புத்தளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனாத்தவில்லு, எலுவான்குளம், ரால்மடுவ வயல்நிலப் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் இவ்வாறு உயிரிழந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்படவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பறவைகளின் மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் வைத்தியர் இசுரு கோட்டேகொட தெரிவித்து்ளார்.
இந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறிகள் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் இந்த வயல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்துள்ளது.
வீட்டு குருவி, நெல் குருவி உட்பட பல வகையான பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பறவைகள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலத்தில் கொரோனா தொற்றாளர்களான 38 கர்ப்பிணி தாய்மார் 40 குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார்.
அனைத்து தாய்மாரும் ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றெடுத்தனர் எனவும், இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றி இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கர்ப்பிணி தாய்மாரில் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்ட கொரோனா தொற்றாளர்களான இந்த தாய்மார் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கிய போதிலும் பிள்ளைகள் பிறந்த பின்னர் பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் மருத்துவர் தேவோலகே குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை கட்டியெழுப்பும் நடவடிக்கை தோல்வியடைந்தால் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி அடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வந்த முதலாவது சுற்றுலா பயணிகள் குழுவில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து வெளியே சென்றால் சமூகத்திற்கு பாரிய சிக்கல் நிலைமை ஏற்படுவதை தடுக்க வேண்டும். தலதா மாளிகை, சீகிரியா போன்ற இடங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் செல்வதனால் தீவிர அவதானம் செலுத்த வேண்டும்.
சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே சந்தர்ப்பத்தில் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் போது சுகாதார நடவடிக்கைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு உட்பட அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அளுத்கமை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பயாகலை, பொத்துவில மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என களுத்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஜீ.சிங்கபாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அளுத்கமையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து அதில் கலந்து கொண்டவர்களுக்கு ரெப்பீட் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மணமகள் உட்பட 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து இவர்களின் இணைப்பாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லின் விலை 82 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் நாடு நெல்லின் விலை 62 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலைகளையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக மரதகஹாமுல்ல அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரதகஹாமுல்ல அரிசி சந்தையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் மொத்த விற்பனை விலை 130 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை 106 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஜனவரி மாத இறுதியில் நெல் அறுவடை கிடைக்க உள்ளதால், அதன் பின்னர் அரிசி விலைகள் குறையலாம் எனவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பு தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும், கையிருப்பில் வைத்திருப்பதையும் அல்லது சில்லறை விற்பனை செய்வதையும் தடைசெய்யும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி,
கை சுத்திகரிப்பு தயாரிப்புக்களின் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் ஆகியோர் தயாரிப்புக்களை இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ, அம்பலப்படுத்தவோ அல்லது விற்பனைக்கு வழங்கவோ, மொத்தமாக அல்லது சில்லறை விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பதிவு எண் தெளிவான முறையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கை சுத்திகரிப்பு தயாரிப்புகளில் பொறிக்கப்படவேண்டும் என்று நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்கவின் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமனிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விட்டமின் டி குறைப்பாடு இருந்தால் அது குறித்து கவனம் செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும், அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை நாட்டில் கொவிட் வைரஸ் வகைகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும், சில வேளைகளில் இலங்கையிலேயே இந்த வைரஸ் வகையில் மாற்றடைந்த புதிய வைரஸ் வகையொன்று உருவாவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளுடன் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து பிறிதொரு மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் குறித்த பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அன்றையதினம் மாலை வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் மோட்டர் வைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இவ்விரு சடம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதீப் தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட,
துரித விசாரணைகளையடுத்து சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
இவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அறுக்கப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (02.01.2021) காலை முன்னெடுக்கப்பட்டது.
புதிய மாக்ஸிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி என்ன…?, இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசே காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பதில் என்ன?, அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பே கிடையாதா, முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிக்காதே, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி.பிரதீபன், டொன்பொஸ்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டாக தெரவிக்கப்படுகின்றது.
சமீப நாட்களாக இது போன்ற மர்ம தூண் கிட்டத்தட்ட உலகெங்கிலும் 30 நகரங்களில் தோன்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இதுபோன்ற மர்ம தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும். இதனால் பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர்.
