லண்டனில் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் குறித்து வெளியான தகவல்கள்!!

இலங்கைத் தமிழர்

லண்டனில் Pinner என்ற பகுதியில் இலங்கை தமிழ் நபரான ரவி என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழரான ரவி லண்டனில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக Pinner பகுதியில் வசித்து வருகிறார். இவரது கடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்நிலையில், திடீரென கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக கடைக்குள் புகுந்த நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திகுத்து காயங்குடன் உயிருக்கு போராடிய ரவி சுமார் 45 நிமிடங்களில் உயிரிழந்தார். Nikki Walker-Nash என்ற பெண்மணி ரவி குறித்து பகிர்ந்துகொண்டதாவது, Marsh Food மற்றும் Wine போன்றவற்றை ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ரவியே வழங்கி வருகிறார்.

நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரது கடைக்கு செல்வேன், அன்பாக சிரித்துக்கொண்டே என்னை வரவேற்பார். வழக்கம்போல நேற்று செல்கையில் சாலை அடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டேன்.

அதன்பின்னர்தான், இறந்துபோனது ரவி என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ரவி தனது கடையில் 5 நாட்கள் பணி செய்வார், அவர் இல்லாத நேரத்தில் அவரது உறவினர் இந்த பணியை மேற்கொள்வார்.

Lloyd Wood என்பவர் கூறியதாவது, உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ரவி மிகவும் பரீட்சியமானவர். அன்பான, மகிழ்ச்சியான மற்றும் கடின உழைப்பாளி என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த கொலையினை நேரில் பார்த்தவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் சமீப காலமாக கத்திக்குத்து கொலைகள் அதிகரித்து வருகின்றது. இந்த கொலையுடன் சேர்த்து இதுவரை 29 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!!

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

மன்னார் – நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நானாட்டான் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

நானாட்டான் பகுதியில் தனது அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் சந்தேகநபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் நானாட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை குடும்பத்திற்கு பெரும் ஏமாற்றம் கொடுத்த கனேடிய அரசாங்கம்!!

கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் முன்னாள் தகவல் வழங்குனர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய மூன்று இலங்கையர்களின் கோரிக்கையை கனேடிய அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹொங்கொங்கில் தங்கியிருக்கும் குறித்த இலங்கை குடும்பம், அந்நாட்டிலும் புகலிடம் கோரிய போதும் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதும், இதுவரையில் அவர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களுடன் ஹொங்கொங்கில் தங்கி இருந்த பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்தப் பெண்ணும், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தார். தமக்கு உதவிய குறித்த நான்கு பேருக்கும் கனடா அடைக்கலம் வழங்க வேண்டும் என்று எட்வர்ட் ஸ்னோவ்டன் சமுக வலைத்தளங்கள் ஊடாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு!!

மாணவர்களுக்கு சீருடைகள்

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திருமதி எஸ்.கமலாம்பிகை தலைமையில் இன்று (26.03) சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில பிரதம அதிதிகளாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் றொசான் பெனாண்டோ, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி வைத்தனர்.

பொன்னையா நவமணி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாடசாலையின் 160 ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, ஓமந்தை போட்டக்கல்வி அதிகாரி எஸ்.சசிகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சாதனை!!

முல்லைத்தீவு மாவட்டம் சாதனை

வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ஆண், பெண் தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள் பிரிவில், முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன், மன்னார் மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்போது மூன்றாம் இடத்தினை கிளிநொச்சி மாவட்டம் பெற்று 2 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலப் பதக்கத்தைப் பெற்று கொண்டுள்ளது.

பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டம் தனதாக்கி 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன், மன்னார் மாவட்டம் 2 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் என்பனவற்றினை பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டம் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தைப் பெற்று கொண்டுள்ளது.

வவுனியாவில் ஏழை மாணவர்களின் துயர்துடைக்க முன்வந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம்!!

