யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதையடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
கல்பிட்டியில் 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் மீட்க முடியவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல மணித்தியாலங்கள் வாகனங்களுக்கு காத்திருந்த போதிலும் வாகனம் ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிறுவனை சைக்கிளில் வைத்து பல மணி நேரம் போராடி அழைத்து செல்ல சிறுவனின் சகோதரன் முயற்சித்துள்ளார். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஒன்றரை மணித்தியாலத்திற்கு முன்னர் அழைத்து சென்றிருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தேனீ தீண்டியதால் சிறுவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் அழைத்து வரும் வழியில் சிறுவனுக்கு சுயநினைவில்லாமல் போயுள்ளது. வாகனம் கிடைத்திருந்தால் இன்று மகன் உயிருடன் இருந்திருப்பார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் தற்போது 1100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளன எனக் கூறப்படுகின்றது. இலங்கை கடனைச் செலுத்தத் தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளன எனவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கிகளின் உத்தரவாதத்தை அவை கோருகின்றன எனவும் கூறப்படுகின்றது.
கடந்த ஒரு வாரமாக நாட்டுக்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லை என்றால், பொதுப் போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருள்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன எனவும், பொதுமக்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் எனவும், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை மக்கள் பலர் தாய்நாட்டில் வாழ வழியின்றி இரு நாட்டு கடல் பாதுகாப்பையும் மீறி கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இப்படி வரும் இலங்கையர்களை அகதியாக கருத அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அடைக்கலம் தேடி தமிழ்நாடு வரும் இலங்கையர்களை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களாகக் கருதாமல் முகாம்களில் வைத்திருக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரை பகுதியில் வயது வயோதிக தம்பதி, கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் மரைன் போலீஸ் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவலர்கள் கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் இருந்த இருவரை மீட்டனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அவசர ஊர்தி அழைக்கப்பட்டது. ஆனால் தம்பதி இருவரும் கடற்கரைக்கு அருகே இருந்ததால் அவசர வாகனத்தால் அந்த பகுதிக்கு வர முடியவில்லை.
இதையடுத்து மரைன் ஆய்வாளர் கனகராஜ், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினார். அதன்பேரில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பல் கோதண்டராமர் கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டது.
அதில் இருந்த வீரர்கள் இலங்கை தம்பதியை மீட்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள இரட்டை தாளை கடற்கரைப்பகுதியில் வைத்து இருவரையும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தம்பதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடைக்கலம் கோரி வந்தவர்கள், இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் (82) மற்றும் அவருடன் இருந்தது அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரிய வந்தது. மன்னாரில் கூலி வேலை செய்து வந்த தனக்கு 3 பெண்கள், ஒரு மகன் இருப்பதாக சிவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வயோதிக நிலையில், தாய்நாட்டில் வாழ முடியாததால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மகனுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும் இந்த வயோதிக தம்பதி கூறினர்.
கடலில் உயிரை பணயம் வைத்து வந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முதியவர் சிவன், ‘படகில் எங்களை அழைத்து வந்தவர்கள், நள்ளிரவில் கடற்கரை ஓரம் தள்ளிவிட்டுச் சென்றனர்.
இருளில் எங்கே செல்வது என தெரியாமல் மணல் திட்டில் காத்திருந்தோம். உணவு சாப்பிடாமல் கடல் நீரை குடித்தோம். இரவுக் குளிரும் காலை வெப்பமும் வாட்டியது. ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் சோர்வடைந்தால் ஒரு கட்டத்தில் இருவரும் கடற்கரையில் மயங்கி விழுந்து விட்டோம்’ என்கிறார் சிவன்.
‘முதலில் நாங்கள் இருவரும் இறந்து விட்டோம் என நினைத்த போது மரைன் போலீசார் முதலுதவி அளித்து கடும் சிரமத்திற்கு மத்தியில் எங்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காப்பாற்றினர்’ என்று சிவன் தெரிவித்தார்.
