வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி : தப்பி ஓடிய சாரதி!!

விபத்து..

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் நேற்று (22.06.2022) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா – பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் ஓமந்தையில் இருந்து பறனட்டகலில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குறித்த நபரை அதே திசையில் பயணித்த கார் மோதியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளதுடன் அவருடன் பயணித்த மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து காரினை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கார் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள் சென்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் : எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை!!

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திலுள்..

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள் இன்று (23.06.2022) காலை முச்ச்க்கரவண்டிகளுடன் சாரதிகள் சென்று தமக்கு 4 தினங்களுக்கு ஒரு முறை 3500ரூபாவிற்கு பெற்றோலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாவட்டத்தில் எரிபொருளுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தினர், இராணுவம், பொலிஸார் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வாரத்திற்கு ஒரு தடவை (7நாட்களுக்கு ஒரு முறை) எனும் ஒழுங்கமைப்பில்,

நிகழ்நிலையில் (ஒன்லைனின்) வாகன இலக்கங்களை பதிவு மேற்கொண்டு கார் மற்றும் இதர வாகனங்களுக்கு 3000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 2000 ரூபாவிற்கும் , மோட்டார் சைக்கில்களுக்கு 1500 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபா பெற்றோலின் இரண்டு தினங்களுக்கு மாத்திரமே எம்மால் வாகனத்தினை செலுத்தக்கூடிய வகையில் உள்ளது இதனால் எமது வாழ்வாதாரம் முற்றகாக பாதிப்படைந்துள்ளதுடன் எமது குடும்பத்தினரும் சாப்பாட்டிற்கு கஸ்டப்படும் நிலமை உறுவாகியுள்ளது.

எனவே எமது எரிபொருள் பெறுமதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு 4 நாட்களுக்கு ஒரு தடவை 3500 ரூபாவிற்கு எரிபொருள் என்ற அடிப்படையில் வழங்குமாறு தெரிவித்து மாவட்ட செயலக வளாகத்தில் தமது முச்சக்கரவண்டிகளை நிறுத்தியிருந்தனர்.

அதனையடுத்து அங்கு வந்திருந்தவர்களை அழைத்து மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்துரையாடியதுடன் பெற்றோல் வழங்குவதில் தற்போது பாரிய சிக்கல்களை மாவட்ட செயலகம் எதிர்நோக்கியுள்ளதுடன்,

விரைவில் சிறந்தபொறிமுறை மூலம் அனைத்து தரப்பினருக்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தனர். அதனையடுத்து மாவட்ட செயலகத்தில் தரிந்து நின்ற 20க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகளும் அவ்விடத்திலிருந்து சென்றன.

மீண்டும் உயரப்போகும் எரிபொருட்களின் விலை : விலைப்பட்டியலை வெளியிட்டது கொழும்பு ஊடகம்!!

எரிபொருட்களின் விலை..

எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாகவே கூறியிருந்தது.

இதன் அடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 74 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவினாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 65 ரூபாவினாலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 210 ரூபாவால் அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

கல்வி அமைச்சரின் அறிவிப்பு..

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வலையில் சிக்கிய 55 கிலோகிராம் எடையுள்ள அரிய வகை மீன் : பார்க்க படையெடுக்கும் மக்கள்!!

அரிய வகை மீன்..

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று காலை சிக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த மீனை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின், அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

எனினும் அரிய வகை மீனான சூரிய மீன் பெரும்பாலும் கடற்தொழிலாளர்கள் வலையில் சிக்குவது இல்லை. இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு கடற்தொழிலாளர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளது.

இது தொடர்பில் அறிந்து பாம்பன் துறைமுகத்திற்கு வந்த மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மீனை ஆய்வு செய்துள்ளனர். இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் என்பதுடன், இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடிய இந்த வகை மீன்கள் ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை. பாம்பன் கடற்தொழிலாளர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன் 55 கிலோகிராம் எடை கொண்டது என்பதுடன்,

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் கடற்தொழிலாளர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனை பார்வையிட பொது மக்கள் படையெடுத்து வருவதாக தெரியவருகிறது.

மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் : பிரதமர்!!

எரிபொருள் விலைகள்..

உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான வெளிநாட்டுப் பணத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலைமை காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ரஷ்யா, ஐரோப்பாவுக்கு எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை கடந்த வாரம் நிறுத்தியது. இங்கிலாந்தில் 30 முதல் 40 வீதமாக எரிபொருள் விலை அதிகரிக்கும்.

இதனால், இவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும். எமக்கு கிடைத்துள்ள 500 மில்லியன் டொலர்களை முடிந்தளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய பயன்படுத்த வேண்டும்.

விலை அதிகரிப்பு என்பது எமது கைகளில் இல்லை. உக்ரைன் யுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

வவுனியாவில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்றபட்ட இராணுவ வீரரை மோதிய பிக்கப் வாகனம் : இராணுவ வீரர் பலி!!

விபத்து..

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை (21.06) இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பேருந்தில் மீண்டும் கடமைக்கு திரும்பிய போது,

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேரூந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரரை மோதியதில் இராணுவ வீரர்,

7மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டடதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஐ.சீ.பண்டார, ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டீ.சீ.எல்.ஜெயவர்த்தன ஆகியோர் தலைமையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்தில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

ஆணின் சடலம் மீட்பு..

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சேவிஸ் மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று (22.06.2022) காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா தொடரை வென்ற இலங்கை : சொந்த மண்ணில் சாதனை!!

சொந்த மண்ணில் சாதனை..

சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைாதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 110 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் குஹேனெமன், பெட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெகட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதையடுத்து, 259 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவிட் வோனர் 99 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3 இற்கு 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதோடு, ஒரு போட்டி மீதமிருக்கத் தொடரையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி!!

ரூபாவின் பெறுமதி..

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த இரு தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.
இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.73 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 357.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 366.83 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 356.28 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 388.91 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பயோ டீசல் கண்டுபிடித்து சாதித்த இலங்கை இளைஞன் : ரணில் எடுத்து உடனடி நடவடிக்கை!!

திலிண தக்சீல..

பாணந்துறை பிரதேசத்தில் உயிரியல் முறையில் (பயோ) டீசல் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படும் இளைஞனுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த திலிண தக்சீல எனும் 23 வயதான இளைஞர் ஒருவர் தேங்காய் எண்ணெயிலிருந்து உயிரியல் டீசல் கண்டுபிடித்துள்ளதாக இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியிருந்தது.

அது குறித்து முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். உடனடியாக குறித்த இளைஞனை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட பிரதமர் ரணில், பயோ டீசல் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

அத்துடன் திலிண தக்சீல தயாரிக்கும் பயோ டீசல் இன் தரம் மற்றும் அதனைக் கொண்டு வாகனங்களை இயக்கும் சாத்தியம் குறித்து பரீட்சித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை : தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட நபர்!!

அபூர்வ சத்திரசிகிச்சை..

மீகஹகிவுல பிரதேசத்தில் கித்துள் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபரின் நெஞ்சு பகுதியில் அல்பீசியா மரபலகை ஒன்று குத்தி மற்ற பகுதிக்கு வந்துள்ளது.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நபருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு நேற்று மாலை இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியின் வலது தோள்பட்டை பக்கம் நுழைந்த மரத்துண்டு நெஞ்சின் நடுப்பகுதி வழியாக வெளியேறி இடது கை வழியாக வெளியே வந்துள்ளதாக சி0கிச்சைப் பிரிவு மருத்துவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

சத்திரசிகிச்சை நிபுணர் பியல் குலசூரிய உள்ளிட்ட வைத்திய பணியாளர்கள் வலியை குறைத்து நோயாளியின் உடலில் குத்தப்பட்டிருந்த மரக்கட்டைகளை பெரும் முயற்சியுடன் அகற்றியுள்ளனர்.

