இலங்கைக்குள் மேலும் 272 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 03 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 269 பேர் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.
6005 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5581 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவில் நுழைவோருக்கு எல்லைப் பகுதிகளில் வெப்ப பரிசோதனையுடன் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியா மாவட்டத்திற்குள் நுழைபவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்வதுடன், பதிவு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடாளவிய ரீதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களம் என்பன பாதுகாப்பு தரப்புடன் இணைந்து பல்பேவறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் ஹொரவப்பொத்தானை வீதியில் மடுகந்தை, கண்டி வீதியில் ஈரப்பெரியகுளம், யாழ் வீதியில் ஓமந்தை, மன்னார் வீதியில் பறயனாலங்குளம் ஆகிய பகுதியில் இவ் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.
இதற்கு பாதுகப்பு தரப்பினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சாரதி, நடத்துனர்களுக்கு தொடர்ச்சியாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02.11.2020) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், சுவாசப்பை கோளாறு காரணமாவே உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்த மரணம் இலங்கையில் பதிவான 23 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெரும் நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து மாகாண கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிதிக் கிளையில் பாணியாற்றியவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இம் மோசடியில் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த பல மாதங்களாக இந்த நிதி மோசடி இடம்பெற்று வந்த நிலையில், தற்போது குறித்த நிதிக்கிளையில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் கடமையேற்ற நிலையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகள் முழுமையாக தற்போது இடம்பெற்று வருகின்றன.
அங்கு 3 கோடிக்கும் மேல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை 8 ஆசிரியர்களின் பெயரில் மாதாந்த ஊதியத்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலைமையில், அந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியின் மிலான் நகரில் வசித்து வந்த ஒருவரும், இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
மிலான் நகரில் உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவர். சில வருடங்களாக அவர் தனது குடும்பத்தினருடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். 56 வயதான ஸ்ரீலால் ஹேரத் என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலான் நகரில் உயிரிழந்த இந்த இலங்கையரின் குடும்பத்தினர் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மிலான் நகர சபை தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இறந்தவரின் இறுதி கிரியைகளை மேற்கொண்டுள்ளது.
லண்டனில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள் நீண்டகாலமாக அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த பெண்களில் ஒருவரின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர் லண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தாலியின் மிலான் நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் பல இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்து வருவதாகவும் அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரகப் பிரதிநிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நேற்றைய தினம் முதல் நாட்டை முற்றாக முடக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா முதலாவது அலையில் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 30க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதற்கு முன்னர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதே நேரம் சிறுவர்களுக்கு சாதாரணமாக இருமல், தடிமன், ஆஸ்மா போன்ற நோய்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்றோ என்ற பயத்தில் சிகிச்சைக்கு செல்லாமல் விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஏற்கனவே ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் கிரமமாக கொடுக்கப்படவேண்டும்.
அதே போல தூசிகளுக்குள் விளையாடும் பொழுது தொண்டை அழற்சி நோய்கள் ஏற்படலாம்.
சிறுவர்களுக்கு அவ்வாறு வரும் போது அதற்குரிய மருந்து கொடுக்கவேண்டும்.
அதையடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த போசணை மிக்க உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதன் மூலம் தொற்று ஏற்படும் காலங்களில் உடல்நிலை பாதிப்பதை தவிர்க்கலாம்.
குறிப்பாக புரதச்சத்து நிறைந்த பால் போன்றவற்றை எடுத்தல் வேண்டும்.
எனவே குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் பொழுது காய்ச்சல் இருக்கலாம், தொண்டை நோ இருக்கலாம், இருமல் இருக்கலாம் எனவே இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி கலந்தாலோசித்தல் வேண்டும்.
வீட்டில் குழந்தை உள்ளவர்கள் பொது இடங்களுக்கு சென்று விட்டு வந்து கைகளை நன்றாக கழுவி விட்டு வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
குறிப்பாக அதிகளவானோர் உள்ள வீடுகளில் சிறுவர்களுடன் அதிகளவில் நெருங்கி பழகுவதை தவிர்த்தல் வேண்டும்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின் பெரியவர்கள் அல்லது அங்கு உள்ள மூத்தவர்கள் தான் காரணமாக இருப்பார்கள். எனவே அதற்குரியவாறாக அவதானமாக செயற்பட வேண்டும்.
அதே போல சிறுவர்களை வெளியிலிருந்து வருபவர்கள் கட்டி அணைத்து முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.
அவ்வாறு செய்வதானால் கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும். கண்டபடி ஆட்கள் வந்து குழந்தைகளை தொடுதலும் தொற்றை ஏற்படுத்தும்.
குறிப்பாக நெருக்கமான இடங்களில் அயலில் உள்ளவர்களுடன் விளையாடும் போதும், தொடுகையின் போதும் தொற்று ஏற்படலாம்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் சுகாதார பழக்கவழக்கங்களான கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் நல்லது.
நோயினால் சிறுவர்கள் அதிகளவில் உடல் ரீதியாக பாதிப்படையலாம். விளையாடவிடாது அல்லது தொடர்ச்சியாக வீடுகளில் இருக்கும் போது அல்லது வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருக்கும் போது அவர்களது உளநலமும் பாதிக்கலாம்.
