வவுனியாவில் 10 குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!!

வவுனியாவில் ஒரு வாரமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 10 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பினரினால் நேற்று முன்தினம் (27.03.2020) இரவு உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு நேர உணவினை கூட சாப்பிட முடியாத நிலையில் தாம் மாத்திரமின்றி தமது பிள்ளைகளும் தவிப்பதாகவும் எமக்கு உதவி செய்யுமாறு வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசனிடம் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக,

கனவுகள் அமைப்பினரினால் ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1 பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 10 குடும்பத்தினருக்கு 20,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஒமந்தை பனிக்கநீராவி மற்றும் பெரியமடு ஆகிய கிராமங்களில் வறுமையின் கொடூரத்தில் வாழும் 10 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பு சார்பாக ரமேஸ் உதயகுமார் (லண்டன்) , பரிதிகள் அமைப்பு (2020 உயர்தரம்) ஆகியோரின் நிதியுதவியில் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் , ராஜேந்திரன் சஜீவன் மற்றும் கனவுகள் அமைப்பின் சார்பாக தர்சிகன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

குறித்த 10 குடும்பத்திலும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் தலைமைத்துவத்தினை கொண்ட குடும்பம், குடிசை வீட்டில் மின்சாரமின்றி மண்ணெண்ணை விளக்கில் வாழும் குடும்பம், வீடு இன்றி அனாதரவாக விடப்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பம், 5பிள்ளைகளுடன் சாப்பிட உணவின்றி தவிக்கும் குடும்பம் , தாய் மற்றும் தகப்பனை இழந்து பேத்தியாரின் துணையுடன் வாழும் குடும்பம் என மிகவும் கஸ்டப்படும் குடும்பத்தினருக்கே இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்குரிய பொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனத்தினை தந்து உதவிய திலிப் வாடகை கார் (Dilip Rent A Car) நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் இலங்கையில் நிகழ்ந்த முதலாவது மரணம்!!

உலகில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இலங்கையில் இதுவரையில் 113பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கொட வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

60 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இன்று சுகாதாரதுறையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இருவருக்கு சிகிச்சையளிக்கவுள்ள ரோபோ!!

கொரோனா வைரஸ் தொற்றாளிகள் இருவருக்கு சிகிச்சையளிக்க ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தவுள்ளதாக ஹோமகம வைத்தியசாலை அறிவித்துள்ளது.

உள்ளூர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ இயந்திரங்கள் மூலம் மனித வலு வெற்றிடங்களை நிரப்பமுடியும் என்று நம்பிக்கையுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

வைத்தியர்களுக்கு தொலைதொடர்பு மற்றும் ஏனைய உபவிடயங்களில் உதவுவதற்காகவே இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த ரோபோக்கள் நாளாந்த பணிகளை செவ்வனே செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளுக்கு செல்லவும் நோயாளிகளின் நிலைமை தொடர்பாக தகவல்களை மற்றும் மருந்துகளை காவிச்செல்லவும் இதனை பயன்படுத்தமுடியும்.

இந்த ரோபோக்கள் இலங்கையின் நிறுவனம் ஒன்றினால் 10லட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக்கொண்டு ஏனைய வைத்தியசாலைகளிலும் அன்றாட பணிகளை செய்யக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைரஸ் தொற்று : வைத்தியசாலையில் அனுமதி!!

களுத்துறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் நாட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த நபர் கடந்த 6 நாட்களாக அட்டுழுகம பிரதேசத்தின் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

அவர் பலருடன் நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரின் தந்தையும் சகோதரியுமே இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டம் கொரோனா வைரஸினால் ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து வந்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை!!

2020மார்ச் 14ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் தம்மை பிரதேச பொது சுகாதார பரிசோதர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இந்த கோரிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விடுத்துள்ளார்.

அண்மையில் சென்னையில் இருந்து வந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுமார் 50பேருடன் சென்று வந்தமை கண்டறியப்பட்டமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : ஆபத்தான நிலையில் 8 நோயாளிகள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 8 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 பேரில் 7 பேர் கொழும்பு IDH வைத்தியசாலையிலும் ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 109ஆகும். அவர்களில் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

வைரஸ் தொற்றிற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளரகளின் எண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை தொடர்பில் மர்மம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 109 நபர்களில் 4 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என கொழும்பு வைத்திய பீட சமூக மருத்துவ பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளான 109 பேரில் 102 பேருக்கு, சீனா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மன் உட்பட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டமையினால் கொரோனா தொற்றியுள்ளது.

