10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்!!

10 வயது சிறுமியை..

ஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதை விட இளைய பெண்கள் ஒரு நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

பிரித்தானிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் படி, ஈரானில் சுமார் 17 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

“ஈரானிய சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியுடன், அவளது வயதைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அனுமதியின்றி பா லியல் நடத்தைகளில் ஈடுபட உரிமை உள்ளதாக கூறுகிறது. ஆண்கள் தங்கள் குழந்தை மனைவிகளை பா லியல் ப லாத்காரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சட்டம் கூறுகிறது”.

இந்த நிலையில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமிக்கு 9 வயது முதல் 11 வயதிற்குள் இருக்கலாம் என கூறுகின்றனர். அந்த வீடியோ காட்சியில் “பாத்திமா, மிலாட் ஜஷானியை திருமணம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று மதகுரு கேட்க, “என் பெற்றோரின் அனுமதியுடன், ஆம்.” என பதிலளிக்கிறார்.

மணமகனும் திருமணம் செய்துகொள்கிறேன் என பதில்கொடுக்க, அவர்களது குடும்பத்தினர் பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும், புதுமணத் தம்பதிகள் சிரிப்பதும் அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.

இந்த திருமணம் ஈரான் குடும்பச் சட்டத்தின் 50 வது பிரிவை மீறியது, இது சட்டபூர்வமான வயதை எட்டாத ஒரு பெண்ணை மணக்கும் மனிதனுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது.

இதற்கிடையில் இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பனையேறி கள் இறக்கும் முதல் கேரள பெண் : துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு!!

கேரள பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக, பெண் ஒருவர் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. 33 வயதாகும் இவர் சராசரி குடும்பப் பெண்ணாக இருந்து வந்தார்.

ஆனால், பனையேறும் தொழில் செய்து வந்த இவரது கணவர், சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதனால் ஷீபாவின் குடும்பம் வறுமையில் வாடியது.

அதனைத் தொடர்ந்து, தானே கணவரின் தொழிலை செய்ய ஷீபா நினைத்தார். குடும்ப வறுமையை போக்க அவர் தற்போது பனையேறும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவரது முயற்சிக்கு சமூகத்தினர் பல காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போட்டனர்.

எனினும், தொடக்கத்தில் கற்றுக்கொள்ள சிரமமாக இருந்த இந்த தொழிலை, தொடர் விடா முயற்சியால் கற்றுக் கொண்டார். தனது வளர்ப்பு நாயுடன் விளைநிலங்களுக்கு செல்லும் ஷீபா, நாளொன்றுக்கு ரூ.350 வரை சம்பாதித்து வருகிறார்.

அத்துடன் உயரத்தை பொருட்படுத்தாமல் தென்னை, ரப்பர் மரங்களிலும் ஏறி தனக்கு கொடுக்கப்படும் பணிகளை செய்து வருகிறார். தற்போது ஷீபாவை பலரும் கள் இறக்கு பணிக்கு அழைக்கின்றனர். மேலும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ் வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்!!

தீ விபத்து

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்து ஏற்படக் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தீ விபத்து தொடர்பில் மக்கள் உடனடியாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் மற்றும் கிளை முகாமையாளர் ஆகியோருக்கு அறிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மின் பிறப்பாக்கி அறை, மின் பிறப்பாக்கி என்பன முழுதாக எரிந்து நாசமானது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கனமழை

வவுனியாவில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தமையினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் காலை 10 மணியளவில் மழை சற்று ஓய்ந்தது.

எனினும் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டதுடன் நகர்ப்பகுதியில் மக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்டது.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.

இதேவேளை வட பகுதியிலும் பரவலாக மழை பெய்திருந்ததுடன் பல வீதி அபிவிருத்திப் பணிகள் பாதிப்படைந்துள்ளதாக ஒப்பந்தக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் ஆபத்தான காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

ஆபத்தான காலநிலை

இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஆபத்தான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அடைமழை மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்தவரும் 24 மணி நேரத்தில் சுமார் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது. இதன்போது பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இடர்காப்பு மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. அதற்கமைய நுவரெலியா, இரத்தினபுரி , களுத்துறை , கேகாலை மாவட்டங்களுக்கு உட்பட்ட அம்பகமுவ, புலத்சிங்கள, கிரியெல்ல, கடலவன, வரக்காபொல, மத்துகம ஆகிய பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் : மக்கள் அவதி!!

மக்கள் அவதி..

