9 வயதுச் சிறுமி விவகாரம் : விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்!!

அட்டுலுகம பிரதேசத்தில்..

நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி காணாமல் போனதையடுத்து அந்த பிரதேசம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​28 வயதுடைய அந்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திறகு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என என சந்தேகிக்கும் பொலிஸார், இன்று (30) நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன் என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று அட்டலுகமவுக்குச் சென்று குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பண்டாரகம பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் இந்த குற்றத்தின் மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொணர முடிந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 வயதுச் சிறுமி படுகொலை : சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்!!

அட்டுலுகம பிரதேசத்தில்..

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கீரை தோட்டத்தை அண்டிய காணியில் சதுப்பு நிலம் ஒன்றிலேயே, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் பிரேதப் பரிசோதனை நேற்று பாணந்துரை வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து பொலிஸ் குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய, அப்பகுதியில் சிசிடிவி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம் காணாமல் போன விவகாரம்
பண்டாரகம, அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

சிறுமியின் சடலம் மறுநாள் பிற்பகல் வீட்டிற்கு சற்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

வவுனியா நகரில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

முச்சக்கரவண்டி..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று (30.05.2022) காலை 10.30 மணியளவில் திடீரென தீப்பற்றி ஏரிந்துள்ளது.

குறித்த இடத்தில் முச்சக்கரவண்டியினை சாரதி நிறுத்தி விட்டு அருகே சக நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன் போது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் தீப்பற்றி எரிவதனை அவதானித்த வீதியின் சென்ற நபர் ஒருவர் சாரதிக்கு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் சாரதி பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் முச்சக்கரவண்டியின் பின்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த தீ விபத்து முச்சக்கரவண்டியின் எரிபொருள் சேமிப்பு தாங்கியிலிருந்து பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

வவுனியா இராமனூர் பகுதியில் படையெடுத்த யானைக் கூட்டங்கள்!!

யானைக் கூட்டங்கள்..

வவுனியா- இராமனூர் பகுதியில் யானைக் கூட்டங்கள் படையெடுத்து வந்தமையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் உள்ள மக்கள் குடிமனைகளை அண்டியதாக வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் அருகில் உள்ள சிறிய காடுகளின் ஊடாக 15 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வருகை தந்து வயல் வெளிகளில் இன்று (29.05) மாலை நடமாடித் திரிந்தன.

இதனால், அருகில் உள்ள குடிமனைகளுக்குள்ளும், அருகில் மேற்கொண்ட சிறுபோக நெற் செய்கை வயல்களுக்குள்ளும் யானைகள் வந்து விடுமா என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் இருந்துள்ளனர்.

எனினும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக வயல் பகுதியில் நடமாடிய யானைக் கூட்டம் பின்னர் காட்டை நோக்கி திரும்பிச் சென்றுள்ளது. இவ்வாறு யானைக் கூட்டம் அவ்வப்போது வந்து செல்வதால் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவிக்கும் அப் பகுதி மக்கள் தமது பகுதிக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.

வவுனியாவில் பஜார் வீதியில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

பஜார் வீதியில்..

வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27.05.2022) இரவு 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அம்மா இறந்ததை மறைத்து மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை நபர் ஒருவர், பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

தென்காசியின் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துமாரி ஆடுமேய்க்க சென்றபோது, கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைத் தொடர்ந்து, தனது மகள்கள் வானீஸ்வரி மற்றும் கலாராணி ஆகியோரிடம் தாய் முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரியசாமி கூறியுள்ளார். தங்கள் தாய் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வானீஸ்வரி – கலாராணி இருவரும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்றனர்.

ஆனால் அவர்கள் தேர்வு முடிந்து வீடு திரும்பியபோது, தாய் இறந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மாணவிகள் கதறி அழுதனர். அதன் பின்னர் தேர்வெழுத வேண்டும் என்பதற்காக தங்கள் தந்தை அவ்வாறு கூறி அனுப்பி வைத்ததை மாணவிகள் அறிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை கலங்க வைத்தது.

