வவுனியா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரச மருந்தகங்களை தவிர மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு!!

அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கிய ஆலோசனைக்கமைய வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் , சுப்பர் மார்க்கெட்டுகளை மூடுமாறு வவுனியா பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாகவம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையுள்ளதாக மேலும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வவுனியாவிலுள்ள அனைத்து சுப்பர் மார்க்கட், பார்மசிகள் அனைத்தும் உடனடியாக இன்று மதியம் 3.00 மணியளவில் மூடப்பட்டதுடன் மூடப்படதாக பார்மசிகளுக்கு வவுனியா பொலிஸாரினால் அறிவுறுத்தலும் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : ஆபத்தான நிலையில் ஐந்தாவது நபர்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு 9 மணிக்குள் புதிதாக நான்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இலங்கையில் இதுவரையில் 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு நோக்கி சென்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா நோய் அறிகுறிகளுடன் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்ற இரண்டு நோயாளிகள் தொடர்பில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு புத்தாண்டு முற்பணம் இல்லை : அரசாங்கம் அறிவிப்பு!!

சித்திரை புத்தாண்டுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்பட மாட்டாது என அரச நிர்வாக அமைச்சு சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

எனினும் அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

தலைமை அதிகாரிகள் தவிர ஏனைய அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறவிட வேண்டிய தவணை மற்றும் வட்டி என்பன சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவின் ஆபத்தை கண்டுக்கொள்ளாத கொழும்பு மக்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் காரணமாக நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆபத்தினை கொழும்பு வாழ் மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கொழும்பு மெனிங் சந்தை சில தினங்களாக திறந்துள்ளது. எனினும் அங்கு பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் கூட்டமாக செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவதால் கொழும்பில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வோர் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றருக்கும் மேற்பட்ட இடைவெளியில் கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள்!!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

பயணிகள் எவரும் இல்லாமல் இந்த விமானங்கள் வந்துள்ளதுடன் இலங்கையில் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தமது நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக இந்த விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமது நாடுகள் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நேற்று மாலையும் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.

அதேவேளை ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் : நட்ட ஈட்டை கோரும் அமெரிக்கா!!

சீனாவுக்கு எதிராக அமரிக்காவின் முக்கிய சட்டத்தரணி ஒருவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சீனாவிடம் இருந்து 20 ரில்லியன் டொலர்களை அவர் நட்டஈடாக கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கை போன்ற நாடுகளும் சீனாவுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா சட்டத்தரணி கேட்டுள்ளார்.

லாரி லாய்மான் என்ற இந்த சட்டத்தரணி முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றேகனின நிர்வாகத்தின்கீழ் அரச சட்டவாதியாக இருந்தவராவார்.

இந்தநிலையில் தாம் இலங்கையர்கள் உட்பட்டவர்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக செயற்பட எதிர்பார்ப்பதாக லாய்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது. போரின் உயிரியல் ஆயுதமாகவே அதனை சீனா உருவாக்கியது.

இந்தநிலையில் சீனாவின் இந்த உயிரியல் ஆயுதம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது. அத்துடன் இதனை வுஹானில் உள்ள நச்சு உயிரியல் தொடர்பான படிப்பியல் நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற வகையில் வெளியில் பரப்பியதன் மூலம் அங்குள்ள பணியாளர்கள் சமூகத்தில் பரவுவதை தடுக்க தவறிவிட்டனர்.

அதேநேரம் அமெரிக்காவில் பெருகவும் வழிவகுத்தனர் என்றும் அமெரிக்க சட்டத்தரணி குற்றம சுமத்தியுள்ளனர்.

கொரோனாவால் ஓசோனில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம்.

அத்துடன் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலைகளை மூட நாடுகள் நடவடிக்கை எடுத்தன.

இதன் காரணமாக ஓசோன் படலத்தை பாதிக்கும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலுக்குள் வருவது குறைந்துள்ளது.

இதனால், ஓசோன் படலம் வழமையான நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த நிலைமை நீண்டகாலம் நீடித்தால், ஓசோன் படலம் முற்றாக வழமை நிலைமைக்கு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக உலகம் முழுவதும் நடக்கும் இயற்கை அனர்த்தங்களை பெரும்பாலும் தவிர்க்க முடியும் எனவும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊரடங்கு நீக்கப்பட்ட பின் பெண் ஒருவருடன் விடுதியில் தங்கிய நபர் மரணம்!!

காலி எல்பிட்டி பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான இந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதே பிரதேசத்தை சேர்ந்த வேறு பெண்ணொருவருடன் விடுதிக்கு வந்து அறையில் தங்கியிருந்த போது அந்த நபருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அறையில் அந்த நபருடன் தங்கியிருந்த பெண் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்துள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உடலை பரிசோதித்தவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு செல்லும் முன்னர் குறித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த நபருடன் இந்த பெண் சுமார் ஒரு வருட காலமாக தவறான தொடர்பில் இருந்துள்ளது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எல்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் நிலைமை என்ன என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் எண்ணிக்கையானது இங்கிலாந்தில் முதல் இரண்டு வாரங்களில் அடையாளம் காணப்பட்டவர்களை விட மிக அதிகம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் முதல் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றிய 9 பேர் அடையாளம் காணப்பட்டனர். எனினும் இலங்கையில் முதல் இரண்டு வாரங்களில் 100 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சங்கத்தின் செயலாளர் மருத்துவ ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

35 நாட்களில் இங்கிலாந்தில் 110 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். 35 நாட்களில் இலங்கையின் நிலைமை என்ன என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் இதுவரை 11 ஆயிரத்து 658 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா!!

