வவுனியாவில் பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி!!

கஞ்சா விற்ற நபருக்கு நேர்ந்த கதி

வவுனியா – பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரிக்கு அருகில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரையே கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 15.5 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 31 வயதான வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சிக்கியுள்ளதுடன், சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா உட்பட நாட்டில் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

நாட்டில் சில மாவட்டங்களில் நாளைய தினம் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடமேல் மாகாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்!!

சைக்களில் வலம் வந்த மணமக்கள்

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர் மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

என்ன காரணத்திற்காக இவர்கள் சைக்களில் வலம் வந்தார்கள் என்ற காரணம் தெரியவரவில்லை. சமூக ஊடகங்களின் கவனத்தைப்பெறுவதற்காக பலர் இவ்வாறான வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கின் பல பகுதிகளிலும் இது போன்று லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டில் போன்றவற்றில் மணமக்கள் பயணிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகி சமூக ஊடகங்களிலும் பிரபலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு முன் காணாமல்போன நீர்மூழ்கி இலங்கையில் கண்டு பிடிப்பு!!

கடலில் மிகவும் பெறுமதியான தரவுகளைப் பெற்றுக் கொள்வற்காக தேசிய நீரியல் வளத்துறை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NARA) சொந்தமான ஒரேயொரு நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த இதனைக் கண்டுபிடிக்க 4 வருடங்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக NARA இனால் இவ்வளவு காலமாக எடுக்கப்பட்டிருந்தாலும், NARA நிறுவனத்தின் நீர்ப் பாரம்பரியப் பிரிவும், கடற்படையின் நீர்ப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டுதல் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள கடலில் மிகவும் பெறுமதியான தரவுகளைச் சேகரிக்க உதவும் இந்த நீர் மூழ்கியானது, அமெரிக்காவினால் வழங்கப்பட்டதாகும். இது மட்டக்களப்பு பிரதேச கடலில் தரவுகளை சேகரித்துக் கொண்டு இருக்கும் போது சில மீனவர்களின் நடவடிக்கை காரணமாக காணமல் போனது.

NARA நிறுவனத்திற்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல் மட்டக்களப்பு பிரதேச கடலுக்குக் கீழே ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே இந்த நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மூழ்கிகள் சமுத்ரிகா ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன், திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அந்த மூழ்கியை காலிக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்துள்ளன.

கடலின் உஷ்ணம், கடலில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் இந்த நீர் மூழ்கியில் சேமிக்கப்படும். இதன் மூலம் மீன்பிடித் துறையின் எதிர்காலத்தில் பல திட்டங்களை செயற்படுத்த முடியும் என்று நீர்ப் பாரம்பரியப் பிரிவு தெரிவிக்கிறது.

கண்டுபிடிக்கப்பட்ட நீர் மூழ்கியிலிருந்து 4 வருடங்களுக்கான தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், கண்டுபிடித்த நீர்ப்பாரம்பரியக் குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடலுக்குள் மிகவும் பெறுமதியான தரவுகளை சேகரிக்கும் நீர் மூழ்கியானது இலங்கையில் NARA வைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட சமாதான நீதிமான்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்!!

பொதுக்கூட்டம்

வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நேற்று (31.03) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

அதிதிகளுக்கு மாலை அணிவித்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது. வவுனியா மாவட்டத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சமாதான நீதிமான்கள் இப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தலைவராக ந. ஸ்ரீஸ்கந்தராசா, செயலாளராக மாணிக்கம் ஜெகன், பொருளாளராக எஸ்.சபாநாதன் மற்றும் பத்து நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தில் வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி பீ.ஜெயவிந்தன், வட இலங்கை சமாதான நீதிமான்கள் சங்கத்தின் செயலாளர் கலாநிதி நி.திசையானந்தன், சமாதான நீதிமான் ஸ்ரீமான் மு.சு.கணேஸ்வரன், சந்திரகுமார் கண்ணன், வவுனியா நகரத்தின் கிராம உத்தியோகத்தர் எஸ்.பி.உமாபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை?