எனவே இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். அதேபோல் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்த வரை பழரசங்கள் கூடுதலாக நல்லது.
குழந்தைகளுக்கு நெத்தலி, கருவாடு, பால், பெருங்காயம், இஞ்சி, மஞ்சள், மற்றும் பச்சை இலைகளிலான உணவு நல்ல உணவாக அமையும்.
அடுத்ததாக அயடின் கூடிய பழங்கள், எலுமிச்சம் பழம் மற்றும் கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்ற சிறந்த நோய் எதிர்பு சக்தியுள்ள உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக சிறுவர்களுக்கு போதியளவு நீர் சிறந்த ஆகாரமாக அமையும் எனவும் கூறினார்.
வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ்பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் பூங்காக்களை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடுமாறு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து சிறுவர் பூங்காக்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தரம் 3 முதல் 13ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்காக இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. அதற்கமைய அரச மற்றும் தனியார் தொலைகாட்சி மற்றும் வானொலி சேவையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்பாட்டுக்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்படாத பிரதேசங்களில் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பிரதேசங்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 25ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொது மக்கள் ஒன்று கூடும் செயற்பாடுகள் அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டிய பக்தர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 25ஆக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த பல மாதங்களாக நிரந்தர கிராம சேவையாளர் இன்மையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது அப்பகுதிக்கு நிரந்தர கிராம சேவையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெளுக்குளம் கிராமசேவையாளராக கடமையாற்றிய பெண் கிராம சேவையாளர் ஒருவருக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வேறு பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் பதில் கிராம சேவையாளராக பலர் கடமையாற்றியிருந்த போதிலும் அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்வதில் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களினால் வவுனியா பிரதேச செயலாரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு நிரந்தர கிராம சேவையாளராக சாந்தரூபன் இன்று(03.11.2020) காலை அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.
மேலும் நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தரும் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அபிவிருத்தி உத்தியோகத்தராக அருள்மொழி என்பவரும் இன்று அவரது கடமைகளை பொருப்பேற்றனர்.
நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு செயற்பட்ட பிரதேச செயலாளருக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று(03.11.2020) காலை இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக,
அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு வி.என்.சர்மா தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. விநாயகப் பெருமானுக்கு தீபமேற்றி மலர்தூவி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வயது வித்தியாசம் தாக்கம் செலுத்தாதென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னர் இளைஞர்களை விடவும் வயோதிபர்களுக்கு 30 மடங்கு அதிக ஆபத்து உள்ளதென அவர் கூறியுள்ளார்.
நாட்பட்ட நோய் காரணமாக அதன் பாதிப்பு மேலும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாயிரத்திற்கும் அதிக வைரஸ் வகையில் அதிக பரவல் ஆபத்தை கொண்ட வைரஸ் தற்போது இலங்கையில் பரவியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே பயணிக்கும் நபர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களை முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து நேற்று வரை 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,
மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 தொற்றாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்டோபர் மாதத்தில் 15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் 378 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று 385 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு நாள் பரிசோதனையின் போதும் தனிமைப்படுத்தல் முகாம்களில், சிகிச்சை நிலையங்களில் இருந்தவர்கள் சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
வடமாகாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் கடந்த வாரத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான பரிசோதனைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் வட மாகாணத்தை பொறுத்த வரைக்கும் தற்போது யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பாசையூர் மேற்கு திருநகர் கிராமங்கள், அதேபோல கரவெட்டி ராஜகிராமம் பிரிவிலும் 4 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த 19ம் தேதி முதல் இயங்க ஆரம்பித்திருந்தது. 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தார்கள்.
இவர்களில் முதலாவது தொகுதியாக 16 பேர் இரண்டு வார கால சிகிச்சை நிறைவு செய்து நேற்று தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
அதேபோல கிளிநொச்சியில் கிருஸ்ணபுரத்திலும், முல்லைத்தீவு மாங்குளத்திலும் இந்தவாரத்தில் சிகிச்சை நிலையங்கள் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இலங்கை முழுவதும் இந்த கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போது பரவி வருகின்ற இந்த வைரஸ் மிகவும் வீரியம் மிக்கது. அதன் நோயின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது.
எனவே பொதுமக்கள் இந்த தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இரண்டு விடயங்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இயலுமான வரை ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்காக கடந்த வாரம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற செயலணி கூட்டத்தின்போது பொதுமக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றினை நாங்கள் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
அதாவது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனா தொற்று பரம்பலை கட்டுப்படுத்தகூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக அன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசத்தில் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது.
குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம். இந்நிலையில் நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளமையினால் சிறுவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு காற்று மூலம் இலங்கை வளிமண்டல எல்லைப் பகுதியில் நுழைந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் தூசு துகள் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நாட்களில் சிறுவர்களுக்கு இளைப்பு அதிகரித்தால் உடனடியாக பொருத்தமான வைத்தியரிடம் பிள்ளைகளை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சினை ஒன்று ஏற்பட்டாலும் வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும் என அவர் நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனாவினால் மேலும் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த,
இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது. அதற்கமைய இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்ககை 23 ஆக உயர்வடைந்துள்ளது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.