இரத்தக் காயத்துடன் காவல் நிலையம் சென்ற மாணவி : காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்!!

காவல் நிலையம் சென்ற மாணவி..

பேருவளையில் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றோரின் தாக்குலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி பேருவளை காவல்துறை பிரிவில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் படித்து வருகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பேருவளை பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி, தாய் மற்றும் தந்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலைக்கு செல்ல சீருடை அணிந்து இருந்த நிலையில், சிறிய தவறுக்காக பெற்றோர் தாக்கியதாக இரத்தம் படிந்த சீருடையுடன் மாணவி காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் தந்தை சிவில் பாதுகாப்பு படையில் உப கண்காணிப்பாளராக கடமையாற்றுகிறார். பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற மாணவி காலை உணவை உண்ணாமல் இருந்ததால், காவல்துறையினர் உணவை வழங்கி உபசரித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

டெங்கு ஒழிப்பு…

டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாப்போம் நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்வோம் ‘ எனும் தொனிப்பொருளில் நகரசபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் பகுதியிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு முன்பாக இன்று (20.01.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளாவிய ரீதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று (20) மற்றும் நாளைய தினம் (21) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் வவுனியா நகரசபையினரினால் முன்னெடுக்கப்பட்ட இச் வேலைத்திட்டம் நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தெய்வெந்திரம் ரதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களான வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் மற்றும் விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் , சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நகரசபை செயலாளர் இ.தயாபரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தினர்கள் டெங்கு பெருகும் இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றி டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத்தொடந்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பூந்தோட்டம் , பெரியார்குளம் , குடியிருப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டது.

வீடுகளில் டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்படின் வீட்டின் உரிமையாளருக்கு முதலாவது எச்சரிக்கை வழங்குவதுடன் தேவையற்ற கழிவுகள் இருப்பின் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டது. மேலும் கிணறுகளில் மீன்கள் விடும் நடவடிக்கையும் இடம்பெற்றிருந்ததுடன் வீதியோரங்களில் காணப்படும் கழிவுகள் நகரசபை சுகாதார பணியாளர்களினால் அகற்றப்பட்டது

யாழ்.தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் உயிரிழப்பு!!

இளைஞன் உயிரிழப்பு…

யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய வால்வு சத்திர சிகிச்சையின் போதே உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சங்கானை தொட்டிலடியைச் சேர்ந்த 37 வயதுடைய வைத்தியலிங்கம் கஜூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இருதய வால்வு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் பெருக்கே உயிரிழப்புக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சகல வசதிகளுடன் கூடிய இருதய அறுவைச்சிகிச்சை கூடம் உள்ள போதும்,

மாதத்தில் குறிப்பிட்டளவு சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்படும் நிலையில் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 4 மணிநேர போராட்டத்தில் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் தீ விபத்து : பொலிஸார் தீவிர விசாரணை!!

தீப்பரவல்…

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மதுபானசாலை விருந்தகத்தில் இன்று (20.01.2022) அதிகாலை 3.00 மணியளவில் திடீரேன இடம்பெற்ற தீப்பரவல் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அமர்ந்திருந்து மதுபானம் அருந்தும் குறித்த தனியார் மதுபானசாலை வழமை போன்று நேற்று இரவு மூடிய பின்னர் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் தீப்பிழம்புடன் சத்தம் கேட்டத்தினையடுத்து அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் மதுபானசாலை கட்டிடத்தின் மேற்பகுதி தீப்பற்றியேறிவதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தீயணைப்பு பிரிவினர் பொலிஸாரின் தண்ணீர் பவுசர் உதவியுடன் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த போதிலும் மதுபானசாலை கட்டிடத்தின் மேற்பகுதியில் பற்றியேறிந்து கொண்டிருந்த தீ மதுபானசாலையின் கீழ்பகுதியிலும் பரவத்தொடங்கியது.

