வவுனியாவில் பெற்றோல் விநியோகத்திற்கு எரிபொருள் அட்டை நடைமுறை!!

எரிபொருள் அட்டை நடைமுறை..

வவுனியாவில் பெற்றோலை விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவவொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை வழங்கி நிகழ்நிலை மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இராணுவ அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோருடன் நேற்று (19.06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட நடைமுறை ஒன்று பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதனை நிகழ்நிலையில் (ஒன்லைனின்) பதிவு செய்து வாரத்திற்கு ஒரு தடவை எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்யவுள்ளதுடன், குறிப்பிட்ட சிலர் அதிகளவு பெற்றோலை பல எரிபொருள் நிரப்பு நிலைங்களில் பெற்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை இன்று (20.06) திங்கள் கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், நேற்றைய தினம் (19.06) பெற்றோல் சிட்டைகள் வழங்கப்பட்டவர்களுக்கு நிகழ்நிலையில் பதிவு செய்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், இந்தவாரம் முதல் பெற்றோல் அட்டைகள் வவுனியாவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் மற்றும் குறித்த நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி மோசடியில் ஈடுபடும் குழுவினர் பணம் பறிப்பதற்கு முயற்சிப்பதாக அப்பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை : பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைப்பு!!

எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை..

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தில் இன்று (19.06.2022) மதியம் பொதுமக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையினையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு 6600 லீட்டர் பெற்றோல் தாங்கிய பவுசர் ஒன்று வருகைதரவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கடந்த மூன்று நாட்களாக எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்தனர்.

எனினும் இதுவரை எரிபொருள் தாங்கிய பவுசர் வரவில்லை என்பதுடன் குறித்த எரிபொருள் நிலையத்தில் புதிதாக மோட்டார் சைக்கில் வரிசை உருவாக்கப்பட்டதாக தெரிவித்து அவ்விடத்தில் நின்ற பொதுமக்களிடையே குழப்பநிலமை ஏற்பட்டது.

எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட அமைதியின்மைனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி அவ்விடத்தில் நின்ற பொதுமக்களிடமும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எப்போது பெற்றோல் தாங்கிய பவுசர் வரும் என்ற தகவல் தெரியவில்லை எனவே மக்களுக்கு டொக்கன் வழங்கப்படும் என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி தெரிவித்தமையினையடுத்து அவ்விடத்தில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டு பொதுமக்கள் சிலர் வீதியிலும் இறங்கினர்.

அதனை பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி டொக்கன் முறையினை நடைமுறைப்படுத்தி நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வவுனியா ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!!

போராட்டம்..

ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 4 நாட்களாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து இருந்தும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு ஏ9 வீதியை வழிமறித்து இன்று காலை 6.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ9 ஊடான வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சம்பவ இடத்திற்க வருகை தந்த பொலிசார் ஆர்ப்பாட்டக்காருடன் பேச்சுவர்த்தை நடத்திய போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியை விட்டு விலகிச் செல்லவில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வரவைழைக்கப்பட்டதுடன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் இராணுவ அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக அத்தியாவசிய தேவைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெற்றோலில் 500 லீற்றரை வரிசையில் நிற்பவர்களுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதாகவும்,

விரைவில் பெற்றோல் வரும் எனவும் இராணுவ அதிகாரி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரால் வழக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருள் பவுசரை விடுவித்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை விட்டு விலகிச் சென்றனர்.

இதனையடுத்து இராணுவப் பாதுகப்புடன் எரிபொருள் பவுசர் அங்கிருந்து சென்றதுடன், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு மத்தியில் 500 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

மன்னாரில் நடந்த இரட்டைக்கொலை : சரணடைந்தோருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!

இரட்டைக்கொலை..

மன்னார் – நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

நேற்று இரவு சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தை அடுத்து கடந்த வெள்ளி நண்பகல் கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காகக் கடந்த வெள்ளி மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும், உறவினர்களும் என பொலிஸாரினால் தெரிவித்தனர்.

குறித்த கொலை தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 5 பேர் நேற்று இரவு சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர்களையும் மன்னார் பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதுவரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரியான தூக்கமின்றித் தவிக்கிறோம் : கனடாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் உருக்கம்!!

கனடாவில்..

