7 மாத மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்!!

தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்

கொட்டகலை, ரொசிட்டா பகுதியில் தாயொருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 வயதான கே.நித்தியகல்யாணி என்பவரும் அவரது 7 மாத ஆண் குழந்தையான சி.சந்தீப் அஷ்விந்தன் என்ற குழந்தையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் உறவினர்களுடன் வீட்டில் இருந்துள்ள நிலையில் வீட்டிலிருந்து குழந்தையின் சடலத்தையும், வீட்டிற்கு வெளியிலுள்ள கொய்யா பழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும் இன்று காலை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணும், குழந்தையும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறெவரும் அவரை கொலை செய்தார்களா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹட்டன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள் : திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம்!!

 

கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள்

இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட காலை உணவினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட கோழி கறியில் உயிரோடு புழுக்கள் காணப்பட்டமையினால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய நகரத்தில் அமைந்துள்ள பிரபல திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்தவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

உணவு பெற வந்தவர் கோழி கறியில் உயிரோடு புழுக்கள் காணப்பட்டதனை முதல் முதலாக அவதானித்துள்ளார். உடனடியாக அவர் அந்த இடத்தில் சுகாதார பரிசோதகரை அழைத்து வந்துள்ளார். இது தொடர்பில் சோதனையிட முயற்சித்த போது மண்டபத்தில் ஊழியர்கள் அதனை மறைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்றத்திற்குள் மிளகாய்த் தூள் கொண்டு வந்தது எப்படி? விசாரணையில் வெளியான தகவல்!!

 

நாடாளுமன்றத்திற்குள் மிளகாய்த் தூள்

மஹிந்த தரப்பினரால் நாடாளுமன்றத்திற்குள் மிளகாய் பொடி கொண்டு வரப்பட்டது எப்படி என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு உறுப்பினர் தங்கள் பாதணியில் மறைத்து வைத்து மிளகாய் பொடியை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மிளகாய் பொடி கொண்டு வந்தமை, நாற்காலியில் தாக்குதல் மேற்கொண்டமை, சபாநாயகர் உரையாற்றும் மைக்ரோ போனை உடைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

உறுப்பினர்கள் இருவர் தங்கள் பாதணியினுள் மறைத்து நாடாளுமன்றத்திற்கு மிளகாய் பொடி கொண்டு வரப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் நாட்டில் நிலவிய அரசியல் சதிப் புரட்சியின் ஒரு அங்கமாக நாடாளுமன்றத்தில் வன்முறைகள் வெடித்திருந்தன. இதன்போது கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் இருவர் மிளகாய் பொடியை கொண்டு வந்து உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இலங்கைப் படையினரின் சடலங்கள் எடுத்து வரப்படுகின்றன!!

 

கொல்லப்பட்ட இலங்கைப் படையினர்

மாலியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திற்கும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றார் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் அமைதிப்படையினர் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை சர்வதேச சட்டங்களின் கீழ் யுத்தகுற்றங்களாக கருதலாம் என ஐநா செயலாளர் நாயகம் கருதுவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைதிப்படையினர் மீதான தாக்குதல்களிற்கு காரணமானவர்களை கூடிய விரைவில் நீதியின் முன்நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் மாலி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை பலியான இலங்கை இராணுவத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

நான் கொலைகாரி… என்னை கைது செய்யுங்கள் : உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொன்ற பெண்!!

 

உயிர்த்தோழியை வெட்டிக்கொன்ற பெண்

விர்ஜினா மாகாணத்தின் Radford நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது உயிர்த்தோழியை 40 முறை கத்தியால் வெட்டிக்கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

லூயிசா – அலெக்ஸா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள். ஒரே பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் லூயிசா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், நாங்கள் இருவரும் ஆழமாக நேசிக்கிறோம், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்யக்கூடாது என கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தோழியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அலெக்ஸா இறந்துகிடக்க, எனது தோழியை நான் தான் கொலைசெய்தேன், நான் கொலைகாரி, என்னை கைது செய்யுங்கள் என லூயிஸா பொலிசாரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு சம்பவத்தால் கல்லூரிக்கு அவமானம் என கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். தற்போது லூயிஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : இருவர் மரணம் : பலர் ஆபத்தான நிலையில்!!