தற்போது இருவரது உடல்நிலையும் சீரடைந்த நிலையில், மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் குழு இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து மண்டபம் அகதிகள் முகாமில் இருவரையும் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இன்று வரை 26 குடும்பங்களைச் சேர்ந்த 92 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்யடாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடுமையான உணவுப்பற்றாக்குறை ஏற்படும் நிலை
மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் போர்ட்டர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொள்ளும் இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்களுடன் முதலில் நட்பை ஏற்படுத்தி பேஸ்புக் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தனக்கு பல தொழில்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண், அதில் முதலீடு செய்து தொழிலில் ஈடுபடுமாறும் இளைஞர்களை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணின் வார்தையில் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஏமாற்றி பொய் சொல்லி தனது தொழிலில் முதலீடு செய்ய வரும் பல இளைஞர்களுடன் சாதாரண உறவில் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டும், இடம் விட்டு இடம் பெயர்ந்தும் திரியும் பெண், அண்மையில் கடவத்தை பிரதேசத்தில் தங்கியிருந்த போது பிடிபட்டுள்ளார்.
எனினும், தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரதேசத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் பலர் பகல் நேரத்தில் மாத்திரமல்லாது இரவு நேரத்திலும் வரிசைகளில் நிற்பதை அதிகளவில் காணக் கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பெட்ரோலை கொள்வனவு செய்ய சென்றிருந்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றுமொரு பெண் கணவனை ஏமாற்றி விட்டு இன்னுமாரு இளைஞனுடன் இருந்துள்ளார்.
இதனிடையே சிலாபம் பிரதேசத்தில் இரவு நேரத்தில் எரிபொருள் வரிசையில் இருந்த பெண்ணொருவர் இளைஞர் ஒருவருடன் சில மணி நேரங்களை கழித்தன் காரணமாக கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
வரிசையில் நின்றிருந்த கணவனை தந்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பெண் இரவில் வரிசையில் இருந்துள்ளார். வீட்டுக்கு சென்ற கணவன் எரிபொருள் வரிசைக்கு திரும்பி வந்த போது அங்கு மனைவி இருக்கவில்லை.
இதனையடுத்து தேடிப்பார்த்ததில் மனைவி, எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவருடன் ஓரிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த இடத்திற்கு சென்ற கணவன் மனைவியை தாக்கியுள்ளதுடன் எரிபொருளை கொள்வனவு செய்யாது வீட்டுக்கு திரும்பிச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் அடித்தளத்தில் தீ பரவியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரு மகள்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர் இருவருக்குள் ஆறு வயதுடைய பாடசாலை மாணவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த அறையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டு நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு வயது மகள் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான கணவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்தவரின் மனைவியும் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம மாகமனையை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதான லசந்த புத்திக ரணசிங்க , 35 வயதான நளிகாதேவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைணகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்று (27.06) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிசார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றினை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த ஹாட்வெயாரின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீற்றர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹாட்வெயாரின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (27.06.2022) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இதன் போது பக்த அடியார்கள் காலை முதல் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் நிகழ்வில் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டதை காணக்கூடியதாக உள்ளது.
இவர்களுக்காக விசேட பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சபையும் ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் இன்று (27.06.2022) அதிகாலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தாம் கடமைகளுக்கு செல்வதற்கு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தே இ.போ.ச வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமையுடன் இ.போ.ச பேரூந்துகளை சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக பல பேரூந்து தரிப்பிடங்களில் பல மணிநேரமாக மக்கள் பேரூந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலமை காணப்படுவதுடன் தனியார் பேரூந்துகளில் அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிக்கின்றமையினை அவதானிக்ககூடியதாகவிருந்தது.
டீசல் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் தனியார் பேரூந்துகள் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா 4ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஜ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் நேற்று முன்தினம் (25.06.2022) இரவு 11.30 மணியளவில் கான்களில் எரிபொருள் நிரப்பிய பொலிஸாரை இளைஞர்கள் சுற்றிவழைத்து முற்றுகையிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெற்றோல் முடிவடைந்துள்ளது என தெரிவித்த நிலையில் இரவு 11.30 மணியளவில் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கான்களை ஏற்றிச்சென்று பெற்றோல் நிரப்பியுள்ளனர்.
அதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் அவர்களின் வாகனத்தினையும் பொலிஸாரையும் முற்றுகையிட்டனர். அதன் பின்னர் அவ்விடத்திலிருந்து சில பொலிஸார் சென்றதுடன் பொலிஸாரின் வாகனத்தினை எடுத்துச்செல்ல இளைஞர்கள் அனுமதி மறுத்த நிலையில் வாகனத்தினை சாரதி (பொலிஸார்) மாத்திரம் எரிபொருள் நிலையத்தில் காலைவரை நின்றார்.
