திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி : ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் பள்ளியில் படிக்கும் மாணவரும், மாணவியும் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சோம்நாத். இவர் ஸ்ரீநந்தா உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் படித்து வந்த அபந்திகாவுடன் சோம்நாத்துக்கு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த வாரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சோம்நாத்தும், அபந்திகாவும் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவர் சடலமும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது குறித்து சரியாக தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

யாழ் புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி!!

யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியின் புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து ஆயக்கடவை பிள்ளையார் கோயில் அருகே இன்று இடம்பெற்றுள்ளது.

பலாலி பகுதியில் இருந்து யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வான், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியினை மோதியதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த பெண் குப்பிளான் தெற்கு பகுதியினை சேர்ந்த 48 வயதான கே.சுசிலா என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 11 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண் : அவர் கையில் எழுதியிருந்த அந்த வார்த்தைகள்!!

இந்தியாவில் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தவனகிரி நகரை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கும் ஷில்பா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று புதுப்பெண் ஷில்பா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷில்பாவின் சடலத்தை மீட்டனர்.

ஆப்போது அவர் கை மணிக்கட்டில் 4 பேரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தான் தனது சாவுக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.

மஞ்சுவும், ஷில்பாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையியே திருமணம் செய்து கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த பரதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து 1996 ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் இவர்கள் கரை திரும்பாத காரணத்தால் மாயமானவர்கள் பட்டியலில் இவர்களது பெயரை சேர்த்தது மீன்வளத்துறை.

இந்நிலையில்தான் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் கைது என்றும் அந்த பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சை எடுத்து வருபவர்களின் புகைப்படத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூகவலைதள பக்கம் ஒன்றில் வெளியானது.

இந்த செய்தியை பார்த்த ராமேஷ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர், அதில் பரதனின் புகைப்படத்தை பார்த்து அது பரதன் தான் என்பதை உறுதி செய்து அதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உயிருடன் மனநிலை பாதிக்கப்பட்டு கொழும்பு பகுதியில் சுற்றித் திரியும் பரதனை மீட்டு வர வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு பரதனின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பரதனனின் மகளிடம் இருந்து அவர் குறித்த தகவல்கள் மற்றும் கடிதத்தினை மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

நுவரெலியாவில் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்ற முகாம் சுற்றிவளைப்பு!!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்ற முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அம்பாறை – சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, இன்று மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சஹாரான் உட்பட 38 பேர் வரையில் டி 56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, கடந்த 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னதாக, 17ஆம் திகதி தாக்குதலுக்கான இறுதி பயிற்சியை இந்த கட்டடத்திலே மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடம் குத்தகைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேள்விக் குறியாகும் இலங்கையின் எதிர்காலம் : இப்படியொரு அவல நிலையா?

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பூச்சிய நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக பரபரப்பாக செயற்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

கடந்த மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து பெருமளவு சுற்றுலா பயணிகள் மீண்டும் தமது நாட்டுக்கு சென்றுள்ளனர். புதிய சுற்றுலா பயணிகள் வருகை முற்றாக தடைப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் குறித்து பல்வேறு நாடுகளினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையும் இதற்கு காரணமாகும்.

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பாரிய வருமானத்தை பெற்று வருகிறது. இந்த வருடத்தில் 21 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் முற்றாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை உருவாக்கும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட மக்களுக்கான பொலிசாரின் அவசர அறிவித்தல்!!

வவுனியாவில் வாடகைக்கு வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்கள் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஐயாத்துரை மண்டபத்தில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,

கிராமத்திற்கு புதியவர்களின் வருகை தொடர்பாக நீங்கள் விழிப்புடன் செயற்படுவதுடன் உங்களது உறவினர்கள் வந்து உங்களது வீடுகளில் தங்கும்போது அவர்கள் தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையங்கள் மற்றும் கிராம அலுவலகரிடம் வழங்கவேண்டும்.