எனினும் பலத்த முயற்சியின் பலனாக அருகேயுள்ள கட்டிடங்களுக்கு தீபரவல் செல்லாமல் தடுக்கப்பட்டதுடன் மதுபானசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் 4 மணிநேர போராட்டத்தின் மத்தியில் காலை 7.00 மணியளவில் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவ் தீவிபத்து சம்பவத்தினால் குறித்த மதுபானசாலையின் கட்டிடம் முழுமையாக சேதமடைந்திருந்ததுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் , மதுபான போத்தல்கள் என்பன தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாருடன் (அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும்) இணைந்து வவுனியா பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வருகைதந்த இலங்கை மின்சாரசபையினர் அப்பகுதிக்கான மின்சாரத்தினை உடனடியாக துண்டித்திருந்தமையினாலும் தீப்பரவலை தடுக்க முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் என்பதுடன் நான்கு மணிநேரம் அப்பகுதிக்கான மின்சாரம் வழமை பாதிக்கப்பட்டிருந்தது

வவுனியாவில் தனியார் மது விடுதி முழுமையாக தீயில் எரிந்து நாசம்!!

வைரவப்புளியங்குளம் பகுதியில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடிரென தீப்பற்றி ஏரிந்தமையினையடுத்து தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில்  சத்தம் கேட்டதினை அவதானித்த அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த மதுபானசாலையில் தீப்பற்றி எரிந்தமையினை அவதானித்துள்ளனர்.

அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயிணை சிறிதளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கட்டிடத்தின் மேல்ப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

மேலும் விரைந்து செயற்பட்ட இலங்கை மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்துள்ளதுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுபானசாலை கட்டிடத்தினுள் இருந்து வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளமையினால் தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

யானையின் பிடியிலிருந்து நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள் : வைரலாகும் காணொளி!!

யானை..

கதிர்காமம் – புத்தள வீதியில் காட்டு யானை ஒன்றின் நடவடிக்கை தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த சொகுசு வான் ஒன்றை இடைமறித்த யானை,

வானில் இருந்து உணவை பெற்றுப்கொள்ளவும் முயற்சித்துள்ளது. இதன் போது அந்த யானை வானினுள் தும்பிக்கையையிட்டு ஆக்ரோசமாக நடந்துகொண்டது.

எவ்வாறாயினும், குறித்த வீதியில் எதிர் திசையில் வந்த மற்ற வாகனங்களில் வந்தவர்கள் ஒலியெழுப்பி, காட்டு யானையிடம் இருந்து வானையும் வானில் இருந்தவர்களையும் காப்பாறியுள்ளனர்.

கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!!

பிரசாந்தி அர்ச்சுனன்..

கனடாவில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டறிய டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டார். இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன யுவதி நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என விவரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி குறித்த தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறையில் அறிவிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழில் கிணற்றில் விழுந்து சிறுமி பரிதாபமாக பலி!!

ஜெகன் கஜனிகா..

கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (18.01.2022) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு யுவதி பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!!

கணேஷ் இந்துகாதேவி..

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கத்தை வெற்றிபெற்றுள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று(18.01.2022) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50-55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு : விசேட அறிவிப்பு வெளியானது!!

மின் துண்டிப்பு..

நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 1 மணி 45 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக் குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை இருளில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபை நாளுக்கு நாள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இயங்குவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் இருவரும் இழுபறி நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு உண்மையை கூற இருவரும் தவறியுள்ளனர். களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களில் எண்ணெய் கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய தினத்திற்குள் மின் உற்பத்திற்கான எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் பாரிய நெருக்கடிக்கு இலங்கை மக்கள் முகம்கொடுக்க நேரிடும். அடுத்து வரும் இரண்டு மூன்று நாட்களில் இலங்கை இருளில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது.

ஐஓசி நிறுவனத்துடன் பேசி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிவுசெய்திருப்பதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்த மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையங்களில் நேற்று பிற்பகல் முதல் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் உழை எண்ணெயை பயன்படுத்தியும், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் டீசலையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழந்ததன் காரணமாக 100 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின்கட்டமைப்பை இழந்துள்ளன.