எரிபொருள் வரிசையில் பெண்ணிடம் கைவரிசையை காட்டிய நபர்கள் : இலட்சக்கணக்கில் இழப்பு!!

எரிபொருள் வரிசையில்..

எரிபொருள் வரிசையில் காத்திருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளது. தம்புள்ளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த தங்க நகையின் பெறுமதி சுமார் 500,000 ரூபா என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய 21 வயது பெண் கைது!!

பெண் கைது..

வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27.05) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த முதிய பெண் வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த முதிய பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி முதிய பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் முதிய பெண்ணின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் முதிய பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மயக்கம் தெளிந்து குறித்த முதிய பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட நகையில் 4 அரைப் பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கறுப்பு சந்தையில் சமையல் எரிவாயு 15 ஆயிரத்திற்கு விற்பனை!!

சமையல் எரிவாயு..

வவுனியாவில் சமையல் எரிவாயு கறுப்பு சந்தைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு என அனுப்பப்படுகின்ற சமையல் எரிவாயுவை (காஸ்) பதுக்கும் சில விற்பனை முகவர்கள்,

அதனை வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் துணையுடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். 12.5 கிலோ சமையல் எரிவாயுவே இவ்வாறு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்கள் பலரும் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதுடன், இது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் கூட கவனம் செலுத்தவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா இலுப்பையடியிலும் குடியமர்ந்த புத்தர்!!

புத்தர்..

வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகவுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வர்த்தக நிலையங்களும் அதிகமாகவுள்ளன.

இப் பகுதியில் மரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு பல வருடங்களாக அப் பகுதி வர்த்தகர்களும், வீதியால் செல்வோரும் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலுப்பபையடிப் பகுதியில் அமைந்துள்ள வன்னி பௌத்த இளைஞர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் செல்வோர் தரிசிக்கும் வகையில் புதிதாக பீடம் நிறுவப்பட்டு புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு, மின் ஒளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலை உள்ள பகுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் தொல்பெருள் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் வீதியில் செல்வோர் காணக்கூடியதாக ஏற்கனவே புத்தர் சிலை உள்ள நிலையில் தற்போது புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, மன்னார் வீதியில் தமிழ் மக்களது குடிமனை உள்ள பகுதியில் இயங்கி வரும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரித்தோதுதல் இடம்பெற்றிருந்தது.

மேலும், இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பாக உள்ள பிள்ளையார் ஆலயத்தில் காணப்பட்ட பிள்ளையார் சிலை ஜனவரி 23 ஆம் திகதி காணமல் போயிருந்த நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டு மக்களாலும், வர்த்தகர்களாலும் வழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு சின்னடம்பனில் மாணவர் திறன் வகுப்பறை திறப்பு விழா!!

சின்னடம்பனில்..

வவுனியா வடக்கு சின்னடம்பனில் சுமார் 150 மாணவர்களுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுடன் இயங்கும் வ.சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் சி.ஜெயபாலசிங்கம் தலைமையில் மாணவர் திறன்வகுப்பறை திறப்புவிழா சிறப்புற நடைபெற்றது.

இந்த விழாவில் ஒய்வு நிலை அதிபர் செ.செந்தில்நாதன் பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக து.ரவிச்சந்திரன் (பாடசாலை வசதிப்படுத்துனர்), அங்கணி தனபாலசிங்கம் ( கிராம அலுவலர் சின்னடம்பன் ), எஸ்.தணிகாசலம் ( ஓய்வு நிலை கிராம அலுவலர்) ஆகியோரும், அயற்பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 200 பேர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர் தனது தலைமையுரையில் பாடசாலையின் ஆளணி, பௌதீக வளம், பாடசாலைச் சுட்டிகள் என்பவற்றை எடுத்துக்காட்டி மாணவர்கள் கிடைக்கப்பெற்ற நவீன கற்றல் – கற்பித்தல் உபகரணத் தொகுதிகளைப் பயன்படுத்தி கல்வி நிலையை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நன்கொடையாளர் கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் காணொளியூடாக ஆற்றிய உரையில் இப்பாடசாலை பிரதேசத்திற்கு ஆற்ற வேண்டிய பங்கு பற்றியும், கிராம சிறார்களின் கல்வியிலே முன்னேற்றத்தை கொண்டு வருவதன் ஊடாக சமூகம், கிராமம், பிரதேசம், மாவட்டம், நாடு என்பவற்றை முன்னேற்ற முடியும் என்றும் இது தான் இன்றைய நிலையில் தேவை எனவும் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினர் தனது உரையில் இப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கல்வியில் உயர்ந்த நிலையில் உலகத்தில் தலைசிறந்த நாடுகளில் உயர் பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி,

