இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு!!

புதிய கட்டுப்பாடு

இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கான சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்கானிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த குழுவிற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய கருத்து மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கற்குவாரி கிடங்கில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பரிதாபமாக பலி!!

மாணவர்கள் இருவர் பரிதாபமாக பலி

வவுனியா பம்பைமடுகற்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதி கடந்த காலத்தில் கல் உடைக்கும் குவாரி காணப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கிடங்கு மூடப்படாமையால் நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இருவரது சடலங்களையும் மீட்கும் பணி இடம்பெற்று வருவதுடன் பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலுள்ள முஸ்ஸிம் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள்!!

முஸ்ஸிம் பாடசாலைகளில் சோதனை

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் இன்று (09.06.2019) தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் தவணைக்காக நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிலையில் பாடசாலை சமூகத்தினருடன் பொலிஸார் இணைந்து இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் என்பன தீவிர சோதனையிடப்பட்டது.

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து 2கிராம் 170மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்!!

ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய கொள்கலனை திருடியுள்ளார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பொலிஸ் கோவைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர், குண்டு தாக்குதலின் போது சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தெமட்டகொட – பேஸ்லைன் வீதியில் உள்ள மஹவில பார்க் என்ற இடத்தைச் சேர்ந்த மொஹம்மட் இப்ராஹிம் இன்சார் அஹமட் என தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கினை ஜனவரி மாதம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொண்ட போது குறித்த குண்டுதாரியும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்ததாகவும், இவர் 2013.05.30ம் திகதி 61 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் : மீறினால் மிகப்பெரிய தொகை!!

முக்கிய அறிவித்தல்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையின் வேக எல்லை மணிக்கு 100 கிலோ மீற்றராகும். அந்த வேகம் 120 கிலோ மீற்றராக அதிகரித்தால் 3000 – 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் குறப்பிட்டுள்ளார்.

மேலும் வேகம் 120 – 130 கிலோ மீற்றராக அதிகரித்தால் அபராத பணம் 5000 – 10000 ரூபாய் வரை அதிகரிப்படவுள்ளது. 130 – 150 கிலோ மீற்றர் வரை வேகம் அதிகரித்தால் 10000 – 25000 ரூபாய் வரை அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் வீடு திரும்பி சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன், உடையார்கட்டு தேராவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரராசா பிரசாந்த் என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது!!

சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு இன்று வவுனியாவில் பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெறுபவர்கள் தொடர்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்கள்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தனது வீட்டிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை அண்மைக்காலமாக பெற்றுவந்தள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்த மின்சாரசபையினர் பொலிஸாரிடம் கையளித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் பாராமன்ற உறுப்பினர் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்காக தற்போது அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா A9 வீதியில் வாகனம் ஒன்று தீயில் எரிந்து நாசம்!!

வாகனம்  தீயில் எரிந்து நாசம்

வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்று தீடிரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ஜீப் ரக சொகுசு வாகனம் ஒன்று ஏ9 கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் பயணித்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர்.

தொடர்ந்தும் வாகனம் முழுமையாக தீயில் எரிந்த நிலையில் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்ற போதும் அது பயனளிக்காது வாகனம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வாகனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம் இராணுவ பாதுகாப்புடன் சிறப்பாக இடம்பெறுகின்றது!!

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது இன்றைய தினம் (07.06) மிகவும் அமைதியான முறையில் இராணுவ பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்று காலை (08.06) வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், பாற்செம்புகள், தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக மதியம் 1 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தது,

தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானம் இடம்பெற்றதுடன் இரவு பொங்கலுக்கான மடப்பண்டமெடுக்கும் கிரியைகள் இடம்பெற்று, விஷேட பூஜையுடன் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து அடியார்க்கு அருள்பாலித்து பூஜைகள் இடம்பெறவுள்ளது.

கொழும்பில் ஆசியாவின் ஆச்சரியம் : எதிர்பாரத விதமாக சிக்கிய அபூர்வ காட்சி!!

எதிர்பாரத விதமாக சிக்கிய அபூர்வ காட்சி

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தில் மின்னல் தாக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரத்தின் உச்சியில் மின்னல் தாக்கியுள்ளது. இதன்போது எழுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வேறு விதமாக மின்னல் தாக்கும் புகைப்படங்களை எடுப்பதற்கு கடந்த 4 மாதங்களாக முயற்சிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்பாராத விதமாக இந்த புகைப்படம் கமராவில் சிக்கியுள்ளது.
இலங்கையின் பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் மாறியுள்ளது. பல பில்லியன் டொலர் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் சடலங்கள்!!

பயங்கரவாதிகளின் சடலங்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி பலியான சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர ஆகியோரின் முன்னிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது 15 பேர் உயிரிழந்திருந்தனர். பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

நாய் கடி காயத்திற்கு மிளகாய் தூள் வைத்தியம் செய்த நபர் பலி!!