உங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கலாம் அவ்வீட்டை நீங்கள் வாடகைக்கு வழங்கும்போது அங்கு தங்கியிருப்பவர்களின் விபரங்கள் அனைத்தும் கிராம அலுவலகருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் உங்களிடமும் பதிவுகள் இருப்பதுடன் பொலிசாருக்கும் அதன் விபரங்களை வழங்கவேண்டும்.

தற்போது எமது நாட்டில் அவரசகாலச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளது எங்கு சென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது ஒரு நபரைக் கைது செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உங்களது கிராமத்திற்கு வரும் நபர்கள் தொடர்பாக நீங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அங்குள்ளவர்களை நன்று தெரியும்.

அவ்வாறு புதியவர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்க வேண்டும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 23 கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன.

இந்த 23கிராம அலுவலகர் பிரிவிலிருக்கின்ற பொதுமக்கள் நான் கூறியவற்றை பின்பற்றி நீங்கள் செயற்படுவீர்களாக இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியும்.

வவுனியா நகரை பாதுகாப்பதற்கு உங்களது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கி பாடசாலைகளுக்கு உங்களது பிள்ளைகளை அனுப்பிவைக்கவும் பாடசாலையில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்க நாங்கள் இருக்கின்றோம்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து வரும்பெற்றோர்கள் பாடசாலையின் முகப்பு பகுதியில் இறக்கிவிடாமல் சற்று தொலைவில் இறக்கிவிட்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து சென்றுவிடவேண்டும். என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சொகுசு வசதியுடன் வாழும் கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளர்!!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உணவக உரிமையாளர் ஒருவர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வவுனியா கனகராயன்குளம் பொலிஸாரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட அப்பகுதி உணவக உரிமையாளரான இவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளருக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படாத வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபருக்கு, ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி இப்பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என பலர் கேள்வி எழுப்புவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா தரணிக்குளம் 10ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்கருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

குறித்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ராஜகுமாரன் என்பவரே சடலமாக மீட்பட்டவராவார்

திடீர் மரண விசாரனை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை கடுமையான சோதனையிடும் பொலிசார்!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களினதும் புத்தகப்பையில் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு சோதனைக்குட்படுத்திய பின்னரே பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கில் மற்றும் அவர்களது பைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றையதினம் (06.05.2019) குறிப்பிட்ட வகுப்பினருக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இச் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இச் சோதனை நடவடிக்கையினை பாடசாலை சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனை மேற்பார்வை செய்யும் முகமாக வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி ஆகியோர் அனைத்து பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் நேற்றையதினம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிஸ் சூப்பர் குலோப் இந்தியா – 2019 பட்டம் வென்ற சென்னைப் பெண்!!

கேரளாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ‘மிஸ் சூப்பர் குலோப் இந்தியா’ போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அக்சரா ரெட்டி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா – 2019’ அழகி போட்டியானது கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி(24) என்பவர் கலந்து கொண்டு பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

இதன்மூலம் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு-2019’ பட்டத்துக்கான போட்டியில், இந்தியாவின் சார்பில் அக்சரா ரெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஏற்கனவே தென்னிந்திய அழகி பட்டத்தை வென்றிருந்த அக்சரா நேற்று சென்னை திரும்பியதும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு ‘மிஸ் சூப்பர் குலோப் இந்தியா -2019’ போட்டியில் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை போன்ற ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவியை நான் பார்த்ததில்லை.

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பது வருத்தமளிக்கிறது. மீ டூ வந்த பிறகு தான் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, அஜித், விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அன்று மணவாழ்க்கையில் இணைந்து…. இன்று மரணத்திலும் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காட்டை சேர்ந்த் ஆறுமுகம் – மல்லிகா தம்பதியினரின் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மெத்தை தலையணை தயாரித்து விற்று வருகிறார் ஆறுமுகம். நேற்றிரவு ஈரோட்டில் உள்ள மகள் வீட்டிற்கு ஆறுமுகம், மல்லிகா மோட்டார் பைக்கில் புறப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு பள்ளிபாளையம் வந்தபோது மல்லிகா சர்க்கரை நோயால் மயக்கமடைந்தார். உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆறுமுகம் அழைத்து சென்றதில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கணவர், துயரம் தாங்காமல் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். திருமணம் ஆன நாள் முதல் தம்பதியினர் மனமொத்து குடும்பம் நடத்தி வந்தனர். சாவிலும் இணைபிரியாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை ஆறுமுகம் முடித்து கொண்டது நெகிழ வைக்கிறது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

என் செல்லத்தின் உயிரை பறிக்கவா பெட்டியை கொண்டு வந்தேன் : விளையாட்டாக வந்த விதி…. தாயின் கதறல்!!

