இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் மொத்த விற்பனை விலை 600 ரூபாவிலிருந்து 670 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் தேங்காயின் விலை 65 – 85 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பாம் எண்ணைய் இந்த நாட்களில் இறக்குமதி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு கொப்பரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்குமாறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் அந்தத் தேவையை பூர்த்தி செய்யப்படாததால், சந்தையில் தேங்காய் எண்ணெய், தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு முனையம் (ரேமினல்) அமைக்குமாறும், விமான ஓடுபாதையை விரிவாக்கி அபிவிருத்தி செய்யுமாறும் இலங்கை அரசைக் கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவருடனான தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரமேசந்திரன், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர், “இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குகின்றோம்.
அதில் பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது, புதிதாக முனையம் அமைப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால், இலங்கை அரசிடமிருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கோவிட் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் நெரிசலான இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான பேராசிரியர் சனத் லான்ரோல் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
இதனால் இரண்டாவது தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்றால், அந்த தாய்மார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
இதேவேளை, நாளாந்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 800 ஐத் தாண்டியது. நேற்றைய தினம் பதிவான கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 829 ஆக இருந்தது.
இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,536 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி – துவிச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாகுருமன்காடு பகுதியில் இதுருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த பெண் ஒருவர் காளி கோவிலடி வீதிக்கு திரும்பிய போது மன்னார் வீதி வழியாகக வந்த முச்சக்கர வண்டி குறித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு – முருகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்று (21.01) இரவு 8.30 மணியளவில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக முருகண்டி பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இரானுவ வாகனம் முருகண்டி பொலிஸ் காவல் நிலையத்தினை அண்மித்த பகுதியில் இராணுவ வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தி்ற்கு சென்று வீதியினை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இராணுவ வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை முருகண்டி காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி தருமபுரம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு (20) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தந்தை மற்றும் ஏனைய சகோதரர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்ற நிலையிலே அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என் பொலிஸார் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர் 37 வயதுடைய ஆனந்தராசா சீதேவி 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா இவர்களே இறந்தவர்கள் ஆவார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு 5 தொடக்கம்7 மூடைகள் நெல்லே விளையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அதன் அறுவடைக்காலம் நெருங்கியுள்ளதுடன் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை இடம்பெற்று வருகின்றது.
இம்முறை நெல்லிற்கான பசளை இறக்குமதிக்கு அரசு தடை விதித்திருந்தமையால் நெற்செய்கைக்கு தேவையான பசளை இல்லாமல் விளைச்சலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகக் கடந்த காலங்களில் ஏக்கருக்கு 30 மூடைகளுக்கு அதிகமாக விளைச்சல் கிடைத்த நிலையில் இம்முறை 5தொடக்கம்7 மூடை நெல்லே விளைந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இம்முறை பசளை இன்மை மற்றும் மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு, ஏனைய செலவுகள் என ஒரு ஏக்கருக்கு 60ஆயிரத்திற்கும் மேல் செலவழித்துள்ளோம். எனினும் 30 ஆயிரம் ரூபாயே வருமானமாகக் கிடைத்துள்ளது.
இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே பசளை விடயத்தில் முன் ஆயத்தமின்றி அரசாங்கம் மேற்கொண்ட முடிவினால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எமக்கான நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இலக்கத்தகடு , வாகன வருமான உத்தரவு பத்திரம் , காப்புறுதி , தலைக்கவசம் , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன தேவையற்ற நிலையில் காணப்பட்டதுடன்,
தற்போது குறித்த ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர தெரிவித்தார்.
மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.
இந்நிலையில் இனிவரும் காலங்களில் இலக்கத்தகடு , வாகன வருமான உத்தரவு பத்திரம் , காப்புறுதி , தலைக்கவசம் , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாவும் அதனை மீறி செயற்படும் மின்சார மோட்டார் சைக்கில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மேலும் வவுனியா பல இடங்களில் பரவலாக குறித்த மின்சார மோட்டார் சைக்கில்களை விற்பனை முகவர்கள் எவ்வித ஆவணங்கள் , தலைக்கவசம் என்பன தேவையில்லை என மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரினால் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் டெங்கு பரவும் அபாயம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நோட்டிஸ்களும் வழங்கப்பட்டன.
இறம்பைக்குளம் பிரிவுபொதுச்சுகாதார பரிசோதகர் தலமையில் நகரின் சகாயாமாதாபுரம் , சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (21.01.2022) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரையிலான காலப்பகுதியில் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது அப்பகுதியிலுள்ள வீடுகள் , வர்த்தக நிலையங்களின் திண்மக்கழிவுகள் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் பெருகும் நிலையில் காணப்பட்ட இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
இவ் நடவடிக்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சுகாதார ஊழியர்கள் . நகரசபை சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் வயத் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிரன்கவி (4), பிராங்கிளின் ஜோ( 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர், விஷமங்களத்திலிருந்து நாகராஜம்பட்டிக்கு தனது இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமக மோதியதில் சரத்குமார் உட்பட மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, இரண்டு குழந்தைகளில் ஒருவர் தருமபுரி மருத்துவமனையிலும்,
மற்றொருவர் சேலம் அரசு மருத்துவமனையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் கருப்பசாமி என்பவரின் மகன் பிரகாஷ்(24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கல்லூரியில் படித்த போது பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
தற்போது தனியார் நிறுவனத்தில் பிரகாஷ் பணிபுரிந்து வருவதாகவும் அவரது காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவவதாகவும் அவர் வேலைக்கு செல்வதை விரும்பாத காதலன் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காதலியுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்வதாக காதலரிடம் பெண் கூறியுள்ளார். இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இதற்கிடையே பிரகாஷ் அவரது காதலி வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் பிரகாஷ் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் பற்றி விசாரிப்பதற்காக காதலன் பிரகாசை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு வர சொல்லியுள்ளனர். விசாரணைக்கு வந்த பிரகாஷ் இளம்பெண்ணிடம் சென்று என் மீது புகார் கொடுப்பாயா என்று கூறி,
தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் நிலைய வளாகத்திற்க்குள்ளே காதலி முதுகில் குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரகாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காயமடைந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு வந்த இடத்தில் காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி (26). இவர் ஐதராபாத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்திருக்கிறார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து, சமீபத்தில் முடிந்த சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு நடிகை ஜோதி ரெட்டி ஐதராபாத்துக்கு சென்றிருக்கிறார்.
