யாழின் சில பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதிகள்!!

மீட்கப்பட்ட பொதிகள்

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இருந்து சுமார் 200 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கஞ்சா பொதிகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன, இருப்பினும் இச் சம்பவத்துடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் வேறு பகுதிக்கு இடம்மாற்றுவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மூதூர் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

எனினும் சிறுமியின் தற்கொலைக்கு “காதல் விவகாரமே” காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், யுவதியின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதுடன், இதன் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

வாகன விபத்து

நிக்கவெரட்டிய ஹூலோகம வீதியில் பேருந்து மற்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாரவூர்தியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, பாரவூர்தியுடன் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மற்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்!!

நீராடச் சென்று அலையில் சிக்கி..

கடந்த வாரம் தென்னிலங்கையில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

ஹட்டனை சேர்ந்த ஹசினி விஜேசூரிய என பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் நுவரெலியாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் யால பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார். பின்னர் கடலில் விளையாட சென்ற நிலையில் குறித்த பெண் தனது கணவன் மற்றும் மகள் இருவருடன் நீரில் மூழ்கியுள்ளார்.

அன்றை தினமே கணவர் மற்றும் மகள்கள் சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் ஹசினி மாத்திரம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். குறித்த மூவரதும் இறுதி சடங்கு கடந்த 25ஆம் திகதி ஹட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெற்றது. 7 நாள் நினைவு தினம் நிறைவடைந்த நிலையில் மனைவியும் நேற்று உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த குடும்பமும் கடல் அலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் நியூசிலாந்து சென்ற படகு மாயம் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!!

நியூசிலாந்து சென்ற படகு மாயம்

அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது. அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வர காரணம்.

ஆனால் தற்போது இந்த பகுதி முழுவதும் ஓர் இருள் சூழ்ந்துள்ளது. ஐந்து மாதங்களாக காணாமல் போன படகில் பயணம் செய்த 243 பேரில் 164 பேர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்தாம். கேரளாவின் கடற்கரை பகுதியில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட அந்த படகின் நிலை குறித்தும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்தும் ஒரு தகவலும் இல்லை.

ஜனவரி மாதம் 12ஆம் தேதி இந்த படகில் புறப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லை; எனவே இது ஒரு சட்ட விரோத பயணம். ஆனால் அவர்களுக்கு நியூசிலாந்தில் ஒரு நல்ல வாழ்வு உள்ளது என்று கூறி அந்த படகு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக பசிபிக் பெருங்கடல் கரையில் உள்ள நாடுகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஆனால் எந்த பதிலும் இதுவரை இல்லை என்றும் தெரிவிக்கிறது. “எங்களுக்கு அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்று தெரியாது. நாங்கள் கடைசியாக அவர்களிடம் ஜனவரி 11ஆம் தேதியன்று போனில் பேசினோம்,” என்கிறார் 68 வயது கனக லிங்கம்.

அந்த படகில் சென்ற டெல்லியின் மதன்கீர் சிலோன் காலனியை சேர்ந்த 164 பேரில் 47 பேர் கனக லிங்கத்தின் உறவினர்கள். அதில் அவரின் சகோதரர், மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளும் அடக்கம்.

ரவீந்திரன் என்பவர் தங்களின் குடியிருப்பில் வந்து வசித்ததாகவும் அவர், நியூசிலாந்துக்கு சென்றால் அங்கு ஒரு பிரகாசமான வாழ்க்கை இருப்பதாகவும், லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் அங்குள்ள மக்களிடம் ஆசை காட்டினார் என்றும் தெரிவிக்கிறார் கனக லிங்கம்.

மேலும் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கு அங்குள்ளவர்கள் தங்களின் நகைகளையும், வீடுகளையும் விற்றனர் என்கிறார் கனக லிங்கம். தனது உறவினர்கள் கடைசியாக தன்னை ஜனவரி 11ஆம் தேதியன்று தொடர்பு கொண்டதாகவும் நினைவு கூறுகிறார் கனக லிங்கம். அதே காலணியில் அதிகம் வெளிச்ச்சம் கூட இல்லாத ஒரு வீட்டில் கணவரை இழந்த சரஸ்வதி தனியாக வசித்து வருகிறார்.

