இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் திருமணம் முடித்த இளம் குடும்பஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் பிரான்சிலும் தமிழர்கள் பலர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.
இலங்கையில் கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 16 நாட்களுக்கு இலங்கை கண்ட முதல் வெற்றியாக இது கருதப்படுகின்றது.
கடந்த 10ஆம் திகதியின் பின்னர் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாகாத நாளாக நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 99 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
IDH வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் 10 பேரும், முல்லேரியா வைத்தியசாலையில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 255 பேர் வைத்திய கண்கானிப்பின் கீழ் உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகளில் மூன்று பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் குணமடைந்த நிலையில் விரைவில் வீடு செல்லவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அதற்கமைய மார்ச் 30 முதல் – ஏப்ரல் 3 வரை வீட்டில் இருந்து பணியாற்றும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சுய தனிமைப்படுத்தலுக்கு இடமளிப்பதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கம், தனியார் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்கள் எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே எதிர்வரும் 28ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.தாவடி பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த 4 வயதான சிறுமி இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை இன்று மாலையே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்க முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து 6 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டது.
எனினும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்த நிலையில் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த குழந்தை வீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
மேலும் தாவடிப்பகுதியில் இருந்து இன்று அனுமதிக்கபப்ட்டிருக்கும் 4வயது குழந்தைக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது என கேட்டபோது, காய்ச்சல் மற்றும் தடிமனை அடுத்தே சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
சிறுமி தாவடிப்பகுதி என்பதனாலும் சுவிஸ் மத போதகரால் தொற்றுக்குள்ளான கொன்ராக்டர் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் உறவு என்பதனாலும் அவரை சோதனைக்குட்படுத்தப்படல் என்பது அவசியமாகும். நாளைய தினம் தான் சிறுமியின் இரத்த மாதிரி முடிவு வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 466,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 331,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 113,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் மாத்திரம் 7500 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பை மையமாகக்கொண்ட சில்லறை விற்பனை இணையம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொருட்களை மிகைப்படுத்திய விலையில் விற்பனை செய்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சில்லறை விற்பனை இணையம் டின்மீன் ஒன்று 550 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ 180 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ 350 ரூபாவாகவும் பட்டியலிட்டிருந்ததாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நுகர்வோரிடம் இருந்து பெற்ற அதிக பணத்தை மீண்டும் செலுத்த இந்த சில்லறை விற்பனை இணையம் இணங்கியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டின்மீன், பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு அண்மையில் அரசினால் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் சாதாரணமாக சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகில் பல நாடுகளுக்கு பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டமானது அமுலில் இருந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொது மக்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய சேவைகள் தவிர பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதேபோல நம் நாட்டின் இயற்கை வளங்களை சூரையாடும் நாசகார கும்பல்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் பரிமாற்றம் பல தடுக்கப்பட்டுள்ளன, மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களாக மீன் பிடி தொழிலும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதிலும் குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளமை காரணமாக கடலில் மீன் வளம் பெருகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் 4 நாட்களுக்கு பின்னர் கடற்றொழிலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்றிருந்த யாழ். கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 4000 கிலோகிராம் பாரை மீன் அகப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று கல்முனையில் அதிகளவான வளையா மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை புறநகர் பகுதிகளில் மீனவரொருவருக்கு சொந்தமான தோனியில் சுமார் 30 முதல் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தற்போதைய கட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பொலிஸார், அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் தான் கடலில் மீன்வளம் அதிகரித்துள்ளதாக சமூக அவதானிகள் கூறுகின்றனர்.
எனவே மனிதர்களாகிய நாம் கொரோனா வந்தால் மாத்திரமே இயற்கைக்கு எதிராக செய்யும் நாசகார செயல்களை நிறுத்துவோமானால் இயற்கை கொடுக்கும் பேரழிவில் எண்ணிலடங்காத உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
எனவே நாம் நமது சுகாதாரத்தையும் பாதுகாத்து கொண்டு, இயற்கை வளங்களையும் பாதுகாப்பாக பேணி வாழ்வோமானால் மனித இனத்திற்கு எதிரான இயற்கை பேரழிவுகளும் சாத்தியமில்லை.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் நான்கில் ஒரு பகுதி லொக்டவுன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1.3 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவை முழுமையாக முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய குறைந்த பட்சம் 7.8 பில்லியன் மக்கள் வாழும் உலகில் நான்கில் ஒரு பகுதியில் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் தொற்று காரணமாக ருவாண்டாவில் இருந்து கலிபோர்னியா வரையிலும், நிவ்யோர்க்கில் இருந்து நியூசிலாந்து வரையும் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் அமெரிக்காவில் அரைவாசிப் பேர் தற்போது வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாழன் நள்ளிரவு முதல் தென்னாபிரிக்காவிலுள்ள அனைத்து நாடுகளிலுள்ள மக்களும் 21 நாட்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் நான்கு இலட்சத்து 68 ஆயிரத்து 905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கை ஹோட்டல்களில் தங்குவதற்கு, உரிமையாளர்கள் அனுமதி வழங்குவதனை புறக்கணித்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாட்டு தம்பதி ஒன்றுக்கு தங்க இடம் இல்லாமல் போயுள்ளது. இதனால் காட்டிற்குள் சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து வசித்து வருகின்றனர்.