டீசலுடன் மண்ணெண்ணெய்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரும், பொலிசாரும் பரிசோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியில் இருந்து இரவு 12 மணிவரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது கிணறு அடிப்பதற்கான இயந்திரத்துடன் கூடிய ஹன்ரர் ரக வாகனத்திற்கு வழமையாக டீசல் அடிக்கும் பாவனையாளர் ஒருவர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாம் பெறும் டீசல் தொடர்பில் சந்தேகம் அடைந்து நேற்று இரவும் டீசல் அடிக்கும் போது தனது வாகனத்திற்கும், வேறு வெற்று கான்களிலும் டீசலை பெற்றுள்ளார்.

அப்போது அந்த டீசலில் மண்ணெண்ணெய் மணம் வீசுவதாக உணர்ந்துள்ளார். இதனையடுத்து வவுனியா நகரில் உள்ள பிறிதொரு எரிபொருள் நிலையத்தில் வெற்றுப் போத்தல் ஒன்றில் டீசலைப் பெற்று வந்து இரு டீசல்களையும் ஓப்பிட்டு பார்த்த போது டீசலில் மண்ணெய்ணெய் கலந்துள்ளதாகவும், இரு டீசல்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதையும் இனங்கண்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பாவனையாளர் அதிகாரசபையினருக்கு முறைப்பாட்டை மேற்கொண்டதுடன், வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலமான தொலைபேசி அழைப்பு முறைப்பாட்டு பிரிவுக்கும் தனது முறைப்பாட்டை மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் டீசல் மாதிரிகளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்று அதனை சுயமாக பரிசோதித்த போது வேறுபாடு காணப்படுவதாக தெரிவித்து, அந்த மாதிரிகளை சீல் செய்து முறைப்பட்டை பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.

இதேபோல், அங்கு வருகை தந்த பாவனையாளர் அதிகாரசபை உத்தியோகத்தர்களும் மூன்று வெற்றுப் போத்தல்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரந்து டீசலை பெற்று அங்கு கடமையில் நின்ற ஊழியரின் கைவிரல் அடையாளத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்து ஊழியர்கள் மற்றும் விசாரணைக்காக வந்த பொலிசார் முன்னிலையில் அதனை சீல் செய்து எடுத்துச் சென்றனர். மூன்று மாதிரிகளில் ஒரு மாதிரியை எரிபொருள் நிரப்பு நிலையத்திடமும் வழங்கியிருந்தனர்.

முறைப்பாட்டை பதிவு செய்த பாவனையாளர் அதிகார சபையின் எதிர்வரும் 2 ஆம் திகதி குறித்த வழக்கினை வவுனியா நீதிமன்றில் எரிபொருள் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவ நேரம் அதன் உரிமையாளரோ, முகாமையாளரோ காணப்படவில்லை. அவர்கள் தொலைபேசியில் பாவனையாளர் அதிகாரசபை மற்றும் பொலிசாருடன் உரையாடிய போதும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. கடமையில் நின்ற ஊழியர்களே அதன் உரிமையாளரின் அனுமதியுன் விசாரணைக்கு ஒத்துழைத்து இருந்தனர்.

இதேவேளை, முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறும் நிலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் தொடர்ந்தும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்பதுடன், இது தெர்ர்பில் பாவனையாளர்களால் மேலும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பரிசோதனை அறிக்கை வரும் வரை தம்மால் தற்காலிகமாக சீல் வைக்க முடியும் எனவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இளம் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்ற கணவன் : திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா. தம்பதிக்கு சரண், சுகுனா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் குமரேசன் வேலைக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் 10லிருந்து 1 மணிக்குள் மீனா உணவில் விஷம் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அதை சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மூவரும் மயங்கி கிடந்தனர். இந்நிலையில் அலுவலகத்திலிருந்து மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக குமரேசன் வீட்டுக்கு வந்த போது மூவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீனாவும், சுகுனாவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சரணுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் குமரேசனும், மீனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. மீனாவின் இம்முடிவு குறித்து குடும்பத்தார் யாரும் சந்தேகம் எதுவும் எழுப்பவில்லை. பொலிசார் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

குடும்பமே ஒன்று சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!!

வெட்டிக்கொலை செய்த கொடூரம்

ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற மனைவி இருக்கிறார். இந்துமதி தன்னுடைய தாய் ராசத்தியுடன் சேர்ந்து வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.

டிரைவராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராஜ்(50) என்பவருக்கு கடனாக ரூ.1800 கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த பணத்தை திரும்ப கேட்கும் போது, சின்னராஜ் பணத்தை தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சின்னராஜ் தன்னுடைய மனைவி பழனியம்மாள் (45), மகள் ரம்யா (22), மருமகன் பால்ராஜ் (25) ஆகியயோருடன் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சின்னராஜ் திடீரென கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் செந்தில்குமாரின் மனைவி மற்றும் மாமியாரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதற்கிடையில் கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள சின்னராஜ் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை

இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக மாணவர் ஒருவருடன் நட்பாக இருந்தார்.

அதாவது மாணவருக்கு போனிலிருந்து அடிக்கடி மெசேஜ் அனுப்புவது, அவருடன் பைக்கில் செல்வது என இருந்துள்ளார் ஆர்த்தி. ஆனால் இது ஆர்த்தியின் தந்தை சாய்கிண்டேவுக்கு பிடிக்காத நிலையில் மாணவருடனான நட்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தினார். ஆனால் இதை கேட்காத ஆர்த்தி தனது நட்பை தொடர்ந்தார்.

இந்நிலையில் மகள் மீது ஆத்திரமடைந்த சாய்கிண்டே கடந்த 23ஆம் திகதி ஆர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தனது உறவினர்களான ராஜேந்திரா ஜகன்நாத் மற்றும் தியான்தேவ் ஆகியோருடன் சேர்ந்து ஆர்த்தி சடலத்தை எரித்து வீட்டருகில் போட்டுள்ளார்.

இதன்பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல தனது மகளை காணவில்லை என 24ஆம் திகதி பொலிஸ் புகார் அளித்தார் சாய்கிண்டே. இந்நிலையில் 25ஆம் திகதி பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆர்த்தியின் சடலத்தை அவரின் சகோதரி பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது தொடர்பாக 35 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல் மற்றும் துப்பு அடிப்படையில் சாய்கிண்டே, ராஜேந்திரா, தியான்தேவ் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 121வது ஜனன தினம்!!

 

வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (31.03) காலை 9 மணியளவில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் வடமாகாண சபை சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சேனாதிராஜா, சுமந்திரன், பரதலிங்கம், வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன், தமிழரசு கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து : மர்ம நபரின் வெறிச்செயல் : பொலிசார் விடுத்த எச்சரிக்கை!!

லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து

லண்டனில் 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 4 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடக்கு லண்டனில் 12 மணிநேரத்திற்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எட்மன்டன் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் தற்போது 45 வயதான பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் தலையை மூடியவாறு கருப்பு நிறத்திலான உடை அணிந்து, உயரமான, ஒல்லியாக, கருப்பு மனிதனாக விவரிக்கப்பட்டுள்ளான். பின் பக்கத்திலிருந்தே பொதுமக்களை அணுகி தாக்குதல் நடத்தியுள்ளான். பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதாக இல்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று இரவு 7 மணிக்கு (உள்ளுர் நேரப்படி), அபெர்டீன் சாலையில் முதலாவதாக 45 வயதான பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில மணிநேரங்களுக்குப் பின்னர், பார்க் அவென்யூவில் நள்ளிரவு நேரத்தில் ஒரு மனிதன் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை. அவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலை 3.55 மணியளவில் (உள்ளுர் நேரப்படி) சில்வர் ஸ்ட்ரீட் பகுதியில் 23 வயது இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு கால் மைல் தூரத்தில் பெண்ணின் பின்பக்கத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரின் நிலை மோசமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு இடையில் 22 வயதான மனிதன் லண்டனில் உள்ள வால்ட்ஸ்டோவில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

அவர் கிழக்கு லண்டன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது நிலைமை உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை எனவும் இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : கைதான கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கொடுக்கப்பட்டால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்தோஷ்குமார் குறித்தும், கொலை குறித்தும் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு உட்புற வடிமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சந்தோஷ்குமார் திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை பிரிந்தவர்.

ஐயம்மமான் என்பவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார். இவரது பேரன் தான் சந்தோஷ்குமார். துக்கம் விசாரிக்க வந்த சந்தோஷ்குமார், அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஆனால், சிறுமி காணாமல் போன பின்னர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடிய பெற்றோர், அருகில் துக்க வீடு என்பதால் அந்த பாட்டி வீட்டில் தேடாமல் இருந்துள்ளனர். ஆனால், சிறுமியை அங்குதான் வைத்திருந்துள்ளார் சந்தோஷ்குமார்.

