இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கொழும்பில் கைது!!

திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கின்சி வீதியில இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெறும் போது கிரிக்கெட் வீரர் மது போதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை, கின்ஸி வீதிப் பகுதியில் வைத்து திமுத்து கருணாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கல்!!

 

வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் கட்டுமான கைத்தொழில் கைவிளைஞர்களுக்கான தகுதி அடிப்படையிலான பயிற்சித்திட்டத்தினை பூர்த்திசெய்த கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் வீ.எம்.வீ.குறூஸ் தலைமையில் இன்று (30.03.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சீ.ஐ.டீ.ஏ (CIDA) உதவிப்பணிப்பாளர் சரத் வனசிங்க , NAITA மாவட்ட முகாமையாளர் பவளநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேலதிக மாவட்ட முகாமையாளர் நிமலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பி.ஏ.கருணாதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 200 கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற கோர விபத்து!!

கோர விபத்து

வாரியபொல மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஓர் நபர் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தி ஒன்றும் சிற்றூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அம்பன்பொல பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாரியபொல மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் ஓர் நபர் உயிரிழந்துள்ளனர்

இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி : காத்திருக்கும் அதிர்ச்சி!!

ஓர் முக்கிய செய்தி

அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மாகாணத்தின் திக்வெல்ல, கெகனதுரு, கொட்டவில முதலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது.

இதேநேரம், வட மாகாணத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. தற்போது நிலவும் காலநிலை தன்மைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகலின் வெப்பநிலை சாதாரணமாக 32 பாகை செல்சியஸாக பதிவாகின்ற நிலையில், தற்போது 38.8 பாகை செல்சியஸ் அளவில் அங்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அதிகளவில் நீரை அருந்துவதுடன், அதிகளவான நேரத்தை குளிப்பதற்கு செலவிடுவதன் ஊடாக சரும நோய்களை மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : ஊரே சோகத்தில்!!

ஊரே சோகத்தில்..

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் 26 வயதுடைய தாய் மற்றும் 05 வயது சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பலாங்கொடை – கபுவத்த – மஹவலதென்ன பிரதேச வீட்டில் வைத்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முன்னர் தாயார் மூலம் மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என பலாங்கொடை காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அதிரடியாக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் : இருவர் கைது!!

களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர்

வவுனியா சின்னபுதுக்குளம் குடிமனைகளையண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக கருங்கல் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொக்குவெளி சின்னபுதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30.03) மதியம் 2 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹர தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இச் சுற்றிவளைப்பின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு மேலதிகமாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து மண் அள்ளும் பைகோ வாகனம் 2 , மாமடுவ மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 21,32 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளதாகவும் இவர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் மடுகந்தை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹர தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ரமேஷ்வரம் : 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்ச் சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்!!

சாதித்த தமிழ்ச் சிறுவன்

பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் – தாரணி தம்பதியினரின் மகன் ஜஸ்வந்த் (10), தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாவட்டம், மாநிலம் என பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதங்களை வென்றுள்ளார். 2017ம் ஆண்டு தன்னுடைய 8 வயதில் தொடர்ந்து 81 நிமிடம் நீந்தி உலகசாதனை படைத்தார்.

இந்த நிலையில் குற்றாலீசுவரனை போல பாக்ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பியுள்ளார். அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்ட ஜஸ்வந்த், தன்னுடைய பயிற்சியாளர், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருடன் புதன்கிழமையன்று தலைமன்னார் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீந்த துவங்கிய ஜஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார். இதன்மூலம் கடந்த 1994ம் ஆண்டு பாக் ஜலசந்தியை 16 மணி நேரத்தில் கடந்த குற்றாலீசுவரனின் சாதனை முறியடிக்கப்பட்டது.

பின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்த ஜெஸ்வந்திற்கு இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாதனை படைத்திருக்கும் சிறுவனுக்கு அரசு அதிகாரிகள், தலைவர்கள் துவங்கி பொதுமக்கள் பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர் : கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய பெற்றோர்

சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார் (45). இவரது மனைவி சாந்தி (35). இந்த தம்பதியினருக்கு ரம்யாலோஷினி என்கிற மகளும், தீனதயாளன் என்கிற மகனும் உள்ளனர்.

தீனதயாளனை மட்டும் நேற்று இரவு பாட்டி வீட்டுக்கு சென்று உறங்குமாறு ரவிக்குமார் கூறியுள்ளார். அங்கு உறங்கி எழுந்த தீனதயாளன் அதிகாலை தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உறவினர்களை அழைத்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துள்ளார். அப்போது ரவிக்குமார் சேலையிலும், அவருடைய மனைவி மற்றும் மகள் கயிற்றில் தூக்கில் தொங்கியவாறே சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தீனதயாளன் கதறி அழ ஆரம்பித்துள்ளார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் : அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய்

பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர் நேற்று காலை அவருடைய அலுவலகத்தில் வைத்து மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சக அதிகாரிகள் தப்பி ஓட முயன்ற மர்ம நபரை சுற்றிவளைத்தனர். உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வைத்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் பல்விந்தர் சிங் என்பது தெரியவந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்விந்தர் சிங் கடையில் சோதனை மேற்கொண்டு, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக கூறி நேஹா கடைக்கு சீல் வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்விந்தர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பல்விந்தர், நேற்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், துப்பாக்கி சூடு நடந்த சமயம் நேஹாவின் 6 வயது மகளும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

