யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 24 வயதான ரஜீவன் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து சிலாபம் புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பங்கதெனிய சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பேருந்து பின்புறமாக மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி முன்னேற்றும் நோக்கிலும் வவுனியா மாவட்டத்தில் உள்ள 38 விளையாட்டு கழகங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக 13 விளையாட்டுக் கழகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கட்டார் செரிட்டி நிறுவனம் ஊடாக பெற்றுக் கொண்ட விசேட தேவைக்குட்பட்ட 5 பேருக்கு முச்சக்கர சைக்கிள் வண்டிகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர் பாயிஸ், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை மக்கள் மீண்டும் தேங்காய் சிரட்டை யுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மின்அழுத்தியை பயன்படுத்தும் எங்களுக்கு எதற்கு சிரட்டை அழுத்தி என மக்கள் அதன் பயன்பாட்டை நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இலங்கையர்கள் சிரட்டை அழுத்தியை பயன்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் நீண்ட நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் மின்சாரம் தடைப்படும் காலப்பகுதியில் சிரட்டை மூலம் அயன் செய்யும் அழுத்தியை பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் சில பகுதிகளில் மாத்திரம் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற்பகல் வேளையில் இந்த காலநிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்கீழ் இன்று வரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமானங்களை அழிக்கும் ஆபத்தான வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டமையினால் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிப்பன்ன பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் விமானங்களை அழிக்கும் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேர 12 ரக துப்பாக்கி, கல்கடஸ் ரக துப்பாக்கி உட்பட பல ஆபத்தான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரதேசத்தை 61 வயதான பிரேமதிலக்க என்பவரும் வெப்பன்ன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அப்பன் ஜெயசங்கர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமதிலக்க என்பவர் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.
சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஐரா படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.
ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போடா போடி, சர்க்கார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ரணம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.
ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருடந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் திருமணம் முடிந்த 3 மாதத்திலே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த காதல் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அருள் குமார் (24) மற்றும் சந்தியா (20) ஆகியோர் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளனர்.
அருள்குமாருக்கு மனைவின் வீட்டு பக்கத்தில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால், திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவியுடன் மாமனார் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் சந்தியாவுக்கு அருகே உள்ள பேன்சி ஸ்டோர் உரிமையாளுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உள்ளே புகுந்த சந்தியாவின் தாய் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.
ஆனால் அதற்கும் மீண்டும் வாக்குவாதம் முற்றி அருகில் இருந்த கத்தியை எடுத்து அருள்குமார், சந்தியாவை கழுத்தில் குத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்றபோது சந்தியாவின் தாய்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அருள்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதையடுத்து அந்த தொகுதியில் தொடர் பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கிவிடுகிறார். கட்சிக் கொடியுடன் 5 பேர் மட்டும் அவருடன் செல்கின்றனர்.
பிரசாரத்தின் இடையில் டீக்கடைக்குள் சென்று டீ ஆத்துவது, துப்புரவு தொழிலாளர்களிடம் கூடையை வாங்கி குப்பையை அள்ளுவது, அம்மியில் சட்னி அரைப்பது, இளநீர் வெட்டுவது, ஷூ பாலிஸ் போடுவது போன்ற விடயங்களை செய்து வருகிறார். மன்சூர் அலிகானின் வித்தியாசமான பிரசார முறை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வவுனியா மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவசர அறிவித்தல் விடுத்துள்ளது. வவுனியா மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் உள்ள பாவனையாளர்களது நீர்ப்பட்டியலில் 500 ரூபாய்க்கு மேல் காணப்படுமாயின் அவர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நீரிணைப்பு துண்டிப்பை தடுக்க 500 ரூபாய்க்கு மேல் உள்ள நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கின்சி வீதியில இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெறும் போது கிரிக்கெட் வீரர் மது போதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை, கின்ஸி வீதிப் பகுதியில் வைத்து திமுத்து கருணாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் கட்டுமான கைத்தொழில் கைவிளைஞர்களுக்கான தகுதி அடிப்படையிலான பயிற்சித்திட்டத்தினை பூர்த்திசெய்த கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் வீ.எம்.வீ.குறூஸ் தலைமையில் இன்று (30.03.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சீ.ஐ.டீ.ஏ (CIDA) உதவிப்பணிப்பாளர் சரத் வனசிங்க , NAITA மாவட்ட முகாமையாளர் பவளநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேலதிக மாவட்ட முகாமையாளர் நிமலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பி.ஏ.கருணாதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் 200 கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாரியபொல மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஓர் நபர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தி ஒன்றும் சிற்றூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அம்பன்பொல பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாரியபொல மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஓர் நபர் உயிரிழந்துள்ளனர்
அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மாகாணத்தின் திக்வெல்ல, கெகனதுரு, கொட்டவில முதலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது.
இதேநேரம், வட மாகாணத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. தற்போது நிலவும் காலநிலை தன்மைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குருநாகலின் வெப்பநிலை சாதாரணமாக 32 பாகை செல்சியஸாக பதிவாகின்ற நிலையில், தற்போது 38.8 பாகை செல்சியஸ் அளவில் அங்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அதிகளவில் நீரை அருந்துவதுடன், அதிகளவான நேரத்தை குளிப்பதற்கு செலவிடுவதன் ஊடாக சரும நோய்களை மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.