இதனை தொடர்ந்து வெளிவந்த தகவலில் இத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது எனவும் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால்,
இந்த உலோகத்தூண் நிறுவப்பட்டதாக அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் கூறும் கூறியுள்ளார். இதனால் பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு நீடிக்கவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.
மீன ராசிக்காரர்களுக்கு கடந்து சென்ற 2020ஆம் ஆண்டு நிறைய பிரச்சனைகளை கொடுத்திருக்கும். இதன் பின்னர் 2021-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு நிச்சயமாக அனைவரிடமும் இருக்கும். அவ்வகையில் மீன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
உங்களுடைய ராசிக்கு சனி பகவான் பதினோராம் இடத்தில் இருந்து கொண்டு, ஐந்தாவது இடத்தை பார்வையிடுகிறார். அங்காரகன் தொடக்கத்தில் இரண்டாம் வீட்டில் இருந்து, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெயர்ச்சியும் ஆகிறார். ராகு மூன்றிலும், கேது ஒன்பதிலும் இருப்பார்கள்.
இந்த கிரக அமைப்புகளின் படி உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கப் போகிறது. குடும்பம்: குடும்பத்தை பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய அருள் நிச்சயமாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறும் காலம் இது. சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக அமைய இருக்கிறது. ஒருவரால் ஒருவர் முன்னேற்றத்தை காண்பீர்கள். அவர்களின் ஆதரவு எப்பொழுதும் சிறப்பாக அமையும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிக்கல்கள் நீங்கி, பரஸ்பர புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்திலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் சில சிக்கல்களை சந்திக்கலாம். அதனை தைரியமாக எதிர் கொண்டால் இந்த ஆண்டு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் சூரியனுடன் புதன் இருக்கும் சேர்க்கையானது சிறப்பான பலன்களை கொடுக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறும்.
இதுவரை மந்த நிலையில் இருந்த வியாபாரம் கூட சூடு பிடிக்க துவங்கி விடும். இதன் மூலம் நல்ல லாபம் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் உச்சத்தைத் தொடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டம் சாதகமான பலன்களை கொடுக்கும்.
உத்தியோகம் : உத்தியோகத்தை பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமான காலமாக அமைய இருக்கிறது. திடீர் அதிர்ஷ்டங்கள் மற்றும் யோகமும் வந்து சேரும். நினைத்தபடி நினைத்த இடத்திற்கு வேலையும், இடமாற்றமும் அமைய காத்திருக்கிறது.
ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமையை மேலதிகாரிகளும், உங்களுடன் பணிபுரியும் சக பணியாளர்களும் புரிந்து கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் அமையும். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
பொருளாதாரம் : பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். ஒவ்வொரு மாதமும் ஏற்றத்துடன் காணப்படும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.
காலமும், நேரமும் சரியாக இருக்கும் பொழுது, திடீர் ராஜயோகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசியிலிருந்து 12-ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கும் பொழுது உங்கள் தேவைகள் அனைத்தும் எளிதாக பூர்த்தியாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பீர்கள்.
பெண்களுக்கு : பெண்களைப் பொறுத்தவரை மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக விடுபடும் காலம் என்று கூறலாம். உங்கள் மனதில் அழுத்திக் கொண்டு இருந்த விஷயங்கள் எல்லாம் தெளிவாகி, லேசாக உணர்வீர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குணத்திற்கு ஏற்ப நல்ல பொருத்தமான வரன்களும் அமையும். திருமணமான பெண்களுக்கு கணவனுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல ஒற்றுமை இருக்கும்.
பரிகாரம் : மீன ராசிக்காரர்கள் இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய நல்ல பலன்கள் கிடைக்கப்பெறும். வியாழன் கிழமையில் மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்துவதால் அதிர்ஷ்டம் ஏற்படும். சனிக்கிழமையில் ஹனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடக்கும்.
பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்து சென்ற 2020-ஆம் ஆண்டு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள்வதற்கு 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பீர்கள்.
