வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ விபத்து!!

தீ விபத்து..

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (09.06.2022) மதியம் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியாலய போராட்டத்தினை அடுத்து தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன் : பதவியை துறந்தார் பசில்!!

பசில் ராஜபக்ச..

தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார். அரசியலில் இருந்து விலகிச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் கேமிற்கு அடிமையான 23 வயது இளைஞர்.. நண்பர்களின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

கரூர்..

தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர்.

இதைபோன்ற ஒரு சம்பவம் தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ப்ரீ பயர் என்ற ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த இளைஞரின் ப்ரீ பயர் விளையாட்டின் User ID மற்றும் பாஸ்வேர்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். இதனை அறிந்த அந்த இளைஞர் அதிர்ச்சியும், விரக்தியுமடைந்துள்ளார்.

பின்னர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். கேம் பாஸ்வேர்டை திருடிக் கொண்டதற்காக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காது, மூக்கில் விஷம் செலுத்தி கொல்லப்பட்ட தம்பதி : மக்களை உலுக்கிய ஆணவக்கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு!!

கண்ணகி – முருகேசன்..

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது.

இதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மற்றோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு, இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்னத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் திகதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள்.

அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை செலுத்தினர்.

அன்றைய தினம் அரங்கேறிய அந்த ஆணவப் படுகொலையை அங்கிருந்த ஊர்மக்கள் யாரும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த இருவரது சடலத்தையும் தனித்தனியாக எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள். இந்த வழக்கின் விசாரணை ஆண்டுக்கணக்கில் நடந்த நிலையில் கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருதாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம், அதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கியது.

இந்நிலையில் இன்று கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டனையை குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அதன்படி கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணகியின் தந்தை துரைசாமி, உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவுடன் இருளில் மூழ்கப்போகும் இலங்கை : யாவும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை!!

இருளில் மூழ்கப்போகும் இலங்கை?

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.

தங்கள் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்க்கவில்லை.நாளைய தினம் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல்வாதிகள் நாட்டை பேரழிவிற்குள் தள்ளியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் பணியில் இருந்து விலகுவோம். முடிந்தால் யாராவது பொறுப்பேற்று இந்த அமைப்பைச் செயல்பட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், அனைத்து மின் ஊழியர்களும் படிப்படியாக விலகுவார்கள்.

அத்தகைய சூழ்நிலையில் கணினி கட்டமைப்பை பாதுகாக்க, அனைத்து இயந்திரங்களும் கோட்பாட்டளவில் நிறுத்தப்பட வேண்டும்.அனைத்து ஊழியர்களும் காலை 8 மணிக்குள் வெளியேறுவார்கள்.

அப்போது நாட்டில் மின்சாரம் என்ற ஒன்று இருக்காது என தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் சேவைகள் தடைப்படும். நோயாளிகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!!

மாங்குளம் பகுதியில்..

வவுனியா மாங்குளம் பகுதியில் 10வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

2017 பங்குனி மாதம் பாடசாலை சீருடையுடன் மலசலக்கூடத்தில் வைத்து இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக மாணவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இச் சம்பவத்தின் பின்னர் பாடசாலைக்கு சென்று வகுப்பாசிரியரிடம் இச்சம்பவத்தை கூறியதாகவும், அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் மாணவி இதன்போது மேலும் சாட்சியம் அளித்துள்ளார்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியென தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணையும்,

4 லட்சம் நஷ்ட ஈடும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டணையும், 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டணையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.

மரக்கறிகள்,மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!!

மரக்கறிகள், மீன்..

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், சந்தைகளில் மேலும் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபாவிற்கும், பலயா மீன் ஒரு கிலோ கிராம் 1,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா ஆகிய மீன்களின் மொத்த விற்பனை விலை 800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரித்துள்ளதுடன்,சந்தைக்கு வரும் மரக்கறிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளது.

இதனை தவிர போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன. அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளை தவிர்க்கும் இலங்கை மக்கள் : தலைசுற்ற வைக்கும் விலை அதிகரிப்பு!!

கையடக்க தொலைபேசி..

ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பதாயிரம் ரூபா என்ற வரம்பில் உள்ளது. அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், சமீபகாலமாக வரி உயர்த்தப்பட்டதாலும் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 90,000 என்ற வரம்பை விரைவில் எட்டும் என விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே சமயம், தொலைபேசிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதால் இலங்கை மக்கள் தொலைபேசி கொள்வனவினை தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விற்பனை ஏதும் இல்லாமலும் சில தொலைபேசி விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 667,154 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 164,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு கழிப்பறைக்குள் மக்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!!