இவ்வளவு ஆபத்தான நிலையில் குத்தப்பட்டிருந்த ஒரு மரத்துண்டினை அகற்றுவது சாதாரண விடயமல்ல எனவும் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி நோயாளியை காப்பற்றியுள்ளனர்.

வவுனியாவில் பிரதேச சபை ஊழியர்களுக்கு அனர்த்தம் மற்றும் முதலுதவி தொடர்பில் பயிற்சிப் பாசறை!!

பயிற்சிப் பாசறை..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊழியர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஒழுங்கமைப்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரனையில் அனர்த்தம் மற்றும் முதலுதவி தொடர்பில் பயிற்சி பாசறை இடம்பெற்றது.

குறித்த பயிற்சி பாசறை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (20.06.2022) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.

இதன் போது அனர்த்தத்தின் போதான பாதுகாப்பு, கண்ணீர்புகை தாக்குதலிருந்து பாதுகாத்துக்கொள்ளல், முதலுதவி எவ்வாறு மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 30க்கு பிரதேசசபை ஊழியர்கள் பங்குபற்றி பயனடைந்திருந்தனர்.

தமது உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி மற்றும் இளைஞன்!!

பொலிஸ் அதிகாரி மற்றும் இளைஞன்..

மினிபே, ஹசலக நகருக்கு அருகில் உள்ள ஆற்றுக்கு அருகில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இளைஞன் பெண் ஒருவரை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்வதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

அப்போது, ​​அருகில் உள்ள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமல்க இசுரங்க என்ற இளைஞர் இந்த சம்பவத்தை அவதானித்த நிலையில் பெண்ணை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார்.

இந்த நிலையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியான வின்ஸன் ராஜபக்ஷ என்பவரும் ஆற்றில் குதித்துள்ளார். இருவரும் இணைந்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சமல்க இசுரங்க, ஹசலக்க, கீனபலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​ஆற்றுக்கு அருகில் மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் கண்டு, இது குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போதே பெண் ஒருவர் நீரில் மூழ்குவதனை கண்டு அவர் ஆற்றில் குதித்துள்ளார்.

மஹியங்கனையில் தொலைபேசி அட்டை விற்பனையாளராக கடமையாற்றும் 58 வயதான கல்யாணி என்ற பெண்ணே நீரில் குதித்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரியும் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்துள்ளார்.

இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த மக்கள் இருவரையும் பாராட்டியுள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் வாழ வழியில்லாமல் தற்கொலைக்கு முயற்சித்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நிற்பதா? வேலைக்கு வருவதா? என கேட்டு போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக எரிபொருள் கோரி இன்று (20.06.2022) காலை 11.30 மணியளவில் பிரதேச சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம் கடமைக்கு செல்வது செல்வதற்கு எரிபொருள் இன்மையினால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்த ஊழியர்கள் கள உத்தியோகத்தரை எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் களப்பணிக்கு பணிக்காதே!,

உத்தியோகத்திரன் உயிரை பறிக்காதே உத்தியோகத்தரின் மனநிலையை வதைக்காதே , எரிபொருளை பெற்றுத்தா இல்லையேன் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி, பெற்றோல் தா! பெற்றோல் தா! அத்தியாவசிய தேவைக்கு பெற்றோல் தா!, அத்தியாவசிய தேவைக்கு இல்லால் செய்!,

பொதுபோக்குவரத்துக்கு ஒழுங்கு செய் , காசு தருவோம் எங்களையும் முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் அமைதியான முறையில் சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் காட்டுப் பிரதேசத்தில் இருந்து மனித எச்சம் மீட்பு!!

மனித எச்சம் மீட்பு..

வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் நேற்று (19.06.2022) பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றும் காணப்பட்ட போதிலும் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.