இன்று முதல் மீண்டும் இரவு நேர மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் மின்சார சேமிப்பை கருத்திற் கொண்டு இன்று தொடக்கம் மூன்றாம் திகதி வரை (2-3) இரண்டு மணி நேர மின்வெட்டும், நான்காம் திகதி ஒரு மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐந்தாம் திகதி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் திகதிக்குப் பின்னர் புதிய மின்வெட்டு நேரங்கள் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினம் வவுனியா ஊடக அமையத்தில் இன்று (31.05) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
ஊடக அமையத்தின் தலைவர் பரமேஸ்வரன் கார்த்திபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகி ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவ படத்திற்கு ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து மெழுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கொழும்பு, தெமட்டகொட புகையிரத பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொட புகையிரத பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கொழும்பு, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல்போயுள்ள நிலையில், தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுப்பகுதியில் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள யானைகள் சண்டையிடுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சண்டையிட்டு கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் அதிகாரத்தை பெறுவதற்காகவே சண்டையிட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இரண்டு யானைகளும் சுமார் இரண்டு நாட்களாக இந்த பகுதியில் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தை பார்வையிட அதிகளவான மக்கள் அப்பகுதியில் குவிந்திருந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த இரண்டரை வயது சிறுமியொருவர் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்-மினன் வீதியில் வசிக்கும் ஸர்ஜுன் அக்மல் மற்றும் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி இந்த சாதனையை செய்துள்ளார்.
தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்தமை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உலக சாதனை புத்தக நிறுவனமானது, இந்த சிறுமியின் திறமையையும் அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் அவருடைய பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தனது பெயரை பதிவு செய்துள்ளது.
இவருக்கான இலட்சினை, பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனது இரண்டு வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மின்ஹத் லமி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். தாய் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தில் கல்வி கற்று வருகின்றார்.
மின்ஹத் லமியின் தந்தை தனது குழந்தையின் சாதனை பற்றி கருத்து தெரிவிக்கும் போது, “பிறந்த குழந்தைகளின் கைகளில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக ஸ்மார்ட் போன்களை திணித்து மகிழும் பெற்றோருக்கு மத்தியில் நான் எனது குழந்தைக்கு,
நிறங்கள், பழங்கள், இலக்கங்கள், வடிவங்கள், எழுத்துக்கள் மற்றும் பொது அறிவு தகவல்களையும், அது தொடர்பான எளிய செயல்முறைகளையும் கற்றுக் கொடுத்ததுடன் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டு இன்று எனது குழந்தையை ஒரு சாதனை குழந்தையாக மாற்றியுள்ளேன்” என்றார்.
மின்ஹத் லமி தனது பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை கவனமாகச் செவிமடுத்து மனனம் செய்வதுடன், ஞாபகத்திலும் வைத்து கொள்வார்.
இவர் ஏதாவது ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ அவதானித்தவுடன் அது பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டக் கூடியவர். அதனை அறிந்து கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அப்பொருள் பற்றியோ அவ்விடயம் பற்றியோ தானாகவே சொல்லக் கூடிய திறமை அவரிடம் உண்டு.
மேலும், 300 இற்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை தெளிவாக சொல்லக் கூடிய திறமையுள்ளவர். தமிழ் அகரவரிசையிலுள்ள 247 எழுத்துகளையும் மிக வேகமாக சொல்லக் கூடியவர்.
அத்துடன் மாதங்கள், வாரங்கள், நிறங்கள், பழங்கள், வடிவங்கள், உடல் உறுப்புகளின் பகுதிகள், பறவைகள், இலக்கங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதற்கான சொற்களையும் ஒழுங்குவரிசையாகவும், வரிசை இல்லாமலும் மிக வேகமாக சொல்ல கூடிய திறமை இவரிடம் உண்டு.
இவை தவிர பொதுஅறிவு உள்ளிட்ட விடயங்கள், 100 இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்களை சொல்லக் கூடியவர். தற்போது அல்குர்ஆனின் பல சூறாக்களையும் மனனம் செய்து வருகிறார்.
இந்த சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளை பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (30.05) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே எனப்படும் 30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரியவந்துள்ளது.
மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், கொமாண்டோ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
உணவகத்தில் சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக விராஜ் உணவக ஊழியர்கள் மற்றும் குழுவிற்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த விராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது. கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி வருகிறேன் என கூறி 250 ரூபாய் பணத்தையும் ஆயிஷா பெற்றுக் கொண்டார்.
