செல்ஃபி மோகத்தால் வந்த வினை… இரு நண்பர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

செம்பரம்பாக்கத்தில்..

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்து நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மகன் விக்னேஷ் (20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இவரது நண்பர் தரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16) 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றனர்.

அங்குச் சென்ற இவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதகின் அருகே இறங்கி தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றனர். மேலும் இது குறித்து உடனே தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி நீண்ட நேரத்திற்கு இருவரின் உடலையும் இறந்த நிலையில் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும் செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் சிறு வயது ஆசையை 73 வயதில் நிறைவேற்றிய பிள்ளைகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் வரதராஜன். 73 வயதுடைய இவர், TVS நிறுவனத்தில் ‘பார்சல்’ லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி, ஹாமலா, சங்கீதா, ஷோபனா என 4 மகள்களும், செந்தில்நாதன் என்ற மகன் என 5 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில், முதியவருக்கு 8 பேரகுழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு முதாயவரின் மனைவி இறந்ததையடுத்து தனது மகன் செந்தில்நாதனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது பேரக்குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த முதியவர், அவர்களிடம் ‘தனக்கு சிறு வயதில் காத்து குத்தவே இல்லை’ என்று விளையாட்டாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட அவரது மகள்கள் தனது தந்தைக்கு காது குத்தி அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சேந்தமங்கலம் அருகே நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து முதியவர் வரதராஜனுக்கு நேற்றைய முன்தினம் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. இந்த விழாவில் மகன், மகள்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முதியவர் வரதராஜன் கூறுகையில், ‘சிறு வயதில் எனக்கு காது குத்த வைத்திருந்த தோடு, துணிகள் திருடு போனது. தாயும் இறந்து விட்டதால், காது குத்தாமல் விட்டு விட்டனர்.

இது என் மனதில் நீண்ட நாட்களாக பெரும் குறையாகவே இருந்தது. அதை தற்போது என் மகள்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்வால், நான் குழந்தையாகவே உணர்கிறேன். வயதான பெற்றோர்களின் தீராத ஆசைகளை, பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்.” என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் உண்டியலால் கோடீஸ்வரரான தந்தை : நடந்த அதிசயம்!!

கேரளாவில்..

மகனின் உண்டியலை உடைத்து தந்தை செய்த காரியம் கோடீஸ்வரராக மாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு வேலைக்கு சேர திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மகன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து கடந்த சனிக்கிழமை லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

இவரது வெற்றிக்கான டிக்கெட் TJ 750605 என்பதாகும். குறித்த டிக்கெட்டினை இவர் இரண்டாவது தான் தேர்வு செய்து வாங்கியுள்ளாராம். முதலில் வேறு டிக்கெட் எடுத்ததாகவும், அதன் பின்பு இரண்டாவதாக மாற்றம் செய்த டிக்கெட்டிற்கே லாட்டரி விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கிவரும் இவர், அவ்வப்போது 100, 200, முதல் 5000 வரை பரிசு பெற்றுள்ளார். ஆனால் இந்த முறை எதிர்பார்க்காத வெற்றியினை பெற்று 25 கோடி வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, ​​நான் வெற்றி பெற்றதைக் கண்டேன். என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டிய பின்பு, அவர் தான் வெற்றி எண் என்பதை உறுதி செய்ததாக கூறியுள்ளார்.

வரி பிடித்தம் செய்த பின்பு ரூ.15 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் இவர், தனது கடனை அடைத்துவிட்டு, சொந்தமாக வீடு மற்றும் கடை ஒன்றினை வைத்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

4 ஆண்டுகளாக குழந்தை இல்லை… தம்பதி எடுத்த விபரீத முடிவு..!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சூலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (24). இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் குழந்தை பாக்கியம் இல்லை.

குழந்தை வேண்டி நீண்ட நாட்களாக ஏங்கி தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல உணவருந்திவிட்டு தம்பதி தூங்க சென்றனர். காலை வெகுநேரம் ஆகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது, கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனே சிக்கபள்ளாப்பூர் ஊரக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

கதவுடைத்து உள்ளே சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதி இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும், அதனால்கூட தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

காதலிக்காக போராடி இறந்த இளைஞன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ராணிப்பேட்டையில்..


