வவுனியாவில் பொலிசார் என அடையாளம் காண்பித்து தங்க நகைகள் கொள்ளை!!

தங்க நகைகள்..

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் தம்மை பொலிஸார் என அடையாளம் காண்பித்து சிலர் 30 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.05)இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை பொலிஸார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை!!

உணவகங்களில்..

வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று பரவலடைந்து வரும் நிலையில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகரில் அமைந்துள்ள உணவகங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்களால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வவுனியா உணவகங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாகச் சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஒவ்வொருவருக்கும் இடையில் சமூக இடைவெளிகள் இறுக்கமாகப் பேணப்பட வேண்டும் என்று உணவக உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிபந்தனைகளை மீறுபவர்களிற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா தொற்றாளர்..

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலையின் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731 ஆக பதிவாகியிருந்தது.

எனினும், ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகளுக்கும் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்கான பேருந்து : இருவர் காயம்!!

விபத்து..

திருகோணமலை – ஹொரவபொத்தான பிரதான வீதியின் பம்மதவாச்சி பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (03.05.2021) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கவனயீனத்தால் இவ்விபத்து சம்பவித்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காற்றின் மூலம் கொரோனா பரவுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்!!

கொரோனா..

கோவிட் -19 வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்ற அறிவியல் ரீதியான முடிவு எட்டப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எச்சில் மற்றும் சுவாசம் மூலம் மாத்திரமே தொற்று பரவும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாகவும் அந்த அமைப்பின் தென் கிழக்காசிய நாடுகளுக்கான விசேட பிரதிநிதி மருத்துவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றி பாதுகாக்க வேண்டியது பொது மக்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் – 19 வைரஸ் காற்றின் மூலம் பரவும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

எனினும் கோவிட் -19 வைரஸ் காற்றின் மூலம் பரவாது என இரசாயன ஆய்வுக் கூட அறிவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பட்டிருந்தார்.

மேலும், காற்றோட்டம் குறைந்த அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகளில் கோவிட் பரவும் என மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு ஒன்றில் கொ.டூ.ர தா..க்.கு.தலுக்குள்ளான இலங்கை பெண்!!

இலங்கை பெண்..

இலங்கை பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பெண் ஒருவர் மற்றுமொரு பெண்ணை நடு வீதியில் கீழே தள்ளி கொ.டூ.ரமாக தா.க்.கு.ம் வீடியோவில் உள்ள பெண் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை தா.க்.கு.ம் போது மற்றுமொரு பெண் அதனை வீடியோவாக எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் தா.க்.கு.த.லு.க்குள்ளான பெண்ணின் தகவல் பெற்று அதனையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு தா.க்.கு.தலுக்குள்ளான பெண் இலங்கை பெண் எனவும் அவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

14 வருடங்களாக இஸ்ரவேலில் பணியாற்றும் அவர் 7 வருடங்களாக விசா இன்றி பணியாற்றியுள்ளார். அவர் தற்காலிகமாக வீடுகளில் பணியாற்றி வந்துள்ளார்.

பணியாற்றும் வீடுகளில் 86 வயதுடைய பெண் ஒருவருக்கு சேவை செய்துள்ளார். அங்கு தனது மாதாந்த சம்பளத்தை கேட்பதற்காக இலங்கை பெண் சென்ற போது வீட்டில் இருந்த மற்றுமொரு பெண் அவரை வீதிக்கு இழுத்து வந்து தா.க்.கி.யுள்ளார்.

எனினும் இது தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு தெரியாதென இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பணியாற்றும் அதிகாரியான மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

எனக்கு பிள்ளைகள் உள்ளனர்… என்னை காப்பாற்றுங்கள் : கொரோனா நோயாளியின் இறுதித் தருணம்!!

கொரோனா நோயாளி..

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் தொடர்பில் சோகமாக செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நோயாளி தன்னை காப்பாற்றுமாறு வைத்தியர்களிடம் கெஞ்சியுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நோயாளி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கோவிட் நோயாளி ஒருவர் வெளியிட்ட பதிவில், “மெடம், என்னால் உயிரிழக்க முடியாது. என்னால் சுவாசிக்க முடியாது. என்னை உயிரிழக்க விடாதீர்கள்.

என்னை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியுங்கள். எனக்கு சிறு குழந்தைகள் 3 பேர் உள்ளனர். கெஞ்சி கேட்கிறேன் (அதுவரையிலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது).