இதன் காரணமாக நாளாந்த மின்சார விநியோகத்தை முறையாக சீரமைக்க முடியவில்லை எனவும், சில பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி 37,000 மெட்றிக் தொன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று (19) முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெட்றிக் தொன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கசந்து போன முதல் திருமணம் : இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

முதல் கணவனின் கொடுமையால் அவரை பிரிந்து விஜயகுமாரை இரண்டாவதாக சுஜா திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது திருமணத்திற்கு பின்பு வாழ்வை மகிழ்ச்சியோடு நகர்த்தலாம் என எண்ணியிருந்த சுஜாவுக்கு, இரண்டாவது கணவரும் முதல் கணவரை விட கொடூரமானவராக காணப்பட்டார்.

கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி விஜயகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியை சரமாரியாக தாக்கினார்.

இதில் சுஜா மயங்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர் ஜஸ்டின் பால் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விஜயகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சுஜா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பலியான சுஜாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி,

இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அபியின் கணவர் விசாரித்ததில், அமராவதி தான் போஸ்டர் அடிக்கச்சொன்னது தெரியவந்தது.

இதனையடுத்து அபியின் கணவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை போலீசார் விசாரித்த போது, தங்களது விருப்பம் இல்லாமல் காதலனை திருமணம் செய்து கொண்டதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

அபிராமிக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகளான அபி பக்கத்து வீட்டில் இருந்த சந்தோஷை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு அபி வீட்டில் எதிர்ப்பு எழவே, சந்தோஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கோபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கச்சொன்ன அமராவதி, ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இலங்கையில் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை!!

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்..

இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் மொத்த விற்பனை விலை 600 ரூபாவிலிருந்து 670 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் தேங்காயின் விலை 65 – 85 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பாம் எண்ணைய் இந்த நாட்களில் இறக்குமதி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு கொப்பரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்குமாறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் அந்தத் தேவையை பூர்த்தி செய்யப்படாததால், சந்தையில் தேங்காய் எண்ணெய், தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!!

இந்திய எரிபொருள் நிறுவனம்..

இலங்கை மின்சார சபைக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு விடுத்த கோரிக்கையை லங்கா இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தற்போது கூடுதல் எரிபொருள், தமது கையிருப்பில் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடையற்ற மின்சார விநியோகத்தை பேணுவதற்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இன்று மின்சக்தி அமைச்சு மற்றும் இந்திய எரிபொருள் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது இது தெரிவிக்கப்பட்டது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனவரி 22 ஆம் திகதி வரை மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை மின்சார சபை, இந்திய எரிபொருள் நிறுவனத்திடம் கோரும் என அமைச்சர் லொக்குகே முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அமைச்சின் கோரிக்கையை, இந்திய எரிபொருள் நிறுவனம் நிராகரித்த போதிலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு தேவையான வசதிகள் இன்றைய தினத்திற்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் மத்திய வங்கி ஆளுநரிடமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை வழங்க முடியாவிட்டால், சுமார் 90 நிமிடங்களுக்கு மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகரை பார்க்க குவியும் மக்கள் : கொரோனா கொத்தணி உருவாகும் நிலை!!

துறைமுக நகரை பார்க்க குவியும் மக்கள்..

கொழும்பு துறைமுக நகர சூழலை பார்வையிட அதிகாரிகள் மக்களுக்கு அனுமதியை வழங்கிய பின்னர் சுகாதார ஆலோசனைகள் அல்லது சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது, அதிகளவிலான மக்கள் நேற்றைய தினம் துறைமுக நகரை பார்வையிட சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், அடுத்த வரும் தினங்களில் துறைமுக நகர கொரோனா கொத்தணி உருவாகும் வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு பெருமளவில் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஒமிக்ரோன் தொற்றிய 160க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அண்மையில் கண்டறியப்பட்டனர்.