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (25). பிஇ பட்டதாரியான இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே தனியார் தொழிற்சாலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி (24) பணியாற்றி வந்தார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல் தேன்மொழியின் வீட்டிற்கு தெரிய வரவே தேன்மொழியை பணியில் இருந்து அவர்களது பெற்றோர் நிறுத்தியுள்ளனர். தேன்மொழி பணியிலிருந்து பாதியில் நின்ற பிறகும் 3 ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது.

சக்திவேலின் தாய் மற்றும் தந்தை கொரோனாவால் ஓராண்டிற்கு முன்பு மரணடைந்தனர். இதனை அடுத்து சக்திவேல் தன் ஒரே தங்கை பவானியுடன் வாலாஜா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பவானிக்கு திருமணம் நடந்து முடிந்தது.

அதே நேரத்தில் தேன்மொழி கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தேதி வீட்டை விட்டு வெளியேறி சக்திவேலுடன் பதிவு திருமணம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 10 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில், தங்கள் இருவரும் (சக்திவேல் வன்னியர் தேன்மொழி அம்பலத்தார்) வேற்று சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தஞ்சமடைந்தனர்.

இந்த புகார் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு காவல் நிலையத்தில் பெண்ணின் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமாக இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே நண்பர்கள் உதவியோடு இருவருக்கும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இதன் காரணமாக வாலாஜா காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் சுமுக பேச்சுவார்த்தை முடித்த அன்று இரவே வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் பெங்களூரை நோக்கி சென்றுள்ளனர்.

இதனை நோட்டமிட்டு இருந்த பெண்ணின் உறவினர்கள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதியில் பேருந்தை மரித்து சக்திவேலை தாக்கி பெண்ணை தங்களுடன் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மீண்டும் ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில் புகார் அளித்தபோது அந்தப் பெண்ணை வழிமறித்து அழைத்துச் சென்ற இடம் வேலூர் மாவட்டம் திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடம் எனவே திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

திருவலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இது தொடர்பான புகார் ராணிப்பேட்டை SP அலுவலகத்திலும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அங்கேயே சென்று புகார் அளிக்கும்படி சக்திவேலை திருப்பி அனுப்பியுள்ளனர்.

எந்த காவல் நிலையத்திலும் புகார் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தினால் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார் சக்திவேல். அப்போது சக்திவேலை நீதிமன்றம் அணுகி ஆட்கொணர்வு மனு போடுமாறு அறிவுறுத்தி அங்கிருந்தும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மணு தாக்கல் செய்ய போதிய பணம் இல்லாத காரணத்தினால் சம்பள பணம் வந்த பிறகு அந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என காத்திருந்த சக்திவேல் கடந்த 13ஆம் தேதி அன்று அதீத மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரை மீட்ட நண்பர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நாள் தொடர் சிகிச்சைக்கு பின்பு 16 ஆம் தேதி இரவு சக்திவேல் உயிர் இழந்தார்.

உயிரிழந்த சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சக்திவேல் இறப்பதற்கு முன்பு தனது டைரியில் எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் ” i am quit” என ஆரம்பித்து, என்னை மன்னித்துவிடு உன் முகத்தை பார்க்கும் அருகதை எனக்கு கிடையாது. இனிமேல் இனி ஒரு பிறவி இருந்தால் நாம் அங்கு சந்திக்கலாம். உன்னுடம் இருந்த 5 நாட்கள் என் உறவு, நண்பர்கள் அனைவரையும் தூக்கி எறிந்தேன்.

உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன். தற்கொலை என்பது கோழைத்தனம் என பலமுறை உன்னிடம் கூறியிருக்கிறேன். வேறு என்ன செய்வது தெரியாமல் உன்னை விட்டு இவ்வுலகை விட்டு என் அன்னையிடம் செல்கிறேன். யாரை நம்புவது என்று தெரியவில்லை முடிந்தால் நான் சென்ற பிறகு என்னை மறக்காமல் இரு.

