பாக வைத்து விட்டு நண்பனை கப்பலுக்குள் இழுத்தார்.

ஒருவழியாக நிம்மதி பெருமூச்சுடன் கப்பலுக்குள் ஏறிய காதலன் மீண்டும் காதலி சுசி டக்கருடம் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது அதிர்ச்சியும், சந்தோஷமும் கலந்த நிலையில் இருந்த காதலி அந்த தருணத்தை நினைத்து சிரித்து கொண்டே காதலனுக்கு முத்தமிட்டதோடு காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் 100% உண்மையானது. 100% என் அதிர்ஷ்டம். 100% மறக்க முடியாது” என்று ஸ்காட் க்ளைன் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

மனைவியின் முகத்தில் திராவகத்தை வீசிய கணவன் : பின்னர் நேர்ந்த சோகம்!!

ஜார்க்கண்டில்..

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு தகராறு ஏற்பட்டதில், மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் கான். இவர் தனது மனைவி ஹினா பர்வீனுடன் அதேபகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

தனக்கு இருசக்கர வாகனம் தேவை என மனைவியிடம் கூறிய அமீர் கான், அதற்காக 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனாரிடம் இருந்து வாங்கி வரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஹினா அதற்கு செவி சாய்க்கவில்லை என தெரிகிறது.

இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அமீர் கானின் துன்புறுத்தலைத் தொடர்ந்து தனது தந்தை வீட்டிற்கு சென்ற ஹினா, கணவருக்காக பணம் கேட்டுள்ளார். விரைவில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் கணவர் வீட்டிற்கு சென்ற ஹினா , தந்தை கூறியதை அமீர் கானிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பணம் உடனடியாக கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அமீர் கான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த திராவகத்தை மனைவியின் முகத்தில் வீசியுள்ளார். திராவக வீச்சினால் ஹினா அலறித் துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ஹினாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் அமீர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஹினாவின் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் திராவகம் பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது வாய்க்குள் திராவகம் சென்றதால் அவரால் பேச முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அமீர் கானை வலைவீசி தேடி வருகின்றனர். வரதட்சணை கேட்டு மனைவியின் முகத்தில் கணவன் திராவகத்தை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செதில் செதிலாக உதிர்ந்த தோல்.. காதல் மனைவியை தீ வைத்த கொடூரன் : கணவனைக் காப்பாற்ற முயன்ற பெண்!!

விழுப்புரத்தில்..

காதலித்து கரம் பிடித்த மனைவியின் மீது, பின்னாலிருந்து மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து கொளுத்திய கணவனை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் நீதிபதியிடம் மரண வாக்குமூலத்திலும் காட்டிக் கொடுக்காமல், தானே கொளுத்திக் கொண்டதாக கூறியிருக்கிறார் சங்கீதா.

அதன் பின்னர், உறவினர்கள் அழுது, கெஞ்சி கேட்டுக் கொண்ட பின்னர், வீடியோவில் தனது சாவுக்கான காரணத்தைக் கூறியுள்ளதால் கணவர் சிக்கினார். விழுப்புரம், வழுதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (30). ஓட்டுநரான இவர் சங்கீதா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முத்துக்குமரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆனால், தன் மீதான தவறை மறைக்க, முத்துக்குமார், வரதட்சணை சங்கீதாவிடம் வரதட்சணை அதிகம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

இதற்கு அவரது அக்கா கலையரசியும் உடந்தையாக இருந்து உள்ளார். வரதட்சணைப் பணம் வாங்கி வருவதற்கு சங்கீதா மறுத்துள்ளார். கடந்த 5ம் தேதியும் இது குறித்து இருவருக்குமிடையே சண்டை நடந்துள்ளது.

அப்போது சங்கீதாவுக்கு பின்பக்கமாக வந்து, முத்துக்குமாரும், அவரது அக்காவும் திடீரென சங்கீதா மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டவும், சங்கீதா அது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

சங்கீதாவின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சைப் பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

முன்னதாக, நீதிபதி மருத்துவமனைக்கே வந்து சங்கீதாவிடம் வாக்குமூலம் கேட்ட போதும், தானே பற்ற வைத்துக் கொண்டதாக பொய் சொன்னார். ஆனால், சங்கீதா சொல்வது பொய் என்றும், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நிகழும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால், சங்கீதாவின் காலில் விழுந்து அழுதப்படியே கெஞ்சியுள்ளனர். உண்மையை நீதிபதியிடம் சொல்லுமாறு மன்றாடி உள்ளனர்.