இதுவரையில் இலங்கையில் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் நால்வர் முழுமையாக குணமடைந்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்கு இரண்டு முறை விசேட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு சோதனையிட்ட பின்னர் அவர்கள் அச்சமின்றி வீடு செல்ல முடியும். அவர்களிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடுமையாகும் ஊரடங்கு சட்டம் : களமிறங்கும் இராணுவம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸாருக்கு பக்கபலமாக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாட்களில் சிலர் அந்த சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில பொதுமக்களின் பொறுப்ப செயற்பாடுகள் காரணமாக கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி கண்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இராணுவத்தினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். தேவையற்ற வகையில் வெளியில் வரும் நபர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிஸார் பிரம்பு மற்றும் பொலிஸ் கட்டைகளுடன் வீதிகளில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிலரின் பொறுப்பற்ற செயலால் ஆபத்தான கட்டத்தில் இலங்கை : சுகாதாரதுறை அமைச்சர் எச்சரிக்கை!!

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர், மேலும் பல தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரகள் என சந்தேகிக்கப்படுபவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக்கிலேயே, இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இருந்தபோதிலும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்களையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவது முக்கியமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 90 வயது பாட்டி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 90 வயது பாட்டி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் முருகன் கோயில் மண்டபத்தில் வாழும் ஒருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த முதியவர் இருக்கும் பகுதிக்கு உறவினர்களினால் செல்லமுடியவில்லை என்றும்,உணவு வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது : மருத்துவர் அனில் ஜாசிங்க!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த காரணத்தினால், இதுவரை மேற்கொண்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் வீணாக போயுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் வீதிகளில் நேற்று அதிகளவான வாகனங்கள் பயணித்தன.

மக்கள் பாதுகாப்பு தொடர்பான எந்த உணர்வுமின்றி வழமைப் போல் வீதிகளுக்கு வந்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி முதல் பிராந்திய ரீதியாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை நேற்று மாலை சிக்கலாகி போனதை காண முடிந்தது.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் மக்கள் சாதாரண விடுமுறை தினம் போன்று சுதந்திரமாக வீதிகளில் நடமாடி திரிந்தது ஏன் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை எனவும் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு ஒரு மாதம் நீடிக்கலாம் : கொரோனாவின் தாக்கம் அதியுச்சம்!!

கொரோனா வைரஸ் பரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வைரஸின் தாக்கம், வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது.

எந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இந்த வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கும் நீடிக்கப்படலாம் என கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின்(ஐ.டி.எச்.) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பாரிய உயிர்க்கொல்லி நோய். இந்த வைரஸ் தொற்றை முழுமையாக இலங்கை கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.

இந்த வைரஸின் தாக்கம் – வீரியம் இன்று உலகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. உலக நாடுகள்செய்வதறியாது தவிக்கின்றன. தினந்தோறும் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன.

எந்நேரத்திலும் என்னவும் நடக்கலாம். எனவே, இலங்கையிலுள்ள பொதுமக்கள்க வனயீனமாகச் செயற்பட்டால் மேலும் ஒரு மாதத்துக்கு இந்த ஊரடங்குச் சட்டம்நீடிக்கப்படலாம். இலங்கை தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கின்றது.

மருத்துவர்கள் நேரம் காலம் பாராமல் முயற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது நாட்டுக்கு வந்துள்ள பலர் தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போதுவரை 106 நோயாளர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். இன்னும் பலர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். முடிந்தளவு மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏனென்றால் வெறுமனே முகக்கவசத்தை அணிந்துகொண்டால் மாத்திரம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியாது. தொடுகை மற்றும் மற்றவர்களுடன் நெருக்கமான அணுகுவதால் இந்த வைரஸ் பரவுகின்றதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

உலகில் ஏனைய நாடுகளும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தினால்தான் மற்றைய நாடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும்.

அதேபோல் எதிர்வரும் ஜுலை மாதம்வரை இந்தநிலை நீடிக்கலாம் என்றும் சர்வதேச அளவில் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நாங்கள் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்திவிட்டதாக எண்ணக்கூடாது. தற்போதுள்ள தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்தும் அப்படியே முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் மாதத்துக்குள் பிரதிபலனை அடையலாம்.