இளைஞர் பசுமைத்திட்டம்

இளைஞர் பசுமைத்திட்டம் ஊடாக வவுனியா மாவட்டத்தில் உள்ள 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான,

கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பணவு வழங்கும் செயற்றிட்டம் வவுனியா புகையிரத நிலையில் வீதியில் அமைந்துள்ள இளைஞர் பசுமைத்திட்டம் ( YOUTH GREEN PLAN) காரியாலய நிறுவனத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் நபீஸ் அபூதாஹீர் தலமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் இச் செயற்றிட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் இளைஞர் பசுமை திட்டம் ஊடாக பாடசாலை ஊடாக மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு , புலமைப்பரிசில் திட்டங்கள் போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

தென்னை மரத்தின் உச்சியில் உயிரைவிட்ட நபர்!!

உயிரைவிட்ட நபர்

ஹம்பாந்தோட்டையில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தின் உச்சிக்கு ஏறிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீரப்புலி கங்கானம் சுகத் என்ற திருமணமாகாத 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரத்தின் உச்சியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மரண விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தின் உச்சிக்கு ஏறிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீரப்புலி கங்கானம் சுகத் என்ற திருமணமாகாத 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் சட்டவிரோதமாக மின் வெட்டு : வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்!!

சட்டவிரோதமாக மின்வெட்டு

இலங்கை மின்சாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்படும் மின் வெட்டு சட்டவிரோதமானது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின்வெட்டு அமுல்படுத்தப்பட முடியாது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின் வெட்டு அமுல்படுத்தப்பட முடியாது எனவும், மின்சார சபையின் எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால அது குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா போகஸ்வெவ பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

வவுனியா, போகஸ்வெவ பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போகஸ்வெவ பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து போகஸ்வெவ பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின் குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 360 அவுஸ்திரேலியர்கள்!!

360 அவுஸ்திரேலியர்கள்

இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலிய குழுவினரின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்கிஸ்ஸ கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் 360 அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் 360க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்து பசுபிக் வேலைத்திட்டதின் கீழ் நேற்று முன்தினம் கல்கிஸ்ஸ கடற்கரை பகுதி அவுஸ்திரேலியர்களால் சுத்தப்படுத்தப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் மாணவர்கள், அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள், இலங்கை பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இலங்கையில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக சுத்தமான கடற்ரை ஒன்று அவசியம் எனவும், கல்கிஸ்ஸ கடற்கரையை சுத்தப்படுத்தியமை மகிழ்ச்சியான விடயம் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் மூலம் கல்கிஸ்ஸ கடற்கரையில் சுமார் இரண்டு கிலோமீற்றர் கரையோரப் பகுதி துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்திய கணவர்!!

துன்புறுத்திய கணவர்

பாகிஸ்தானில் தன் மனைவிக்க பேய் பிடித்திருக்கிறது எனக் கூறி பல வாரங்களாக சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சாஹிவால் நகரில் வசித்து வரும் பெண் ஒருவரை பேய் பிடித்திருக்கிறது என கூறி அவரது கணவர் உட்பட குடும்பத்தினர் பல வாரங்களாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அண்டை வீட்டுக்காரர்கள் பொலிஸில் அளித்த புகாரையடுத்து குறித்த பெண் மீட்கப்பட்டார். இது குறித்து தொலைக்காட்சியில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. அதில், பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அறை ஒன்றின் தரையில் அமர்ந்துள்ளார்.

அவரது கால்கள் சங்கிலியால் சுவருடன் பிணைக்கப்பட்டுள்ளன. அவரை மீட்டபின் பொலிஸாரிடம், எனது கணவர் மற்றும் உறவினர்கள் என்னை கட்டி வைத்து அடித்து உதைத்து வந்தனர் என அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தாய் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி!!

தூக்கில் தொங்கிய சிறுமி

ஹட்டன் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை 9 மணியளவில் தனது தாய் ஏசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பரமநாதன் நித்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டிலிருந்து பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பிய சிறுமி வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும், தனது தாய் தன்னை ஏசியமையாலேயே தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்கு கைரேகை பரிசோதனை பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை ஆரம்பிக்கபட்டுள்ளதோடு திடீர் மரண விசாரனையாளர் திருமதி லக்ஸ்மி தலைமையில் மேலதிக விசாரனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தரிவித்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்தி : புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானம்!!