எரிபொருள் நிலையத்திற்கு நேற்று (26.06.2022) காலை வருகைதந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவறுக்கு மன்னிப்பு கோரியமையடுத்து பொலிஸாரின் வாகனத்தினை எடுத்துச்செல்வதற்கு இளைஞர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (26.06.2022) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை திருமணம் செய்து 37 வயதான பிரேசிலிய பெண்ணுக்கு, இப்போது ஒரு குழந்தையும் உள்ளது என்றால் நம்புவீர்களா.. (புகைப்படங்கள் உள்ளே)
காதல் என்பது மிக அழகான உணர்வு. பிரேசிலில் உள்ள 37 வயது பெண்ணுக்கு இந்த சொற்றொடர் உண்மையாக உள்ளது. ஏனெனில், அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது, இந்த விசித்திர ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது (அதுவும் ஒரு பொம்மை).
மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற அந்த பெண்ணுக்கு, மார்செலோ (Marcelo) என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு நடனக் கூட்டாளி இல்லை என்பதை அறிந்து அவர் அதை உருவாக்கி கொடுத்துள்ளார்.
மார்செலோ மோரேஸின் வாழ்க்கையில் வந்ததும், தனது வாழக்கை முழுமையடைந்ததாக்க உணர்ந்துள்ளார். மார்செலோ ஒரு நடன கூட்டாளி என்பதை விட பெரிதாக நினைத்தார்.
எந்த அளவிற்கு என்றால், மார்செலோ ஒரு பொம்மை என்பதை மறந்து தனது வாழ்க்கைத்துணையாகவே நினைத்து, காதலித்து திருமணம் செய்து கொண்டார் மோரேஸ்.
பொம்மை வாதிடவோ சண்டையிடவோ மாட்டாது, எப்போதும் தன்னை புரிந்துகொள்வதால், தன்னை எப்போதும் விரும்பும் மனிதன் அவன்தான் என்று மோரேஸ் கூறுகிறார். “மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர். எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர்” என்று அவர் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, திருமணம் முடித்து “எனது கணவர் மார்செலோவுடன் திருமண இரவுக்குச் சென்றோம், நாங்கள் எங்கள் திருமண இரவை மிகவும் ரசித்தோம்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது, இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பொம்மை உள்ளது, அது இந்த குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் வரை பொது போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் ஒரு சில பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த வாரமும் அடுத்த வாரமும் இலங்கைக்கு வரவிருந்த பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கிகளின் வருகைக்கான திகதியை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. தாமதம் மற்றும் அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“பச்சை குத்துதல்” என்றதும் நம் நினைவுக்கு வருவதென்ன? நம் வீட்டில் வாழ்ந்த பாட்டனும், பாட்டியும், பூட்டனும் பூட்டியும்தானே. தம் உடலின் ஏதாவதொரு பாகத்தில் தாம் விரும்பிய கடவுளரையோ, உறவினர் பெயரையோ, பறவைகளின் உருவத்தையோ பச்சை வர்ணத்தில் தசையின் உட்பக்கமாக வரைந்திருப்பர்.
இதை ஏன் குத்தினீர்கள் என்றெல்லாம் யாரும் கேட்டிருப்பதில்லை. தப்பித்தவறி கேட்டிருப்பிருனும், “அது அந்தக் காலத்தில் குத்தினது” எனச் சுருக்கமாக ஒரு பதிலைத்தான் நம் முத்தவர்கள் தருவது வழமை.
ஆனால் இந்தப் பச்சை குத்துதல் எனப்படும் உடலில் ஓவியம் வரையும் கலைக்குப் பின்னால் ஆழமான கலாசாரப் பெறுமதியுண்டு. குறித்ததோர் இனத்தின் பண்பாடு சார்ந்த விடயங்களை தலைமுறை கடத்துதலுக்கே பச்சை குத்துதல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகம் அறிவியல் ரீதியில் வளர்ச்சிபெற்றிராத வரலாற்றத் தொடக்க காலங்களில் மனிதக் குழுமங்கள் தனித்தனியே ஒவ்வொரு கண்டத்தின் மூலைகளிலும் சிதறிக் கிடந்தனர். இப்போது போல அவர்களிடையே எவ்வித தொடர்புகளும் இருக்கவில்லை.
ஆனால் ஆபிரிக்கா தொடங்கி, ஆசியா வரைக்கும் பரந்து விரிந்து வாழ்ந்த மனிதர்கள் தம் குலக்குறிகளை உடலில் ஓவியமாக வரைந்திருந்தனர். தம் இனக்குழும அடையாளத்தை நெற்றியிலோ, கைகளின் மேற்புறத்திலோ வரைந்திருந்தனர்.
