இலங்கையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் : பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்!!

தக்ஷித இமேஷ் தனபால..

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த தக்ஷித இமேஷ் தனபால என்ற மாணவன் கடந்த மே 31ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன்னர் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையை பெற்றுள்ளனர்.

இலங்கையிலுள்ள பல மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் அநுராதபுரம் கிளையில் உள்ள கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மகனின் கண்களை தானம் செய்து இரு உயிர்களை வாழ வைத்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன், உயிரிழந்த சிறுவனுக்கு பலரும் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

திருமணமான 4 மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

சென்னையில்..

சென்னையில் குழந்தை பிறக்காது என மன உளைச்சலில் இருந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (22). இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இருவரும் சென்னை மதுரவாயலை அடுத்த தனலட்சுமி நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது இருவரும் எடுக்கவில்லை. மேலும் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. கதவை தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சக்திவேலின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.

அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடிக்கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தம்பதியரின் தற்கொலை குறித்து கூறும்போது, தம்பதியர் மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருந்து வந்துள்ளனர் என்றும், தங்களுக்கு குழந்தை பிறக்காது என தாங்களே முடிவு செய்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பால் மாவின் விலைகள் அதிகரிப்பு!!

பால் மா..

பெறுமதி கூட்டல் வரி உட்பட சில வரிகள் கடந்த 31 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட்டாயம் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய மற்றும் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கு பெறுமதி கூட்டல் வரி அறவிடப்படுவதில்லை. எனினும் பால் மாவுக்கு இந்த வரி அறவிடப்படுமா அல்லது இல்லையா என்பதை அரசாங்கம் உறுதியாக தெரிவிக்கவில்லை.

பால் மாவுக்கு பெறுமதி கூட்டல் அறவிடப்படா விட்டாலும் விசேட சந்தை பொருள் வரி உட்பட சில வரிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு முறை பால் மாவின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.

மேலும் அமெரிக்க டொலருக்கு ஈடாக ரூபாய் மதிப்பிழந்துள்ளமையும் விலைகள் தொடர்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ரூபாவின் பெறுமதி 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், பால் மாவின் புதிய விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் எனினும் எதிர்வரும் காலத்தில் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனவும் அது 50 வீத விலை அதிகரிப்பாக இருக்கும் எனவும் பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வாய்ப்பு : விவசாயத்தை ஊக்குவிக்க திட்டம்!!

அரச ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விடுபட்டு, வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரச அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை வேலையில் இருந்து விடுபட விரும்பும் பொது ஊழியர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பிற நிலங்களிலோ உணவுப் பயிரிடுவதற்கு அந்த விடுமுறை நாள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய விவசாயத் துறையிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த யோசனை தொடர்பில் விவசாய திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் சில அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படலாம் என்ற அடிப்படையில் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்!!

அரிசி..

நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் கடுமையான அரிசி தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி ஏற்படும் என தேசிய கமத்தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடும் தட்டுப்பாட்டை எதிர்நோக்க போகும் மாகாணங்கள்
மூன்று மாதங்களில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்
நாட்டின் மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அரிசிக்கு கடுமயான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயிர் செய்கைக்கு தேவையான இரசாயன பசளைகள் மற்றும் ஏனைய இரசாயனங்கள் கிடைக்காததே இதற்கு பிரதான காரணம். இதன் காரணமாக பல மாகாணங்களில் நெல் பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இலஙகைக்கு ஒரு மாத காலத்திற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுகிறது.

கமத்தொழிலாளர்கள் தமது பயன்பாட்டுக்காக மூன்று லட்சம் மெற்றி தொன் நெல்லை தம்வசம் வைத்துள்ளனர். 80 வீதமானவர்களுக்கு அரிசி கிடைக்காமல் போகலாம்.

மிகப் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மேலும் 10 லட்சம் மெற்றி தொன் அரிசியை வைத்துள்ளனர். இந்த தொகையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும்.

சிறு போக பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் நெல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானனோருக்கே போதுமானதாக இருக்கும். இதனால், மீதமுள்ள 80 வீதமான மக்களுக்கு அரிசி கிடைப்பது பாரதூரமான சிக்கலாக இருக்கும் எனவும் அனுராத தென்னகோன் கூறியுள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்!!

புதிய வகை மோட்டார் சைக்கிள்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அதற்கமைய, இலங்கையர் ஒருவர் இந்த நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வைக் காண முன்வந்துள்ளார். இயாஸ் பசூல் என்பவர், நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளை இரண்டு முறையில் பயன்படுத்த முடியும். சாதாரண சைக்கிளாகவும் அதனை பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீற்றர் பயணிக்க முடியும்.