எனினும் அவ்வாறு கூறிய 42 வயதுடைய தந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான சம்பவத்தில் பாதிக்கப்படும் நபராக நீங்கள் மாறிவிடாதீர்கள். அவதானமாக இருங்கள்.. அவ்வளவு தான்” என அவர் பதிவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பாரிய நிதி மோசடி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்!!

நிதி மோசடி..

வெளிநாடுகளில் இருந்து இலங்கை கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணம் வைப்பிட்ட மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டுபாய் நோக்கி செல்வதற்காக விமான நிலையம் வந்த வேளையில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

86 மில்லியன் ரூபாய் பணம் சந்தேகநபர்களின் கணக்குகளில் வைப்பிடப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய திருகோணமலை, பாவனாசகுளம், கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து தனியார் வங்கி கணக்குகளில் 1440 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அந்த பணத்தை அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபரே அனுப்பியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் நபர்களின் கணக்குகளுக்கு இணையத்தளம் ஊடாக நுழைந்து இலங்கையர்களின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலையில் பரவும் உருமாறிய வைரஸால் ஆரோக்கியமானவர்களுக்கும் மரணம் ஏற்படும் ஆபத்து!!

கொரோனா மூன்றாம் அலை..

கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் பரவும் உருமாறிய வைரஸ் திரிபு தொற்றினால் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு மரணம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோவிட் வைரஸின் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் மரணமானவர்கள் பல்வேறு வகையான நோய்களை கொண்டிருந்த நபர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் உபுல் திஸாநாயக்க கூறியுள்ளார்.

எனினும் இம்முறை எந்த நோய்களும் இல்லாத இளையவர்களுக்கு வைரஸ் தொற்றி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இறக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நாள்தோறும் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் அதிகூடிய கோவிட் நோயாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பாடசாலைகளை தற்போதைக்கு மீளத் திறக்கக் கூடாது!!

பாடசாலை..

பாடசாலைகளை தற்போதைக்கு மீளத் திறக்கக் கூடாது என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

உருமாறிய கோவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் எனவே தற்போதைக்கு பாடசாலைகளை திறப்பது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளை மூடுதன் மூலம் நோய்த் தொற்று காவுவதனை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருமாறிய கோவிட் வைரஸ் தொற்று வீரியம் கொண்டது எனவும் இதனால் இளம் தலைமுறையினருக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவ மாணவியர் நீண்ட காலம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பது பாதகமானது என்ற போதிலும், உயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேறு மாற்று வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகின் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என பேராசிரியர் நீலிகா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எட்டு மாவட்டங்களில் ஆபத்தான நிலமை : ஏனைய பகுதிகளையும் பாதிக்குமென எச்சரிக்கை!!

எட்டு மாவட்டங்களில்..

இலங்கையின் எட்டு மாவட்டங்களில் கோவிட் 19 வைரஸ் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கோவிட் பரவல் வரும் நாட்களில் பாரதூரமானதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் காணப்படும் தொற்று நோய் பரவல் நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் சரியான பரிசோதனைகளை நடத்தி தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது என்பனவும் தாமதமாகி இருப்பதாக அரச மருத்துவ அதிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா தொற்றால் 9 பேர் பலி!!

கொரோனா..

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.

இதன்போது கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், லெவ்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும்,

தென்னெகும்புர பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், மாலம்பே பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும்,

கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், வரகாமுர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் உட்பட 1891 பேர் கோவிட் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பின், மஹரகம-அரவ்வல வடக்கு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் பிலியந்தலையின் 10 கிராமசேவையாளர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த, அயலவர்கள் வீடுகளுக்கும் செல்லத் தடை!!

கோவிட் வைரஸ் தீவிரம்..

கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் வீடுகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்த முடியாது.

கோவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வேறு வீடுகளுக்கு செல்வதையும் உறவினர்களை சந்திப்பதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (02.05) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். அவரது கைதுக்கு வன்மையாகக் கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம்.

அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது. அவர் அமைச்சராகவிருந்து பல்வேறு அபிவிருத்திகளை வன்னி மாவட்டத்திலே முன்னெடுத்தவர்.

எனவே அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரைத் திருப்திப்படுத்த இந்த கைது, சர்வதேச உறவுகளே அவரின் விடுதலைக்காய் குரல்கொடு, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் ,கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா : இன்று மட்டும் 1891 தொற்றாளர்களின் அடையாளம்!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 615 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,891 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கோவிட் நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,705 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகி 687 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள நோயாளர் காவு வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எழுமாறாக பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் முடிவுகள் சில இன்று (02.05) இரவு வெளியாகிய நிலையில் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சாரதியை கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.