நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் விடுமுறை அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள் : பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!!

சிவப்பு எச்சரிக்கை..

நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன. தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி அக்குரல கஹவ தெல்வத்த பகுதியிலிருந்தும் கடல் அலைகள் காலி – கொழும்பு பிரதான வீதியை வந்தடைந்துள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 அல்லது 3.5 மீற்றர் வரை எழும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரு வெவ்வேறு இடங்களில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழில்..

நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022!!

நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா..

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் இன்று (02.07.2022) சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தது.

இரவு கலை நிகழ்ச்சிகளும், திருகோணமலை டொமினிக் பிரகாஸ்சின் நியூ வேவ்ஸ்(New Waves) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதுடன், இரவு பூசைகள், பொங்கல் நிகழ்வுகல் என்பனவும் இடம்பெறவுள்ளது.

நாளை ஞயிற்றுக்கிழமை காலை அதிஸ்டலாபச்சீட்டு அதிஸ்டம் பார்க்கப்படும், அதனைதொடர்ந்து ஆடு, மாடு, கோழி என்பன ஏலமிடும் நிகழ்வும் இடம்பெறும்.

வவுனியாவில் கறுப்புச் சந்தையில் 3000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ள பெட்ரோல விலை!!

பெட்ரோல் 3000 ரூபாய்..

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையினால் எரிபொருள் மாபியாக்கள் பெட்ரோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெட்ரோல் பெற முடியவில்லை எனவும், கறுப்பு சந்தை வியாபாரிகள் குறித்த வரிசைகளில் புகுந்து எரிபொருளை பெற்று விற்பனை செய்து வருகின்றனர் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரதேச செயலகத்தால் ஒன்லைன் பதிவு இடம்பெறுகின்ற போதும் அது வவுனியா மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவில்லை. இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் புதிய அறிவிப்பு!!

எரிவாயு..

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இம்மாதம் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்ய,

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன் முதல் கப்பல் வரும் 6ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும், எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது : வெளியான தகவல்!!

எரிபொருள் நெருக்கடி..

எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடுகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வார இறுதி தேசிய பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி சுகாதாரக் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ளதாகவும், ஒரு தொகை எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் வரை இந்நிலை தொடரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பலொன்றும், 22ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

பல் துலக்காமல் முத்தம் கொடுத்த கணவனை தடுத்த மனைவி : ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்!!

பாலக்காடு..

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமான கொலை செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று அறங்கேறியுள்ளது. அவினாஷ் என்பவர் தீபிகா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து இருக்கிறார்.

இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. பெங்களூருவில் வேலை செய்து வந்ததால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பாலக்காடு வந்து மனைவி குழந்தைகளை பார்த்து விட்டுச் செல்வார்.

இந்த நிலையில் மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக அண்மையில் பாலக்காடு வந்த அவினாஷ் தூங்கி எழுந்து பல் துலக்காமலேயே தனது குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை கண்ட தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாது. வைரஸ் பிரச்சினை வரும் என்று கோபமாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் தீபிகாவிடம் கோபத்தைக் காட்ட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய போது அங்கிருந்த கத்தியை எடுத்து தீபிகாவை சரமாரியாக குத்தியுள்ளார். தீபிகா ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருந்திருந்த நிலையில் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு அவரின் கணவர் அவினாஷை கைது செய்துள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்லூரி மாணவி பரிதாபமாக மரணம் : காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர்!!

ஸ்ரீ லக்ஷ்மி..

இந்திய மாநிலம் கேரளாவில் இளம்பெண் ஒருவர் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கேரளா மாவட்டத்தில் உள்ள மங்காராவில் கல்லூரி மாணவர் ஒருவர் தேவையான தடுப்பூசியை எடுத்துக்கொண்ட போதிலும் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வியாழக்கிழமை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஸ்ரீ லக்ஷ்மி என்ற 19 வயது பெண், தனது அண்டை வீட்டாரின் நாயால் கடிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு மருத்துவர்களின் பரிந்துரையின்படி தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் அவர் எடுத்துக்கொண்டதாகவும் அவரது உறவினர்களை மேற்கோள் காட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மே 30-ஆம் திகதி கல்லூரிக்குச் சென்றபோது அவரை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்ப நாட்களில் அவருக்கு எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

சில நாட்களுக்கு முன்பு ரேபிஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியபோது, ​​​​அவர் முதலில் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அதிக காய்ச்சலுடன் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று (வியாழன்) அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து சென்று யாழில் திருடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வவுனியாவை சேர்ந்தவர்.

