முச்சக்கரவண்டி விபத்தில் 9 பேர் படுகாயம்!!

நாவலப்பிட்டியில் இன்று (02.07.2019) இடம்பெற்ற விபத்தில் 09 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் முதலாம் மற்றும் 03ம் வகுப்புகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 08 பேர் இந்த முக்கச்சர வண்டியில் பயணம் செய்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட 09 பேரும் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, இதில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வட்ஸ் அப்பால் அடித்த அதிர்ஷ்டம் : லட்சக்கணக்கில் சம்பாதித்த தம்பதி : எப்படி தெரியுமா?

இந்தியாவில் வாட்ஸ் அப் குழு உதவியால் தம்பதி தங்கள் உடல் எடையை குறைத்துள்ளதுடன் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஆதித்யா – காயத்ரி. திருமணத்துக்கு பின்னர் இந்த தம்பதியின் உடல் எடை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கூகுளில் எடை குறைப்பு வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து எடை குறைக்க முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்த நேரத்தில் தான் இவர்களது வாட்ஸ் அப் குழுவில் எடை குறைப்பதற்கான போட்டி குறித்த மெசேஜ் வந்துள்ளது. பின்னர் அந்த மெசேஜை அனுப்பிய நிறுவனம் ஆதித்யா, காயத்ரியை வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ளது.

சில மாதங்களில் நடைபெறும் எடை குறைப்பு போட்டியில் தங்களது எடையை அதிகப்படியாக குறைக்கும் நபர்களுக்கு 20 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படம் என வாட்ஸ் அப் குழுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்துக் கொள்ள ஆதித்யாவும் காயத்ரியும் முடிவு எடுத்துள்ளனர்.

பரிசுத் தொகையும் வெல்ல வேண்டும், உடல் எடையையும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இருவரும் கலந்து கொண்டனர். பின்னர் கடின உழைப்பின் காரணமாக ஆதித்யாவும் காயத்ரியும் 23 கிலோ வரை எடையை குறைத்து பரிசை சொந்தமாக்கியுள்ளனர்.

இதையடுத்து முன்னர் இருந்த புகைப்படத்தையும் தற்போது கட்டுடல் உடன் இருக்கும் புகைப்படத்தையும் தம்பதி சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

போட்டியில் வென்ற பணத்தில் இந்த தம்பதியினர் சொந்தமாக உடற்பயிற்சி கூடத்தை தொடங்கி மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

அண்ணன்களால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை தங்கை காதலித்த நிலையில், அவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ளும் படி கண்மூடித்தனமாக தா க்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச் சியடைய வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பட்டியலின இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞருடன் இப்பெண் சென்றுவிட்டதால், பெண்ணை காணவில்லை என்று சகோதரர்கள் காவல் நிலையத்தில் தெரிவிக்க, பொலிசார் அப்பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த சகோதரர்கள் தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, கடந்த ஜூன் 25-ஆம் திகதி அன்று, அந்த பெண்ணை தர தரவென இழுத்து சென்று, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்தி, பெண்ணின் சகோதரர்கள் உட்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன் புறுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அந்த பெண் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. நீளமான குச்சிகளை வைத்து அந்த பெண்ணின் முதுகு, கால் ஆகிய இடங்களில் தாக் கப்படும் வீடியோ காட்சிகள், வெளியாகி காண்போரை அதிர செய்துள்ளது.

வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்த வீடியோவில் இருக்கும் வாகன் எண்ணை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்த வில்லுவராச்சி நாளை (03.07.2019) முதல் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவிற்கான புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.

தலைமன்னார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

மன்னார் – தலைமன்னார், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று மதியம் அரச பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது படுகாயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கா.கார்லின் ஜேம்ஸ் டயஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றைய இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலையில் குழவி கொட்டியதில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தின் மாணவர்கள் மீது குழவி கொட்டியதில் பாதிப்படைந்த 10 மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (02.07) மதியம் பாடசாலை நிறைவடைந்த பின் மாணவர்கள் பாடசாலையின் பிரதான வாயில்ஊடாக வீடு சென்ற போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

காற்று காரணமாக பிரதான வாயில் அருகே பாடசாலைக்கு வெளியே நின்ற மரம் ஒன்றில் இருந்த குழவிகள் கலைந்து மாணவர்கள் மீது கொட்டியுள்ளது. இதனால் 10 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பில் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த 10 மாணவர்களும் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலை விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் புகையிரத்துடன் மோதுண்டு காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (02.07.2019) காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலுடன் தாண்டிக்குளம் பகுதியில் 10.45 மணியளவில் ரயில் கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளே இவ்வாறு குறித்த ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளன.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பயணிகள் தரிப்பிடப்பகுதிக்கு பின்பாகவுள்ள மாடுகளும் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு மாடும் இவ்வாறு ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முகமாலை பகுதியில் 21 ஆடுகள் ரயில்ககடவையில் சென்றபோது ரயிலுடன் மோதி உயிரிழந்ததையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாகவே கால்நடைகள் மேய்ச்சல் தரைகளை, தண்ணீரை நாடிச் செல்லும்போது ரயில்கடவைகளிலுள்ள பயிர்ச் செடிகளை உண்ணுவதற்காகச் சென்றபோது இவ்வாறு உயிரிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளம் மதுபானசாலை பொலிஸாரினால் இழுத்து மூடப்பட்டது : இருவர் கைது!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்றிரவு (01.07.2019) 9.20 மணியளவில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக பொலிஸாரினால் மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது.

வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள மதுபானசாலையில் சில நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதலில் ஈடுபட்டிருந்த நபர்கள் மதுபானசாலைக்குள் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன் வெளியிலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலமை காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் அவ்விடத்தில் நிலவிய பதற்றத்தை நீங்கியதுடன் மதுபானசாலையினை மூடுமாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தமையினையடுத்து மதுபானசாலை இழுத்து மூடப்பட்டது

அத்துடன் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறித்த மதுபானசாலையில் தினசரி இவ்வாறான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தரணிக்குளத்திற்கு 16 வருடங்களின் பின் பேரூந்து சேவை ஆரம்பம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவை இன்று(01.07.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2003ம் ஆண்டு தரணிக்குளம் புதிய நகரில் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அக் கிராமத்தில் 188 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான போக்குவரத்து சேவையின்றி 16 வருடங்களான அக்கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியோர் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கு விடுத்த கோரிக்கையினையடுத்து கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்திருந்தது.

இதன் அடிப்டையில் தினசரி மூன்று சேவைகளை தனியார் பேரூந்துகள் முன்னெடுக்கவுள்ளன. கிடாச்சூரி பகுதியிலிருந்து காலை 5.50, காலை 10.10, மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகும் சேவைகள் தரணிக்குளம் புதிய நகருக்கு சென்று பயணிகளை ஏற்றுக்கொண்டு வவுனியா நோக்கி பயணிக்கும் எனவும் வவுனியாவிலிருந்து காலை 10.00 மணி , மதியம் 1.10, மாலை 5.25மணிக்கு ஆரம்பமாகும் சேவைகள் தரணிக்குளம் புதிய நகர் நோக்கி பயணிக்கும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் அக்கிராம மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

தரணிக்குளம் புதிய நகருடான பேரூந்து சேவையினை ஆரம்பித்து வைக்கும் இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிராம சேவையாளர் திவ்யப் பிரியா நாடாவெட்டி பேரூந்து சேவையினை ஆரம்பித்து வைத்ததுடன் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேரூந்தில் புதிய நகருக்கு பிரயாணம் மேற்கொண்டனர்.

வவுனியா மூனாமடுக் குளத்தின் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு!!

வறட்சியான காலநிலை நீடிப்பதனால் வவுனியா, மூனாமடுக் குளத்தின் கீழான விவசாய நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளம் வறட்சி காரணமாகவும், சிறுபோக நெற் செய்கைக்கு நீர் அதிகமாக இறைத்தமை காரணமாகவும் குளத்து நீர் வற்றியுள்ளது.

இதன்காரணமாக குறித்த குளத்தின் கீழான 45 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் நீர் இன்றி வறட்சியினால் பாதிப்படைந்துள்ளது.

அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சியும், குளத்து நீர் வற்றியமையும் விவசாயிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வட – கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு!!

வட – கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று (01.07) வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது வரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தின் மத்திய இடமான வவுனியாவில் நடைபெற்று வருவதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்னிசை நிகழ்வுகள்!!

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அச்சம்பவத்திலிருந்து மக்களை மீண்டு பழைய நிலைக்குத் திரும்பவும் இனங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட பிரிவினையை முற்றாக மாற்றிக்கொள்ளும் நோக்கிலும் வவுனியா வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கிலும்

இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரிவின் எற்பாட்டில் அக்கினி இசைக்குழுவின் இன்னிசை இரவு நிகழ்வு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 06.07.2019 மாலை 7மணியளவில் நகரசபை திறந்த மைதானத்தில் வர்த்தகர் சங்கம், வவுனியா முஸ்லிம் பள்ளிவாசல்களுடன் இணைந்து நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள அக்கினி இசைக்குழுவின் இன்னிசை விருந்தை வழங்கவுள்ளனர்.

நகரசபை திறந்த மைதானத்தில் இலவசமாக இடம்பெறவுள்ள இன்னிசை நிகழ்வு தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் மீண்டும் தமது வாழ்க்கை முறைக்குத் திரும்ப இன்னிசை நிகழ்ச்சி உதவும் என்று படையினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் போதை ஒழிப்புப் பேரணி!!

வவுனியாவில் இன்று காலை கண்டி வீதியிலுள்ள பௌத்த விகாரையிலிருந்து ஆரம்பமான போதை ஒழிப்புப் பேரணி கண்டி பிரதான வீதி வழியாக மணிக்கூட்டு வீதி வழியாக திரும்பவும் பௌத்த விகாரையைச் சென்றடைந்தது.

சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதை ஒழிப்புப் பேரணியில் சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிசார், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என 500ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடி குடியைக் கெடுக்கும், பாலகரை குடி என்கின்ற பாதாளத்தில் தள்ளாதே, போதை அற்ற தேசத்தில் வாழ்வோம்,

போதைப்பொருளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம், மதுவிலிருந்து வாலிபரைப் பாதுகாப்போம் போன்ற போதை எதிர்ப்பு பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இப் போதை ஒழிப்புப் பேரணி இடம்பெற்றது.

இலங்கை கடற்கரையில் மனைவியுடன் சென்ற வெளிநாட்டவர் பரிதாப மரணம்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் திருகோணமலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை, நிலாவெளி கடற்கரை பகுதியில் நேற்றிரவு குறித்த நபர் தனது மனைவியுடன் நடமாடிக் கொண்டிருந்த வேளை அவருக்கு மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அவுஸ்திரேலியா – தஸ்மினியா நகரைச் சேர்ந்த 67 வயதுடைய ரொடோல் யோன் லெஸ்மன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின் மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியா நாட்டுக்கு சடலத்தை கொண்டு செல்ல தூதரகத்தின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், திடீர் மரணம் தொடர்பில் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத் தடை!!

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01.07.2019) காலை நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்ததும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தைசுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றமை தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக இந் நடவடிக்கையினை மேற்கொண்ட நகரசபை ஊழியர் தெரிவித்தார்.

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் மோதுண்டே பெண் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு (30.06.2019) 11.30 மணியளவில் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ் விபத்தில் பலியாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.