அருகிலுள்ள கடைக்கு சென்று வருமாறு கூறினேன். அங்கு 3 முறை சென்று வந்தார். எனினும் அங்கு கோழி இறைச்சி இல்லாமையினால் சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு முன்னரும் அந்தக் கடைக்கு தனியாக சென்று வருவார். மிகவும் தைரியமானவர். கடைக்கு சென்றவர் காலை 11 மணி வரை வீட்டுக்கு வராமையினால் குடும்பத்தினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினேன். இது தொடர்பில் கணவருக்கும் கூறினேன். அவருமே தேடி பார்த்தார் கண்டுபிடிக்கவில்லை.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தேடிய பின்னர் பொலிஸாரிடம் கூறினோம். அதன் பின்னர் மேற்கொண்ட தேடலின் போது மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மகள் மூன்றாவது பிள்ளை. அவர் தனது கடைசி சகோதரி மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார். அடுத்த வருடம் மகள் 6ஆம் வகுப்பிற்கு செல்வதற்காக புத்தகங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார். அவரே அனைத்தையும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். இனி அவர் ஒரு போதும் மீண்டும் வர மாட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்திற்கு தனது போதை பொருள் பழக்கமே காரணமாகிவிட்டதென சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார். எனது மகளை நான் உரிய முறையில் பார்த்துக் கொள்ளாமையினாலேயே எனது மகளை இழந்து விட்டேன். போதை பொருளுக்கு அடிமையாகி விட்டேன். அதுவே இந்த நிலைமைக்கு காரணமாகிவிட்டது.
இனி இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதும் போதை பொருள் இல்லாமல் போய்விட வேண்டும். அது அனைத்தையும் அழித்துவிட்டது. எனது மகளுக்கு நடந்தது இனி வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது என தந்தை அக்ரம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெற்றோரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அப்பாவி சிறுமியின் உயிர் பறிபோயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு நீதி கோரி வவுனியாவில் பெண்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (31.05) இடம்பெற்றது.
அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான சிறுமிவின் மரணத்துக்கு நீதிகோரி பல்வேறு சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்த நாங்கள் இலங்கையில் வன்முறைக்கும் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி இங்கு கூடியிருக்கிறோம்.
அண்மையில் இலங்கை அட்டுலுகமவை சார்ந்த 09 வயது சிறுமி மனிதத்தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவமானது அனைத்து மக்களையும், முழு நாட்டையும் சிறுமிகளையும் பெண்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
இவ்வாறான வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுவது, பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும். இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலைச் சம்பவம் கண் ஊடாக காட்டி நிற்கின்றது.
இலங்கையில் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது. இதனால் குற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. குற்றவாளிகளும் தப்பித்துக் கொண்டே இருகின்றனர்.
சிறுமிகள் வன்கொடுமைகளுக்கும் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகுவது குற்றவாளிகளை வலுப்படுத்துவதாகவே அமையும். அத்துடன் குற்றம் நிறைந்த ஒரு சமூகத்தினை மேலும் வலுவுள்ளதாக்கும்.
எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கோருகின்றோம். மேலும் 09 வயது சிறுமியின் கொடூரமான கொலையின் உண்மைத் தன்மை வெளிக் கொணரப்பட வேண்டும். இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதி மன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன.
அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக குற்றம் நடந்து 03 மாத காலத்திற்குள் தீர்வு வழங்கும் வகையில் நீதி மன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும். சிறுமிகளுக்கான விசேட நீதி மன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வர வேண்டும் எனக் கோருகின்றோம்.
09 வயதான சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன், குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.
களுத்துறை அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது. ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து அட்டுலுகம கிராமம் மட்டுமன்றி பல இடங்களில் இருந்து வருகை தந்த மக்களின் கண்ணீருடன் சிறுமி ஆயிஷாவின் இறுதிப் பயணம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாடடம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
உறவினர்களால் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது கிணற்றிலிருந்து 50மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,
மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.
அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்தனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தமையுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும்,
அதனால் அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், தமக்கு பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர்களின் கொடுமை தாங்க முடியாமல், கர்ப்பிணிகள் உட்பட 3 சகோதரிகள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா(23), கம்லேஷ்(20). இவர்கள் மூவரும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆன நாள் முதல் இவர்களது மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சகோதரிகள் மூவரும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் நான்கு நாட்களுக்கு பிறகு, நேற்றைய தினம் டுடு கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சகோரிகளில் இருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளனர். மேலும் அவர்களுடன் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களின் கணவர்கள் மற்றும் மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சகோதரிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர்களில் இளையவரான கம்லேஷ் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அதில், ‘நாங்கள் இப்போது செல்கிறோம், மகிழ்ச்சியாக இருங்கள். எங்கள் மரணத்திற்கு காரணம் எங்கள் மாமியார். தினமும் இறப்பதை விட ஒருமுறை சாவதே மேல்.
அதனால் ஒன்றாக இறப்பது என்று முடிவு செய்தோம். அடுத்த பிறவியில் மூவரும் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம். நாங்கள் சாக விரும்பவில்லை, ஆனால் மாமியார் எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்கள் இறப்புக்கு எங்கள் பெற்றோரைக் குறை கூறாதீர்கள்’ என பதிவிட்டிருந்தார்.
தற்கொலை செய்துகொண்டவர்களின் உறவினர் ஹேம்ராஜ் மீனா கூறுகையில், ‘எனது சகோதரிகள் வரதட்சணைக்காக அடிக்கடி அடித்து துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் மே 25ஆம் திகதி காணாமல் போனபோது, அவர்களை கண்டுபிடிக்க தூணில் இருந்து மின்கம்பம் வரை ஓடினோம்.
உள்ளூர் காவல் நிலையத்திலும், மகளிர் ஹெல்ப்லைனிலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் நாங்கள் எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தோம், ஆனால் மிகக் குறைந்த உதவியையே பெற்றோம்’ என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள பெண் ஆர்வலர்கள் இந்த வழக்கை உயர்மட்ட விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததற்கு ராஜஸ்தான் வெட்கித் தலை குனிய வேண்டும் எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்கள், பெண்களின் உடல்களை மீட்க 4 நாட்கள் எடுத்துக் கொண்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் நாட்டில் அரிசி ஒரு கிலோ கிராம் 1000 ரூபாவைத் தாண்டும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு கடுமையான அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அரிசியின் விலை ஆயிரம் ரூபாவை தாண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கைகளுக்கு உடனடியாக உரங்களை வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. கூடிய விரைவில் மாற்று உணவுப் பயிர்களை நோக்கி பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் வரவு சுமார் 75 சதவீதமாக குறைவடைந்திருந்ததாகவும், கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் பாரிய அளவில் இவற்றின் விலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக தற்போது மோட்டார் சைக்கிள், லொறி போன்றவற்றில் துவிச்சக்கர வண்டிகளில் மரக்கறிகளை ஏற்றிச் செல்வதாகவும், எண்ணெய் நெருக்கடி காரணமாக வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாக்கு மூட்டைகளில் அடைத்து விற்கப்பட்ட காய்கறிகள் தற்போது பொலித்தீன் பைகளிலும் விற்கப்படுவதைக் காணலாம்.விவசாயிகளுக்கு எரிபொருள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்படாததால் விவசாயம் பொய்த்துவிட்டதாகவும், இதனால் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான நெருக்கடியில் எதிர்காலத்தில் பொருளாதார வர்த்தக நிலையங்களை மூடுவது சாத்தியமாகும் என வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.
பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்.
ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் தந்தையும் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
9 வயதான சிறுமி ஆயிஷா கோழி இறைச்சி வாங்குவதற்கு கடைக்கு சென்று திரும்பாத நிலையிலும் அங்கு கோழிக்கறி சமைக்கப்பட்டிருந்ததாகவும், காலையில் காணாமல்போன பிள்ளை தொடர்பில் பிற்பகல் 2 மணியின் பின்னரே முறைப்பாடு செய்யப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான நபர் திருமணமானவர் என்பதுடன் அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுமியை தூக்கிச் சென்ற சந்தேகநபர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக அதை தவிர்த்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், சம்பவம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக சிறுமியை கொலை செய்ய தூண்டியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்கமைய சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் நெருக்கடியின் போது அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறைகளில் நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே அதிக ஆபத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம்.
அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியாது.
வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையில் இருந்தாலும், அத்தகைய நபர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.