கழிப்பறை..

இலங்கையிலுள்ள பொது கழிப்பறைகளை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவை போதியளவு சுகாதாரமான முறையில் இருப்பதில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

எனினும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பொது கழிப்பறை ஒன்றில் ஏற்பட்ட மாற்றம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த கழிப்பறையை அழகான இடமாக மாற்றிய இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சப்ரான் என அழைக்கப்படுகின்ற இளைஞன் ஒருவரின் முயற்சியால் பொது கழிப்பறை அலுவலக இடம் போன்று மாற்றப்பட்டுள்ளது.

புறக்கோட்டை, சாமஸ் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பொது கழிப்பறை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.

கதவுகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது அது முழுமையாக மாற்றமடைந்து அலுவலகம் போன்று காட்சியளிக்கிறது.

குறித்த இளைஞர் அதனை அலங்கரித்து சுத்தப்படுத்தி வைத்துள்ளார். அங்கு சென்ற பெண் ஒருவர் அதனை புகைப்படமாக எடுத்து சப்ரான் என்ற இளைஞனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சப்ரான் என்ற இளைஞனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புறக்கோட்டை என்பது கொழும்பின் முக்கிய பகுதியாகும்.

நாட்டின் நாலா பக்கமும் உள்ள பல இலட்சம் மக்கள் அன்றாடம் கொழும்பு வந்து செல்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொது கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

14 வயது சிறுமி மாயம் : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

ஆறுமுகம் பிரியதர்ஷினி..

கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் 0775251791, 0787910688 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குறித்த சிறுமதியின் குடும்பத்தால் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு : வெளிவந்துள்ள அறிவிப்பு!!

5000 ரூபா கொடுப்பனவு..

பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதில் 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகக் கெடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாவினை தொடர்ந்து வழங்குவதற்கு 15000 மில்லியன் ரூபாவாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வழங்கும் விசேட அறிவிப்பு!!

விசேட அறிவிப்பு..

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளைய தினமும் முன்னெடுக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. பல நாட்களாக சந்தையில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிவாயுவினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த கணவர் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார் : நாகப்பாம்புடன் வாழ்ந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் சரவல்லா மவுனேஷ் கம்பாரா இறந்துவிட்டார்.

இந்த நிலையில் மானஷா நாகப் பாம்பு ஒன்றுக்கு தனது வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது, மானஷா அவர்களை தடுத்துள்ளார்.

அப்போது அவர் கூறிய விடயம் தான் அப்பகுதியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் புகுந்த பாம்பை, தனது கணவரின் மறுபிறவி என மூதாட்டி நினைத்துள்ளார்.

அதன் பின்னர் நான்கு நாட்களாக அந்த பாம்புடனேயே அவர் தங்கியிருந்திருக்கிறார். இதனால் தான் பாம்பை பிடிக்கக் கூடாது எனவும், அது தன் வீட்டில் இருந்து வெளியேறக்கூடாது எனவும் கூறி அவர்களுடன் மானஷா வாக்குவாதம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானஷாவிடம் கிராம மக்கள் விளக்கம் அளித்த பின்னர் அவர் பாம்பை பிடித்து செல்ல அனுமதித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வவுனியாவில் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்!!

நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்..

வவுனியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் இன்று (07.06.2022) மதியம் தொடக்கம் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் ஒக்ரோன் 92 ரக பெற்றோல் 750 ரூபாவாகவும் ஒக்ரோன் 95 ரக பெற்றோல் 765 ரூபாவாகவும் ஒட்டோ டீசல் 455 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 498 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன (போலிச் செய்தி).

இதனையடுத்து வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில்கள் என்பன நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்ற போதிலும் டீசல் இதுவரையும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!!

அளம்பில் பகுதியில்..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (06.06) இரவு இடம்பெற்றுள்ளது.

செம்மலையினை சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அளம்பில் பகுதியில் தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற இருவர் அவரை அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன்போது தலையில் படுகாயமடைந்த அவர் நிலத்தில் வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். வீட்டில் கொலை செய்யப்பட்ட நபரும் அவருடை தந்தையுமே வசித்து வந்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வீட்டில் வசித்த தந்தையிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.