தனது மகன் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில் தாம் தினமும் செத்துக் கொண்டிருப்பதாக, இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர் கார்த்திக்கின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, Seneca கல்லூரியில் பயின்றுவந்த கார்த்திக் வாசுதேவ் (வயது 21) பகுதி நேர பணிக்காக சென்று கொண்டிருந்த போது ரொரன்றோவிலுள்ள Sherbourne சுரங்க புகையிரத நிலையத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் கார்த்திக்கின் தாயார் பூஜா வாசுதேவ் கூறுகையில், எங்களை தினமும் வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும்.

பிள்ளையை இழந்து இரண்டு மாதங்களாக நாங்கள் சரியான தூக்கமின்றித் தவிக்கின்றோம். அந்த நபர் கார்த்திக்கை மட்டும் கொல்லவில்லை, எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொன்றுவிட்டார்.

எங்கள் பிள்ளை ஏன் கொல்லப்பட்டான் என்று தெரியாமல் தினமும் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கார்த்திக்கின் தம்பி கூறுகையில், எனக்கு ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான், அது என் அண்ணன் தான். தற்போது அண்ணன் இல்லாமல் வாழ்வே வெறுமையாகிப் போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கார்த்திக்கின் தந்தை ஜித்தேஷ் வாசுதேவ் கூறுகையில், நானும் என் மனைவியும் எங்கள் மொத்த சேமிப்பையும் மகனுடைய கல்விக்காக செலவிட்டுவிட்டோம். எங்கள் வீட்டையும் அடமானம் வைத்து 50,000 டொலர்கள் கடன் வாங்கித்தான் எங்கள் மகன் கார்த்திக்கை கனடாவுக்கு நாங்கள் அனுப்பியிருந்தோம். அந்த பணம் கார்த்திக்கினுடைய முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

12 வயது பாடசாலை மாணவன் மாயம்!!

மகேந்திரன் ஆசான்..

நுவரெலியா மாவட்டத்தில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆசான் என்ற,

12 வயது பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் ஊடகங்களுக்கு நானுஓயா பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) காலையில் இருந்து மாணவன் காணாமல்போயுள்ளார் என்று அவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்!!

திருகோணமலை..

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் முன்று நாளைக்கு பின் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சநகர் காட்டில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்கள் சேர்ந்து இன்று மீட்டுள்ளனர்.

முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் தான் வழிதவறி காட்டிற்கு சென்றதாகவும் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (16) காணாமல் போயிருந்த நிலையில் பொது மக்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இன்று மீட்கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு : வெளியாகியுள்ள தகவல்!!

எரிபொருள் விலை உயர்வு..

எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 78 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் தாங்கிய கப்பல் இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க தினமும் 6,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5,000 மெட்ரிக் தொன் பெற்றோல் தேவைப்படுகிறது.

இதன்படி, 5,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 11,000 மெட்ரிக் தொன் டீசல் தற்போது இலங்கை பெற்றோல் கூட்டுதாபனத்தில் சேமிப்பு வசதிகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெடரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெற்றோலுக்காக 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில்!!

பெற்றோலுக்காக..

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெற்றோலை பெற்றுக்கொள்ள கூடிய நிலை காணப்படுவதனால் 1500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

வவுனியா இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திற்கு இன்று (16.06.2022) அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தனர்.

மோட்டார் சைக்கில் 2000ரூபா, முச்சக்கரவண்டி 3000ரூபா , கார் மற்றும் வான் 8000ரூபா என்ற அடிப்படையிலேயே பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் எரிபொருள் நிலையத்திலிருந்து ஹொரவப் பொத்தானை வீதியூடாக வவுனியா நகர் வரை 2 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்து வெளிக்குளம் பொது மயானம் வரையான வீதியில் 3 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்து கோவிற்குளம் சிவன் கோவில் வரையான வீதியில் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு என 7 கிலோமீற்றர் தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டமையுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு வருகைதந்து வரிசைகளை கட்டுப்படுத்தியதுடன் வரிசைகளை கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்தலும் வழங்கியிருந்தார்.

ஆழ்துளை கிணற்றில் பாம்புகளுடன் 104 மணி நேரம் போராடிய சிறுவன் : மீட்கப்பட்டது எப்படி? குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 104 மணி நேரமாக தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் ராகுல் தவறி விழுந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது.

பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர். முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன.

இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுல் ஷாஹுவை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர். தற்போது ராகுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்நிலையில் பல்வேறு சவால்களை சந்தித்தபடியே சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்திருக்கிறான். ஏனெனில் அங்கு பாம்புகளும், தவளைகளும் இருந்திருக்கிறது. சிறுவனின் ராகுலின் துணிச்சலை மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பகேல் பாராட்டியுள்ளார்.

