வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி : போக்குவரத்து தடை !!

ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அப்பாதையூடான பொது போக்குவரத்து 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டுள்ளது.

ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அல்பியன் பகுதியில் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

டயகம கிழக்கு தோட்டத்திலிருந்து 8 தொன் தேயிலையை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் டயகம பகுதியிலிருந்து ஹட்டனுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் ஹட்டனிலிருந்து டயகம பிரதேசத்திற்குச் செல்லும் வாகனங்கள் என்பவற்றின் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாகத் தொழிலுக்குச் செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை இன்னும் குறித்த லொறியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து இப்பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் இப்பாதையூடான போக்குவரத்திற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பிள் பழத்தின் விலை 200 ரூபா : திராட்சை 1500 ரூபா!!

விலை அதிகரிப்பு..

இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, புறக்கோட்டையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் அப்பிள் பழம் ஒன்று 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழம் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ திராட்சைப் பழம் 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரித் திருத்தங்களால் இவ்வாறு விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தப் புதிய திருத்தத்தால், புறக்கோட்டையில் உள்ள கடைகளில் பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தாயும் மகளும் பலி : தந்தையும் மகனும் படுகாயம்!!

விபத்து..

அனுராதபுரம் கவரக்குளம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி கால்வாய் ஒன்றுக்குள் புரண்டு விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (02.06.2022) முற்பல் நடந்த இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் தம்புள்ளையில் இருந்த அனுராதபுரம் நோக்கி சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி கால்வாய்க்குள் விழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினரின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது!!

இளைஞன் கைது..

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினரின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலையில் 250 நெல்லு மூடைகள் கடந்த திங்கள் கிழமை திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் போது வவுனியா வைரவபுளியங்குளத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 90 நெல்லு மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முடுற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞராவார்.

வவுனியாவை வந்தடைந்த தமிழக அரசின் 22,550 நிவாரணப் பொதிகள்!!

நிவாரணப் பொதிகள்..

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும் 750 பால்மா பொதிகளும் இன்று (02.06) காலை வவுனியாவை வந்தடைந்தது.

விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப் பொதிகளை வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகர் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் அரிசி, பால்மா உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கு 22,550 அரிசி மற்றும் 750 பால்மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கான நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்த நிலையில் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.

அந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும்,

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கபடவுள்ளன.

சகல அரச அலுவலகங்களும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்!!

அரச அலுவலகங்கள்..

தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச செலவினங்களைக் குறைப்பதற்காகவும் அரச நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்காகவும் வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே வெள்ளிக்கிழமையன்று மக்கள் அரச அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு!!

ஈரற்பெரியகுளத்தில்..

வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இன்று (02.06) மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 15,16 ஆகிய வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை ஈரற்பெரியகுளத்திற்கு சென்றுள்ளனர். நான்கு மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிர்ப்பாட்டி நீராடிக் கொண்டிருந்த சமயத்தில் நான்கு மாணவர்களும் நீரில் முழ்கியுள்ளனர்.

குறித்த நால்வரையும் மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சமயத்தில் மற்றைய இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை!!

யதுர்சியின் இறுதிக்கிரியை..

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து கடந்த (30.05.2022) அன்று இரவு சடலமாக மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை இன்று (02.06.2022) மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதனையடுத்து சிறுமியின் சடலம் வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதினரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன்,

சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்துடன் நேற்று (01.06.2022) மாலை சிறுமியின் சடலத்தினை உறவினரிடம் ஒப்படைந்தார்.

இந்நிலையிலேயே சிறுமியின் இறுதிக்கிரியை இன்று கணேசபுரம் பகுதியில் சிறுமி வசித்து வந்த மாமாவின் வீட்டில் இடம்பெற்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கண்ணீருக்கு மத்தியில் கணேசபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த (30.05.2022) அன்று மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் பராமரிப்பற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவில் இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

கொல்கத்தா..

அண்டை நாடான வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல். 22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.

நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவரால் இந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை.

இதனால் இருவரும் கவலையில் இருந்துள்ளனர். காதலனை கரம்பிடிக்க முடியாமல் காத்திருந்த கிருஷ்ணா வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியாவிற்கு வர முடிவெடுத்திருக்கிறார்.

இதன்மூலம், சுந்தரவன காடுகள் வழியாக கங்கை நதியை கடந்து இந்தியாவிற்குள் வர திட்டமிட்ட கிருஷ்ணா துணிவுடன் தனது பயணத்தையும் துவங்கியுள்ளார். வங்க புலிகள் அதிகம் காணப்படும் சுந்தரவன காடுகளை கடந்து, சுமார் ஒருமணி நேரம் ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார் கிருஷ்ணா.