நாய் கடித்த காயத்திற்கு சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

கலேவலை – தேவஹூவ ஹினுக்கல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தன்னை நாய் கடித்து விட்டதாக இந்த நபர் தாயிடம் கூறியுள்ளதுடன் சிகிச்சை பெறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நபர் தனது உடலில் காயங்கள் ஏற்பட்டால் சிகிச்சை பெறாமல் மிளகாய் தூளை வைத்து குணமாக்கிக் கொள்ளும் பழக்கமுடையவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய் கடித்த பின்னரும் சிகிச்சை பெறாமல், இருந்து வந்துள்ளார். திடீரென நாயை போல் நடக்க ஆரம்பித்துள்ளார். அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க ஆரம்பித்து சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலாவது நாய் கடித்தால், அடித்து செல்லும் தண்ணீரில் கடிப்பட்ட இடத்தை சவர்காரம் போட்டு நன்றாக கழுவிய பின்னர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றால், இப்படியான மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தம்புள்ளை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாய் கடியால் ஏற்பட்ட காயத்திற்கு வேறு சிகிச்சை முறைகளை பின்பற்ற கூடாது என்பதுடன் எந்த தூள்களையும் அதில் போடக் கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சாந்த அபேரத்ன ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் அவரது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். பிள்ளை தற்போது பாட்டியிடம் வளர்ந்து வருகிறது. இந்த நபர் எப்போதும் தனிமையில் இருக்கும் நபர் எனவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் பாடசாலை அதிபரால் உயிரச்சுறுத்தல் : பிரதி அதிபர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் குறித்த கல்லூரியின் பிரதி அதிபரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியமையால் மனரீதியாக பாதிக்கப்பட்டு பிரதி அதிபர் மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதிபர் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக ஓமந்தை பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதி அதிபர் தெரிவிக்கையில், ஓமந்தை மத்திய கல்லுரியில் நான் பிரதி அதிபராக கடமையாற்றுகின்றேன். சில ஆவணங்களுக்கு கையொப்பம் இடுமாறு பிரதி அதிபர் என்ற வகையில் அதிபர் என்னிடம் கேட்பார். அதன் விளக்கம் தெரியாது கையொப்பமிட நான் மறுத்து வந்தமையால் எனக்கும் அதிபருக்கும் இடையில் முரண்பாடு இருந்தது.

இது தொடர்பில் வவுனியா வடக்கு வலயக்கல்வி திணைக்களத்திடமும் தெரியப்படுத்தியுள்ளேன். பிரதி அதிபரான எனக்கு இரண்டாம் ஆண்டிற்கு கல்வி கற்பிக்குமாறு அதிபர் கோரியிருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை நான் பாடசாலைக்கு சென்றேன். பாடத்திட்டம், பாடக்குறிப்பு என்பவற்றை அதிபர் கோரினார். நான் பிரதி அதிபர் எனக்கு ஏன் பாடத்திட்டம் பாடக்குறிப்பு எனக் கேட்டேன். இதன்போது அவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வெளியில் செல்லுமாறு உயிர் அச்சுறுத்தல் விடுத்தார்.

அதிபரின் இந்த பேச்சை எதிர்பாராத நான் பாடசாலையில் இருந்து வெளியில் செல்லும் போதே மயக்கமுற்று விழுந்தேன். பின்னர் அங்கு நின்றவர்கள் என் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தி அவர்கள் என்னை வைத்தியசாலையில் அனுமதித்தனர். நான் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

இச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் பிரதி அதிபரான தாயாருக்கு என்ன நடந்தது என விளக்கம் கோரி அவரது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றமையால் அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

எமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றுபவர்களில் ஒரு பெண் உப அதிபரிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்கு தெரியும். இதனால் அதனை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் இரண்டாம் ஆண்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து உப அதிபரின் மகன்கள் பாடசாலைக்குள் வந்து முரண்பட்டனர்.

எனது மேசையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்தனர். அங்கிருந்த ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தக்கூடாது என அச்சுறுத்தினர்.
தமது தாய்க்கு மேல் மாடியில் சென்று கற்பிக்க முடியாது. எனவே அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் நாம் பொலிஸாருக்கு முறையிட்டதை அடுத்து பாடசாலைக்கு பொலிஸாரும் மற்றும் இராணுவ அதிகாரிகள் வருகை தந்து விசாரித்தனர். பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி சுரேந்திரன் அன்னமலரிடம் கேட்ட போது, ஆசிரியர் முறையிட்டுள்ளது குறித்து அதிபர் ஆசிரியரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக அதிபரிடம் அறிக்கை கோரியிருந்தேன். இதுவரையில் வழங்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் : காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!!

வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்

எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வானிலை தெடார்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையினால் பல மாவட்டங்களுக்கு 200 மில்லி மீற்றர் வரையிலான அடைமழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை அடைமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 150 – 200 மில்லி மீற்றர் வரையலான அடைமழை பெய்யும் சாத்தியமுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டவங்களில் 100 – 150 மில்லி மீற்றர் வரை அடை மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்திலும், குருணாகல் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக மத்திய மலை நாட்டிலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைக்கிடையே 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

தந்தையின் தாக்குதலில் மகன் பலி!!

மகன் பலி

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கியதன் காரணமாக இளைஞன் உயிரிழந்துள்ளார். இளைஞனின் தந்தை மகன் மற்றும் மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக இருந்து வந்த குடும்ப தகராறே இந்த கொலைக்கு காரணம் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவளத்தில் 17 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.