கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!!

விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை..

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது.

153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்கியது. இதன்போது விமானி இருக்கும் பகுதி நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.

சரியாக விமானியின் கண்களுக்கு அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு விமானிகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்டு உள்ளது. எனினும் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் விமானிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கவனமாக விமானத்தை தரையிறக்கி உள்ளனர். விமானம் இதனால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் மூலம் கண்ட்ரோல் ரூம் அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி பழவந்தாங்கல் ஏரியாவில் இருந்து இந்த லேசர் ஒளி வந்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் இருந்து இந்த ஒளி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்ற நிலையில், இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை மறித்து மக்கள் போராட்டம்!!

வீதியினை மறித்து மக்கள் போராட்டம்..

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை மறித்து இன்று (20.05.2022) காலை 9.45 மணியளவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பாதையூடான போக்குவரத்து 15 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக எரிவாயு இல்லாமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (20.05.2022) காலை தொடக்கம் மாவட்டத்தில் இரு இடங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக நிலையத்திலும் அதிகாலை தொடக்கம் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள குறித்த எரிவாயு விநியோக நிலையத்தில் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டது என தெரிவித்த நிலையில் கோபமுற்ற மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வருகைதந்த பொலிஸார் வீதியிலிருந்த எரிவாயு சிலிண்டர்களை அகற்றியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அப்புறப்படுத்தினர். இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே வாக்குவாதமும் இடம்பெற்றிருந்தது.

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து 15 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் குறித்த நிலையத்தில் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டது எனவும் மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் தெரிவித்தமையினையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

வவுனியாவில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!

நீண்ட வரிசை..

வவுனியாவில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் பெற்றோல் விநியோகம் கடந்த சில தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மோட்டர் சைக்கிள், முச்சக்கரவண்டி, கார் என தமது வாகனங்களுக்கு பெற்றோல் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (20.05) காலை முதல் வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகங்களுடன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதேவேளை, வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு தரப்பினர், அத்தியாவசிய தேவைக்குரிய அரச உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு தேவையான ஆளணியினர் என,

அத்தியாவசிய தேவைகளுக்காக அரச உயர்மட்ட தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல் களஞ்சியப்படுத்தபட்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இருவார கால அவகாசம் : இலங்கையர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!!

இருவார கால அவகாசம்..

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு மத்திய வங்கிய முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும், மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக் கணக்கில் வைப்புச் செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும்.

எனினும் மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படும்.

இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும். அது அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகையை விடவும் அதிகமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான மீள் அறிவிப்பு!!

பாடசாலை விடுமுறை..

அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.

வவுனியாவில் எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் : பாதுகாப்புப் பிரிவினர் வரவழைப்பு!!

எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை இன்று (19.05.2022) காலை 10.30 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதட்டடமான சூழ்நிலை நிலவியதுடன் பாதுகாப்பு பிரிவினரும் வரழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன நிறைவடைந்தாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் குறித்த எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் எரிபொருள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வைத்திருந்த பெற்றோலில் 20 லீற்றர் பெற்றோல் பீப்பாயில் நிறைக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டது. இதனை அவதானித்த பொதுமக்கள் தமக்கும் எரிபொருள் வழங்குமாறு தெரிவித்தனர்.

எனினும் அத்தியாவசிய தேவைக்காக சேமிப்பிலுள்ள எரிபொருளை வழங்க முடியாது என எரிபொருள் நிலைய ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன் போது எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்திற்கு வருகைத்தந்து பொதுமக்களிடம் கலந்துரையாடி தனியாருக்கு வழங்கிய 20லீற்றர் பெற்றோலை கையகப்படுத்தியதுடன் அதனை எரிபொருள் சேமிப்பு தாங்கியினுள் மீளச்செலுத்தினர்.

அதன் பின்னர் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மக்களை அவ்விடத்திலிருந்து பொலிஸார் அகற்றினர். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சேமிப்பில் இருக்கும் எரிபொருளை தனியாருக்கு வழங்க வேண்டாம் என எரிபொருள் நிலையத்தினருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிலையத்தில் 15 இராணுவத்தினர். 10 பொலிஸார் 2 விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது!!

இளைஞன் கைது..

வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் பஜார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்டிருந்தது திருடிச்செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் தொடர்பாாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஒரு இளைஞனை கைது செய்துள்ளதுடன் திருடிச்சென்ற மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் பஜார் வீதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க (37348), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான , தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது நொச்சியாகம பகுதியில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டுடன் தொடர்புபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார் . மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நாளை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளத்தில் அதிரடியாக கைது!!

அதிரடியாக கைது..

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் நேற்று (18.05) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர்,

வவுனியாவில் இருந்து பேரூந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம், புத்தளம், கருவெலச்செவ பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரார்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும்,

அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரரைணகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பூசையும் நெய்தீபம் ஏற்றுதலும்!!

ஆத்மசாந்திப் பிரார்த்தனை..

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று (18.05) காலை இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து இதனை ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். இதன்போது விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.

குறித்த நிகழ்வில் உறவுகளை இழந்தவர்கள், அந்தணர் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்தித்தனர்.

தென்னிலங்கையில் சிக்கிய அபூர்வ விலங்கு : அச்சத்தில் மக்கள்!!

அபூர்வ விலங்கு..

மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாத்தறை மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று மாலை வரை எவரும் விலங்கை ஏற்றிச் செல்ல வரவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளை பாதுகாப்பாக வளர்க்க ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருக்கிறார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (57), ஆணாதிக்கச் சமூகத்தில் தனது மகளை பாதுகாப்பாக வளர்க்கவே இந்த வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

பேச்சியம்மாளுக்கு 20 வயதில் திருமணம் ஆனது, அனால் அடுத்த 15 நாட்களில் அவரது கணவர் சிவா இறந்துவிட்டார்.

அடுத்த சில மாதங்களுக்கு அவரது வாழ்க்கை மிகவு கடினமாக இருந்துள்ளது. ஏனெனில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் அவர் தனது மக்கள் சண்முகசுந்தரியைப் பெற்றெடுத்தார்.

பேச்சியம்மாளுக்கு தனியாக ஒரு குழந்தையை வளர்க்க மிகவும் கடினமாக இருந்தது, அவர் தனது மகளுக்காக கட்டுமான தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வேலை செய்தார். மேலும், இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்தார்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த பணியிடங்கள் அனைத்திலும் அவள் துன்புறுத்தலுக்கு ஆளானாள். ஒரு நாள், பல மாதங்கள் பாலியல் அவதூறுகளையும், கஷ்டங்களையும் சந்தித்த பிறகு, பேச்சியம்மாள் ஆணாக மாற முடிவு செய்தார்.

சட்டை, லுங்கி என தன் உடையை மாற்றி முத்து என்று பெயர் சூட்டிக்கொண்டாள். அதிலிருந்து 36 வருடங்கள் ஆண் வேடமிட்டு வாழ்ந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுநாயக்கன்பட்டியில் தனது மக்களுடன் குடியேறினார். வீட்டில் இருக்கும் எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் மகளுக்கு மட்டுமே அவர் ஒரு பெண் என்று தெரியும்.

மக்கள் சண்முகசுந்தரிக்கு இப்போது திருமணமாகி குடும்பம் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கிறது. ஆனால் பேச்சியம்மாள் தன் உடையையோ அடையாளத்தையோ மாற்றிக்கொள்ள இன்னும் தயாராகவில்லை.

அடையாள மாற்றம் தனது மகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ததாகவும், அவள் என்றென்றும் ‘முத்து’வாகவே இருக்க முடிவெடுத்து வாழ்ந்து வருகிறார்.

பேச்சியம்மாள் சமீபத்தில் ஒரு பெண் அடையாளத்தில் MGNREGS வேலை அட்டையைப் பெற்றார். ஆனால் அவருடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின்படி, அவர் இன்னும் ஆணாகவே இருக்கிறார்.

25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பல்லவி டே..

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு வங்கத்தில் ‘Mon Mane Na’ என்ற தொடரில் நடித்து வந்தவர் பல்லவி டே(25). இவர் சில டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பல்லவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லவியின் உடலில் காயங்கள் குறித்த அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ‘Mon Mane Na’ தொடரில் நடிக்கும் பல்லவியின் சக நடிகரான அனமித்ரா படாபயல், இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தார். அவர் கூறுகையில், ‘நான் முழு அதிர்ச்சியில் இருக்கிறேன்.

நாங்கள் மே 12 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக படமெடுத்தோம், பின்னர் அவளுடன் அரட்டையடித்தோம். இந்தச் செய்தியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்த பல்லவி டேயின் திடீர் இறப்பு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரம் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே வரலாறு காணாத அளவு உயர்வடைந்த கோதுமையின் விலை!!

கோதுமையின் விலை..

உலக சந்தையில் வரலாறு காணாத அளவு கோதுமையின் விலை உயர்வடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் இவ்வாறு கோதுமையின் விலை உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி தேக்கமடைந்திருப்பதும், ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட தேக்க நிலையும் மற்றொரு காரணம். இதனால் உலக சந்தையில் ஒரு டன் கோதுமையின் விலை 435 யூரோக்கள் அதாவது 453 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

தடைக்கு முன்னதாக, இந்த ஆண்டு 10 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை உலக கோதுமை விலை சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

எரிவாயு தட்டுபாட்டிற்கு தீர்வு : லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

எரிவாயு தட்டுபாட்டிற்கு தீர்வு..

எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதுடன், இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிக இக்கட்டான நிலைக்கு முகம் கொடுக்கப் போகின்றோம் : பல தகவல்களை வெளியிட்ட பிரதமர் ரணில்!!

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமரானதும் நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இன்று பிரதமர் உரையாற்றியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

அதில், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்.

நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள் ஆகும். எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும்.

வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் . அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3,200 பில்லியன் ரூபாயாகும் . நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1,950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம்.

அதன்படி அண்ணளவான மிகுதி 1,250 மில்லியன் ரூபாய்கள். நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3,000 பில்லியனில் இருந்து 4,000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன. ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது. இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன.

எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 ஆகிய தினங்களில் இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன.

இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம் .

அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும்.

மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன.

நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய கப்பலை கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்பொருட்டு இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது. அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு இடையில் , மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை.

அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும். அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை.

அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.

இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும்.

ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன். அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் . 2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளது .

2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்கப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.

அரசாங்கம் தற்போது 92 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55 சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது .

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதேப்போல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு செய்கிறது .

அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது. அதுவும் மோசமான சிக்கலாகும். நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது.

எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.

குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய கால – மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும்.

மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன். எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.

அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும் என தெரிவித்துள்ளார்.