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது. புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்தது.

எனினும் சீனாவில் இருந்து தற்போது கிடைக்கும் செய்திகள் அந்த அளவுக்கு நல்ல செய்திகள் அல்ல. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த சுமார் 14 வீதமானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோன வைரஸ் தொற்றிய நிலையில் குணமடைந்த நோயாளிகளில் 3 வீதத்தில் இருந்து 14 வீதமானோருக்கு மீண்டும் அந்த வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டும் சுற்று தாக்குதல் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலகட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதிஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிபபிட்டார்.

இந்தநிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவது உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில், 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் மக்கள் கூடியமையால் குழப்பம்!!

வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் சமுர்த்திப் பணத்தைப் பெறுவதற்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடியமையால் குழப்ப நிலைமை இன்று காலை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சமுர்திக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்றைய தினம் வழங்கப்படும் என சமுர்த்தி உத்தியோகர்தர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் கடனும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமது சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கி முன்பாக காலை 4 மணியில் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர்.

மகாறம்பைக்குளம், மதீனாநகர், கோவில்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 500 பேர் வரையில் அங்கு குவிந்தனர். ஆனால் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 8.30 மணியளவில் வருகை தந்து 250 பயனாளிகளுக்கு மாத்திரமே இன்றைய தினம் வழங்க முடியும் என தெரிவித்ததுடன், ஏனையவர்களை திரும்பிச் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

இதன்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. காலை 4 மணியில் இருந்து மக்கள் காத்திருந்த நிலையில் ஒவ்வொரு கிராமமாக அறிவிக்காது எல்லோரையும் வரவைத்து திரும்பி அனுப்பியமையால் தாம் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அத்தியாவசியப் பொருடக்களைக் கூட கொள்வனவு செய்யாது சமுர்த்திக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்த வவுனியா நகரம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் சமூர்த்தி வங்கியில் எந்தவித திட்டமிடலும் இன்றி மக்கள் குவிந்தமையால் நோய் தொடர்பான அச்சம் கூட ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, வந்து திரும்பிச் சென்ற மக்களுக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு அவர்களை திங்கள் கிழமை காலை வருமாறு சமுர்தத்தி உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்பியிருந்தனர்.

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : சில வீதிகளுக்கு பூட்டு!!

ஊரடங்கு தளர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு பெருந்தளவிலான மக்கள் வருகை வந்துள்ளனர்.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (27.03.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனையடுத்து அத்தியாவசிப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.

அத்துடன் வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் நெறிப்படுத்தலின் கீழ் நகரசபை உத்தியோகத்தர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.

மரக்கறி விற்பளை நிலையங்கள் பரவலாக்கப்பமட்டுள்ளமையால் ஒரு பகுதியில் அதிகளவிலான மக்கள் குவிவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வு பதாதைகளும் வர்த்தக நிலையங்கள் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் வேகமாக பொருட்களை கொள்வனவு செய்வதினை அவதானிக்க முடிகின்றது.

நடிகர் சேதுராமன் மரணம்!!

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமின்றி மருத்துவரும் கூட.

இதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். மேலும், இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கியா நண்பரும் கூட.

சேதுராமனுக்கு இன்று மாரடைப்பு வர, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இந்த தகவலை நடிகர் சதீஷ் டுவிட்டரில் பகிர்ந்தார்.

மேலும், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் சேது ராமனுக்கு மிக குறைந்து வயது என்பாதால், இந்த வயதிலேயே மாரடைப்பா அதுவும் ஒரு மருத்துவருக்கே இப்படியா? என்று அனைவரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் ரூபாய் நிதியுதவி!!

இலங்கையில் கொரோனாவிற்கு எதிராக போராடும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 25 மில்லியன் (இலங்கை ரூபாய்) நிதியுதவி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கையில் 101 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவால் இலங்கையில் தேசிய சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ்க்கு எதிராக போராடி வரும் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக உடனடியாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உதவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பிலிருந்தும் வரும் ஆதரவு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஆதரவை வழங்க முன்வந்த அனைத்து தனிப்பட்ட வீரர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வவுனியா நெற் இணையதளத்தால் உலர் உணவுப் பொதிகள்!!

வவுனியாவில் ஆறு நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 15 குடும்பத்தினருக்கு வவுனியா நெற் இணையத்தளம் (www.vavuniyanet.com) மற்றும் வவுனியா வர்த்தகர் சக்திநாத் ஆகியோரினால் இன்று (26.03.2020) காலை உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 15 குடும்பத்தினருக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் 10 குடும்பங்களுக்கு வவுனியா நெற் இணையத்தளத்தின் (www.vavuniyanet.com) நிதி உதவியிலும் மிகுதி 5 குடும்பங்களுக்கு வவுனியா வர்த்தகர் சக்திநாத் அவர்களின் நிதி உதவியிலும் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மகாறம்பைக்குளம், தோணிக்கல், மணிபுரம், சிவபுரம், கற்குளம் படிவம் -3, செக்கட்டிப்புலவு ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 15 குடும்பத்திரை தெரிவு செய்து வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன், வவுனியா சிங்கர் முகாமையாளர் உதயகுமார் கஜதீபன், சமூக ஆர்வலர் டென்சிகா, செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சுப்பிரமணியம் கிருஷ்சிகா ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக ஆறு தினங்களும் காலை உணவை மூன்று நேரமும் சாப்பிடும் ஐந்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் இவ் உதவித்திட்டத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.