அதற்கு பிறகு தான் சங்கீதா உண்மையை சொல்லி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோ வாக்குமூலம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் வாக்குமூலத்தில், நீதிபதி சங்கீதாவிடம் பெயர் கேட்கிறார், வயது கேட்கிறார், கணவர் பெயர், அவரது வேலை என்ன என்று கேட்கிறார். எத்தனை பிள்ளைகள், அவர்களுக்கு வயது என்ன என்று கேட்கிறார், பிறகு எப்படி இந்த தீவிபத்து நடந்தது? கணவர் தான் காரணமா? என்று கேட்கிறார்.

இது அனைத்திற்கும் சங்கீதா சொன்ன பொய்யான வாக்குமூலத்தில், “என் பேர் சங்கீதா. 24 வயசாகிறது.. எனக்கு 3 பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்கு வயசு5, இன்னொருத்தனுக்கு 4 வயசு, இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயசாகுது. என் கணவர் பெயர் முத்துக்குமார். கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது.

2017ல் கல்யாணம் நடந்தது. அன்னைக்கு சிலிண்டர் வீட்டில் காலி ஆயிடுச்சு சார். அதனால் ஸ்டவ் பற்ற வைக்க மண்ணெண்ணெய் எடுத்தேன். ஸ்டவ் எனக்கு அவ்வளவாக பத்த வைக்க தெரியாது. இருந்தாலும் மண்ணெண்ணைய் எடுத்து, ஸ்டவ்வில் ஊற்றி விட்டு, மீதி கொஞ்சம் தனியா எடுத்து வெச்சேன்.

அது கீழே கொட்டி விட்டது. அது என் சேலையில் பட்டு விட்டது ஆனால், அதை நான் கவனிக்கவில்லை.. ஸ்டவ் பற்ற வைத்ததுமே என் துணியில் நெருப்பு பற்றிக் கொண்டது. என் வீட்டுக்காரர் அப்போது தூங்கிட்டு இருந்தார். நான் கத்தி அலறியதும் அவர் ஓடி வந்து என்னை காப்பாற்றினார். என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆரம்பத்தில் எங்களுக்குள் சண்டை இருந்தது.. ஆனால், அதுக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார். டிரைவராக இருக்கிறார். இப்போ ஒழுங்கா இருக்கார். அவர் மீது எந்த தப்பும் இல்லை. நான் தான் மண்ணெண்ணெயை தெரியாமல் ஊற்றிக் கொண்டேன்” என்கிறார்.

பிள்ளைகளுக்கு எதுவும் ஆகாது. தயவு செய்து உண்மையைச் சொல்லுமா என்று உறவினர்கள் சங்கீதாவின் காலில் விழுந்து அழுதபடியே கேட்டதும், சங்கீதா அழுதபடியே இரண்டாவதாக தந்த மற்றொரு மரண வாக்குமூலத்தில், “நான் சங்கீதா பேசறேன்.

என் வீட்டுக்காரர் வரதட்சணை கேட்டு என் அப்பாவை டார்ச்சர் செய்துட்டு வந்தார். என்னையும் இழுத்து போட்டு அடிப்பார். தீபாவளி முடிந்ததில் இருந்தே நிறைய குடிச்சிட்டு வந்தார். அதனால், மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தி கொள்ள போவதாக அவரிடம் சொன்னேன்.

உடனே மண்ணெண்ணையை நிஜமாகவே எடுத்து வந்து, பின்பக்கமாக வந்து என் மீது ஊற்றி என்னை கொளுத்திட்டார். அதுக்கப்புறமா என்னை தண்ணியில் தூக்கி கடாசி விட்டார். தோல் எல்லாம் எனக்கு கழண்டு வந்தது. உடம்பெல்லாம் பற்றிக் கொண்டது. நான் கத்தினேன். எல்லாரும் ஓடி வந்து தூக்கினாங்க. ஆம்புலன்ஸ் வந்தது.

என்னை அதில் ஏற்றினாங்க. உடனே இவர் என் கூட ஆம்புலன்ஸில் வரமுடியாதுன்னு சொன்னார். எல்லாரும் திட்டின பிறகு, என்கூட வந்தார். வர்ற வழியெல்லாம் என்னை திட்டிகிட்டே வந்தார். நீ மட்டும் உண்மையை சொன்னால், உன்னை கொளுத்தின மாதிரி, பசங்களையும் கொளுத்திடுவேன்னு சொன்னார்.