வங்க தேசத்திலிருந்து நீந்தியே இந்தியா வந்த கிருஷ்ணாவை கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள காளிகாத் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார் ஆஷிக். ஆனாலும், அடுத்து வர இருக்கும் சிக்கல் குறித்து அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தற்போது கிருஷ்ணாவை கைது செய்திருக்கின்றனர். அவரை, வங்க தேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதனால், ஆஷிக் சோகத்தில் மூழ்கியுள்ளார்.

காதலனை கரம்பிடிக்க, வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு நீந்தியே வந்த இளம்பெண், திருமணம் நடைபெற்ற உடனேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

வங்க தேசத்திலிருந்து இதுபோன்று நீச்சலடித்து ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறையல்ல. இந்த வருட துவக்கத்தில் இளைஞர் ஒருவர் சாக்லேட் வாங்குவதற்காக இந்தியா – வங்க தேச எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடையையும் தாண்டி இந்தியாவிற்குள் வந்தார். காவல்துறையால் கைது செய்யப்பட அவருக்கு நீதிமன்றம் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயால் உயிரிழந்த மனைவி : அழுது கொண்டே இருந்த கணவன் மற்றும் 2 மகள்கள் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தந்தையும் மகளும் சேர்ந்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் தினகரன்(50). மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சிவக்குமாரி(45). இவர் களது மகள்கள் பவித்ரா (16), பிருந்தா(14).

இந்நிலையில், புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாரி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த தினகரன் மற்றும் மகள்கள் சிவக்குமாரியை நினைத்து அடிக்கடி அழுது கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சிவக்குமாரியின் புடவையை மாட்டி அதில் தன் மகள்களை தொங்கவிட்டார். அருகேயுள்ள மற்றொரு மின் விசிறியில் தினகரனும் தனது மனைவியின் புடவையால் தூக்கிட்டார்.

இதில், மூத்த மகள் பவித்ரா தொங்கிய புடவை திடீரென அறுந்து விழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் அலறி கூச்ச லிட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் தினகரனும், இளையமகள் பிருந்தாவும் உயிரிழந்த நிலையில் தொங்கு வதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற விருதம்பட்டு காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை மக்களை நசுக்கும் மற்றுமொரு பாரிய சுமை!!

பொருளாதார நெருக்கடி..

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் வரித் திருத்தங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தேச வற் மற்றும் தொலைத்தொடர்பு வரியானது குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரிச்சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறைந்த வருமானம் பெறுபவர்கள் வருமான சதவீதத்திற்கு ஏற்ப அதிக வரிச் சுமையை செலுத்த வேண்டியிருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய வரிகள் போல் அல்லாமல் இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை கொண்டவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதன் மூலம் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பானது நெருக்கடியில் உள்ள மக்களுக்கு வாழ்வது என்பதன் விடயம் மேலும் கடினமாக்கும். எனினும் தற்போதுள்ள சில பிரச்சினைகளுக்கு இந்த வரி அதிகரிப்பு சாதகமான விளைவை ஏற்படுத்தும் என கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து இருவர் உட்பட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!!

கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி, அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் மன்னார் – பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றிரவு படகொன்றில் சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரைப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோரக் காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் 83 பேர் கடல் மார்க்கமாகத் தமிழகம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரிலிருந்து கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

மன்னாரில்..

மன்னாரில் நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இருவரும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ள நிலையில் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது அதில் இருவருக்கு மன்னார் – உயிலங்குளம் பகுதியில் வைத்து திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது 26) மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!!

ராசேந்திரன் யதுர்சி..

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30.05.2022) இரவு 9.30 மணியளவில் 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதினையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,

இன்று (01.06.2022) மதியம் சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதினரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன்,

சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என பரிசோதனை முடிவுகளை மாலை 4.30 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்தார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் அன்றையதினம் நடந்தது என்ன?

குறித்த சிறுமி தாய் தந்தையினையினை பிரிந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்ததுடன் நேற்றுமுன்தினம் மதியம் தனியார் கல்வி நிலையம் சென்று மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிசார் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாடடம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 9.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

உறவினர்களால் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது கிணற்றிலிருந்து 70மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டது.

அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தினை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறவினர் அயலவர்கள் என பலரிடம் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் வாக்குமூலத்தினையும் பெற்றிருந்தனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன.

இன்றைய தினம் கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும், 2224 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,950 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அதேபோல் நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,100.00 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவுன்ஸிற்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டொலர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸிற்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல பாடகர் கே.கே மறைவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாடகர் கே.கே..

பிரபல ஹிந்தி பாடகர் கே.கே., கோல்கட்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது உயிரிழந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரை உலகத்தை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.