பின்னர் பொலிஸார் அவர்கள் தங்குவதற்கு பொருத்தமான இடம் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்காண்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றியமையினால் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக IDH வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனைர்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒரு நோயாளியேனும் பதிவாகாத நிலையில் இலங்கையில் இதுவரையில் பதிவாகிய நோயாளிகளின் எண்ணிக்கை 102 ஆகும்.
102 பேரில் மூன்று பேர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளில் நுட்ப ரீதியான கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கையில் அடையாளம் காணப்படாத 550 கொரோனோ தொற்று நோயாளிகள் சமூகத்தில் நடமாடி வருவருவதற்கான சாத்தியங்கள் உண்டு என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொற்று நோயாளிகள் கிட்டத்தட்ட 19 ஆயிரம் பேருடன் தொடா்புக்களைக் கொண்டிருக்கலாம் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்படாவிட்டால் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சூழ்நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 முதல் ஏப்ரல் 7 வரை சமூக இடைவெளிகளை மேற்கொள்ளவில்லை என்றால்,கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார ஆலோசனைகள் பொதுமக்களால் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு மூலமான தனிமைப்படுத்தலே பாதிப்புக்களைத் தடுக்க ஒரே வழி எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோரானா வைரஸ் தொற்றுப் பரம்பலை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக சுழற்சி முறையில் 60-72 மணித்தியால இடைவெளியில் 8 மணித்தியாளங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த நபர் அங்கொடையில் உள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமாகிய நிலையில் இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளியாக கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியுடன் இருந்த நிலையிலேயே இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக புதிய சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 வீதமானவர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
பெண்களை விட ஆண்கள் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கொரோனா பாதிப்பு உள்ளான அமெரிக்கர்கள் அதனை மறைப்பதாக அமெரிக்காவின் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதனால், காணப்படும் நிலைமை குறித்து உலகளாவிய ரீதியாக புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அறை குறையாகவும் முழுமையாகவும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இவை அனைத்துக்கு சவால் விடுத்து கொரோனா வைரஸ் உலகம்முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும் நபர்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளிகளை பேண வேண்டியது முக்கியமானது என சுகாதார அதிகாரிகள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முகக்கவசத்தை அணிவதற்கான நுட்பங்கள், அதன் சரியான பயன்பாடு மற்றும் அதை அகற்றுதல் ஆகியவை கவனமாக துல்லியமாக செய்யப்பட வேண்டும் அப்படி செய்யப்படாத இடத்து கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவும் என்று சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பாபா பாலிஹவதன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவாததால், பொது மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என கருத்துரைக்கும் வைத்தியர் மேலும் குறிப்பிடுகையில்..
தற்போது அந்த முக கவசங்களை பயன்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே முக கவசங்களை அணிய வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
மேலும் ஒரு சாதாரண நபர் அதைப் பயன்படுத்துவது கடினம் முக கவசத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று டொக்டர் பாலிஹவதன எச்சரித்தார்.
மேலும் 4 வைரஸ் தொற்று நோயாளர்கள் இன்று (நேற்று)பதிவாகியுள்ளதாக மருத்துவ நிபுணர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.
இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அமெரிக்காவிலிருந்து மற்றொரு நபர். இலங்கையில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கை மாவட்டங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஏனெனில் இதுவரை கண்டறியப்பட்ட 102 தொற்று நோயளர்களில் பெரும்பாலானவை அந்த மாவட்டங்களான கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேரும், கலுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா இல்லையா என்பதை விட , அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது அவசியம், என்று டொக்டர் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தினார்.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 9 பேர் கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மாவட்ட ரீதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.