உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை உயரும் போக்கை காட்டுகின்றது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,846 டொலராக பதிவாகியுள்ளது.
சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது தங்கத்தின் விலை உயர்வது ஒரு பொதுவான நிகழ்வாகும்.
இதேவேளை, இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 186,750 ரூபாவாக உள்ளது. அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,250 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 163,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வவுனியா, குட்செட் வீதியில் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றினை முற்றுகையிட்ட மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (22.05) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை மதவாச்சி பூனாவ பகுதிக்கு சென்று அங்குள்ள பிரதான முகவரிடம் பெற்று வந்த நிலையில் சில சமயங்களில் கறுப்பு சந்தையிலும் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியாவில் குடும்ப அட்டை முறையில் எரிவாயு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவட்ட செய்லகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவடுத்திருந்தனர்.
இதனூடாக அனைத்து மக்களுக்கு கிரமமாக மாதமொருமுறை எரிவாயு கிடைப்பதற்கான முறைமையும் குடும்ப அட்டை இல்லாது வவுனியாவில் வசிப்பவர்களுக்கு வேறு திட்டத்தினூடாக எரிவாயுவை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானித்திருந்தனர்.
இதன் பிரகாரம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (22.05) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி வவுனியா நகரம், குட்செட் வீதி, குருமன்காடு, மன்னார் வீதி, வேப்பங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 8 எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் வவுனியா குட்செட் வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு எரிவாயுவினை வழங்கிவிட்டு அப் பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு வாகனத்தில் இருந்து 30 எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டன.
குறித்த பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயுவைப் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்தனர். இதனையடுத்து தமக்கும் எரிவாயு வேண்டும் என தெரிவித்து எரிவாயு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
தமக்கும் எரிவாயுவை வழங்கிவிட்டு வாகனத்தை கொண்டு செல்லுமாறு அவர்கள் விடாப்பிடியாக நின்றதையடுத்து அப் பகுதியில் நின்ற 110 பேருக்கு எரிவாயு வழங்கப்பட்டதுடன், எஞ்சிய வர்த்தக நிலையங்களில் வழங்கப்பட்ட இருந்த எரிவாயுவையும் குறித்த அப்பகுதியில் வைத்து மக்களை வரவழைத்து வழங்கியிருந்தனர்.
அங்குள்ளவர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் முரண்படுவதனை கைவிட்டு வரிசையில் நின்று எரிவாயுவை பெற்றிருந்தனர்.
எனினும் பிரதேச செயலகத்தினூடாக திட்டமிடப்பட்ட முறைமையினை இனிவரும் காலங்களில் பின்பற்றாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வழமைபோன்று பூனாவைணில் சென்றே எரிவாயுவை பெறவேண்டும் எனவும் குறித்த இடத்தில் பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.
மல்லாவி ப்ரீமியர் லீக் போட்டித் தொடரானது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன், மல்லாவி மத்திய கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் மல்லாவியிலுள்ள 6 பிரதேசங்களை பிரதிநிதத்துவப்படுத்தும் வகையில்,
அணிகளுக்கு Thunukkai Royals, Mallavi Sapphire, Thirungar Bulls, Alankulam Kings, Iyankankulam Rising Stars, Barathi Raiders என பெயர்கள் வைக்கப்பட்டு . வீரர்கள் ஏல முறையில் தெரிவுசெய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 20ம் திகதியன்று ஆரம்ப நிகழ்வுகளுடன் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
இத்தொடரானது 15 ஓவர்களை கொண்ட 30 லீக் போட்டிகள் வைக்கப்பட்டு அதில் புள்ளிப் பட்டியலில் உள்ள முதல் 4 அணிகளையும் தெரிவுசெய்து 20 ஓவர்களை கொண்ட Qualifier-1 , Eliminator மற்றும் Qualifier-2 ஆகிய தெரிவுப்போட்டிகள் நடைபெற்று (IPL முறை) போட்டித் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ள நிலையில்,
Qualifier – 01 போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு Barathi Raiders அணி தெரிவாகி உள்ளதுடன் Eliminator, Qualifier -02 ஆகிய போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று Alankulam Kings அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரு லீக் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்ற நிலையில்
வரும் மே- 22 ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற காத்துள்ளது.
அமரர் திரு.மு.பொன்னையா அவர்களின் நினைவாக வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு. க.குவேந்திரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு அவர்களது நிதி உதவியுடன் வவுனியா கற்பகபுரம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் கற்பகபுரம், பாரதிபுரம் பகுதிகளை சேர்ந்த 40 மாணவர்களுக்கு ஒருவருக்கு 1000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டு மரம் நடுகையை ஊக்குவிக்கும் பொருட்டு கற்பகபுரம் கிராமத்தில் 100 தேக்கங்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் தரம் 04 ல் கல்வி பயிலும் சிறுவன் வயிற்றில் ஏற்பட்ட வலியால் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று(21.05) இடம்பெற்றுள்ளது.