என் ஆசை பொண்டாட்டி நாம் மூன்று வருடம் காதலில் இருந்தோம். இந்த 5 நாட்கள் நம் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிவடையும் என கனவில் கூட நினைக்கவில்லை. போலீஸ் பஸ் ஏற்றிவிட்ட பிறகு எல்லாம் முடிந்து விட்டது. இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது. என பேசிக்கொண்டு பேருந்தில் சென்ற போது உன் வீட்டு உன் விசுவாசிகள் இப்படி செய்வார்கள் என நான் ஒருபோதும் கனவில்கூட நினைக்கவில்லை .

நானும் வாலாஜா போலீஸ் ஸ்டேஷன், திருவலம் போலீஸ் ஸ்டேஷன், ராணிப்பேட்டை எஸ்பி ஆபிஸ் வேலூர் டிஐஜி ஆபீஸ் சென்று புகார் கொடுத்தும் உன்னை மீட்டு விடலாம் என எண்ணி ஏமாந்து போய் விட்டேன். கையில் கிடைத்த பொருளை தொலைத்த பாவி ஆனேன்.

நான் நீ ஆசைப்பட்டபடி உன் புகைப்படம் என் வீட்டில் மாட்டி விட்டேன். அதுபோல் நீ ஆசைப்பட்டது போல் உன் கணவனாய் உயிர் நீக்கம் செய்கிறேன் பாப்பு. ஐ அம் ரியலி சாரி பாபு ,மிஸ் யூ சோ மச் பாப்பு, லவ் யூ சோ மச் பாப்பு, என் ஆசை பொண்டாட்டி என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!!

தெலங்கானாவில்..

இரண்டாவது திருமணம் செய்த கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.

இவர்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக ரூ.20 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் பிரச்சனை வரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிலாவை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த விவகாரத்தை தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிலா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரின் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும், அங்கிருந்து தனது கணவரை அழைத்துவந்த அவர், கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.பின்னர், கணவரை தொடர்ந்து செருப்பால் அடித்த அவர், செருப்பு மாலை அணிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரிந்த நிலையில், அவர்கள் விரைவாக வந்து ஸ்ரீகாந்தை மீட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் காதல்.. 25 வயது இளைஞனுடன் 40 வயது பெண் ஓட்டம் : கதறும் கணவர் மற்றும் மகன்கள்!!

தஞ்சையில்..

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அய்யப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து, கணவர் வெளிநாட்டிலும், மகன்கள் வேலை, படிப்பு என இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வாலிபருடன் ஏற்பட்டது. மேலும் தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார்.

பின் இருவரும் புகைப்படங்களை அனுப்பி பேசி கொள்ள நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலூரில் இருந்து ஒரத்த நாட்டிற்கு வந்த வாலிபர், அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.

ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். தொடர்ந்து இவர்கள் சுற்றி வந்த நிலையில் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார்.

கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார். இதன் பின் மகன்களுக்கு தெரியாமல் கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

மகன்கள் தந்தைக்கு தகவல் கொடுக்கற அவரை கண்டித்தே ஆகவேண்டும் என்ற வகையில், ஒரத்தநாடு போலீசில் புகாரும் கொடுத்தனர். இதனால், வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.

பின் கள்ளக்காதலனுடன் திருமணம் செய்த அவர், கணவருக்கு புகைப்படங்களையும் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளார். அதில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

அவருடன் குடும்பம் நடத்தப் போகிறேன், நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன கணவர் மகன்களிடம் அப்படி ஒரு தாய் இல்லை எனவும், திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம எனவும் ஆறுதல் கூறியுள்ளார்.

பல கோடிகளுடன் சொகுசு வாழ்கை : மோசடி மன்னனை கனவு நாயகனாக கருதி மணக்க நினைத்த இலங்கை நடிகை!!

ஜாக்குலின் பெர்னாண்டஸ்..