 

கனடாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ பகுதியின் Vaughan என்ற இடத்தில் இந்த சம்பவம் அதிகாலை வேளையில் ஏற்பட்டுள்ளது. கனடா நேரப்படி இன்று அதிகாலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக York Regionalபொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 4.16 மணியளவில் Dream Palace Banquet மண்டபம் மற்றும் விடுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் சத்தம் பலருக்கு கேட்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பாரிய காயத்தில் கிடந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் அவர்களை அவதானித்துள்ளனர். மற்றைய நபர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இன்னமும் தகவல் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி!!

 

குழந்தையைப் பெற்றெடுத்த பாடசாலை மாணவி

மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் சிறுமியொருவர் தனது வீட்டு மலசல கூடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன், குறித்த சிறுமியின் தாயார் குழந்தையையும் தனது மகளையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது, குழந்தை மற்றும் தாய் பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிகக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குழந்தை பிறக்கப்போவதாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்று வலி காரணமாக தான் மலசல கூடத்திற்கு சென்றதாகவும் அதன்போது குழந்தை பிறந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞனைக் காதலித்து வந்துள்ளதாகவும் குறித்த இளைஞனுடன் பல முறை சிறுமி ஒன்றாக இருந்துள்ளதாகவும் கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த இளைஞனுடன் ஒன்றாக இருந்ததாக பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தேகநபரை மெதகம பொலிஸார் கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதிய மதுபான சாலைக்கு எதிராக சுவரொட்டிகள்!!

 

மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்

புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகரின் பல பாகங்களில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன் இயங்கும் மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று இரவு புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் இளைஞர்களினால் வவுனியா புதிய பஸ்நிலையத்தில் மதுபானசாலையை உடன் அகற்று, வவுனியா புதிய பஸ் நிலையத்தில் மதுபானசாலை வேண்டாம், வவுனியா புதிய பஸ் நிலையம் மதுபானபிரியர்களின் உல்லாச இடமாகுமா?,

வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக மதுபானசாலை அவசியமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் புதிய பேருந்து நிலையம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை பகுதி, தாண்டிக்குளம் உட்பட வவுனியா நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

 

யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து : ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண்!!

யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதியில் நேற்று காணி அளவீடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற போது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து காணி அளக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனயைடுத்து காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது. காணிக்கு சொந்தக்காரர்களுக்கு பிரதேச செயலளர் கடும் அச்சுறுத்தல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

காணிக்குரிய அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்ட போதும், இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு இடம்பெற்ற அடாவடித்தனங்கள் குறித்து ஊடகங்களுக்கு குறித்த பெண்மணி தகவல் வெளியிட்டார்.

வீதியில் குடைசாய்ந்து லொறி விபத்து!!

 

லொறி விபத்து

திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான தீணிகளை ஏற்றி சென்ற லொறி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சாரதி சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், உதவியாளர் படுகாயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில் இருந்த கால்நடை தீணிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றி, அதனை உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் – சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (82 வயது) என தெரியவருகிறது. குறித்த வயோதிபர் நேற்று இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்!!