அதனால் தான், நான் பயந்துட்டு, பசங்களுக்காக, யார்கிட்டயும் உண்மையை சொல்லல. ஜட்ஜ் கிட்ட, டாக்டர் கிட்ட, போலீஸ் கிட்ட, என் வீட்டுல, எல்லார்கிட்டயும் பொய் தான் சொன்னேன். இப்ப உண்மையை சொல்றேன். என்னை என் வீட்டில் எல்லாரும் உண்மை சொல்ல சொன்னாங்க. இது தான் நடந்த உண்மை. தயவு செஞ்சு என் பிள்ளைகளையாவது காப்பாற்றுங்க” என்று கூறுகிறார்.

பல மணி நேரம் குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர்.. குளியறையில் காத்திருந்த அதிர்ச்சி!!

ஊட்டியில்..

2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் வாளிக்குள் தலை குப்புற கவிழ்ந்து நீரில் மூச்சு திணறி இறந்துள்ளது நீலகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சலீம் – பிரிஜோத் பானு தம்பதியினர்.

செல்போன் கடை நடத்தி வரும் இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம், ராஜா வழக்கம்போல் வெளியில் சென்றுள்ளார். மேலும் பானு சமயலறையில் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் குழந்தை தனியே விளையாடி கொண்டிருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த பானு, தனது குழந்தையை காணவில்லை என்பதை அறிந்தார்.

பின்னர் படுக்கையறை, கட்டில் கீழ், வீட்டின் வெளியே என்று சுற்றிலும் தேடியுள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கைவில்லை. எனவே அக்கம்பக்கத்தினரிடம் தனது குழந்தையை காணவில்லை’; யாரேனும் கடத்தி சென்றாரோ என்று கூறி பயந்து அழுதுள்ளார்.

பின்னர் மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்க்கையில் குளியலறை கதவு திறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கே சென்று பார்த்த பானு, தனது குழந்தை வாளிக்குள் தலை குப்புற இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பதற்றத்தில் குழந்தையை தூக்கி பார்க்கையில் வாளிக்குள் இருந்த நீரில் அவர் மூச்சி திணறி இறந்துள்ளது தெரியவந்தது. குழந்தை இறப்பை தாங்க முடியாமல் பானு கதறி அழுதுள்ளார்.

பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு பொருள் மீன் தொட்டியில் விழுந்ததால் அதை எடுக்கும் போது தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு ரயிலால் நேர்ந்த விபரீதம்.. பெண்ணுக்கு நடந்த சோகம்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மஞ்சுஷர்மா என்னும் பெண் தனது குடும்பத்துடன் அங்குள்ள விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் ஏறும் பொம்மை ரயிலில் அவர் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிமாக அதில் சிக்கி திணறி உள்ளார். அங்கு கூடியிருந்தவர்கள் அதை கண்டு ஊழியர்களிடம் கூற அவர்கள் ரயிலை நிறுத்தி உள்ளனர்.

ஆனால், மஞ்சுவிற்கு கடும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாய் பேச முடியாத தாயின் ஏக்கம்.. சிறுவனின் கனவை நிறைவேற்றிய இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

ஆந்திராவில்..

23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.

அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.

இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.

ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.

இந்த நிலையில் அவர் செய்துள்ள மற்றொரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சாலையில் செல்லும்போது சிறுவன் ஒருவன் ஒரு கடையின் முன் நின்று சைக்கிள் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதனை ஹர்ஷா சாய் பார்த்து அந்த சிறுவனிடம் பேசியுள்ளார்.

அப்போது தன்னிடம் இறந்த சைக்கிள் உடைந்துவிட்டதால் புது சைக்கிளை வாங்கித்தர வீட்டில் வசதியில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை அழைத்து அந்த கடைக்கு சென்ற ஹர்ஷா சாய் சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி தந்ததோடு அந்த கடையில் சிறுவன் கேட்ட விளையாட்டு பொருள்களையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

பின்னர் சிறுவனை அழைத்துக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் சிறுவனின் தாய்க்கு வாய் பேச முடியாது என்பது தெரியவந்துள்ளது.

ஹர்ஷா சாயின் செயலை அறிந்த அந்த தாய் அவரை கையெடுத்து கும்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு உதவியதாக பலரும் ஹர்ஷா சாயை பாராட்டி வருகின்றனர்.

திருமணமாகி 13நாட்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

வடசென்னையில்..