மனிதர்கள் எவ்விதத்திலும் தொடர்புபட்டிராத யுகமொன்றில், உடலில் ஓவியம் தீட்டிக்கொண்டு தம் அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த முறைமை மனிதர்களிடையே ஒத்தசிந்தனையாக எப்படி பரவியது என்பதற்கு யாரிடமும் பதிலில்லை.
இவ்வாறு தம் குலக்குறிகளை உடலில் வரைந்து கொள்ளுமுறைமை கடவுள் உருவங்களாக, விரும்பியவர்களின் பெயர்களாக, பிடித்த காட்சிகளாக மருவியபோதே, அது நாம் கடந்து வந்த மூதாதையர்களை அடைந்தது.
அந்நேரத்தில் அது தனக்கிருந்த பண்பாட்டுப் பெறுமதியை விலக்கியுமிருந்தது. ஆசிய நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த நாகரிகமின்மை – சுகாதாரமின்மைகளுக்குள் ”பச்சைகுத்துதலும்” உள்ளடங்கியதன் விளைவே இது.
ஆனால் வரலாறும் – பண்பாடும் ஓரிடத்தி்ல தேங்குவதில்லையே. மீளமீள மீண்டுவருதல்தானே அதன் இயல்பு. எனவே விரைவாகவே சுற்றி இளசுகளைக் சுண்டியிழுக்கும் நாகரிகமாக இந்நூற்றாண்டில் வந்துநிற்கிறது.
நாகரிகமாக, கலையாக, மருத்துவமாக அது வந்துநிற்கையில் Tattoo Culture ஆக மாறியது. இன்று உலகளவில் அதனை விரும்பாத இளையவர்கள் இல்லையெனச் சொல்லலாம். இதனை கலைநேர்த்தியுடன் வரையும் கலைஞர்கள் உயிர்கொடுக்கின்றனர்.
எல்லாக் கலைகளும் மனித உடலுக்கு, உளத்துக்கு வெளியில் ஆக்கப்படுபவை. ஆனால் Tattoo கலை ஆக்கப்படும் இடமே மனித உடல்தான். கலைநேர்த்தியும், ஆழமான அவதானமும், உடலறிவியல் புரிதலும் கொண்ட சதாவதானியினாலேயே உடலில் இதனை வரையமுடியும்.
அந்தவகையில்தான் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வெளித்தெரிந்திருக்கிறார் Tattoo கலைஞரான திரு.ஜோய் ஜோசப் அவர்கள். 2019 ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற Tattoo கலைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டார்.
இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்திருந்த ஜோய், இந்தக் கலை குறித்து ஆழமான புரிதலுடையவர்.
அதையொரு அறிவியல் கலையாக வளர்த்துச் செல்வதிலும், நம் பண்பாட்டு விடயங்களை சர்வதேச அரங்குகளின் முன் கொண்டு செல்வதிலும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். பொது ஊடகங்களில் அதிகம் தோன்றாத ஜோய் முதன்முதலில் Tattoo கலை குறித்து பேசினார்.
இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது? என்கிற வழமையான கேள்வியை அவரிடம் கேட்டால், “ஆர்வம் திடீர் என்று வரவில்லை. சிறுவயதில் இருந்தே ஓவியங்கள் வரைவேன். அது 2002 சமாதான காலப்பகுதி. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது இரு வேறு சீருடையில் இருப்பவர்கள் சமாதான நோக்கில் கைகுழுக்கிக்கொள்ளும் ஒரு ஓவியத்தை வரைந்திருந்தேன். அது அதிகம் பிரபலமாகியது. அத்தோடு எனக்கு ஓவியம் வரைதலின் மீது ஓர் ஆன்ம பிடிப்பு நிகழ்ந்தது.
அதன்பின் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழக அகதி முகாம் ஒன்றில் இருந்தோம். எனது அண்ணா கண்ணாடியில் ஓவியம் வரைவது பற்றி கற்றிருந்தார். அகதிமுகாமிற்கு வரும் தொண்டு நிறுவன பணியாளர்களைக் கெளரவிக்க Glass painting பரிசளிப்பது வாடிக்கையாக இருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்திலும் ஓவியம் மீது ஈர்க்கப்பட்டேன். பின்னர் பொழுதுபோக்கிற்காக படங்கள் வரைவது, படங்களை டிஜிட்டல் முறையில் மினிமலிஸ்டாக மாற்றுவது, எடிட் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டேன்.