எனினும், கொரோனா வைரஸ் நோயாளர்கள் மறைந்திருந்தால் நிலைமை மாறலாம். அவர்களிடம் இருந்து மேலும் பரவலாம். சில வேளைகளில் சிலருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் குறைந்தும் காணப்படலாம். அதனால் அருகில் இருப்போருக்கு வைரஸ் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இடைவெளியைப் பேணுதலே சிறந்த வழிமுறையாககருதப்படுகின்றது.

மக்களின் பயணங்களைக் குறைத்தலும் சமூக இடைவெளியை அப்படியே பேணுதலுமே வைத்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊரடங்குச் சட்டம் இருக்கின்ற போதிலும் அதனைமக்கள் மீறினால் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

ஒரு வாரம் ஆகலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். இப்படியான கவலையீனம் இருந்தால் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படலாம். ஆகவே, எல்லாம் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் கைது!!

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மோட்டார் சைக்கில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (27.03.2020) மாலை கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் வீதிகளில் தனிமையில் நடமாடும் பெண்களின் தங்க நகைகள் அறுக்கப்பட்டதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு வழிகாட்டலில்,

வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரினித் திசானாயக்க தலைமையிலான பொலிஸ் சார்ஜன்டுகளான ரஞ்சித், விக்கரமசூரிய, காசிம், உபாலி மற்றும் பொலிஸ் கொஸ்தபர்கள்களான விஐயசிங்க, தயாளன், சதுரங்க, ஏக்கநாயக்க ஆகிய பொலிஸார் அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த இளைஞனை நேற்று மாலை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதன் போது மோட்டார் சைக்கிலில் போலி இலக்கத்தட்டினை பொருத்தி இருந்ததுடன் குறித்த இளைஞனின் சட்டைக்குள் பல இலக்கத் தகடுகளை வைத்திருந்துள்ளார்.

பெண்கள் தனிமையில் நடமாடும் பகுதிகளில் மோட்டார் சைக்கிலில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடுவதுடன் பின்னர் மோட்டார் சைக்கிலின் இலக்கத்தினை மாற்றி தப்பித்து செல்வதாக கைது செய்த இளைஞனின் மேற்கொண்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

4 லட்சத்தி 40,000 ரூபா பெறுமதியான 5 1/2 பவுண் தங்க நகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கொள்ளையில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிலையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

வவுனியா கற்குளம் பகுதியினை சேர்ந்த 25வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதிவான் முன்னினையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சமயங்களில் வெளி இடங்களில் செல்லும் பொதுமக்கள் அநாவசியமாக தேவையின்றி ஆடம்பரமான தங்க ஆபரண்ங்களை அணிவதினை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 17 பேர் கைது : 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 17 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களின் 6 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியா உட்பட இலங்கையில் பல மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய 17 நபர்களை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய கடந்த 22ம் திகதி 4 நபர்களும் , 23ம் திகதி 2 நபர்களும் , 25ம் திகதி 5 நபர்களும் , 27ம் திகதி 6 நபர்களும் மொத்தமாக ஊரடங்கு சட்ட காலத்தினுள் 17நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்ட காலத்தினுள் தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊரடங்கு காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்த்து பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடு முகாமில் இருந்து 167 விமான பயணிகள் விடுவிப்பு!!

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் பம்மைமடு இராணுவ முகாமில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 13 ஆம் திகதி 213 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பணிகளில் 167 விமான பயணிகளுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், சிலாபம், மாத்தளை உள்ளிட்ட அவர்களது வதிவிடங்களுக்கு 11 பேரூந்துகளில் இராணுவத்தினரால் அழைத்து சென்று விடப்படவுள்ளனர்.

சிகரட் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் : அரசாங்கத்திடம் கோரிக்கை!!

இலங்கையில் சிகரட் விற்பனையை தடைசெய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இதேவேளை இது குறித்து கருத்துரைத்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக சுகாதார மேம்படுத்தல் பிரிவின் பேச்சாளர் ஒருவர்,

“இந்த தடை பல வாரங்களுக்கு முன்னரே கொண்டு வந்திருக்கப்படவேண்டும். எனினும் தற்போதும் அதற்கான அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.