சென்னை திருவான்மியூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மரப்பெட்டிக்குள் சென்று அமர்ந்துகொண்டதில் அது தானாக மூடிக்கொண்டதில் மூச்சுதிணறி ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி – புவனேஸ்வரி தம்பதியினருக்கு தனுஸ்ரீ (8), சாருலதா (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் தனியாக வீட்டில் இருப்பது வழக்கம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே தனுஸ்ரீயும் சாருலதாவும் இருந்தனர்.

சிறுமிகள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கையில் வீட்டிலிருந்த மரப்பெட்டிக்குள் இருவரும் சென்று ஒளிந்துகொண்டனர். உள்ளே சிறுமிகள் ஒளிந்துகொண்டதில் மரப்பெட்டி அசைந்து தானாக மூடிக்கொண்டது.

சிறுமிகள் இருவரும் அலறிய சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த தாய் புவனேஸ்வரி, குழந்தைகளை காணவில்லை என தேடியுள்ளனர். பின்னர் மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து குழந்தைகள் இருவரும் மயங்கி நிலையில் இருப்பதை பார்த்து கதறியுள்ளார்,

இதனைத்தொடர்ந்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூத்த மகள் இறந்துவிட்டார், இரண்டாவது மகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.

இதற்கிடையில் சாருலதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், “மரப்பெட்டிக்குள் இரண்டு குழந்தைகளும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தனுஸ்ரீ மூச்சுத்திணறி பலியாகிவிட்டார். சாருலதா உயிரோடு பிழைத்தது கடவுளின் கருணை என்றே சொல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

குழந்தைகள் விளையாடிய மரப்பெட்டி 4 அடி உயரம் இருக்கும். 3 அடி வரை அகலம் இருக்கும், இந்த பெட்டியை தான வேலை பார்க்கும் இடத்தில் இருந்து தாய் புவனேஸ்வரி வீட்டுக்கு கொண்டு வைத்திருந்துள்ளார்.

என் குழந்தையின் உயிரை பறிக்கவா மரப்பெட்டியை வீட்டுக்கு கொண்டு வந்தேன் என அவர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் சொத்து தகராறில் சொந்த தம்பியை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு. இவரின் அக்கா கலா பழனிவேலிடம் அடிக்கடி சொத்து சம்மந்தமாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பழனிவேல் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உள்ளதாக கூறி, கலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் பழனிவேலை அவரின் சகோதரி கலா மற்றும் குடும்பத்தினர், அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த கலா, அவரது கணவர், மகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் பலி!!

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 31 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் மாரவில நகரத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – முகுனுவட்டன பிரதேசத்தை சேர்ந்த அஜித் பிரசன்ன என்ற 31 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாரவில நகரத்தில் நேற்று இரவு நின்ற சிலரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன் போது அவர்களில் ஒருவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காயம் அடைந்த இளைஞனை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

-தமிழ்வின்-

நீர்கொழும்பில் தொடரும் பதற்றம் : முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை!!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், இன வன்முறையாக மாறியுள்ளது.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளனர்.

அந்தப் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில குழுக்கள் அந்தப் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான மோசமான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு நபரையும் யாரும் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது. கிறிஸ்தவ மக்களிடம் விசேட கோரிக்கையாக கேட்கிறேன்.

முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். அவர்களை எந்த வகையில் காயப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் பேராயர் வினயமாக கேட்டுள்ளார்.

பலகத்துறைப் பகுதியில் தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த கும்பல், முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்துள்ளமையினால் அந்தப் பகுதியில் அச்ச நிலைமை தொடர்கிறது. எனினும் முப்படையினரும் அந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-