அவர் அழும்போது அவரின் அக்கம் பக்கது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். சரஸ்வதியின் ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை அந்த படகில் சென்றுள்ளனர். அவரின் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு போனது அவருக்கு தெரியாது என்கிறார் சரஸ்வதி. கேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு செல்வதாக சொன்ன குடும்பத்தினருடன் அவரின் மகன் சென்றதாக கூறுகிறார் சரஸ்வதி.

படகு தொலைந்து போன செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவந்த பிறகே அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது. அந்த காலணியில் சில அதிர்ஷ்டசாலிகளும் உள்ளனர். ஆம். அந்த படகில் இடமில்லை என்று அவர்கள் அதில் ஏறவில்லை. அதில் ஒருவர்தான் பிரபு. ஆனால் அவரின் குடும்பத்தினர் அதில் சென்றுள்ளனர். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளா சராய் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

“எங்களை அழைத்து செல்ல இரண்டு சிற்றுந்துகள் வந்தன. ஆனால் அந்த சிற்றுந்து திரும்பி வரும் என்று கூறி அந்த முகவர் என்னை விட்டு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் எனது குடும்பத்தினர் அந்த சிற்றுந்தில் ஏறியிருந்தனர். நான் காத்திருக்க தொடங்கினேன். ஆனால் அந்த சிற்றுந்து வரவே இல்லை. அதன்பின் அந்த படகு சென்றுவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.

முனம்பம் கடற்கரையில் 80 பைகள் கேட்பாரற்று கிடப்பதாக தகவல் கிடைத்த சமயம் தான் தங்களுக்கு இந்த பயணம் குறித்து தெரியவந்தது என்கிறது கேரள போலீஸ். இந்த சம்பவம் தொடர்பில் குறைந்தது 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அதில் பலர் அந்த படகில் இடமில்லாமல் ஏற முடியாமல் போனவர்கள். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது வாரந்திர பத்திரிகையாளர் சந்திப்பில், படகில் சென்றவர்களின் உறவினர்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக தெரிவித்தார். தே மாதா -2 என்று அழைக்கப்பட்ட அந்த படகு குறித்து இந்தியா ஆஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள மதன்கிரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 70 பேர் பயணம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தனது காலணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் இல்லை என்பதை கனக லிங்கம் ஒப்புக் கொண்டார். மேலும் அவர்கள் அங்கு நன்றாக இருப்பதாகவும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

படகு குறித்த எந்த ஒரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்துக்கோ போலீஸாருக்கோ கிடைக்கவில்லை. ஆனால் தங்களின் உறவினர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை இவர்கள் விடுத்துள்ளனர்.

– BBC – Tamil

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து : மூன்று பெண்கள் பரிதாபமாக பலி, 6 பேர் காயம்!!

கோர விபத்து

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தலாவ – மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வான் ஒன்றும் லொரி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கல்நேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த லொரி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

வேனில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பெட்டி வழங்கலும்!!

வவுனியா மகாகச்சக்கொடிய ஆரம்பப் பாடசாலையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாமும் மாமடுவ பொலிஸ் நிலையப்பிரிவிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு முதலுதவிப் பெட்டி வழங்கல் நிகழ்வும் மாமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி செனரத் தலைமையில் இன்று (29.06) காலை இடம்பெற்றது.

வன்னிப்பிராந்திய சமுதாயப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் ஈஷி மிஷன் சபையின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய ஒரு நாள் இலவச மருத்துவ முகாமில் இரத்தப்பரிசோதனை, வாசிப்புக் கண்ணாடி வழங்கல், உயர் குருதி அழுத்தம், பல் மருத்துவம், கால் நடை மருத்துவம் போன்ற பலவிதமான நோய்களுக்குமான மருத்துவப் பரிசோதனைகளும், இடம்பெற்றிருந்ததுடன் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் நன்மையடைந்துள்ளனர்.