தொழிலதிபரை மிரட்டி பல கோடிகளை பறித்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரை இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.215 கோடி மோசடி செய்துள்ளார். மிரட்டி பறித்த பணத்தை பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்தது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் அதிகமாக பயனடைந்த ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணை நடத்தி இருக்கிறது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்து தெரிந்தும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து சுகேஷுடன் தொடர்பில் இருந்து வந்ததாக அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் பணமோசடி வழக்கில் நேரடி தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு சுகேஷை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என்றும், அவரையே திருமணம் செய்யவும் நினைத்தார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பில் ஜாக்குலினிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலை இல்லாமல் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

மகாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் வசாய்,

புய்கான் கடற்கரையில் தலை இல்லாத பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாலச்சோப்ராவில் சானியா சேக் (25) என்ற பெண் மயமானது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்,

பொலிஸாருக்கு கிடைத்த உடல் அப்பெண்ணுடையது தான் என்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் ஆசிப் சேக்கை (31) பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். சானியா சேக்கின் உடல் கைப்பற்றப்பட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஆசிப் சேக் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்த விவகாரத்தில் குடும்பத்தினர் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சானியா சேக் கொலை வழக்கில் ஆசிப் சேக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை வந்தடைந்த திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி : மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!!

தியாகத் தீபம் திலீபன்..

தியாகத் தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19.09) வவுனியாவை வந்தடைந்த நிலையில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.

5 ஆம் நாளான இன்று (19.09) குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில், வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம், பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட தளம்,

மொத்த மரக்கறி விற்பனை நிலையம், இலுப்பையடி என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஊர்தியில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு தீபம் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அகவணக்கத்துடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், சில பகுதிகளில் மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழக மாணவரொருவர் மாயம் : கடிதமொன்றும் மீட்பு : விசாரணைகள் தீவிரம்!!

மாணவரொருவர் மாயம்..

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 24 வயதுடைய மாணவன் சில தினங்களுக்கு முன்னர் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல்போன இளங்கலை மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த தங்கும் அறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எனினும் இன்று காலை வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசிய கணவர் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

கேரளாவில்..

தன்னை விட்டு பிரிந்து சென்று ஐந்து வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசி விட்டு தப்பி ஓடி இருக்கிறார் கணவர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பத்தினம் திட்டாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஏழாம் குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் வித்தியா என்கிற பெண்ணுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. ஒரு வருடம் மட்டுமே இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அந்த ஒரு வருடத்திற்கு உள்ளேயே கணவன் மனைவிக்கு இடையே பலமுறை தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் பின்னர் வித்தியா கணவனை விட்டு பிரிந்து சென்று கடந்த ஐந்து வருடங்களாக தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் விவகாரத்தை கோரியும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வித்தியாவின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார் சந்தோஷ். ஐந்து வருடங்களுக்கு பின்னர் திடீரென்று கணவர் தன் முன் வந்து நிற்பதை பார்த்து வித்தியா கடும் அதிர்ச்சியில் இருந்து இருக்கிறார்.

அந்த அதிர்சியில் இருந்து வித்யா மீள்வதற்குள் அவரை கடுமையாக அடித்து உதைத்து இருக்கிறார். அடிபட்ட வித்தியா வலியால் துடித்து கொண்டிருந்தபோது, தான் கொண்டு சென்றிருந்த பட்டா கத்தியை எடுத்து வித்தியாவின் இரண்டு கைகளையும் வெட்டி இருக்கிறார். ஒரு கையை மணிக்கட்டு வரைக்கும் வெட்டி இருக்கிறார். இன்னொரு கையை முழங்கை வரைக்கும் துண்டாக வெட்டி இருக்கிறார்.

இது கொடூரம் போதாது என்று வித்தியாவின் தலை முடியை வெட்டி இருக்கிறார். தலையிலும் அவர் வெட்டி வெட்டியதால் காயங்கள் உள்ளன. அப்போது தன் மகள் வித்தியாவை காப்பாற்ற அவரின் தந்தை விஜயன் போராடி இருக்கிறார். அவரையும் கடுமையாக தாக்கி விட்டு சந்தோஷ் தப்பி ஓடி இருக்கிறார்.

வித்தியா, அவரது தந்தை விஜயன் இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்ததபோது, சந்தோஷை சம்பவத்திற்கு முன்பாக அந்த பகுதியில் பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.

இதன் மூலம் முன்கூட்டியே சந்தோஷ் திட்டமிட்டு மனைவியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்திருக்கிறார் என்பது தெரிய வந்த வந்தது.

இதை அடுத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சந்தோஷ் செல்போன் நம்பரை வைத்து, பல்வேறு காவல் நிலையங்களில் உதவியுடன் செல்போன் சிக்னலையும் வைத்து அவரை கைது செய்துள்ளார்கள் போலீசார்.

