வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!

ஆர்ப்பாட்டப் பேரணி

வடக்கு கிழக்கில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை இன்று (30.01) முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா பசார் வீதி வழியாக வவுனியா பொது வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் போராட்டம் ஆரம்பித்த பழைய பேரூந்து நிலையத்தை சென்றடைந்திருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஐநாவில் ஆரம்பிக்க இருக்கும் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்காமல் எமது பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள், மத போதகர்கள் உட்பட பெருமளவானோர் இப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

யாழில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

 

அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

யாழ்ப்பாணத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்றிரவு அண்ணன் – தம்பி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளனது. இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்காக அண்ணனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பண கொடுக்கல் வாங்கல் விவகாரமே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே உயிரிழந்தார்.

அண்ணன் தம்பிக்கு இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதென்றும் அது கைகலப்பாக மாறி கொட்டனால் அடிக்கப்பட்டதால் கொலையில் முடிந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவை அதிர வைத்த கொலைகாரன் : இலங்கைத் தமிழர்கள் உட்பட பலரை கொன்றதாக ஏற்பு!!

இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மெக்ஆத்தர் என்ற கனேடிய பொதுமகன், தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரே கனடாவில் அதிக கொலைகளை செய்தவராக கருதப்படுகிறார் என்று கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன

இந்தநிலையில் அவரின் விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. இதன்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2010- 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் இரண்டு தமிழ் அகதிகள் உட்பட்ட 8 பேரைக்கொலை செய்ததாக மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கு ஆதாரமாக கொலை செய்யப்பட்டவர்களின் புதைக்கப்பட்ட சடலங்கள் அவரின் காணிகளில் இருந்து விசாரணையாளர்களால் மீட்கப்பட்டன.

இந்தநிலையிலேயே அவர் நேற்று கனேடிய நீதிமன்றத்தில் வைத்து தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் முன்வைத்துள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களால் இலங்கை ஜனநாயகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் சபாநாயகரிடம் கேட்டுள்ளது.

ரணிலுக்கு அதிர்ச்சி : அரசில் இருந்து வெளியேற தயாராகும் மனோ கணேசன் தலைமையிலான அணி?

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று நுகேகொடையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த கோரிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கும் வகையில் அமைந்துள்ள கூட்டு ஒப்பந்தம் அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டமைக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து அதிருப்தியை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசிலிருந்துவிலகி நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். எனினும், தொழிலார்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

அதுவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறித்து பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தது.

இறுதி வரையில் பிரதமர் ரணிலுடன் இணைந்து போராடி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவியிருந்தது.

எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்களின் செயலுக்கு துணைப் போயுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி : சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு!!

யாழ். கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டையடுத்து, தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.

அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டனர்.

அதனையடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வேனையும் கைப்பற்றினர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார்.

அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.

சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ். நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம்.

அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம். அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை.

அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருகோணமலையில் பதற்றத்திற்கு காரணமான சடலம் மீட்பு!!

கிண்ணியாவின் பதற்றமான சூழ் நிலைலையையடுத்து தேடப்பட்டு வந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான முகம்மது ரபீக் பாரிஸ் ன்பவரின் சடலத்தினை நேற்று மாலை மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ.

குறித்த நபர் திருமணமானவர் என்பதோடு, மற்றொருவரான றம்ழான் பஷீர் முகம்மது றமீஸ் வயது 19 இளைஞரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதான நேற்று காலை மணல் அகழப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய கடற்படையின் சுற்றிவளைப்பு குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.

மணல் ஏற்றுவோரை கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போது 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த மூவர் கங்கையில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தப்பியுள்ளதுடன் 23 வயதான பதூர் ரபீக் பைரூஸ் மற்றும் 19 வயதான ஆர்.பசீர் ரமீஸ் ஆகியோர் காணாமற்போயிருந்தனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் இறகுகள் கட்டப்பட்டன!!

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, தேசிய கிரிக்கட் அணியின் தெரிவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிப்புரை, அசந்த டி மெல் தலைமையிலான தெரிவுக்குழுவுக்கு விளைளாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இனிவரும் போட்டிகளின்போது விளையாட்டு வீரர்களை அணித்தலைவர், முகாமையாளர், தெரிவாளர்கள் ஆகியோர் தெரிவுசெய்வார்கள். எனினும் பயிற்றுவிப்பாளர் அதில் இடம்பெறமாட்டார் என்று அந்த பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணிப்புரை, கடிதம் மூலம் அவுஸ்திரேலியாவில் உள்ள அணியின் இலங்கை கிரிக்கட் அணியின் முகாமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் குறித்த தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருவதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க, பதவிவிலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்கும் மர்ம விமானம்!!

 

மர்ம விமானம்

பல்வேறு உபகரணங்களை எடுத்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இராணுவ முகாம் ஒன்று திருகோணமலையில் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வெளியிட்ட போது அப்படி எதுவும் நடக்காது என பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் பலவேறு பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. விமான நிலையத்திற்கு வந்துள்ள இந்த விமானத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் சோதனையிட அனுமதியில்லை.

திருகோணமலையில் ஸ்தாபிக்கப்பட உள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்கான பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கடற்படை முகாமிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மக்கள் : பல கடற்படையினர் காயம்!!

திருகோணமலை – கிண்ணியா கண்டல்காடு பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கற்களால் தாக்கப்பட்ட கடற்படையின் 12 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

கண்டல்காடு பாலத்திற்கு அருகில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் மக்களுக்கும் இடையில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது நடத்தப்பட்ட கற்பிரயோகத்தில் காயமடைந்த கடற்படையின் 12 உறுப்பினர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டல்காடு பகுதியின் மகாவலி கங்கைக் கரையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இன்று காலை மணல் அகழப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய கடற்படையின் சுற்றிவளைப்பு குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.