இப்பிரதேசத்தில் பிறந்து நகரத்தில் வசிப்பவர்கள் தங்களது பிறந்த இடத்தின் பெயரை சொல்ல வெட்கப்படும் காலத்தில் உலக அரங்கில் தங்களது பிறந்த கிராமத்தின் பெயரை உரக்கக்கூவி அந்த கிராமங்களை முன்னேற்ற துடிக்கும் கல்வியிலாளர்களை உதாரணம் காட்டி இவர்களின் சாதனைகளை விஞ்சிய சாதனைகளை ஒவ்வொரு மாணவர்களும் நிகழ்த்திக்காட்டி வாழ்க்கையில் அன்பால் நிறைந்த, பிறருக்கு உதவிசெய்து இன்புறும் நற்பிரஜைகளாக திகழ வேண்டும் எனவும் அதற்காக கடினமாக முயற்சி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

மிகச் சிறந்த முறையில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு தனது நோக்கத்தை நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

அரச ஊழியர்களின் சம்பளம்..

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அத்துடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் : மாணவனை காப்பாற்றிய நாய்!!

மாணவனை காப்பாற்றிய நாய்..

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர். அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

நேற்று காலை அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையை பாடசாலை மாணவர் கடக்க முயன்ற போது பொல்கஹவெலவில் இருந்து வந்த ரயில் குறுக்கு வீதியை அண்மித்துள்ளது.

இதன் போது மாணவன் ரயிலில் மோதப்போகிறார் என அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்ட போதிலும் ரயில் சத்தம் காரணமாக அவருக்கு கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த தெரு நாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடிவந்து மாணவன் மீது பாய்ந்துள்ளது. இதன் போது நிலைமையை உணர்ந்த மாணவன் ரயில் கடவையை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

ஒரு நொடி தாமதமாகியிருந்தால் இளைஞனும் நாயும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருப்பார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் குறித்த மாணவனுக்கு எரிபொருள் பிரச்சினையால் வாகனம் ஒன்று கிடைக்காமையினால் ரயில் வீதியில் பயணித்து பரீட்சை மண்டபத்தை சென்றடைய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும் : லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!

எரிவாயு விநியோகம்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மேலும் இரண்டொரு நாட்கள் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி வந்த கப்பல்,

தற்போதைக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அதன் பின்னர் கப்பல் கொழும்பு வந்த பின்னரே எரிவாயு இறக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

எனவே இன்னும் குறைந்தது மூன்று நாட்களின் பின்னரே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு : ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்கள்..

அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊழியர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் விலங்கொன்றின் தலை!!

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுப் பொதியில் எலியின் தலைப் போன்ற ஒரு விலங்கொன்றின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று காலை கொழும்பு – கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனிக்கு கோட்டை பொலிஸார் கொடுத்த அறிவுறுத்தலின் பிரகாரம், பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று உணவகத்திற்கு விஜயம் செய்துள்ளது.

குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த விலங்கு எலி அல்ல முயல் என்று கூறியதாக மருத்துவர் தெரிவித்தார்.

கோழி சாப்பாட்டு பொதியை அனுப்புமாறு தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும், தங்களது உணவகத்தில் கோழி மற்றும் இறைச்சி ஆகிய இரண்டும் விற்கப்படுவதாகவும், தவறுதலாக இறைச்சியுடன் கூடிய சோற்றுப் பொதி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு அனுப்பி உணவு மாதிரியின் அறிக்கை கிடைத்த பின்னர் குறித்த விலங்கு எதுவென அடையாளம் கண்டறியப்படும் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.