கடப்பாவிலிருந்து ரயில் மூலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிகூடாவிற்கு செல்லும் வழியில் அசந்து தூங்கி இருக்கிறார். தூக்க கலக்கத்தில் கச்சிகூடா ஸ்டேஷனுக்கு பதில் ஷாட்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி இருக்கிறார் ஜோதி.
இதனையடுத்து, தான் தவறான ஸ்டேஷனில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி, மீண்டும் ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது, ரயில் கிளம்பிய நிலையில், ஓடி சென்று அவர் ஏற முயற்சி செய்தார்.
அப்போது, தவறி பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜோதி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூக்கத்தால் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தீபன் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் வரும் ஜன., 24ஆம் தேதியன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மணமகன் சந்தீபன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
இதனால் தங்களது திருமணத்தை அதிகமாக கூட்டம் கூடாமல் இணைய வழியிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர். 100 பேரை மட்டுமே நேரில் பங்கேற்க அழைத்துள்ளனர்.
தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 350 பேரை கூகுள் மீட் மூலம் திருமணத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். கூகுள் மீட் மூலம் கலந்துகொள்ளும் இந்த 350 பேருக்கும் Zomato மூலம் உணவு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னதாக, திருமண அழைப்பிதழில் திருமணத்திற்கு மொய் செய்வதாக இருந்தால் ‘கூகுள் பே’ மூலம் செலுத்தி விடலாம் என்றும், பரிசுப் பொருட்களை அனுப்புவதாக இருந்தால் ஃப்ளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்து அனுப்பி வைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தீபன் சர்கார், அதிதி தாஸ் இருவரும் ஆன்லைனில்தான் முதன்முதலில் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது ஆன்லைன் மூலமாகவே திருமணமும் செய்யவுள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஆன்லைன் திருமண ஏற்பாடு தொடர்பாக மணமகன் சர்கார் பேசுகையில், “நான் கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தேன். எனவேதான் திருமணத்துக்கு வெளியூரில் வரும் விருந்தினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் திருமணம் என்கிற முடிவை எடுத்தோம்.
முதலில் இந்த முடிவைச் சொன்னபோது அனைவரும் சிரித்தனர். அந்தச் சிரிப்புதான், நாம் ஏன் இதை ஒரு முன்மாதிரியாக செய்யக்கூடாது என்று என்னை யோசிக்கவைத்தது.
எங்களது பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அனைவரும் முன்னிலையிலும் இப்போது எங்கள் திருமணம் நடக்கவிருப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொரோண்டோ பொலிஸார் இதனை கூறியுள்ளனர். குறித்த இளைஞர் இறுதியா ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் அவர் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறைகள் ஊடாக தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த பெண் 14 லட்சம் ரூபாய் பணத்தை வெல்லவாயவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்து வைத்துள்ளார்.
பணத்தை வேறு ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், தற்போது வைப்புச் செய்துள்ள வங்கியை விட அதிகளவான வட்டியை பெறலாம் என மகன் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் மகனுடன் சென்று வங்கியில் இருந்து பணத்தை மீளபெற்றுள்ளார்.
பணத்தை வங்கியில் இருந்து எடுத்த பின்னர் பெண்ணின் மகன் தாயிடம் இருந்த பணத்தை பறிக்கொண்டு ஓடி விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜேர்மனிய தம்பதி மக்களை நெகிழ வைக்கும் செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த நாட்களாக பாரிய எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் பொது மக்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜேர்மனி தம்பதியினால் இரண்டு லொறி விறகுகள் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 13ஆம் திகதி காலி மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்காக இந்த உதவியை ஜேர்மனி தம்பதியினர் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை சுற்றுலா வழிக்காட்டி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க ஜேர்மனியில் வசிக்கும் நோர்பர்ட் க்ளெப்பர் மற்றும் அனிதா மஜா கெய்ல் தம்பதியினரால் விறகு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நூற்றுகணக்கான குடும்பங்களுக்கு இலவங்கப்பட்டை விறகு கட்டுகள் விநியோகிக்கப்பட்டதாக அதனை பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நோர்பர்ட் கிளெப்பர், “சமீபத்தில் காலி மாவட்டத்தின் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எரிவாயு லொறி ஒன்று வந்து எரிவாயு விற்பனை செய்தது.
எனினும் ஒருவருக்கும் உரிய முறையில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இதை நாடு முழுவதும் உள்ள தொலைக்காட்சி செய்திகளில் காணலாம்.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. சமையல் செய்ய மக்களிடம் எரிபொருள் இல்லை. அதனை பார்க்க மிகவம் கவலையாக இருந்தது.
அதற்கமைய விறகுகளை இறக்குமதி செய்து விநியோகிக்க எண்ணியிருந்தோம். இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.