மாமடுவ பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கும் முதலுதவிப் பெட்டிகள் பாடசாலை அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புப் படையினர் இரத்ததான நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஈஷி மிஷன் சபையின் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கம், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், இரத்த வங்கி வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மாமடுவ பொலிசார், சிவில் சமூக அமைப்புக்கள் வன்னிப்பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா அரச கால்நடை வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை எடுத்துச் சென்றவர்களின் அவலநிலை!!

வவுனியா அரச கால்நடை வைத்திய நிலையம்

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு இன்று சென்ற பலர் அங்கு கால்நடை வைத்தியர் இன்றி தமது செல்லப்பிராணிகளுக்கு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு இன்று காலை 8மணிக்குச் சென்ற பலர் தங்களிடமுள்ள செல்லப்பிராணிகள், கால் நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வைத்தியர் அங்கு இருக்கவில்லை என்றும் நீண்ட நேரமாக காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் நண்பகல் 12மணியளவில் வீடு சென்றுள்ளதாகவும்,

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை கால் நடைகள் செல்லப்பிராணிகளைப் பார்வையிடும் நேரம் காலை 8.30மணியிலிருந்து 11.30 மணிவரையும் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்த ஊழியர் ஒருவர் வைத்தியர் வெளியே சென்றுள்ளார் அலுவலகத்திற்கு வருவதற்கு காலதாமதமாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அரச சேவையிலுள்ள பலர் விடுமுறை என்பதால் தமது செல்லப்பிராணிகளை மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு எடுத்துச் சென்றபோது அங்கு வைத்தியர் இன்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகவும் இவ்வாறு அரச அதிகாரத்திலுள்ளவர்கள் மக்களை ஏமாற்றிவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தொடர்புபட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கின்றனர்.

சிறையில் பொலிஸாரை திணற வைத்த இரட்டையர்கள் : சினிமாவை விஞ்சிய சம்பவம்!!

சினிமாவை விஞ்சிய சம்பவம்

துருக்கியில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி தன்னை போன்று இருந்த சகோதரனை சிறையில் வைத்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது. துருக்கியை சேர்ந்த முராத் (19) என்கிற இளைஞர் கொலை குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரது இரட்டை சகோதரன் ஹுசேன் ஒருமுறை முராத்தை சந்திப்பதற்காக சிறைக்கு சென்றுள்ளான். அந்த சமயத்தில் தனக்கு பதிலாக ஹுசேனை சிறையில் வைத்துவிட்டு முராத் அங்கிருந்து தப்பியுள்ளான்.

சிறையில் முக அடையாளம் காணும் இயந்திரம் இல்லாத காரணத்தால் பொலிஸாரால் கூட கண்டறிய முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சிறை அதிகாரி ஹுசேனை அடையாளம் கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வீட்டில் சுதந்திரமாக இருந்த முராத்தை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அதேசமயம் அவருடைய சகோதரன் ஹுசேனும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இரட்டையர்கள் என்ன காரணத்திற்காக தங்களுடைய இடத்தை மாற்றிக்கொண்டனர் என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞன்!!

இளம்பெண்

கர்நாடக மாநிலம் மங்களூரில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீக்ஷா என்கிற 22 வயது இளம்பெண் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுஷாந்த் (22) என்கிற இளைஞன் திடீரென தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு அந்த பெண்ணின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான்.

இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். உடனே சுஷாந்த் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளான். ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடியதால், தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

இதனை பார்க்க பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தீக்ஷாவின் நடன ஆசிரியரான சுஷாந்த் தொடர் காதல் தொல்லை கொடுத்ததும், அவர் மீது ஏற்கனவே பொலிஸில் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கணவருக்கு துரோகம் செய்த இளம் மனைவி : அதனால் அவருக்கு நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் இளம்பெண் கணவரை விவாகரத்து செய்ய மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி இளைஞரின் உயிரை பறித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் பிங்கி. இளம் பெண்ணான இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதத்துக்கு முன்னர் சன்னி (26) என்ற இளைஞருடன் பிங்கிக்கு கூடா நட்பு ஏற்பட்டது. இதையடுத்து சன்னியும், பிங்கியும் அடிக்கடி பைக்கில் வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். இதை சமீபத்தில் கண்டுபிடித்த பிங்கியின் கணவர் மனைவியை கண்டித்ததோடு இருவரும் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் கணவருக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது என தனது தவறை உணர்ந்த பிங்கி, சன்னியுடனான தொடர்பை துண்டித்தார். ஆனாலும் பிங்கியின் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அவர் வீட்டுக்கு வந்த சன்னி தொடர்ந்து பிங்கிக்கு தொல்லை கொடுத்தார்.

நேற்று காலை பிங்கி வீட்டுக்கு மீண்டும் வந்த சன்னி, கணவரை பிங்கி விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் வந்துவிடும் படி கூறினார். ஆனால் இதற்கு பிங்கி சம்மதிக்காத நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சன்னி பிங்கியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிங்கி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் சன்னிக்கு ஐசியூவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி வயிற்றை துளைத்த துப்பாக்கி குண்டு : நீதிமன்றம் அளித்த விசித்திர தீர்ப்பு!!

விசித்திர தீர்ப்பு

தென்கிழக்கு அமெரிக்காவில் தெருச்சண்டை ஒன்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு வயிற்றில் இருக்கும் பிள்ளையின் மரணத்திற்கு காரணமான பெண்ணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இந்த விசித்திர சம்பவம் நடந்தேறியுள்ளது. இதில் தெருச்சண்டையில் ஈடுபட்டு, தமது பிள்ளையின் உயிரை காப்பாற்ற அந்த பெண்மணி தவறியதாலையே 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

சம்பவத்தின்போது மார்ஷே ஜோன்ஸ் என்பவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வாகன நிறுத்தத்தில் எபனி ஜெமிசன் என்பவருடன் ஏற்பட்ட வாக்கு மோதல் துப்பாக்கிச் சூடு சம்பவமாக மாறியுள்ளது.

நீதிமன்ற விசாரணையில், தமது வயிற்றில் இருக்கும் பிள்ளையை பாதுகாக்க வேண்டியது தாயாரின் கடமை என சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,

இந்த விவகாரத்தில் மார்ஷே ஜோன்ஸ் என்பவர் ஜெமிசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், தொடர்ந்து அது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நீடித்ததற்கும் அவரே பொறுப்பு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டமானது கடுமையாக இருக்கும் நிலையில், கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு 10 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க திருத்தப்பட்ட சட்டத்தில் இடம் உள்ளது.

ஆனால் கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களை அங்குள்ள சட்டம் தண்டிப்பதில்லை. இந்த நிலையிலேயே மார்ஷே ஜோன்ஸ் தமது பிறக்காத பிள்ளையை பாதுகாக்க தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜோன்ஸுக்கு ஆதரவாக கருக்கலைப்பை ஆதரிக்கும் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.

வெளியூரில் வேலைசெய்த கணவன் வீட்டுக்கு வந்தபோது கண்ட காட்சி!!

கணவன் கண்ட காட்சி

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கு வட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நர்மதா தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். பிரகாஷ் சென்னை ஆவடியில் உள்ள ராணுவ பாதுகாப்பு சேவை மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் நர்மதா தேவி தனது குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறும், தனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் என்பவருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் தூக்கில் தொங்குவது போன்ற புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனே நர்மதா தேவி வீட்டிற்கு சென்றார். அப்போது அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீ்ட்டிற்குள் நர்மதா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

31 மில்லியன் டொலர்களுடன் துபாய் இளவரசி ஓட்டம் : ஆத்திரத்தில் அரசர்!!