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (16.09.2019) காலை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30, 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டத்திற்கு செப்டம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு வழங்கும் ரீதியில் வவுனியா சாலை ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இ.போ.ச வவுனியா சாலைக்கு முன்பாக இ.போ.ச ஊழியர்கள் இன்று (16.09.2019) காலை ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சகல ஊழியர்களுக்கும் உடனடியாக நிரந்த நியமனம் வழங்க வேண்டும், 2019ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 ரூபாவை வழங்கு, சாரதி, காப்பாளர்,

தொழிநுட்பபிரிவு ஊழியர்களுக்கு 2019 ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட ரூபா 2000 சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வேண்டும் போன்ற பாதாதைகளை ஏந்திய வண்ணம் சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையினை புறக்கணித்த வர்த்தக நிலையங்கள்!!

தமிழ் மக்கள் பேரவை

எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரித்து வவுனியா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமை போன்று வவுனியா நகரின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

யாழ் நகரில் நடைபெறும் கூட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டுமாறு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையினை வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் நிராகரித்ததுடன் பேரவையின் கோரிக்கையினை தாம் நிராகரிப்பதாக தெரிவித்து வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்றையதினம் (16.09.2019) திறக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவின் செயற்பாடு வழமை போன்று காணப்படுகின்றது.

அத்துடன் வவுனியாவில் போக்குவரத்து சேவைகள், பாடசாலைகள், சந்தைகள் போன்றனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அடைமழை : நீரில் மூழ்கிய பல வீடுகள்!!

அடைமழை

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதாக திணைக்களத்தில் பிரதி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையின் கீழ்மட்ட பகுதிகள் மற்றும் பல வீதிகள் இவ்வாறு நீரில் மூழகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் ஹுங்கம பட்டஅத்த பிரதேசத்தில் இரண்டு அடி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த இடங்களில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை, வெலிகத்த பிரதேசத்தில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

யாழ். வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் மோட்டார்சைக்கிளில் கணவருடன் பயணித்த பெண்ணொருவர் விபத்திற்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வட்டுக்கோட்டையிலிருந்து சித்தன்கேணிக்கு கணவருடன் பயணித்த பெண்ணே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சங்கரத்தை பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிளின் சில்லிற்குள் பெண்ணின் சேலை சிக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து தலையில் பலத்த காயத்துடன் அந்த பெண் நோயாளர் காவு வண்டி மூலமாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கணவரும் அந்த வைத்தியசாலைக்கு செல்ல முற்சிக்கையில், அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவம் தொடர்பான விசாரணை என கூறி அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்ல தருமாறு கோரியுள்ளனர்.

எனினும் மனைவியை பாரக்க வைத்தியசாலை செல்ல வேண்டும் என்பதால் சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்க அனுமதிக்குமாறு கணவன் கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸார் அவருக்கு கை விலங்கிட்டு வீதியில் வைத்தே கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் அங்கு நின்றவர்கள் உடனே அவரை தாக்க வேண்டாம் என தெரிவித்து சாரதி அனுமதிப் பத்திரத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விபத்திற்கு இலக்கான பெண்ணுடைய கணவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும், மோட்டார்சைக்கிளையும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

மனைவி படுகாயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரை பார்க்க கணவன் செல்வதற்கு முயற்சித்த போது அவரை வீதியில் வைத்து தாக்கியமை குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!

வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலயம்

வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா திருவிழா கடந்த 12.09.2019 அன்று இடம்பெற்றது.

சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

இதேவேளை கடந்த 11.09.2019 அன்று சப்பறத் திருவிழாவும் 13.09.2019 அன்று தீர்த்தத் திருவிழாவும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தீர்த்தத் திருவிழா

சப்பறத் திருவிழா

யாழில் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி விவசாயக் கண்காட்சி – 2019!!

