எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி : மின் தடை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு!!

மின் தடை..

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இன்றைய தினத்துக்குள் வழங்காவிட்டால் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனல் மின்நிலையங்கள் ஊடாகவே நாட்டின் அதிகளவு மின்சார தேவை பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார். இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.

இதன் காரணமாகப் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இன்று காலை முதல் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

முழுமையாக ஸ்தம்பிக்கப்போகும் இலங்கை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

அமைச்சர் வெளியிட்ட தகவல்..

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது நஇறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் மின்சாரத்திற்காக எரிபொருள் வழங்கப்படவில்லை எனவும், டொலர்களை வழங்கினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபையிடம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மின்சாரத்துக்கான டொலர்களை கண்டுபிடிக்க முடியாத விடயம் என தெரிவித்த அமைச்சர், மின்சாரத்திற்கு தேவையான டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற விடயத்தினை கண்டுபிடிப்பது அதற்கான அதிகாரிகளின் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.

டொலர் பற்றாக்குறையால் இலங்கை கடற்பரப்பில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டொலர் வழங்கினால் அதில் ஒன்றை உடனடியாக விடுவித்து டீசல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளும், நாள் ஒன்றுக்கு 18000 டொலர் என்ற தாமத கட்டணத்தை செலுத்த நேரிடும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் மின்சாரம், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய வெளியிட்ட தகவல்!!

வாகன இறக்குமதி..

இலங்கைக்கான வாகன இறக்குமதியில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் கொள்கை உரை நிகழ்த்திய ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓட்டம்!!

கைதி..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். எனினும் துரிதமாக செயற்பட்ட பொலிசார் குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தப்பியோடியவர் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் சிறைச்சாலை உத்தியோத்தர்களும், பொலிசாரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

பொலிசார் துரிதமாக செயற்பட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிசீரீவி கமராவின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை : திலீபன் எம்.பி!!

செட்டிகுளத்தில்..

செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் துணையுடன் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (17.01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் சோளச் செய்கையாளர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து விவசாய அமைச்சருடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேச இருக்கின்றோம். அதனடிப்படையில் சோளச் செய்கையாளர்களுக்குரிய அரச சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

மேலும் வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் கடமையேற்ற காலப்பகுதியில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆவணங்கள் இன்றி பல காணிகள் காடுகள் அழிக்கப்பட்டு சில நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு காணிகள் வழங்குவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் தனிநபரின் காடழிப்பு மற்றும் நில அபகரிப்புக்கு இடமளிக்க முடியாது.

இந்த விடயம் தொடர்பில் நான் பார்வையிட்டேன். பிரதேச செயலாளரின் 2 ஹெக்ரெயர் கடிதத்தை வைத்துக் கொண்டு இரண்டு நபர்கள் 100 ஏக்கருக்கு மேல் காடுகளை அழித்து காணிகளை அபகரித்துள்ளனர்.

இக் காணிகளை கையகப்படுத்தி காணி அற்ற மக்களுக்கு வழங்குமாறு நான் மாவட்ட அரச அதிபருக்கு தெரிவித்திருகின்றேன். அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும்.

சீனாவிடம் கடன் வாங்கும் விடயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் அரசாங்கம் செய்ய மாட்டாது எனவும் தெரிவிக்கின்றேன் எனக் கூறினார்.

வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு முன்பாக அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை : கிராம இளைஞர்கள் எதிர்ப்பு!!

தாஸ்கோட்டம்..

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமையினையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வளாகத்தில் மரக்காரம்பளை வீதியினை பார்த்த வண்ணம் வீதியின் அருகே காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது . குறித்த காளியம்மன் சிலைக்கு எதிர்த்திசையில் (வீதியின் மறுபக்கத்தில்) பல வருடங்களாக பேரூந்து தரிப்பிடம் அமைந்திருந்தது.

தற்போது குறித்த பேரூந்து தரிப்பிடம் அதன் உரிமையாளரினால் மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அவரின் அமரத்துவமடைந்த பெற்றோரின் திருவுருவ படத்தினை அகற்றி அவர்களின் ஞாபகாரத்த சிலையினை வைத்துள்ளார்.

காளியம்மன் சிலைக்கு முன்பாக [எதிர்த் திசையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில்] அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமை இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் செயற்பாடு எனவும்,

அத்துடன் குறித்த இந்து தெய்வம் கிழே இருப்பதுடன் அமரத்துவம் அடைந்தவரின் சிலை மேலே இருப்பது வேதனையளிக்கும் விடயமெனவும் இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபையிடம் முறையிட்டு்ம் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி இளைஞர்கள் விசனம் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜாவை கேட்ட போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி தீர்வினை வழங்கியிருந்தோம் .

எனினும் தற்போது பிரதேச சபையின் அனுமதியின்றி அமரத்தும் அடைந்தவர்களின் சிலை வைத்தமை மற்றும் சி.சி.ரி.வி பெருத்தியுள்ளமை என தற்போது மேலும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் செயலாளரை வினவிய போது,

குறித்த செயற்பாடு எமது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது . கடவுளுக்கு மேலே அமரத்துவம் அடைந்தவர்களின் சிலை வைப்பது தவறு. இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரிடமும் தலைவரிமும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் தலைவரை வினவிய போது, எமக்கு எழுத்து மூலம் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப்பெறும் பட்சத்தில் தாம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பேரூந்து தரிப்பிடத்தின் உரிமையாளரிடம் வினாவிய போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார்.

அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகாரத்த சிலையுடன் மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பேரூந்து தரிப்பிடமானது நாளையதினம் (18.01.2022) திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விசமிகளால் உந்துருளிக்கு தீ வைப்பு : முற்று முழுதாக எரிந்து நாசம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்றிற்குத் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு ஒன்பது முப்பது மணியளவில் உந்துருளி தீப்பற்றி எரிந்ததை அவதானித்த. வீட்டுக்காரர்கள் ஓடிச் சென்றபோது நபர் ஒருவர் ஓடிச் சென்றதையும் அவதானித்துள்ளனர்.

உந்துருளியின் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரை தொடர்புகொண்டு கேட்ட போது,

குறித்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல் : மூவர் பலி!!

அபுதாபி விமான நிலையம்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம் : பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!!

சுரேஷ் தர்மகுலசிங்கம்..

கடந்த மாதம் கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த (டிசம்பர் ) மாதம் 17ம் திகதி Dundas – Dixie சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுரேஷ் தர்மகுலசிங்கம், அருகில் உள்ள உணவகத்தில் தேனீர் வாங்கிக் கொண்டு அந்தச் சந்திப்பைக் கடந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் 2010ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, ​​2008-2012 Ford Escape SUV என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.

கறுப்பு நிறத்தில் இருப்பதாக நம்பப்படும் வாகனத்தின் சாரதி, “பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல்” அந்த இடத்தை விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மகுலசிங்கம் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கடந்த மாதம் 24ம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தர்மகுலசிங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சாரதியை அடையாளம் காணும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றின் படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தின் காரணமாக வாகனத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் கலந்தாலோசித்து பொலிஸில் சரணடையுமாறு விசாரணையளர்கள் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு காணொளி (surveillance video)அல்லது dashcam காணொளி இருப்பவர்கள் பொலிஸார் அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது!!

கைது..

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.01.2022) காலை 8.00 மணியளவில் பல லட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் போதைப்பொருள் எடுத்துச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த பேரூந்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அதில் பணித்த நபர் ஒருவரின் பயணப்பொதியிலிருந்து 6.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றிய 6.5 கிராம் ஹெரோயினையும் சந்தேகநபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2 கிராமிற்கு மேலதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் குற்றம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடந்த காலங்களில் நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை கோர விபத்து : ஒருமாத குழந்தை உட்பட மூவர் பலி!!

கோர விபத்து..

அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருமாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் : நிபுணர் ஒருவரின் தகவல்!!

கொரோனா..

சர்வதேச அளவில் கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். வோஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் வைத்திய கலாநிதி குதுப் மஹ்மூத் (Dr Kutub Mahmoood) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோவிட் ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸாகும். எனவேதான் அது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது. இந்தநிலையில் கோவிட் தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும்.

இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் வெளியாக முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே அதன் பரவலைக் கட்டுப்படுத்த, மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குதுப் மஹ்மூத் கூறியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான நிலையில் இலங்கை : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

ஓமிக்ரோன்..

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் ஓமிக்ரோன் திரிபு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது விரைவாக பரவக்கூடியது. இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், இந்நோய் அதிகளவான மக்களுக்கிடையே பரவி வருகின்து. அதனால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனூடாக இந்த நேரத்தில் மற்றொரு அலை உருவாக சாத்தியம் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது.

கைகளை கழுவுதல், முறையான முகக் கவசம் அணிதல் மற்றும் தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் ஆகியன முக்கியமானவை.

அத்துடன், முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் போது மக்களிடையே காணப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்வதில் இல்லை. தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் மூலம் வெவ்வேறு நோய்கள் உருவாகக் கூடும் என்ற இன்று சமூகத்தில் வதந்திகள் பரவுகின்றன.

அவற்றை நம்பி ஏமாந்து விடாது பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூரு..

பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற 6 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், அவரது மகள் சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த ஒரு லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. லாரி மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமன்வி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, கண்முன்னே உயிரிழந்த தனது மகள் சமன்வியின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமன்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மஞ்சேகவுடா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை முந்திச்செல்ல முயன்ற போது,

எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியதாக லாரி டிரைவர் தெரிவித்து இருந்தார். மேலும், விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்த போலீசார், கைதான லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு மணி நேர மின்வெட்டுக்கு தயாராகுங்கள் : பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

மின்வெட்டு..

நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், மின் வெட்டை எதிர்பார்ப்பதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எதிர்வு கூறுகின்றார்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும், அதனால் நீர் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தல் ஆகிய காரணங்களினால், மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில்,

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவிக்கின்றார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப் பொங்கல்!!

மாட்டுப் பொங்கல்..

விவாசாயிகளுக்கு கைகொடுக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வவுனிழயாவிவ் கோமாதா வழிபாடும், மாட்டுப் பொங்கலும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.

தமிழ் மக்களின் பாராம்பரிய உழவர் திருநாளான தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கோமாதா வழிபாடும் மாட்டுப் பொங்கலும் இடம்பெறுவது வழமை.

விவசாய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமது மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டு பொங்கலும், கோமாதா வழிபாடும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் மாட்டுப் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மாடுகளை குளிக்கவைத்து, மாலை அணிவித்து, வடை மாலை, பொங்கல் என்பவற்றை செய்து மாட்டுக்கு படைத்தும், அதற்கு உணவளித்தும் வழிபாடுகள் இடம்பெற்றது.