வடசென்னை தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி கௌரி மகள் ரேகா (35) இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வந்தார் இவருக்கும் சென்னை.

டி நகர் கிரியப்பா தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்து கடந்த 14ஆம் தேதி வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ரேகா கணவர் வீட்டில் தங்கியிருந்தார் பின்னர் 19ஆம் தேதி தனது தாய் வீட்டிற்கு வந்து இங்கிருந்து வேலைக்கு போய் வந்து கொண்டு இருந்தார் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மருமகன் ராஜசேகர் தனது மனைவியான ரேகாவை அழைத்துச் செல்வதாக மாமனாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார்

இதனால் மருமகன் வருகிறார் என்று தெரிந்ததும் இவர்கள் காலை மார்க்கெட்டுக்கு சென்று சமையல் செய்வதற்காக கறி மற்றும் மற்ற காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் தனது மகள் ரேகா மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வயதான தம்பதியர்கள் சத்தம் போட்டுள்ளனர்

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து ரேகாவின் உடலை கீழே இறக்கி பார்த்தபோது இறந்து போனது தெரிய வந்தது உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் ஆர். கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கணவர் வருகிறார் என தெரிந்தவுடன் தனக்குத்தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது திருமணம் ஆகி 13 நாட்கள் ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்

முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்.. ஒன்றரை கிலோ எடை இருந்ததால் அதிர்ந்துபோன மருத்துவர்கள்!!

கர்நாடகாவில்..

கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்சுகூரைச் சேர்ந்த 58 வயதான தியாமப்பா ஹரிஜன் என்பவர் வயிற்று வழியில் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் அவரின் உறவினர்கள் அவரை ஹங்கல் ஸ்ரீ குமரேஷ்வர் என்ற மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அவரின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாணயங்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சையில் அவரின் வயிற்றில் இருந்து 1, 2 மற்றும் 5 மதிப்புள்ள ஏராளமான நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அத்னபின்னர் அந்த நபர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள், அவர் பல மாதங்களாக நாணயங்களை விழுங்கி வந்திருக்கலாம் என்றும், அவர் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடைகொண்ட 187 நாணயங்கள் வெளியேற்றப்பட்டது என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் தீடீரென கொடியுடன் ஓடி வந்த நபரால் பரபரப்பு!!

கத்தாரில்..

நடைபெற்ற போர்ச்சுகல்-உருகுவே போட்டியின் போது மைதானத்தில் தீடீரென்று நபர் ஒருவர் ஓடி வந்ததால் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுகல்-உருகுவே போட்டியின் போது மைதானத்தில் நபர் ஒருவர் வானவில் கொடியை பிடித்து ஓடிவந்தார். அவரது சட்டையின் முன்புறம் ‘உக்ரைனைக் காப்பாற்றுங்கள்’ என்றும், பின்புறம் ‘ஈரான் பெண்களுக்கான மரியாதை’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

திடீரென கையில் வானவில் கொடியுடன் கால்பந்து உலகக்கோப்பை போட்டியின்போது மைதானத்துக்குள் ஓடி வந்ததால் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, காவலர்கள் ஓடி வந்து அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கத்தார் உலக கோப்பையில் சென்று கலக்கிய தமிழகத்தை சேர்ந்த 9 வீராங்கனைகள் : நெகிழ்ச்சி தகவல்!!

கத்தாரில்..

FIFA உலக கோப்பை கால்பந்து திருவிழாவை உலகமே கொண்டாடி வருகிறது. இந்த திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த கருணாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் 9 தெருவோரக்குழந்தைகள் கத்தார் பறந்தனர். அங்கு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.

தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின் புகலிடமாக திகழ்வது தெருக்கள்தான். தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தங்கள் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தங்கள் மீதான பார்வையை மாற்றுவதற்காகவும் அவர்களுக்கான உலகக் கோப்பை தொடர் களமாக அமைகிறது.

இது குறித்து அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கி கத்தார் அழைத்துச்சென்ற கருணாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பால் சுந்தர் கூறுகையில், உரிமையை மீட்டெடுக்கும் போராட்ட களத்தில் காலிறுதிவரை சென்ற இவர்களின் சாதனை இந்தியாவில் கால்பந்து வீரர்களின் திறமையை சர்வதேச அரங்கில் நிலைநாட்டியுள்ளது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மெஸ்ஸியை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் – மெக்சிகோ குத்து சண்டை வீரர் மிரட்டல்..!!

மெக்சிகோ..