உங்களுடைய ராசிக்கு சனி பகவான் 12-வது இடத்தில் அமர்ந்து இருப்பார். அது போல் குரு பகவான் ஏப்ரல் வரை உங்கள் ராசியிலும், அதன் பின்னர் பத்தாம் இடத்திற்கும் நகர்ந்து செல்கிறார்.
ராகு பகவான் நான்கிலும், கேது பகவான் பத்தாவது வீட்டிலும் அமர்ந்து இருப்பார்கள். மற்ற கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கும். இவ்வகையில் உங்களுடைய ராசிக்கு புத்தாண்டு எப்படி அமையப் போகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை தேவைகளுக்கு ஏற்ப பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை திருப்தி படுத்துவீர்கள்.
சொந்த வீட்டில் இருப்பவர்கள் குடும்பத்தை பிரியும் நிலை ஏற்படலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக அமைய இருக்கிறது. உங்களுக்கு பிறகு பிறந்த உடன் பிறப்புகளிடம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கணவன் மனைவிக்கு இடையே வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலம் பாதி பிரச்சினையை தீர்த்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் மன அமைதி பெறலாம்.
வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுடன் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் மற்றும் பங்குதாரர்கள் போன்றவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். சுய தொழிலில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல லாபம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் ஏப்ரல், மே மாதங்களில் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதங்களில் மனதிற்குப் பிடித்த வேலை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
உங்களுடைய திறமைக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம், இனி நிச்சயமாக கிடைக்கப் போகிறது. உங்களிடம் இருக்கும் அறிவாற்றலை மற்றவர்கள் தெரிந்து கொண்டு பாராட்டுக்களை கொடுக்கப் போகிறார்கள். பதவி உயர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஆண்டின் இறுதியில் அமையும்.
பொருளாதாரம் : பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் உங்கள் கைக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.
பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஆண்டின் தொடக்கத்தில் நிச்சயமாக இருக்கும். படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு.
அதே சமயத்தில் வருமானம் குறையவும் சாத்தியக் கூறுகள் உண்டு. இவ்வாண்டு சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது. வருகின்ற விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொண்டால் பிரச்சினைகள் இருக்காது.
பெண்களுக்கு : பெண்களைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையேயான புரிதல் உண்டாகும். தன் கையே தனக்கு உதவி என்பது போல் உங்களுடைய தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிடாமல் மென்மேலும் மெருகேறுவதற்கு வாய்ப்புகள் அமையும்.
சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவிப்பீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதனை சிறப்பாக கையாண்டு சுமூகமான முடிவை கொடுப்பீர்கள்.
பரிகாரம் : கும்ப ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு இவ்வாண்டு மேலும் சிறப்பாக அமைய பசுவுக்கு தானம் செய்யலாம். சனிக்கிழமை தோறும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு படைத்து வர நன்மைகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்து வர அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். உங்களால் முடிந்த அளவிற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள் நல்லது நடக்கும்.
பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 170 கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன.
புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வவுனியா நகரசபையினால் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 170 மாடுகள் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 170 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா,
ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த யோசனைக்கு கல்வி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
முதலாவதாக வவுனியாவில் பின்தங்கிய பாடசாலைகளில் குறித்த பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களிலும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மகர ராசிக்காரர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் ஜோதிட பலன்கள் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
உங்களுடைய ராசிக்கு சனிபகவான் சொந்த வீட்டிலேயே இருப்பார். ராசியாதிபதி சனி பகவான் ஆண்டின் தொடக்கத்தில் குருவுடன் சேர்ந்து இருந்து பின் குருபகவான் மட்டும் பெயர்ச்சி ஆவார்.
ராகு 5வது இடத்திலும், கேது 11வது இடத்திலும் அமர இருக்கின்றார்கள். செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
குடும்பம் : குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் குறிப்பாக, தாயின் உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கிய ரீதியான செலவுகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சனி பகவான் உங்கள் ராசியிலேயே இருப்பதால் வீடு, மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். அப்படி வாங்கும் பொழுது ஒன்றுக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு வாங்குவது மிகவும் நல்லது.
வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் மகர ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ராசியாதிபதி சனி ராசியில் அமர்ந்திருப்பதால் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை உடனுக்குடன் பெற சாத்தியக்கூறுகள் உண்டு.
இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப பலனும் கிடைக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அகலக்கால் வைக்க சிறந்த காலம் இது. தைரியமாக முடிவெடுத்து முன்னேற பாருங்கள்.
தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தால், அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் நிறைய விஷயங்களையும் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலர் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல், நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மன நிம்மதியுடன் இருக்கலாம். இல்லையென்றால் வம்பு வழக்குகளில் மாட்டி தவிப்பீர்கள்.
பொருளாதாரம் : பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் மகர ராசிக்காரர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் சமமாக வந்து சேரும். ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இந்த ஆண்டில் கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் எந்த அளவிற்கு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்ல பலன்களையும் பெறலாம்.
இருப்பதை வைத்து திருப்தி அடைவதே மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். ஆடம்பர செலவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் கடன் தொல்லை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடும்.
பெண்களுக்கு : பெண்களைப் பொறுத்தவரை மகர ராசிக்கு யோகமான பலன்கள் உண்டு. உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெறுவதற்கான காலமிது.
நீண்ட நாள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் : இறை வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானை தரிசித்து, அவருக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி வழிபட்டால் சுபச்செய்திகள் வந்து சேரும். உங்கள் ராசிப்படி ரத்த தானம் செய்து வர பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
கடந்து சென்ற 2020 ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து மீண்டு, வர இருக்கும் 2021 ஆம் ஆண்டில் 12 ராசிகளில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்கிற ஆர்வத்துடன் இருப்பார்கள்.
உங்களுடைய ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகின்றது. சனி பகவான் இந்த ஆண்டு 12-வது இடத்தில் நின்று நான்காவது இடத்தை பார்வையிடுகிறார். ராகு ஆறாவது வீட்டிலும், கேது பதினோராவது வீட்டிலும் இருக்க,
மற்ற கிரகங்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெயர்ச்சி ஆகி கொண்டே இருப்பார்கள். இந்த கிரகங்களின் அடிப்படையில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்று இப்பதிவில் பார்ப்போம்.
குடும்பம் : தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே அமைய இருக்கிறது. சனி பகவான் நான்காவது வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் சனியுடன் இணைந்து இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மற்றும் பூர்வீக சொத்துக்களை புதுப்பிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைக்கூடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களின் ஆசீர்வாதமும், அவர்களுடைய அன்பையும் பெறுவீர்கள்.
வியாபாரம் மற்றும் தொழில் : தொழில் மற்றும் வியாபாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படிப்படியான முன்னேற்றத்தை உங்களுடைய உழைப்பின் மூலம் நீங்கள் அடைவீர்கள்.
உங்களுடைய விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்க இருக்கிறது. மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அமோகமான வெற்றி கிடைக்கக்கூடிய யோகமும் உண்டாகும்.
சூரியன் பெயர்ச்சி ஆகும் பொழுது திடீரென நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நாணயமாக நடந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகம் : உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். நீங்கள் உங்களுடைய தீவிர உழைப்பை கொடுத்தமைக்கு உரிய அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும். மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உருவாகும்.
பொருளாதாரம் : பொருளாதாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ஜூலை முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்றம் காணலாம்.
பட்ஜெட் வாழ்க்கை போய் ஓரளவுக்கு சாதாரண நிலைக்கு கொண்டு வந்து விடுவீர்கள். பெண்களுக்கு பணம் பல வழிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. கரைந்து வந்த வங்கி சேமிப்புகள் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பெரிய பெரிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை காண்பீர்கள்.
பெண்களுக்கு : தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் மன அமைதி பெறலாம். திருமணம் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும்.
பரிகாரம் : தனுசு ராசிக்காரர்கள் சனிக் கிழமைகளில் உளுந்து தானம் செய்து வர நிறைய நன்மைகள் நடைபெறும். ஏழை எளிய மக்களுக்கு நீல நிற வஸ்திர தானம் செய்து வரலாம். லலிதா சகஸ்ரநாமம் வீட்டில் ஒலிக்க விட்டு வேலைகள் செய்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். பசுக்களுக்கு தீவனம் கொடுக்க பாவங்கள் நீங்கும்.
பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.