 

சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்


வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அரசாங்க பாடசாலை பிரதி அதிபரொருவர் இரவோடிரவாக கிழித்தெறிந்த சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அண்மையில் அரச அதிகாரிகளின் சிபாரிசுடன் மதுபானசாலையொன்று திறக்கப்பட்டிருந்தது. குறித்த மதுபானசாலை மக்கள் குடிமனைக்கு மத்தியிலும் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்திற்கும் முன்பாக திறக்கப்பட்டிருந்ததை கண்டித்து வவுனியா பொது அமைப்புக்கள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

வவுனியா அரசாங்க அதிபர் குறித்த மதுபானசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எனினும் மதுபானசாலை அகற்றப்படாமையால் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினர் ஜனநாயக வழியில் சுவரொட்டி போராட்டமென்றை நேற்று இரவு முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகளை இரவிரவாக இளைஞர்கள் ஒட்டிய நிலையில் முற்சக்கரவண்டியொன்றில் வருகைதந்த வவுனியா மன்னார் வீதியில் நகருக்கு அண்மையில் இயங்கும் விசேட கல்வித்திட்டத்தினை உள்ளடக்கிய அரச பாடசாலையின் பிரதி அதிபர் மற்றுமொருவருடன் இணைந்து குறித்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளார்.

இந் நிலையில் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாக இளைஞர் முன்னணியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து முற்சக்கர வண்டியை வழிமறித்து ஏன் சுவரொட்டிகளை அகற்றுகின்றீர்கள் என கேட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் சுவரொட்டிகளை கிழித்த நபர் பிரதி அதிபரொருவராகவும், மொழிபெயர்பாளராகவும் உள்ள ஒருவரென அடையாளம் கண்டுகொண்டனர். இதனையடுத்து குறித்த பிரதி அதிபர் அவ்விடத்தில் இருந்து தன்னுடன் வந்தவருடன் தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் முற்சக்கரவண்டியை பார்வையிட்ட இளைஞர்கள் அதனுள் கத்தி, மா, சில சுவரொட்டிகள் இருப்பதை கண்டனர்.  இதன்போது அங்கு குழுமியவர்கள் நேற்று ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட போதை மற்றும் மது ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளிலேயே பிரதி அதிபரொருவர் இவ்வாறு நடந்து கொண்டதையிட்டு விசனமடைந்துள்ளனர்.

யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 

உணவுப் பொதியில் மட்டத்தேள்

மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவு பொதியில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் நேற்று மதிய உணவுப் பொதி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில், உணவினை பிரித்து பார்த்த போது கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது. இதனால் மீளவும் உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளரை உதாசீனம் செய்ததுள்ளார். உணவக உரிமையாளர் மீது வாடிக்கையாளர் பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி!!

 

வவுனியா நொச்சிக்குளம் இல : 01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றுமுன்தினம் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கே.கே.மஸ்தான்(வன்னி பாராளுமன்ற உறுப்பினர்) , ஜனாதிபதியின் செயலாளர் சேனக்க கௌரவ விருந்தினராக எஸ்.சசிகுமார் (கோட்டக் கல்வி அதிகாரி ஓமந்தைக் கோட்டம்) , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அணிநடை நிகழ்வு, ஒட்டப்போட்டி, வினோத உடை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம்!!

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இறுதி நாளான இன்று நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

போதைவஸ்துக்கு எதிரான பதாதைகள் தாங்கியவாறு வீதிக்கு வந்த மாணவர்கள் போதைக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

‘போதைக்கு எதிராக பாடசாலையின் சக்தி’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கடந்த நான்கு நாட்களாக பாடசாலைகளில் நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று போதைவஸ்தை தடுப்பது தெர்டர்பாக ஊடகங்கள் ஆற்றிய சேவைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ஊடகவியலாளர் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் மாபெரும் பேரணி!!

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று(25.01) போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை வாயிலிருந்து ஆரம்பமாகிய மாணவர் பேரணி கண்டி வீதியூடாக பழைய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்றுவட்டம் சென்று ஹொறவப்பொத்தான வீதியூடாக பஜார் வீதி மணிக்கூட்டு கோபுரம் சென்று கண்டி வீதி வழியாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி இன்று வரையான காலப்பகுதி வரை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இன்றுடன் நிறைவுறுகின்றது.

இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலைமட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் போதைக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்.