வவுனியாவில் 14 வயது சிறுமி மாமாவால் துஸ்பிரயோகம் : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவு!!

பாலியல் துஷ்பிரயோகம்..

வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (25.05) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை தாயின் சகோதரர் (மாமா) மது போதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதன் பின்னர் தான் கற்பமாகி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மன்றில் குறித்த சிறுமி சாட்சியம் அளித்துள்ளார். இச் சாட்சியத்தை ஒப்புதல் அளிக்கும் விதமாக வைத்திய கலாநிதி ஒருவரும் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபா நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும்10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்பு!!

புளியங்குளம் பகுதியில்..

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் வவுனியா – புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 910 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை இன்றையதினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி : அரசாங்கம் முன்வைத்துள்ள நிபந்தனை!!

வாகன இறக்குமதி..

வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று நாங்கள் எரிவாயு வரிசைகள், எண்ணெய் வரிசைகள், மின்வெட்டு, பால்மா தட்டுப்பாடு மற்றும் மருந்து பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒன்றாக வேலை செய்கிறோம். இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளோம். ​​

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன்.

இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம்.

மேலும், குறைந்தபட்சம் 50,000 டொலர்கள் அனுப்பப்பட்டிருந்தால், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண் முறையை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்!!

நிவாரணம்..

பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்திற் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறவுள்ளனர்.

உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

உத்தேசத் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையிலான நிவாரணத் தொகையை மேற்குறித்த குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 1,765,000 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 730,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3,300,000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்நிவாரணத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ளனர். இதன் முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாதத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு!!

எரிவாயு சிலிண்டர்கள்..

நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியிருந்தது. இந்த நிலையில் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசைகளில் நிற்க வேண்டாம் என நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் மிக் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது!!

உணவுப் பொருட்களின் விலை..

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகள், இறைச்சி பொருட்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 60 சதவீத பொது மக்களுக்கு உணவு வழங்க முடியவில்லை, மேலும் நேற்றிரவு எரிபொருள் விலை உயர்வு மேலும் பட்டினி மற்றும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்.

சிற்றுண்டிச்சாலை தொழில் அரச ஊழியர்கள் மற்றும் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்களுக்கு உணவளிப்பதை உறுதி செய்வதால், தொழில் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். நுகர்வோர் மற்றும் தொழில்துறையை கருத்திற்க் கொண்டு விலையை 10% மாத்திரமே உயர்த்த தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடு!!

எரிபொருள்..

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்.

எனினும், பேருந்துகள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிப்பு!!

எரிபொருள் விலைகள்..

இன்று (24.05.2022) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும்,

ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும்,
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதையடுத்தே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கேற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

திருமணமான ஒரு ஆண்டில் தற்கொலை : கேரளாவை உலுக்கிய இளம்பெண் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கேரளாவை உலுக்கிய இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவர் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கொல்லத்தைச் சேர்ந்த 24 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண்ணிற்கும், கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.

அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. அதாவது, கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தார் வரதட்சணையாக கொடுத்த கார் அவருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.

மேலும் வரதட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய தங்கமும் சொன்னபடி கொடுக்கப்படாததால் அவர் விஸ்மயாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்த நிலையிலேயே உயிரை மாய்த்து கொண்டார். இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என கூறி உள்ளது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அவசர அறிவித்தல்!!

லிட்ரோ எரிவாயு..

பொதுமக்கள் எரிவாயுவுக்காக நாளைய தினம் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை (24) செவ்வாய்க்கிழமை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5, 5 மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது எனவும் இதனால், பொதுமக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 7500 மெற்றிக் தொன் எரிவாயுவுக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம் : உதவியை நாடும் பெற்றோர்!!

மாணவி மாயம்..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாத்தறை – வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம சுமங்கலா பாலிகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் ஜனிஷா இமய காவிந்தி என்ற 16 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி முதல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி காணாமல் போயுள்ளதாக வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் காணாமல் போன சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு இரண்டு பிள்ளைகள், மூத்த மகளுக்கு 16 வயது, இளைய மகனுக்கு மூன்றரை வயது. மகள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தாள். கடந்த 3ம் தேதி முதல் மகளை காணவில்லை.

அன்று நாங்கள் வெளியில் சென்றபோது எங்கள் மகள் வீட்டில் இல்லை. என் மகளைப் பற்றிய செய்தி கிடைக்காத இடமெல்லாம் தேடிப்பார்த்தேன். பின்னர் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தேன்.

எனது மகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மற்ற மாணவர்களைக் கண்டால் எனக்கு கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால் என் மகள் மிகவும் கடினமாக உழைத்தார். தேர்வில் தேர்ச்சி பெறுவாள் என்று நம்பியிருந்தோம். என்னால் இதனை கற்பனை செய்ய முடியவில்லை. எனது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வெலிகம பொலிஸாருக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

விபத்து..

யாழ்.சாவகச்சேரி பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்து ஏமாற்றப்பட்ட 200க்கு மேற்பட்ட மக்கள்!!

எரிவாயுக்காக..

வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 7 எரிவாயு விற்பனை முகவர்களுக்கு 400 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் குட்சைட் வீதி ஜே.வி.ஆர் விற்பனையகத்தில் 120 எரிவாயு சிலிண்டர்கள், வேப்பங்குளம் மோகன் நிலையத்தில் 70 எரிவாயு சிலிண்டர்கள், வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் 30 எரிவாயு சிலிண்டர்கள் , நெளுக்குளம் குமார் விற்பனையகத்தில் 70 எரிவாயு சிலிண்டர்கள்,

குருமன்காடு சுகந்தன் மற்றும் சரவனா ஆகிய விற்பனையகங்களில் 80 எரிவாயு சிலிண்டர்கள் , பட்டானிச்சூர் ஸ்டார் காட்வெயார் 30 எரிவாயு சிலிண்டர்கள் என 400 எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் பிரதேச செயலகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் காலை 5.30 மணி தொடக்கம் மக்கள் பதிவுகளை மேற்கொண்டு காத்திருந்தனர். எனினும் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க விற்பனையகத்தில் மக்களுக்கு 30 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் சமயத்தில் அவ்விடத்தில் முற்றுகையிட்ட மக்களினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன் எரிவாயு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். தமக்கும் எரிவாயுவை வழங்கிவிட்டு வாகனத்தை கொண்டு செல்லுமாறு அவர்கள் விடாப்பிடியாக நின்றதையடுத்து அப் பகுதியில் நின்ற நபர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் நிலையங்கள் முன்பாக காலை 5.30 மணி தொடக்கம் தங்களின் பதிவுகளை மேற்கொண்டிந்து வரிசையில் காத்திருந்த 200க்கு மேற்பட்டவர்கள் 10 மணிநேரத்தின் பின்னர் எரிவாயு இன்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.

தினசரி 400 எரிவாயு சிலிண்டர்கள் கிராம சேவையாளரின் சிபாரிசுடன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் வாகனத்தினை மறித்து காலை தொடக்கம் பதிவுகளை மேற்கொண்டு காத்திருந்த மக்களை ஏமாற்றும் வகையில் ஓர் சில மக்கள் செயற்பட்டமையினாலும் குறித்த நடவடிக்கை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனி ஒரு மாதங்களின் பின்னரே மாவட்டத்திற்கு எரிவாயு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலமை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் எரிவாயு நிறுவனத்தினர் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எரிவாயு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமையினால் பூனாவ பகுதியில் அமைந்துள்ள எரிவாயு களஞ்சியசாலைக்கு சென்றே எரிவாயுவினை பெற வேண்டிய நிர்ப்பந்த நிலமையும் மக்களுக்கு உருவாகியுள்ளது.

கொரோனாவை அடுத்து குரங்கம்மை : 14 நாடுகளில் பரவல்!!

குரங்கம்மை..

இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை நோய் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நோய் தற்போது 14 நாடுகளில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட நோய் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூரப் பகுதிகளில் இந்த நோய் பொதுவானது. இந்த குரங்கம்மை மக்களிடையே எளிதில் பரவுவதில்லை. அத்துடன் உயிர் ஆபத்தும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நோயின் திடீர் பரவல் வெடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் படி, இந்த நோய் தொற்றியவர்கள் சில வாரங்களில் குணமடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலக சுகாதார அமைப்பு, சம்பந்தப்பட்ட நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் – மேலும் தொற்றுநோய்கள் உறுதி செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளது. இந்த நோயை தடுக்க அமெரிக்க முயன்று வருகிறது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட பின்னர், ஐரோப்பா முழுவதும் பரவியது. ஸ்பெயின், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள பொது சுகாதார நிறுவனங்கள் இந்த நோயை உறுதிப்படுத்தியுள்ளன.

குரங்கம்மைக்கு குறிப்பிட்ட தடுப்பூசி எதுவும் இல்லை என்றாலும், பல நாடுகள் பெரியம்மை தடுப்பூசிகளை சேமித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளன.

இந்த இரண்டு நோய்களுக்குமான வைரஸ்கள் ஒரே மாதியாக இருப்பதால், தொற்றுநோயைத் தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவத்துறை தெரிவிக்கிறது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கைப் பெண்கள்!!

இலங்கை பெண்கள்..

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வசம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்கள் அந்நாட்டு சமஷ்டி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்கட்சியின் சார்பில் விக்டோரியா மாநிலம் மெல்பேர்னின் Higgins தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான மிச்சேல் ஆனந்தராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் 56.1 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

அதாவது 30 ஆயிரத்து 46 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். மிச்சேல் ஆனந்தராஜா தனது சிறுவயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அதேவேளை அவுஸ்திரேலியா சமஷ்டி பொதுத் தேர்தலில் விக்டோரிய மாநிலத்தில் வசிக்கும் மேலும் மூன்று இலங்கையர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தொழிற்கட்சியின் சார்பில் ஹொல்ட் தொகுதியில் போட்டியிட்ட கேசன்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார்.

இவர் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஞ்ச் பெரேராவை எதிர்த்து போட்டியிட்டார். 57.5 வீதம் என்ற அடிப்படையில், கேசன்ட்ரா பெர்னாண்டோ 40 ஆயிரத்து 187 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

லிபரல் கட்சியின் வேட்பாளரான ராஞ்ச் பெரேரா 29 ஆயிரத்து 723 வாக்குகளை மாத்திரமே பெற்றார். லிபரல் கட்சியின் வேட்பாளரான ராஞ்ச் பெரேரா 29 ஆயிரத்து 723 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
கேசன்ட்ராவும் தனது 11 வயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அதேவேளை விக்டோரியா மாநிலத்தில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கையரான விரோஷ் பெரேரா 17 ஆயிரத்து 385 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் கிளஸ் அன்ட்ரூ 33 ஆயிரத்து 604 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற சமஷ்டி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதுடன் அன்டனி ஹெல்பனிஸ் நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார். தொழிற்கட்சி ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை : இலங்கை வைத்தியரின் தகவல்!!

குரங்கம்மை..

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அடைந்துள்ளதன் காரணமாக அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தில், பல நாடுகளில் பரவி வரும் இந்த குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் பரிசோதனைக்கு தேவையான ரசாயனங்கள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த தொற்று பல நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.