மேலும், ராகுலை மீட்டு சவாலான காரியத்தை முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு முயற்சியாலும் ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில வாகனங்களின் பாவனைக்கு தடை!!

எரிபொருள் நெருக்கடி..

இலங்கையிலுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் சில வாகனகங்களின் பாவனைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வைக் கொண்டுவரும் பிரேரணையாக 2000cc க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அனைத்து கார்கள் மற்றும் ஜீப்களின் பாவனைக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

ஆடரம்பர வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை கொண்டு, நீண்ட காலத்திற்கு முச்சக்கரவண்டிகளை செயற்படுத்த முடியும். எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் உதய கம்பன்பில மேலும் கூறினார்.

மயானத்தில் எரிந்துகொண்டிருந்த பெண்ணின் உடல் : தீயில் பாய்ந்த இளைஞர்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!!

மத்திய பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், சுடுகாட்டில் எரியும் பெண்ணின் சிதையில் குதித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவத்தில் உள்ள மஜ்கவான் கிராமத்தில் ஜோதி தாகா என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் சுடுகாட்டில் வைத்து எரியூட்டப்பட்டது.

ஜோதியின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது உறவினர்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் கரன் (21) என்ற இளைஞர் மட்டும் சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த சிதை முன்பு சென்றுள்ளார். ஜோதியின் உறவினரான கரன், சிதை முன்பு விழுந்து வணங்கியதை சிலர் பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென அவர் எரிந்துகொண்டிருந்த சிதைக்குள் அடியெடுத்து வைத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், கரனை வெளியே இழுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் பலத்த தீக்காயம் அடைந்த கரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதி வழியிலேயே கரனின் உயிர் பிரிந்தது.

இதனால் சோகத்தில் மூழ்கிய உறவினர்கள், ஜோதி தாகா எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கரன் உடலை தகனம் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பஹேரியா பொலிஸார், கரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் உயிரிழந்த இலங்கை பெண் : மனதை உருக்கும் மகனின் சித்திரம்!!

ரேணுகா அமரசிங்க..

கனடாவில் வானொன்று பாதசாரிகள் 10 பேர் மீது மோதி விபத்திற்குள்ளான கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் தாக்க அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விபத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான ரேணுகா அமரசிங்கவின் 9 வயதான மகன் டியோன் (Diyon), படம் ஒன்றை தனது தாக்க அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

குறித்த தாக்க அறிக்கையில் தன் தாயும், தானும் பனிச்சறுக்கு செய்வது போல் படமொன்றை வரைந்துள்ளான்.தானும் தன் தாயும் முன் சென்ற இடம் ஒன்றையோ, அல்லது இனி செல்ல வேண்டும் என தான் எண்ணியதையோ படமாக வரைந்து அந்த சிறுவன் சமர்ப்பித்துள்ளார்.

குற்றவாளிக்கு 25 ஆண்டு கால ஆயுள் தண்டனை
குறித்த சம்பவத்தில் தனது தோழியை இழந்ததுடன் முகத்தில் படுகாயமடைந்த SoRa என்ற பெண், தன் இதயத்தில் நிரந்தரமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என பலர் தாக்க அறிக்கைகளை விசாரித்த நீதிபதி Justice Anne Molloy, குற்றவாளியான அலெக் மின்னேசியனுக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், கொலை முயற்சி குற்றங்களுக்காக மின்னேசியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன்,இந்த தண்டனைகளை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டம்!!

வீதியை மறித்து போராட்டம்..

எரிபொருள் கோரி வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பவற்றை மறித்து இன்று (15.06) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில பெற்றோல் முடிந்து விட்டதாக தெரிவித்தையடுத்து அப் பகுதியில் நின்ற மக்கள் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பவற்றை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆர்ப்பாட்டங்காரரை அகற்ற முற்பட்ட போது பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டங்காரர்களை பொலிசார் வீதியில் இருந்து அகற்றியதுடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய தாங்கியில் எரிபொருள் இல்லை என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்று காட்டியிருந்தனர். இதனையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 கைதிகள் விடுதலை!!

6 கைதிகள் விடுதலை..

பொசன் போயாவை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 பேர் இன்று (14.06) விடுவிக்கப்பட்டனர்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் 173 கைதிகள் நாடு பூராகவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் அபராதம் செலுத்தாது சிறைச் தண்டனை பெற்று வந்த கைதிகள் 6 பேர் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.