அவர் சுழிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்தபோதே இவ்வாறு தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூன்று தொலைபேசிகள் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் இரண்டு தடவைகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர் என்பதுடன் மூன்றாவது தடவை இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்று வந்தநிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் சிறையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விலை!!

லிட்ரோ எரிவாயு..

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, எரிவாயுவின் விலையை மீளவும் அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்கமைய, கொள்கலன் ஒன்றின் விலையை 5,100 ரூபா அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். லிட்ரோ 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 4,860 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

177 பவுண்கள் கொள்ளை : பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது!!

177 பவுண்கள் கொள்ளை..

நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த திருட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30.06) ஹட்டன் பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டில் சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நோர்வூட் நகர பகுதியைச் சேர்ந்த மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு, தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து களவாடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே சந்தேகநபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

54 தங்க சங்கிலிகள், 757 தோடுகள், 177 பெண்டன்கள், 18 வலையல்கள், 1 தங்க நெக்லஸ் உட்பட மேலும் சில தங்க நகைகளே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கைதானவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01.07) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்த தாய் : மகள் உயிரிழப்பு!!

எம்பிலிப்பிட்டியவில்..

எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார். குறித்த தாய்க்கு (32) வயது என தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் தாய் மற்றும் மகன் (11 வயது), மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் 05 வயது மகள் உயிரிழந்துள்ளார். தாய் இவ்வாறு செய்தமைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்கள் நாட்டை முடக்குமாறு கோரிக்கை!!

எரிபொருள் நெருக்கடி..

இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடிவிட்டு, எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்குமாறு ஹரிமக என்ற தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியில், அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் வரிசையில் நிற்பதன் மூலம் மக்களின் உழைப்பும், செல்வமும், நேரமும் அழிக்கப்படுவதாக அமைப்பின் தலைவர் நிஷாந்த குமார தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் 200 ரூபாய்க்கு எண்ணெய் வாங்க 1500 ரூபாய் செலவிட வேண்டும். இரண்டு வாரங்கள் நாட்டை மூடி வைத்தால் மக்களின் பணம் மிச்சமாகும். நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

இப்படி எண்ணெய் வரிசைகளில் நிற்காமல் அந்த நேரத்தில் வயலில் வேலை செய்வார்கள். இரண்டு வாரத்தில் எண்ணையை பெற்று நாட்டை திறந்து விடுங்கள் இந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு தீரும்.

தற்போது நாட்டில் அரசியல் நடத்துவதற்கு தொழிலதிபர்கள் தயாராகி வருவதைக் காணமுடிகிறது. 2025ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்பவோ, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவோ அவர்கள் வரவில்லை. அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும். இவர்கள் இராஜதந்திர உதவி பெற்று வியாபாரம் செய்ய உலகின் முன் செல்ல முயற்சிக்கின்றனர்.

இப்படி வரும் நபர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்காதீர்கள். இந்த நாட்டு மக்களின் பணத்தை சுரண்டி அந்த பணத்தின் பலத்துடன் வர தயாராக உள்ளவர்களை இதில் அரசியல் செய்ய அனுமதிப்பது நல்லதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

சடலம் மீட்பு..

வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மில் வீதியில் நேற்று (30.06) இரவு 7.30 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, மில் வீதி பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் வெளிப்புறத்தில் உள்ள ஒதுக்கு புறமான இடமொன்றில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதை அவதானித்த வர்த்தகர்கள் உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இரவு சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரா தலைமையிலான பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ள பொலிசார், குறித்த நபர் வவுனியா நகரப் பகுதியில் நடமாடித் திரிபவர் எனவும்,

நீல நிற கட்டம் போட்ட சேட்டும், சாரமும் அணிந்துள்ளார். குறித்த முதியவரது சடலத்தை பொறுப்பேற்க அல்லது அடையாளம் காண அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் பொலிசார் மேலும் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரப் பகுதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு பின்புறமாக கடந்த புதன்கிழமை 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து..

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். அண்மையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட குறித்த இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட அவர்கள், அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சிலாபத்தை சேர்ந்த குறித்த நபர்கள், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.