விவசாயக் கண்காட்சி – 2019

யாழ்ப்பாணம், பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
மத்திய விவசாயத் திணைக்களம்,

பொதுமக்கள், விவசாயிகள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள், மாதர் கிராமஅபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள்,

அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கின்றார் யாழ்ப்பான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன்

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துடன் தொடர்புடைய துறைகள், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் (வ.மா), இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனத் திணைக்களம் (வ.மா), கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை, கமநல அபிவிருத்தித் திணைக்களம்,

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, வளிமண்டலவியல் திணைக்களம், விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் கம்பனிகள், சுதேச மருத்துவத் திணைக்களம்(வ.மா), வங்கிகள், தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை, தனியார் நாற்றுமேடையாளர்கள், தென்னை ஆராய்ச்சி நிறுவனம், சமூகமட்ட அமைப்புக்கள், தென்னை அபிவிருத்தி அதிகார சபை, பனை ஆராய்ச்சி நிலையம், பனை அபிவிருத்திச் சபை

இக் கண்காட்சியின் தொனிப்பொருளினை அடைவதற்கான விவசாய தொழில்நுட்பங்கள் கீழ்வரும் தலைப்புக்களின் கீழ் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

விவசாய உற்பத்திப் புள்ளிவிபரங்களும் தகவல்களும்

இலங்கை மண்வளம், மண் சம்பந்தமான பிரச்சனைக்குரிய தீர்வுகள்

நெல் உற்பத்தியில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்

உள்நாட்டு மரக்கறிகள், மேல்நாட்டு மரக்கறிகள், கிழங்குப்பயிர்கள்,

இலைக்கறிவகைகள், தானியங்கள், அவரைப்பயிர்கள், எண்ணெய்ப்பயிர்கள், பழப்பயிர்கள்

உயர்தர நாற்றுக்களின் உற்பத்தி

சேதன விவசாயம்

நிலைபேறான சேதன வீட்டுத்தோட்டம்

ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை

மண்ணின்றிய பயிர்ச்செய்கை

சிறுதானியப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தல்

ஊடு பயிர்ச்செய்கை

கொள்கலன்களில் மரக்கறிப் பயிர்ச்செய்கை.

நகர்ப்புற வீட்டுத்தோட்டம்

வரட்சியான காலங்களில் வலை வீடுகளில் மரக்கறிப் பயிர்ச்செய்கை

நீர்முகாமைத்துவமும் நிலத்தடிநீர் சேமிப்பும்

வீதிமுறைப் பயிர்ச் செய்கை

பயிர்ப்பாதுகாப்பு செயல்முறைகள்

காளான் செய்கை

தேனீ வளர்ப்பு

அறுவடைக்குப் பின்னான இழப்புக்களைக் குறைத்தலும் தரத்தினை மேம்படுத்தலும்

உற்பத்திப் பொருட்களின் பெறுமானத்தை அதிகரித்தல்

பண்ணை இயந்திரங்களின் பாவனையை மேம்படுத்தல்

விலங்கு வேளாண்மை

விவசாய ஆராய்ச்சிச் செயற்பாடுகள்

பல்கலைக் கழகத்தின் விவசாய புத்தாக்கங்கள்

தென்னை அபிவிருத்தி;

மரமுந்திரிகை அபிவிருத்தி

;பனைவள அபிவிருத்தி

அலங்கார தாவரவளர்ப்பு

மூலிகைத் தாவர விருத்தியும் பயன்பாடும்

நஞ்சற்ற போசணை மிகு உணவுகள்

சிறு ஏற்றுமதிப் பயிர்கள

காலநிலையினை அளவிடும் கருவிகளும் அவதானங்களும்

விற்பனை

விவசாயம் தொடர்பான பிரசுரங்கள்

பாரம்பரிய உணவுகள்

பழமரக் கன்றுகள்; தென்னை, மற்றைய மரக்கன்றுகள் மற்றும் அலங்காரநாற்றுகள்

பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகள்

மரக்கறி விதைகள், தரமான மரக்கறி நாற்றுக்கள்;

விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் கம்பனிகளின் உற்பத்திகள் (பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றன)

வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு மாதத்திற்குள் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப் பணம் விநியோகம்!!

வவுனியா வர்த்தக சங்கத்தினால் கடந்த ஒரு மாதத்தினுள் 10லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப்பணம் வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியினையடுத்து வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு சில்லறை பணம் தேவைப்படும் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் காரியாலத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் விடுத்திருந்தோம்.

இவ் அறிவிப்பினையடுத்து கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லறைப்பணம் வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போதும் தினசரி வர்த்தகர்கள் வர்த்தக சங்க காரியாலத்தில் சில்லறைப்பணத்தினை பெற்று வருவதாகவும் வர்த்தக சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களில் சில்லறைப் பணத்திற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாகவே மிகுதிச் சில்லறைப் பணத்திற்கு பதிலாக நாங்கள் இனிப்புகளை வழங்கி வந்தோம்.

