வவுனியாவில் வடமாகாண ஆளுனர் எமக்கு சாதகமான பதிலை வழங்கினார் : வடமாகாண சுகாதார தொண்டர்கள்!!

வடமாகாண சுகாதார தொண்டர்கள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களுடன் இன்று (19.06.2019) வடமாகாண சுகாதார தொண்டர்கள் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது எமது சுகாதார தொண்டர்களில் 45 வயதினை தாண்டியவர் பலபேர் வடமாகாணத்தில் உள்ளனர். அந்த அடிப்படையில் ஆளுனர் அவர்கள் எமக்கு சாதகமான பதிலேயே எமக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக பணியாற்றவர்கள் என்ற ஒர் காரணத்தினால் வயதெல்லையினை 50 வயது வரை நீடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேர்முகத்தேர்வு இடம்பெற்றது. அந்த நேர்முக தேர்வின் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும் என ஆளுனர் தெரிவித்திருந்தார். எனினும் இதில் சுகாதார தொண்டர்கள் யாராவது விடுபடுபவார்களாகவிருந்தால் சம்பந்தபட்டவர்களை தங்களுடன் கலந்துரையாடுமாறும் எமக்கு சாதகமான பதிலேயே வழங்கியிருந்தார். இறுதி முடிவுக்காக வடமாகாண சுகாதார தொண்டர்கள் அனைவரும் காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் மக்களுடன் சந்திப்பு!!

ஆளுனர் மக்களுடன் சந்திப்பு

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று (19.06.2019) வவுனியாவில் இடம்பெற்றது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட இம் மக்கள் சந்திப்பில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாகாண ஆளுனரை சந்தித்து தமது பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இதன் மூலமாக பொதுமக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வினை அல்லது தீர்வுக்கான இலகு வழிகளை பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்!!

தியாகிகள் தினம்

ஈழமக்கள் புரட்சிகர முன்னனியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 29வது தியாகிகள் தினம் வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று காலை (19.06.2019) 10 மணியளவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மறைந்த தோழர் பத்மநாபா மற்றும் போராளிகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் ரேகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் அருந்தவராஜா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,

மேலும் அக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, ஆகியோருடன் ஈழவர் புரட்சி அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஜெகன் உட்பட அக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு!!

கட்டிடம் திறந்துவைப்பு

வவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் இந்திய மக்களின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கட்டிடம் இன்று (19.06.2019) காலை 9 மணியளவில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

32 இலட்சத்து 37ஆயிரத்து 725 ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தினை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் இலங்கைக்கான யாழ்.இந்திய துணைத்தூதுவர் பாலசந்திரனுடன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், இலங்கைக்கான யாழ்.இந்திய துணைத்தூதுவர் பாலசந்திரன் மற்றும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன், வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், தெற்கு வலயக்கல்வி பணிமணை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியா மக்களின் நிதி பங்களிப்புடன் வவுனியா செக்கட்டிப்புளம் ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, தாலிக்குளம் ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, ஒலுமடு ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, சின்னடம்பன் பாரதி வித்தியாலயம் போன்றவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டடிடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் : ஜுலை முதலாம் திகதி முதல்…!!

ஜுலை முதலாம் திகதி முதல்..

நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க ஊழியர்களின் சம்பளம் கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு 7800 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வரலாற்றில் தடம் பதிக்க வைத்த இலங்கை இளைஞன் : சோகமான பின்னணி குறித்து தகவல்!!

தரிந்து தயாரத்ன

அண்மையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராவணா-1 என்ற செய்மதியை தயாரித்த பொறியியலாளர்கள் இருவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,

இந்த செய்மதியை அமைத்த தரிந்து தயாரத்ன என்ற இளைஞன் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வாழ்வதற்கு தகுதியான வீடு கூட இல்லை. தரிந்துவின் தந்தை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் கிரிஎல்லவின் வீட்டை நிர்மாணிக்க 199 லட்சம் ரூபாய் செலவிட்டதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. எனினும் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இளைஞனுக்கு எந்தவொரு உதவிகளும் செலவிடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த இரு பொறியியலாளர்களால் ராவணா-1 தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி சுற்றுவட்டத்தில் ராவணா-1 செய்மதி சேர்க்கப்பட்டடிருந்தது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு செய்மதி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை : ஹர்த்தாலுக்கும் அழைப்பு!!

இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நள்ளிரவு வேளை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் திடிரென வந்த குழு ஒன்று ரயர்கள் மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக இட்டு தீயிட்டு தப்பி சென்றனர். இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் அவசர அழைப்பின் பிரகாரம் அவ்விடத்திற்கு வந்த கல்முனை பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் செயற்பட்டுள்ளதுடன் பொலிசாரின் வருகையை அடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். இந்நிலையில் தப்பியவர்களை தேடி இராணுவம் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இடத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

தற்கொலை செய்துகொண்ட நபர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த பொலிசார் 4 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சந்திர சேகர் சுங்காரா தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திர சேகர் சுங்காரா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், தடயவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சந்திர சேகர் சுங்காரா தனது குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமத்தை சந்திர சேகர் சுங்காரா பெற்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் துப்பாக்கி வாங்கியதற்கான ஆதாரங்களையும் தற்போது விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் எந்தவகையான துப்பாக்கி வாங்கியுள்ளார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தின்போது சந்திர சேகர் சுங்காராவின் குடியிருப்பில் வேறு ஒரு குடும்பமும் விருந்தினர்களாக தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரே உதவி கேட்டு பொலிசாருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஹெக்கர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

ஹெக்கர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா தோர்ன் நிர்வாண புகைப்படம் வெளியிடுவோம் என்று மிரட்டிய ஹேக்கர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். மிட்நைட் சன், தி பேபி சிஸ்டர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் ஹாலிவுட் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பெல்லா தோர்ன்.

இவரது இணையதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி, அதில் பெல்லா தோர்ன் வைத்திருந்த அந்தரங்க படங்கள், நிர்வாண மற்றும் டாப்லெஸ் படங்களை திருடினர். பிறகு அவருக்கு போன் செய்து நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வாண படத்தை நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

இதில் கடுப்பான பெல்லா, நீ என்ன என்னை மிரட்டுவது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய நிர்வாண படத்தை வைத்துக்கொண்டு என்னையே மிரட்டுகிறாயா? அவைகளை ஸ்பெஷல் நபர்கள் பார்வைக்கு மட்டும் வைத்திருந்தேன்.

உன்னால் அந்த எண்ணம் சிதைந்துவிட்டது. முட்டாளே, மிரட்டி என்னை பணிய வைக்க உன்னால் (ஹேக்கர்ஸ்) முடியாது என்று கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தியதுடன், நீ என்ன என்னுடைய நிர்வாண படத்தை வெளியிடுவது நானே வெளியிடுகிறேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டார். இதைப் பார்த்து ஹேக்கர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் தாய் : முக்கிய குற்றவாளியின் தற்போதைய நிலை!!

கொலை செய்யப்பட்ட இளம் தாய்

கேரள மாநிலம் மாவேலிக்கர பகுதி பெண் காவல் அதிகாரியை பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்த முக்கிய குற்றவாளி அஜாஸின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் அஜாஸின் இரு சிறுநீரகங்களும் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தீக்காயங்களுக்காக சிகிச்சையில் இருந்துவரும் முக்கிய குற்றவாளி அஜாஸ், மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மட்டுமின்றி பேச்சும் தெளிவாக இல்லை எனவும், படுக்கையில் இருந்து எழவே சிரமப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் காவலரை பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து அஜாஸ் என்ற காவலர் எரித்து கொன்றுள்ளார்.

கொல்லப்பட்ட செளமியாவுக்கும் கைதாகியுள்ள அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். செளமியா மீதுள்ள காதலால் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி செளமியாவை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.

தற்போது ரிஷிகேஷ் இந்த விடயத்தை விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலமாக அளித்துள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனிடையே அஜாஸின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற தாய் : ஆற்றில் புதைத்த காதலனிடம் விசாரணை!!

குழந்தையை கொன்ற தாய்

தமிழகத்தில் முறைதவறிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவருக்கும் வாலாஜா அடுத்த வன்னிவேடை சேர்ந்த காவ்யா(25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காவ்யா, கணவரை பிரிந்து 4 வயது குழந்தையுடன் வெளியேறி வாலாஜா, பெல்லியப்பா நகரில் வாடகை வீட்டில் வசித்துள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தருண் யுகேஜி படித்து வந்தான்.

அப்போது, காவ்யாவிற்கும், ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி தெரியவரவே ராமச்சந்திரன் காவ்யாவிடம் சென்று மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு வந்தார். ஆனால், காவ்யா, மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி காவ்யாவிற்கும், தியாகராஜனுக்கும் இடையே, ராமச்சந்திரன் அடிக்கடி வந்து தகராறு செய்வது குறித்தும், குழந்தை தருண் குறித்தும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து குழந்தை தருணை, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர், பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து அன்றிரவு 2 மணியளவில் குழந்தையின் சடலத்தை ஆற்காடு டெல்லிகேட் அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனர்.