மணல் ஏற்றுவோரை கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போது 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த மூவர் கங்கையில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தப்பியுள்ளதுடன் 23 வயதான பதூர் ரபீக் பைரூஸ் மற்றும் 19 வயதான ஆர்.பசீர் ரமீஸ் ஆகியோர் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மணல் ஏற்றியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்காக அவர்கள் திட்டமிட்ட வகையில் இவ்வாறு எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை மணல் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பௌத்த மயமாக்கப்படும் தமிழர்களின் பூர்வீக கிராமம்!!

 

தமிழர்களின் பூர்வீக கிராமம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும் பௌத்தமயமாக்கி சப்புமல்கஸ்கட என பெயரை மாற்றி சிங்கள குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அக்கிராமத்திலும் அதனை அண்டி வாழ்ந்த வெடிவைத்தகுளம் பிரதேச மக்களும் இணைந்து விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

எனினும் யுத்தம் காரணமாக வெடிவைத்தகுளம் மற்றும் கச்சல் சமனங்குளம் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் தற்போதும் அப்பகுதியில் மக்கள் குடியேறாத நிலையிலும் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலிலேயே கொக்கச்சான்குளம் என்ற தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமத்தினையும் அக்குளத்தினையும் ஆக்கிரமித்து கலாபோகஸ்வெவ என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தற்போது அப்பிரதேசம் சிங்கள மக்களின் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொக்கச்சான்குளம் என்ற கலாபோகஸ்வெவ கிராமத்தின் பின்புறமாக அதனை அண்டிய கச்சல் சமனங்குளத்தினையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு சப்புமல்கஸ்கட என சிங்கள பெயரை சூட்டவுள்ளதாகவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கச்சல் சமனங்குளத்தில் பௌத்த துறவியொருவர் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் அப்பிரதேசத்து மக்கள் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரதேசத்தினை காத்துத் தருமாறும் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்!!

 

ரோஹித்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற போதும், இன்று வரை அது தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த ரோஹித – டட்யானா இருவரும் மிகவும் எளிமையான முறையில் கடந்த 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டிய கிராமத்தில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

முதலில் பௌத்த முறைப்படி திருமணத்தில் இணைந்த இருவரும் நேற்று பம்பலப்பிட்டி தூய மேரி தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமண சடங்கினை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் பாரம்பரியத்திற்கு அமைய புதுமண தம்பதியினர் இன்று திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழர் கலாச்சார உடையணிந்து கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ரோஹித – டட்யானாவின் எளிமையான திருமணம், அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிளிநொச்சியில் கஞ்சா தொடர்பில் தகவல் வழங்கிய மாணவனுக்கு நேர்ந்துள்ள நிலை!!

 

மாணவனுக்கு நேர்ந்துள்ள நிலை

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் பல பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வின் போது தரம் 8இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கஞ்சா விற்பனையை குறித்து பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த மாணவன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் கஞ்சா விற்பனையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர்.

அத்தோடு மாணவனின் குடும்பமும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் இது தொடர்பான செய்திகளும் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதையடுத்து நேற்று மாலை குறித்த மாணவன் வீதியில் சென்ற வேளை உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளியதுடன் நீ செத்தாயடா என கூறி தப்பிச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலினாலினால் பாதிப்புக்குள்ளான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் தீர்மானித்திருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனின் தந்தை இச் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச் சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஆபாச காணொளியை வெளியிடப் போவதாக மிரட்டும் பெண் : அதிர்ச்சியில் பலர்!!

 

மிரட்டும் பெண்

கொழும்பில் ஆபாச காணொளிகள் உள்ளதாக கூறி பணம் கொள்ளையடிக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச காணொளிகள் பல தன்னிடம் உள்ளதாகவும் அதனை இணையத்தில் வெளியிடுவதாகவும் பலருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இலங்கையின் பிரபல வீடு மற்றும் காணி விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரிடம் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அந்த நிறுவனத்தில் முகாமையாளராக சேவை செய்யும் கொழும்பு, டொரின்டன் பிளேஸ் மாடி வீட்டில் வசிக்கும் தமாரி நிரோஷனி என்பவரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படுகின்ற நபரின் ஆலோசனைக்கமைய இந்த கப்பம் பெற முயற்சி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய சந்தேக நபரினால் குறித்த கப்பம் பண பையை பெற்றுக் கொள்ள தயாரான சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஆபாச காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதை தவிர்க்க 3 கோடி ரூபா பணம் வழங்கப்பட வேண்டும் என்பதே குறித்த பெண்ணின் கோரிக்கை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய இனந்தெரியாத நபர்கள்!!

மாணவனை கடுமையாக தாக்கிய  நபர்கள்

கிளிநொச்சி – கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவணை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்றது.

இதன் போது குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல் தந்தால் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஊடகங்களிற்கு இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோரால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த தாக்குதலில் தனது மகனிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, எதிர்வரும் காலங்களில் எமது சமூகம் சீரழிந்து போகும் எனவும், போதைப்பொருள் தொடர்பில் எவரும் தகவல்களை வழங்க முன்வர மாட்டார்கள் எனவும் இதன் போது ஊடகங்களின் முன்னால் ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவெலி ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் – பொகவந்தலாவ, மாவெலி ஆற்றிலிருந்து காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டியை சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது சொந்த தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.