தற்போது வவுனியா வர்த்தக சங்கத்தின் உதவியுடன் பொதுமக்களுக்கு சில்லறைப்பணத்தினை வழங்கக்கூடியதாகவுள்ளதாக வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கனடாவுக்கு செல்வதற்காக மோசமான செயலை செய்த மகள் : கண்ணீர்விட்ட தந்தை!!

காதலனுடன் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தந்தையிடம் க டத்தல் நாடகம் போட்ட மகள் கைதாகியுள்ள நிலையில் அவரிடம் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வித்யா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் வித்யா கடந்த வியாழன் தனது சகோதரரை இண்டர்னெட் காலில் தொடர்பு கொண்டு தன்னை யாரோ க டத்திவிட்டதாக கூறினார்.

இது குறித்து சகோதரர் தனது தந்தை ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆறுமுகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் வித்யாவை ஒப்படைக்க வேண்டுமென்றால் பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டினான்.

இதையடுத்து சென்னைக்கு பதறியடித்து கொண்டு வந்த ஆறுமுகம் கோயம்பேடு பொலிசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் வித்யா தனது காதலன் மனோஜுடன் சேர்ந்து க டத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது.

மலேசியாவில் பணிபுரிந்த மனோஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கனடாவுக்கு சென்று செட்டில் ஆக நினைத்துள்ளனர்.

அதற்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால், தனது தந்தையிடம் பணம் கேட்டு மி ரட்ட க டத்தல் நாடக திட்டத்தை வித்யாவே மனோஜுக்கு வகுத்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மகள் வித்யாவிடம் ஆறுமுகம் பேசினார்.

அவர் பேசுகையில், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் அசிங்கப்படுத்திட்டியே, உன்னை சிறைக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஏற்கனவே அனுபவித்துவிட்டார் : திடீரென விடுவிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் மோகனரூபன் (25). இவர் இலங்கையில் நடைபெற்ற போரின் போது அங்கிருந்து குடும்பத்துடன் தமிழகம் வந்து தங்கியிருந்தார்.

அதன் பின்னர் இலங்கையில் அமைதி திரும்பியதும் குடும்பத்துடன் அங்கு சென்ற அவர் மண்டபம் முகாமில் உள்ள பாட்டியை பார்ப்பதற்காக சுற்றுலா விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ராமநாதபுரம் வந்துள்ளார்.

விசா காலம் முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக தங்கி இருந்து பெயிண்டராக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மோகனரூபன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பொலிசார் அவரை பிடித்து விசாரித்ததில் விசா காலம் முடிந்து உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், மோகனரூபனுக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் வரை சிறையில் இருந்ததால் தண்டனை காலத்தினை அனுபவித்ததாக கருதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

திலீபனின் நினைவு தினம்

இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈழத்தமிழன் உரிமையை வலியுறுத்தி நீராகாரமின்றி அஹிம்சைப் போராட்டத்தை பாரத நாட்டிற்கு பாடம் புகட்டிய ஈழத்தமிழர்களின் தவப்புதல்வன் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (15.09.2019) காலை நடைபெற்றது.

உலகத் தமிழ் தேசிய மக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நினைவு தினத்தில் 4வயது சிறுவன் முதலாவது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்ததுடன் அங்கிருந்த அனைவரும் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் உலகத் தமிழ் தேசிய மக்கள் அமைப்பின் செயலாளர் அந்தோனிப்பிள்ளை யோகராணி , நகரசபை உறுப்பினர் பா.பிரசன்னா, அருட்தந்தை கலாநிதி ஜோன்கோல், புதுக்குளம் மகா வித்தியாலய அதிபர் கணேஸ்வரன், வட இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன், யாழ் மாவட்ட சமாதான நீதவான் சங்க செயலாளர் ஜெயக்குமார் , மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவிற்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள்!!

பெருமை சேர்த்த தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட நாட்டார் பாடல் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

தேசியமட்டப் போட்டியில் மாணவர்கள் முதலாவது இடத்தினை பெறுவதற்கு மாணவர்களை நெறிபடுத்திய ஆசிரியை திருமதி நந்தினி சபாநாதன் அவர்களுக்கும் குறித்த மாணவர்களுக்கும் பாடசாலை சமூகமும் வவுனியா வாழ் மக்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

நாட்டார் பாடல் போட்டியில் முதலாவது இடத்தினை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயமும் , இரண்டாவது இடத்தினை ஹோலிரோசரி த.ம.வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.