மறுநாள் காலை காவ்யாவின் வீட்டிற்கு வந்த அவரது அக்கா அஜந்தா, குழந்தை தருண் குறித்து கேட்டுள்ளார். அதற்கு, காவ்யா முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிரமாக விசாரிக்கவே, குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், வாலாஜா பொலிசார் நேற்று முன்தினம் காவ்யாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தமது காதலுக்கு இடையூறாக இருந்ததால் தியாகராஜனுடன் சேர்ந்து குழந்தை தருணை கொலை செய்ததாக கூறி, புதைத்த இடத்தை பொலிசாரிடம் காவ்யா அடையாளம் காட்டினார். இதையடுத்து தருணின் சடலத்தை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். காவ்யாவை பொலிசார் கைது செய்தனர். தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!!

தமிழ் இளைஞன்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரை பொலிசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கபாய் என்பவரின் ஒரே மகன் பாபு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓமன் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊருக்கு வராத நிலையில், ஒரு வாரத்திற்குள் விடுமுறைக்கு ஊருக்கு வர இருப்பதாக தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று, பாபுவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற அருள் என்பவர், பாபுவின் தாய்க்கு போன் செய்து,

பாபுவை யாரோ கொலைசெய்து அங்குள்ள பாழடைந்த வீட்டில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும், அவரது சடலத்தை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சேமித்த பணத்தை வீட்டிற்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி வேலை செய்த பணத்தை அங்குள்ள ஒரு நண்பருக்குக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பணத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கணவன் : இப்படியும் ஓர் சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மனைவி வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரமடைந்த கணவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்.

கட்டடக் கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் திகதி கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சண்முகப்பிரியா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் இருந்த மாரியப்பன் சகோதரி காளியம்மாள் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

ஆனால் கதவை திறக்காததால், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதில் சண்முக பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதில் மாரியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருந்த மாரியப்பனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், என் மனைவி என்னை வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று இரவிலும் இதே பிரச்னை சம்பந்தமாகச் சண்டை போட்டோம்.

அந்தத் தகராறில் பழங்கள் வெட்ட வைத்திருந்த கத்தியால் மனைவி சண்முகப்பிரியாவைக் குத்திக் கொலை செய்தேன். ஆத்திரத்தில் குத்தியதில் அவள் இறந்துபோனதும் ரொம்ப அழுதேன். என்ன செய்வதுன்னு தெரியாமல் நானும் கத்தியால் கையிலும் கழுத்திலும் கீறினேன். கொஞ்ச நேரத்துல மயக்கமடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மாரியப்பனுக்கு அப்பா, அம்மா கிடையாது. அவருடைய அக்கா தான் அவரை கவனித்து வந்துள்ளார். கொத்தனார் வேலைக்கு செல்லும் மாரியப்பன் தொடர்ந்து வேலைக்கு செல்வதில்லை, இதனால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்து, திருந்திடுவான் வேலைக்கு செல்வான் என்று நினைத்து திருமணம் செய்து வைக்க, அது கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

இலங்கையில் கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்!!

அதிர்ச்சி தரும் தகவல்

வர்த்தக வங்கிகளினால் கடன் அட்டைகளுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இவ்வாறு கடன் அட்டைக்காக அறவிடப்படும் வட்டி வீதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிக்கைகளுக்கமைய 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இலங்கை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான கடன் அட்டைகளுக்காக 110.27 பில்லியன் ரூபாய் நிலுவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக வட்டி வீதம் காரணமாக கொடுக்கல் வாங்கல்கார்கள் கடன்அட்டை போன்றைவற்றை பயன்படுத்துவதற்கு அச்சப்படுவதாக மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோர விபத்தில் சிக்கிய சிற்றூந்து!!

கோர விபத்து

குடா ஓய பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய நபரின் சடலம் இரண்டு தினங்களுக்கு பின்னர் மீட்பு!!

கடலில் மூழ்கிய நபரின் சடலம்

காலி கடற்பரப்பில் மூழ்கி காணாமல் போன நபர் ஒருவரின் சடலம் இரண்டு தினங்களுக்கு பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் கடற்கரைக்கு அருகில் காணப்படும் குன்று ஒன்றின் மீது நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் தவறி கடலில் வீழ்ந்து இருவர் வேகமாக வந்த அலையில், இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன இருவரில் யுவதி அன்றைய தினம் மீட்கப்பட்டார். குறித்த இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைகளுக்காக காலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.