கல்லூரி முடித்தபின் மீண்டும் இந்தியா போயிருந்தபோது Tattoo கலைஞர் ஒருவருடைய கலையகத்தில் சிறிதுகாலம் உதவியாளராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்து இது குறித்துக் கற்கத் தொடங்கினேன்.
நாடு திரும்பியதும், நண்பர்களுடன் இணைந்து இந்தக் கலையை என் முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டேன். அதுவே என்னை இவ்வளவு தூரத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது” – அவருக்கு கிடைத்த கேள்விநேரத்தில் தன் முழுவரலாற்றையும் சுருக்கமாக சொல்லி முடித்தார் ஜோய்.
இதிலிருக்கும் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியும் இதுமாதிரியான விடயங்களில் கேட்கப்படுவதுதானே. அதற்கும் ஜோய் பதில் தந்தார்.
“ஆம். ஒரு Tattoo கலைஞனாக இதில் உள்ள சவால்களை மூன்று விதமாக சொல்ல விரும்புகிறேன். முதலாவது மிக ஆபத்தானது. அதாவது ஒருவர் மூலம் இன்னொருவருக்குத் தொற்றும் நோய்கள் பற்றியது.
உடலின் மேற்பரப்பைத் துளைக்க பயன்படுத்தும் ஊசிகள் புதிதாக இருப்பது மட்டுமல்ல, Tattoo வரையும்போது ஒருவர் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் படும் வாய்ப்புள்ள அத்தனை கருவிகளையும்/உபகரணங்களையும் ஒவ்வொரு முறையும் மாற்றவேண்டும்.
Tattoo வரைந்துகொள்ளும் இந்தச் செயல்முறையின்போது வேறு எந்த பொருளையும் தொடக்கூடாது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு நோய்கள் தொற்ற அதிகளவு வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்காணிக்க – நெறிப்படுத்த, வளர்நத நாடுகள் தனியான கட்டமைப்புகளை வைத்திருக்கின்றன.
இரண்டாவது சவால், சில நாடுகளில், பிரதேசங்களில் குறிப்பிட்ட சில Tattooக்கள் வரைந்து கொள்வது பாரிய சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக இலங்கையில் புத்தரின் உருவத்தை தனது காலில் tattooவாக வரைந்துகொண்ட ஒருவர் தாக்கப்பட்டமை சர்ச்சையானது. அதேபோல மலேசியாவில் எண்களை வரைந்துகொள்வது சிக்கலை ஏற்படுத்தும். அரபு நாடுகள் சிலவற்றில் இஸ்லாமிய மதம் ரீதியான tattooக்களை வரைவது குற்றமாகும்.
மூன்றாவது சவால், சமூகக் கட்டமைப்பு சார்ந்தது. நமது சமூகத்தில் உடலில் வரைந்து கொள்ளும் இந்தக் கலையை ஒவ்வாத ஒன்றாக பார்க்கும் நிலை இன்னமும் இருக்கவே செய்கிறது. ஆனால் இதன் தொடக்கம் தமிழர்களிலிருந்துதான் ஆரம்பித்து, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.
இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை நமது தமிழ் சமூகத்தில் இலைகளின் பச்சையங்களை மூலமாக வைத்து செய்யப்படும் பச்சை குத்தும் முறைமை இருந்தது. பின்னர் சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாக உருவகப்படுத்தி இப்போது அழிவுக்கு சென்றுவிட்டது.
உலகின் பழமையான பூர்வகுடிகள் வாழும் இடங்களில் எல்லாம் உடலில் நிரந்தரமாக வரைந்து கொள்ளும் இந்தக் கலை விரவி இருக்கிறது. நியூசிலாந்தின் பூர்வகுடியினரைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவர்களது பண்பாட்டை பிரதிபலிக்கும் Tattooக்களுடன் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடிகள், ஆபிரிக்க பூர்வகுடிகள், கரீபியன் மக்கள் என உலகின் பழமையான கலாசாரங்கள் அனேகமானவற்றில் உடலில் வரையும் கலை முக்கிய ஒன்றாக இருக்கிறது. நம்பிக்கைக்குரியதொன்றாக இன்னமும் இருக்கின்றது.
ஆனால் நாம் நம்மிடமிருந்த பச்சை குத்துதலைத் தொலைத்துவிட்டு, நாகரீகம் எனும் பெயரில் Tattooவை இறக்குமதி செய்திருக்கிறோம்.” என இந்தக் கலையில் இருக்கின்ற சவால்களோடு சேர்த்து, அதன் வரலாற்றுக் கனதியையும் சொல்லிடுகிறார் அவர்.