புலமைப் பரிசில் பரீட்சை

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (25) பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை வறிய மாணவர்களுக்கு வசதி படைத்த பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினை பெறும் பெரும்பாலான மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்ல என புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அதனால் புலமைப்பரீட்சை இன்று ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பிரசித்தி பெற்ற பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டா போட்டிகளுக்குப் பதிலாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவற்றை பௌதீக ரீதியிலும் தர ரீதியிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அப்பொறுப்பினை அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 140 மில்லியன் ரூபா செலவில் ஐயாயிரம் ஆசனங்களைக் கொண்ட மைத்ரி கைவினை கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பொலன்னறுவை றோயல் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்ற வகையில் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக தம்மாலான அனைத்து கடமைகளையும் தாம் பூர்த்தி செய்திருப்பதாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் அவ்வளங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியது தற்கால மாணவ சமூகத்தின் பொறுப்பாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு,பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரனசிங்க, வித்தியாலய அதிபர் ரவி லால் விஜயவங்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டிற்கு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளிற்கான அறிவுறுத்தல்களை யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் வவுனியா வளாகத்தின் பிரத்தியேக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது 17.04.2019 ஆம் திகதிகளிலும் கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வானது 22-04-2019 ஆம் திகதிகளிலும் நடைபெறும் என்பதுடன், வணிக பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது 25.03.2019 ஆம் திகதிகளிலும் கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வு 22.04.2019 ஆம் திகதிகளிலும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்குமிட வசதிக்காக விண்ணப்பித்த மாணவர்கள் ஆரம்ப திகதிக்கு முன்தினம் விடுதிக்கு சமூகமளிக்குமாறும் வவுனியா வளாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வவுனியா வளாகத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக தாமதமின்றி வவுனியா வளாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு வளாகத்தின் முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது!!

முச்சக்கர வண்டி சாரதி கைது

திருகோணமலை – அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை – மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலை மிக்சு சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் முற்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருவதாகவு‌ம் அதேசமயம் சிறுமியின் பெற்றோர்கள் வறுமையில் வாழ்வதை அவதானித்த இந்நபர் சிறு சிறு உதவிகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று காலை பாடசாலை சென்ற மாணவியை வீட்டாருடன் அன்பாக பழகிய முச்சக்கர வண்டி சாரதி அலஸ்தோட்டம் – துவரங்காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பாடசாலை சீருடையுடன் அழைத்து சென்றுள்ளார். இதனை பார்வையிட்ட பிரதேச மக்கள் முச்சக்கர வண்டி சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதுடன் உப்புவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுமியை உப்புவெளி பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பரிசோதனைக்காக உட்படுத்த உள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையரை பயமுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

195 பயணிகளுடன் லண்டனில் இருந்து இலங்கை வந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

விமானம் அவசரமாக தரையிறக்கம்

195 பயணிகளுடன் லண்டனில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது பயணி ஒருவருக்கு அவசர வைத்திய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரொமானியா நாட்டின் Bucharest பகுதியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்வது ஸ்ரீலங்கன் விமான சேவையின் கொள்கையாகும். அதற்கமைய அவசர வைத்திய தேவைக்கமைய விமானம் அருகில் இருந்த Bucharest பகுதி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வைத்தியர் உடனடியாக அழைக்கப்பட்டார். சிறுநீரக பிரச்சினையில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நோயாளிக்கு உடனடியாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
அந்த பயணியின் உடல் நிலை தற்போது ஆரோக்கியமாக உள்ளதென ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

சர்வதேச விமான சட்டத்திட்டங்களுக்கமைய நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்திற்கு கால நேரம் ஒன்று வழங்கப்படும். அதற்கமைய ஒரு நாளில் அதிக நேரம் பயணிக்க முடியாது. விசேடமாக எரிபொருள் நிரப்புவதற்கும், விமானத்தின் தரத்தினை சோதனையிடுவதற்கும் சில மணித்தியாலங்கள் அவசியமாகும்.

எனவே இந்த விமானத்தில் பயணித்த 195 பயணிகளுக்கும் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த விமானம் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.