துபாய் இளவரசி ஓட்டம்

துபாய் நாட்டு அரசனும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்டான் மன்னரின் சகோதரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவியுமான இளவரசி ஹயா (45) தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அவர் ஜெர்மனில் தஞ்சம் கோரியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரின் உதவியின் பேரில் தமது பிள்ளைகள் மகன் சயீத் (7) மற்றும் மகள் அல் ஜலீலா (11) ஆகியோருடன் 31 மில்லியன் டொலர்களை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ரஷீத் விடுத்த கோரிக்கையினை ஜேர்மன் அரசு நிராகரித்ததாக மத்திய கிழக்கு நாடுகளின் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது இருநாடுகளும் மத்தியில் ஒரு இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டியுள்ளது. மேலும் ஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துரோகி…. யாருடன் இப்பொழுது பிசியாக இருக்கிறாய்? என தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீப ஆண்டுகளாக கணவர் ரஷீத் மக்தூமுடன் ராயல் அஸ்காட் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் ஹயா, கடந்த வாரம் லண்டனில் நடந்த ராயல் அஸ்காட் விழாவில் கணவருடன் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் லண்டனில் இருந்து தான் தலைமறைவாகி இருக்கவேண்டும் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இளவரசி ஹயா தனது கணவரிடமிருந்து தப்பித்ததாக வெளியான தகவல்கள் குறித்து ஜேர்மன் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

ஜோர்டான் மன்னரின் சகோதரி – இளவரசி ஹயாவை தப்பி ஓட தூண்டியது குறித்து “கடுமையான கேள்விகள்” எழுந்துள்ளதாக துபாய் கண்காணிப்புக் குழுவின் தலைமை நிர்வாகி ராதா ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு துபாய் ஆட்சியாளர் ரஷீத் மக்தூமின் மகள் இளவரசி லதிஃபா, நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புக முயன்றபோது இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்ட அவர் தற்போது துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

முகம் சுளிக்க வைத்த ஆடையால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்!!

முகம் சுளிக்க வைத்த ஆடை..

முகம் சுளிக்க வைக்கும் ஆடையுடன் வந்த இங்கிலாந்து பெண்ணை, பணிப்பெண்கள் ஈஸிஜெட் விமானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஆஸ்போர்ன் (31) என்கிற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக புகார் கூறியுள்ளார். விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன் வைத்து என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னுடைய தோழியுடன் ஸ்பெயின் விமான நிலைய தரையிலேயே படுத்துறங்கிவிட்டு, மறுநாள் 149 டொலர்கள் செலுத்தி தான் நாடு திரும்பினேன் எனக்கூறியுள்ளார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள விமான நிர்வாகம், பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எங்களுடைய பணிப்பெண்களுக்கு முழு பயிற்சி கொடுத்துள்ளோம். ஹாரியட் உள்ளாடை ஏதுமின்றி ஆபாசமாக வந்துள்ளார்.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் அது நன்றாக இருக்காது என்பதால், எங்களுடைய பணிப்பெண் அனுமதி மறுத்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்தும் அவர் பணியாளர்களை அவமதித்துள்ளார். அதனால் தான் விமானத்தில் இருந்து வெளியேற்றினோம் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

கதவை திறந்ததும் கதறிய குழந்தைகள் : அனாதையாக தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய பெற்றோர்!!

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே புடவையில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மதன் (34), கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சரஸ்வதி (30) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு வெற்றிமாறன் (8) என்கிற மகனும், பிரவீனா (5) என்கிற மகளும் உள்ளனர். அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் இருவரையும், காலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துசென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்துவருவதை மதன் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

நேற்று மாலை பள்ளி முடிந்தும் அழைத்துவருவதற்கு மதன் செல்லாததால், வெற்றிமாறனும், பிரவீனாவும் சக மாணவர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீடு உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால், அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர். அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய தம்பதியை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளையும் அனாதையாக தவிக்கவிட்டு ஒரே புடவையில் பெற்றோர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.