மற்ற முறையில் மோட்டார் சைக்கிளாக பயன்படுத்தியும் பயணிக்க முடியும். அந்த முறையில் 30 கிலோ மீற்றர் பயணிக்க முடியும். 4 மணித்தியாலங்கள் அதனை சார்ஜ் செய்தால் அரை யுனிட் மாத்திரமே செலவாகும்.

இந்த சைக்கிளுக்கு தலைகவசம், அனுமதி பத்திரம் எதுவும் தேவையில்லை. இந்த சைக்கிள் இணையத்துடன் இணைகின்றது.

கையடக்க தொலைபேசிகள் மூலம் குறித்த மோட்டார் சைக்கிளை செயற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பு : ஏழாயிரம் ரூபாவை அண்மித்தது!!

எரிவாயு கொள்கலனின் விலை..

லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும்,

5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3500 மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது.

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!!

5000 ரூபா கொடுப்பனவு..

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி வெளியிட்டுள்ளார்.

அதன்படி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் உள்ள 78,442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபா கொடுப்பனவை வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் அதேநேரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 27, 978 பேருக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 1 – 2 நபர்களை கொண்ட குடும்பத்திற்கு 5000 ரூபாயும், 3 நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 6400 ரூபாவும், நான்குக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களுக்கு 7500 ரூபாவாக சமுர்த்திக் கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சுமார் 6000 வயது முதிர்ந்தவர்கள் பட்டியலில் காணப்படும் நிலையில் அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

எரிவாயு விலை அதிகரிப்பு..

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்.

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனொன்றின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என கூறியுள்ளார்.  எரிவாயுவை ஏற்றிய கப்பலில் சுமார் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!!

வாகன விலை..

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போது கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருள் சிக்கன வாகனங்களின் விலை குறைவதற்கான அறிகுறியே இல்லை என முதன்முறையாக கார் வாங்க முற்படும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக தற்போது சுஸுகி அல்டோ இந்திய காரின் விலை 4 மில்லியனை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான சில வாகனங்களின் தற்போதைய விலைகள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா – விட்ஸ் – 2018 – 90 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. டொயோட்டா – பிரீமியர் – 2017 – ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. டொயோட்டா – எக்வா ஜீ – 2012 – 70 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஹொன்டா – வெஸல் – 2014 – 90 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. ஹொன்டா – பிட் – 2012 – 80 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. ஹொன்டா – க்ரீஸ் – 2014 – 88 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.

நிஷான் – எக்ஸ் ட்ரேல் – 2015 – ஒன்றரை கோடி ரூபாயை கடந்துள்ளது. சுசுகி – வெகன் ஆர் – 2017 – 60 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.

சுசுகி – எல்டோ – 2015 – 35 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. சுசுகி – ஜப்பான் எல்டோ – 2017 – 55 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. மைக்ரோ – பென்டா – 2016 – 29 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலை…

2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றையதினம் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

லண்டனில் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு : குவியும் பாராட்டுக்கள்!!

சுபிக்சா..

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில்,

யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு தேர்வாகியுள்ளார். இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

வவுனியாவைச் சேர்ந்த 42 வயது நபரை காதலித்த மட்டக்களப்பைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீட்பு : ஒருவர் கைது!!

5 வயது சிறுமி மீட்பு..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபரையும் நேற்று (03.06.2022) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்குவருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு நேற்று அதிகாலை வந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர். அத்தோடு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக நொச்சிமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது,

ஏ9 வீதியில் வவுனியா நோக்கி வந்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர்ப்பக்கம் சென்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கட்டடத்திற்குள் புகுந்தது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கடை சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் வாகனச் சாரதிக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

சம்ப இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனம் கொண்டு செல்லப்பட்டதுடன், வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா 9 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் : பொலிசாரால் மூன்று இளைஞர்கள் கைது!!

மூன்று இளைஞர்கள் கைது..

வவுனியாவில் 9 இடங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.06) தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம் பகுதியில் 2 வீடுகளிலும், நெளுக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், கூமாங்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும் என 9 இடங்களில் நகைகள், மோட்டர் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348),

விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்க (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மதவுவைத்தகுளம் (32வயது), தேக்கவத்தை (வயது 30), 4ம் கட்டை (வயது 35) ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர்களிடம் இருந்து மோட்டர்கள் 3, சிலிண்டர்கள் 8, ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறைண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் மற்றும் தோடு, மூக்குத்தி சஙகிலி அடங்கிய 2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு!!

நிவாரணப் பொதிகள்..

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொதிகளில் வவுனியா மாவட்டத்திற்கு என பகிர்ந்தளிக்கப்பட்ட 22,550 அரிசிப் பொதிகளும் 750 பால்மா பொதிகளும் கடந்த (02.06.2022) அன்று விசேட புகையிரதம் ஊடாக வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்திருந்தது.

நிவாரணப் பொதிகளை வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகர் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துடன் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் இன்று (04.06.2022) பகிர்ந்தளிப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் என பங்கீட்டு முறையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.