சமையல் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய அதிர்ஷ்டம்!!

கேரளாவில்..

மலேசியாவுக்குச் சென்று சமையல்காரராகப் பணிபுரியத் திட்டமிட்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கு லொட்டரியில் ரூ. 25 கோடி பரி விழுந்தது. இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அவர் பரிசு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னரே அந்த லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

கேரளாவில், திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராஹம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷ ஓட்டுநரான அனூப், குடும்ப சூழ்நிலைக்காக மலேசியாவுக்குச் சமையல்காரராக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஓணம் பம்பர் லாட்டரியை வென்றார்.

பரிசு விழுந்த TJ 750605 எனும் எண் கொண்ட அந்த லொட்டரி சீட்டை ஒரு நாள் முன்பு தான் (சனிக்கிழமை) வாங்கியுள்ளார். ஆனால் அது தனது முதல் தேர்வு அல்ல என்றும், முதலில் ஒரு டிக்கெட்டை வாங்கி, அது பிடிக்கவில்லை என்பதால் இந்த டிக்கெட்டை வாங்கியதாக அனூப் கூறினார்.

அது அவரது வாழ்க்கையே மாற்றியுள்ளது. வீடு கட்டுவதற்காக வங்கியில் லோன் வேண்டு விண்ணப்பித்திருந்த அனூப் கூறுகையில், “கடன் தொடர்பாக இன்று வங்கி அழைத்தது, இனி அது தேவையில்லை. நானும் மலேசியா செல்லமாட்டேன்” என்று கூறினார்.

அவர் கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் ரூ. 5,000 வரையிலான தொகைகளை வென்றுள்ளதாக அனூப் கூறினார்.

“நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, அதனால், நான் டிவியில் லாட்டரி முடிவுகளைப் பார்க்கவில்லை, ஆனால், நான் எனது தொலைபேசியைப் பார்த்தபோது, ​​​​நான் வெற்றி பெற்றதைக் கண்டேன், என்னால் நம்ப முடியவில்லை, அதை என் மனைவியிடம் காட்டினேன். அவள் அதை உறுதிப்படுத்தினாள்” என்று அவர் கூறினார்.

“ஆனால் நான் இன்னும் டென்ஷனாக இருந்ததால், எனக்கு தெரிந்த லாட்டரி சீட்டு விற்கும் ஒரு பெண்ணுக்கு போன் செய்து எனது டிக்கெட்டின் படத்தை அனுப்பினேன். அது வெற்றி எண் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்” என்று அனூப் கூறினார்.

வரிகள் கழிக்கப்பட்ட பிறகு, அனூப் சுமார் ரூ.15 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். விழுந்த பரிசில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதும், அவர் செலுத்த வேண்டிய கடன்களை அடைப்பதும் தான் தனது முதல் முன்னுரிமை என்றார்.

அதுமட்டுமின்றி, அனூப் தனது உறவினர்களுக்கு உதவுவதாகவும், சில தொண்டு வேலைகளைச் செய்வதாகவும், கேரளாவில் உள்ள ஹோட்டல் துறையில் ஏதாவது தொடங்குவதாகவும் கூறினார். தற்செயலாக, கடந்த ஆண்டும் ஓணம் பம்பர் லொட்டரியை (ரூ.12 கோடி) ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்டுக்குள் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மும்பையில்..

மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இயங்கிவரும் உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26).

இவர் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக 2-வது மாடிக்கு லிப்ட் ஏறியுள்ளார். அப்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிப்ட் நகரத்தொடங்கியுள்ளது.

இதில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். லிப்ட் மேலே செல்ல செல்ல ஆசிரியரின் தலையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.

மேலும் அந்த காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பள்ளியில் சிறிது மாதத்துக்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்ததாகவும் ஒரு வருடத்துக்கு முன்புதான் அவருக்கு திருமணம் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். சம்மந்தப்பட்ட அந்த லிப்ட் சிறிது நாட்களுக்கு முன்னர்தான் பழுது பார்க்கப்பட்டது என்றும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

மின்வெட்டு..

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(20.09) மற்றும் நாளை மறுதினம்(21.09) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாலை 6 மணி தொடக்கம் 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நாளை முதல் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.