மூன்று பேர் தற்கொலை

தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் பேருந்து ஓட்டுனரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ரம்யலோட்சனி என்ற மகளும், 12-ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ரம்யலோட்சனி திருச்சங்கோட்டில் இருக்கும் விவேகானந்தா கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு மகனை தனது தாயின் வீட்டிற்கு ராஜ்குமார் அனுப்பியுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு கதவை தொடர்ந்து தட்டியுள்ளான். ஆனால் கதவு திறக்காததால், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது, தாய், தந்தை, சகோதரி மூவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ரம்யலோட்சனியின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாற்று சமூக இளைஞனை ரம்யா காதலித்து வந்ததாகவும், இதற்கு பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்றிரவு பேசி சமாதானம் செய்யும் முயற்சியின்போது சண்டை ஏற்பட்டு மகளை கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஒன்றரை மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை : கணவன்-மாமியாரின் வெறிச்செயல்!!

இளம்பெண் கொலை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி துளசிதாஸ்-விஜயலட்சுமி. இவர்களது மகள் துசராவுக்கும்(27), அதே பகுதியைச் சேர்ந்த சந்துலால்(30) என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை, பெண்ணின் தந்தை துளசிதாஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்துலால் மற்றும் அவரது தாயார் இருவரும் துசராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதமாக புதுப்பெண் துசராவின் நடமாட்டம் இல்லை. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் துசராவை கருநாகப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சந்துலாலும், அவரது தாயாரும் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி துசரா இறந்தார். அதனைத் தொடர்ந்து, துசாராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் பொலிசாரிடம் புகார் செய்துள்ளனர். அதன் பின்னர் சந்துலால் மற்றும் அவரது தாய் கீதாலால் ஆகியோரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் கூறுகையில், ‘போதிய வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் துசராவை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டோம். திருமணத்தின்போது 60 கிலோ எடை இருந்தார்.ஒன்றரை மாதமாக தண்ணீர் மட்டுமே கொடுத்ததால் 40 கிலோ எடை குறைந்து, இறக்கும்போது 20 கிலோ எடை மட்டுமே இருந்தார். பட்டினி போட்டே கொலை செய்தோம்’ என்று விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.

துசராவுக்கு காலையில் ஒரு தம்ளர் சர்பத், மதியம் ஒரு தம்ளர் தண்ணீர், இரவு மீண்டும் ஒரு தம்ளர் சர்பத் மட்டுமே ஜன்னல் வழியாக இருவரும் கொடுத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தாய்-மகனை கைது செய்த பொலிசார் கருநாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ஒரே குடும்பத்தில் மூன்று பிள்ளைகளும் தொடர்ச்சியாக 9A சித்திகள் பெற்று சாதனை!!

9A சித்திகள் பெற்று சாதனை

ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளும் அடுத்தடுத்து க.பொ.த. சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளனர். முத்தமிழ்வித்தகன் விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவில் இச்சாதனை இடம்பெற்றுள்ளது. காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் பயிலும் செல்வி சகாதேவராஜா டிவானுஜா இம்முறை வெளியாகிய பெறுபேற்றின்படி 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளார்.

இதேவேளை இவரது சகோதரியான செல்வி ச.மைத்ரி 2014இலும் சகோதரரான செல்வன் ச.யனோஜ் 2016இலும் க.பொ.த.சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப்பெற்றிருந்தனர்.

செல்வி மைத்ரி தற்போது பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் பயின்றுகொண்டிருக்கிறார். யனோஜ் இவ்வருடம் கணிதபாடத்துறையில் உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றவிருக்கிறார்.

காரைதீவு விபுலாநந்தவீதியைச்சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா நேசரஞ்சினி தம்பதியினரின் 3பிள்ளைகளுமே இத்தகைய தொடர் 9ஏ சித்திகளைப்பெற்றவர்களாவர்.  க.பொ.த.சா.த.பரீட்சைப்பெறுபேறுகளின்படி காரைதீவுக்கோட்டத்தில் இம்முறை 9மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கைத்தொழில்பேட்டைக்கு பிரதி அமைச்சர் விஜயம்!!

புத்திக பத்திரன

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு இன்று (30.03) காலை 9 மணியளவில் சிறுகைத்தொழில் மற்றும் வாணிபத்துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நிலையத்தினை பார்வையிட்டு கைத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு முதன் முறையாக மேற்கொண்ட விஜயத்தின் போது கைத்தொழிலாளர்கள் பிரதி அமைச்சரை வரவேற்று அழைத்துச் சென்றதுடன் கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட அவர்களின் தேவைகள், கைத்தொழில் பேட்டை நிலையத்தின் தேவைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் வீதி அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், போன்ற விடயங்களை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த அமைச்சர் அமைச்சினால் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களை கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் சிறு கைத்தொழிலாளர்களிடம் உரிமையாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் கைத்தொழில்பேட்டையின் ஒன்றியத் தலைவரும் வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவருமான எஸ்.சுஜன், அமைப்பின் செயலாளர் பரமேஸ்வரன், பணிப்பாளர் பி.கே.லியனகே முகாமையாளர் சடாச்சரம், மற்றும் சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் ஊழியர்கள், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஒரே ஒரு புகைப்படத்தால் உயிரைவிட்ட பெண் : அனாதையான கைக்குழந்தைகள்!!