குறித்த வயிற்று வலியால் துடித்த சிறுவனை அவரது பாட்டி மருத்துவமனை கொண்டு செல்ல முற்பட்ட வேளையில், எரிபொருள் இன்மையால் முச்சக்கர வண்டி ஏதும் கிடைக்காததால் பல மணி நேரத்திற்கு பிறகு 1990 ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸில் உள்ள தாதியர் ஒருவர் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுவன் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுவன் இறந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவனின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை சிறையில் உள்ளதாகவும், தாய் தோட்டத்தில் வேலை குறைவால் கொழும்பில் பணிபுரிந்து வருவதாக சிறுவனின் பாட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாளைய தினம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும், நீர் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்து திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (21.05) இரவு 8.45 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்டத்தில் மூன்று எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்பட்டிருந்த போதிலும் 4ம் கட்டை மற்றும் இறம்பைக்குளம் ஆகிய எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிறைவடைந்துள்ளதுடன்,
ஒமந்தை ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது அங்கு இரவு 8.30 மணியளவில் பின்னர் எரிபொருள் வழங்க முடியாது என தெரிவித்து எரிபொருள் விநியோகத்தினை இடைநிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஏ9 வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஓமந்தை பொலிஸார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும்,
எரிபொருள் வழங்கும் வரை வீதினை விட்டு செல்வதில்லை என தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.
ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பொலிஸ் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெற்றோலை பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
வவுனியா 4ம் கட்டை எரிபொருள் நிலையத்திற்கு இன்று (21.05.2022) அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே 2 கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
மோட்டார் சைக்கில் 1000ரூபா, முச்சக்கரவண்டி 2000ரூபா , கார் மற்றும் வான் வாகனங்கள் 5000 ரூபா என்ற அடிப்படையிலேயே பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – மாங்குளம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம : மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று அதிகாலை 12:45 மணியளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சொகுசு வானில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி : கிளிநொச்சி – புளியம்பொக்கனைப்பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கோட்டா கோ கம போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னியில் இருந்து செல்லும் துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (20.05.2022) மாலை வவுனியாவை வந்து அடைந்தது.
காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்பவர் விஸ்வமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (20.05) மாலை வவுனியாவை அடைந்தது. வவுனியாவை அடைந்த அவர், காலை அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டி பயணத்தை குறித்த இளைஞர் ஆரம்பிக்கவுள்ளார்.
கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் கருதியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கக் கோரியும் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியாது அரச உத்தியோகத்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பலரும் கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைக்களை கருத்தில் கொண்டு அரச உத்தியோகத்தர்களுக்கான கடமைக்கான அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா, மாவட்ட செயலகம் அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (20.05) காலை முதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
கடமைக்கு சென்ற கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்வதற்காக தமது மோட்டர் சைக்கில்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தனர்.
இதன்போது அரச உத்தியோகர்தர்களுக்கு என ஒரு வரிசையும், ஏனையவர்களுக்கு மோட்டர் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்கள் என இரு வரிசையும் சென்றன.
மதியத்திற்கு பின்னர் பொது மக்களுக்கான வரிசையில் நீண்ட நேரமாக வரிசையில் நின்றோருக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அவர்களுக்கு தனியான வரிசை வழங்க முடியாது என தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
இதனால் அரச உத்தியோகத்தர்கள் பலர் பொற்றோல் இன்றி அவர்களுக்கான வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு நின்றவர்களின் செயற்பட்டால் பெண் அரச உத்தியோகத்தர்கள் பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு என ஒரு ஏற்பாட்டை செய்து தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் அத்தியாவசிய தேவைக்கு என குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படுகின்ற போதும் அங்கு கடமைக்கு செல்லும் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை காலப்பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் மாலை 6 மணியின் பின் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பிரிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.
எந்தவொரு சத்தமும் கேட்காத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்ட வில்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், ஷெரின் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷெரின் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிந்தது. மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டிருந்ததையும் போலிஸார் கண்டறிந்தனர்.
மேலும் நண்பர்களிடத்தில் நடத்திய விசாரணையில், ஷெரின் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் இருவரை தீவிரமாக காதலித்ததாகவும், திருங்கை என்பதால் அவரது காதலை முறித்துக்கொண்டு இளைஞர் பிரிந்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்தவாரம் கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா என்ற இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.