மெக்சிகோ குத்து சண்டை வீரர், மெஸ்ஸியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சம்பவம் உலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

சமீபத்தில் லுசைல் மைதானத்தில் ‘சி’ பிரிவில், அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் நேருக்கு நேர் மோதின. போட்டி தொடங்கியதிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது.

இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, திடீரென அர்ஜென்டிணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அபாரமாக அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு உடைமாற்றும் அறையில் வீரர்கள் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அப்போது, மெஸ்ஸி செய்த காரியம் மெக்சிகோவின் குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜுக்கு ஆத்திரம் கிளப்பி இருக்கிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்ஸி தரையை துடைத்திருக்கிறார். இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்ஸியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால், அவரை வாகனம் ஏற்றி கொலை விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும்.

மெஸ்சியின் அந்தஸ்துக்கு அவர், மெக்சிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும். அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும் என்று மிரட்டலாக பதிவிட்டுள்ளார்.

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்..!!!

கத்தாரில்..

விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஈரான் அணி, இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. குறித்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் எவரும் ஈரானின் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்தனர்.

இந்த விவகாரம் ஈரானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது அமெரிக்க அணியுடன் ஈரான் மோத உள்ளது. ஆனால் விதிகளுக்கு எதிராக தேசிய கீதத்தை பாட மறுத்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படுவார்கள் எனவும், சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் ஈரான் கால்பந்து அணிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கத்தாரில் முகாமிட்டுள்ள ஈரானின் பாதுகாப்பு அமைப்பான IRCG அதிகாரிகள், ஈரானிய கால்பந்து வீரர்கள் 26 பேர்களையும் தனித்தனியாக சந்தித்துள்ளனர். அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்பது தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மட்டுமின்றி, ஒவ்வொரு ஈரானிய வீரர்களும் IRCG அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், லீக் ஆட்டத்தில் கடைசியாக அமெரிக்க அணியை ஈரான் எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ஈரானிய வீரர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சிக்கலில் தள்ளும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் நடந்துவரும் நாடுதழுவிய போராட்டங்களில் இதுவரை 18,000 பேர்கள் வரையில் கைதாகியுள்ளனர்.

இளம் பெண் ஒருவரின் மரணத்திற்கு நீதி கேட்டும் போராடு மக்களில் 450 பேர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றே மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் மாவீரர் நாள் வியாபாரிகள் எனும் தலைப்பில் சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் நாள் வியாபாரிகள் எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில், அன்பார்ந்த தமிழீழ மக்களே! 2009 ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு மாவீரர் நாளும் மாவீரர்கள் பெயரில் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு நல்ல உதாரணமாக இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வைப் பார்ப்போம்.

கடந்த மாதம் தொடக்கத்தில் பா.உ சிறிதரன் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று மாவீரர் நாளுக்காக பணம் சேகரித்தார். மேலும் வண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சில கோடிகளை இவ்வருட மாவீரர் நாள் நிகழ்விற்காக அனுப்பி வைத்துள்ளது.

இந்த பணத்திற்கான கணக்குகளை இவர்கள் யாருக்கும் தெரிவிப்பதில்லை. சிறிய தொகையை செலவழித்து விட்டு மிகுதி பணத்தை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

கஜேந்திரனும் சிறிதரனும் இவ்வாறான நிகழ்வுகளை சாட்டி புலம்பெயர் மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பதே இவர்களின் வியாபாரமாக உள்ளது. என சுவரொட்டியில் காணப்படுவதுடன்,

சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் மக்களில் ஒருவன் 27 கார்த்திகை 2022 என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகரின் வைரவப்புளியங்குளம் வீதி, புகையிரத நிலைய வீதி, நூலக வீதி, நகரசபை வீதி என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியாவில் பல மாதங்களுக்கு பின்னர் மண்ணெண்ணை விநியோகம்!!

மண்ணெண்ணை விநியோகம்..

வவுனியா மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பின்னர் மண்ணென்ணை விநியோகம் இடம்பெறுவதினால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

ஒரு நபருக்கும் 5லீட்டர் என்ற அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் ஒரு கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் , இரண்டு தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மூன்று இடங்களில் மண்ணென்ணை விநியோகம் இடம்பெற்றது.

கடந்த பல மாதங்களின் பின்னர் மாவட்டத்தில் மண்ணென்ணை விநியோகம் இடம்பெறுவதினால் நீண்ட வரிசையும் காணக்கூடியதாகவிருந்தது.