உயிரைவிட்ட பெண்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி என்ற பெண் குழந்தையும், ஆதீஸ்வரா என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்த லலிதா லட்சுமி, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். சுரேசுக்கு கடந்த சில நாட்களாக சரிவர வேலை கிடைக்காததால் லலிதா லட்சுமி தான் வாங்கிய கடனுக்கான கடைசி மாத நிலுவை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் தாமதம் ஆகி விட்டதாக தெரிகிறது.

ஒவ்வொரு மாத நிலுவையையும் சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி வந்த லலிதா லட்சுமியால் குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி மாத நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த சிலர் லலிதா லட்சுமி வீட்டிற்கு சென்று கடன் நிலுவையை கேட்டு மிரட்டி தகாத வார்த்தைகளால் அவரை திட்டி சத்தம் போட்டு உள்ளனர். மேலும் அவரை செல்போனில் படம் எடுத்து உள்ளனர். அக்கம், பக்கத்தினர் முன்னிலையில் நிதி நிறுவனத்தினர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதையும், செல்போனில் படம் எடுத்ததையும் லலிதா லட்சுமியால் ஜீரணிக்க முடியவில்லை.

இதனால் மிகுந்த அவமானம் அடைந்த லலிதா லட்சுமி, தான் இனிமேல் ஒரு நிமிடம் கூட உயிர் வாழக்கூடாது என்று முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லலிதா லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

லலிதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளை பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது காண்போரின் கண்களையும் குளமாக்கியது. மகளிர் குழுவில் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி : எலும்புக்கூடாக இருந்த சடலம்!!

கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி

தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர் 2ஆவது கணவர் ஆவார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யாப்பிள்ளை கடந்த 13ஆம் திகதி மாயமானார்.

அவர் மதுபோதையில் எங்காவது மயங்கி கிடப்பார் என நினைத்த உறவினர்கள், விரைவில் வீடு திரும்புவார் என நம்பியிருந்தனர். இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரின் சகோதரர் பொலிஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பரிமளாவிடம் விசாரித்தனர். அவர் முரணான பதில்களைத் தெரிவித்ததால், பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை கொன்றதை ஒப்புகொண்டார்.

அய்யாபிள்ளை, அடிக்கடி குடித்துவிட்டுவந்து பரிமளாவிடம் சண்டையிடுவார் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்றும் மதுபோதையில் இருந்த அய்யாபிள்ளை, வழக்கம்போல் பிரச்னை செய்துள்ளார். ஆத்திரமடைந்த பரிமளா, திடீர் தாக்குதல் நடத்தியதில் நிலைகுலைந்த அவர், அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார்.

அய்யாபிள்ளை போதை தெளிந்து எழுந்து விடுவார் என பரிமளா நினைத்த நிலையில் அவர் எழவில்லை. பதறிப்பேன பரிமளாவோ முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தபோது, பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார் அய்யாபிள்ளை. பின்னர் நள்ளிரவு நேரத்தில், வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை திறந்த பரிமளா, அதில் அய்யாபிள்ளையின் சடலத்தை போட்டு மூடியுள்ளார்.

மேலும் தொட்டியை திறக்கும் பகுதியை சிமெண்ட் பூசி மறைத்த பரிமளா, அக்கம் பக்கத்தினரிடம் ஒன்றும் தெரியாதது போலவே நடந்து கொண்டதாக காவலர்கள் கூறுகிறார்கள். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கழிவுநீர் தொட்டியை உடைத்து அய்யாபிள்ளையின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர். இதையடுத்து பரிமளாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் போரின் வடு சுமந்த மாற்றுத்திறனாளி மாணவி படைத்த சாதனை!!

சாதனை படைத்த மாணவி

வன்னி இறுதிப்போரின் போது எறிகணை வீச்சினால் தனது வலது காலை முழுமையாக இழந்த வவுனியா கிழவிக்குளம், பாலமோட்டைச் சேர்ந்த செல்வி ச.பிரியங்கா 2018 ம் ஆண்டு நடைபெற்று அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 6A, B, C என்ற பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து வலி சுமந்த வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் இவரது தாயார் அதே சம்பவத்தில் இடது கையை முழுமையாக இழந்து போரின் வடுக்களோடும், குடும்ப வறுமையோடும் வாழ்ந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

மன வலிமையோடு கல்வி கற்று சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சாதனை புரிந்து தன் தாய்க்கும் மண்ணுக்குப் பெருமை சேர்த்த செல்வி ச.பிரியங்காவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் வவுனியா நெற் பெருமையடைகின்றது.

-நன்றி பொன்னம்பலம் சிவபாதம்-

இதே போன்று உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போன்ற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் சாதிப்பதற்கு உடற்குறை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.