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி சத்தம்போட்ட காரணத்தால் வாயில் தனது டிஷர்ட்டை வைத்து அமுக்கியுள்ளார். அப்போது அந்த குழந்தை மயக்கமடைந்துள்ளது. எனவே வெளியில் சென்றால் உண்மை வெளியாகிவிடும் என்பதால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், பெற்றோர்கள் விடிய விடிய குழந்தையை தேடியதால் அதிகாலை 4 மணிக்குமேல் குழந்தையை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து போட்டுள்ளார். மேலும், 6 மாதத்திற்கு முன்னர் குழந்தையை மிரட்டியுள்ளதாகவும் விசாரணயில் தெரியவந்துள்ளது.

அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!!

சொகுசுப் பேருந்து

தமிழகத்தின் திருப்பூரில் சொகுசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 14 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அங்குள்ள பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி அப்பேருந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பொலிசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் விரைந்தனர். அப்போது சொகுசு பேருந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் சிதைந்துபோய் இருந்தது.

அதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 6 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்து குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பேருந்து ஓட்டுநர் ஜெய்சன் மதுபோதையில் பேருந்தை ஓட்டியது தெரிய வந்தது.

வவுனியா நகரசபையின் பணியை கையிலெடுத்த வவுனியா பொலிசார்!!

வவுனியா பொலிசார்

வவுனியா புதிய பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியை சுற்றிய  இடங்களை துப்பரவு செய்யும் பணி வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராட்சி தலைமையில் இன்று (31.03) காலை 8.30மணி தொடக்கம் 10 மணி வரை இடம்பெற்றது.

வவுனியா பொலிஸார், சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியில் சுமார் 40க்கு மேற்பட்ட பொலிஸார் கலந்து கொண்டனர்.

இச் சிரமதானப் பணியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, 40ற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற விபத்துக்கள் : ஒருவர் பலி, 7பேர் படுகாயம்!!

ஒருவர் பலி, 7பேர் படுகாயம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று மாலை 7.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யோகராசா கௌதமன்(றொபின்) சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில்,

துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் காத்தான்குடிக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் துறைநீலாவணை கிராமத்தை நோக்கி மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளனர்.

ஓந்தாச்சி மடத்திலிருந்து நான்கு இளைஞர்கள் காரில் பெரியகல்லாறு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று மீண்டும் ஓந்தாச்சி மடத்திற்கு பயணிக்கையில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, அருகாமையில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

இவ்விபத்தில் வீதியில் இருந்த 4 மரங்கள், கொங்கிறீட் தூண்கள், வீட்டின் ஒரு பகுதி சிதைவடைந்தும், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சேதமடைந்தும் காணப்படுகின்றது. இக்காரினை செலுத்தி வந்த சாரதி போக்குவரத்து பொலிசாரால் மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு மீண்டும் சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த அ.சதீஸ்குமாரும் (வயது-34) காரில் சென்ற ஓந்தாச்சிமடத்தை சேர்ந்தவர்களான கார்ச்சாரதியான சி.ஆதித்தன் (வயது-18) மற்றும் சு.தனுஸ்காந்(வயது-20), கா.றிஷிவர்மா (வயது-17),வி.டிருஜன் (வயது-19) மற்றும் துவிச்சக்கரவண்டியில் வந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த பி.சனத் (வயது-17), ச.நிதுசாந் (வயது-17) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிற்போரதீவில் நேற்று மாலை 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

கோயிற்போரதீவைச் சேர்ந்த எஸ்.சாஜகான்(வயது-16), அ.சபேசன் (வயது-24)ஆகியோர்களே படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள பெரியகல்லாற்றில் நேற்று மாலை 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு பெண் ஒருவர் படுகாயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் கோயிற்போரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 60 வயதான முதியவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : மாதாந்த சம்பளம் கிடைக்குமா?

அதிர்ச்சித் தகவல்

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கமைய ஒன்பது மாகாண சபைகளிலும், 341 உள்ளூராட்சி நிறுவனங்களும் சேவை செய்யும் ஊழியர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி வரவு திட்டத்தை தோல்வியடைய செய்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பாரிய சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்தமையினால் அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. எனினும் அப்பாவி அரச ஊழியர்களுக்கே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-