கணவன் பிறந்தநாளுக்கு தனது மரணத்தை பரிசாக அளித்த மனைவி : நெஞ்சை உருக்கும் சம்பவம் !!

 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா. 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்ற மகன் உள்ளான்.

கடந்த புதன்கிழமை காலை ஜெய்கணேஷின் பிறந்த நாள், கணவனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த மனைவி பிரவீனா, ஜெய்கணேஷ் மற்றும் மகன் பிரதீப் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வாங்கும் சம்பளத்தில் பெற்றோருக்கு உதவும் ஜெய்கணேஷ், எதிர்கால சேமிப்பிற்கு பணம் கொடுக்கவில்லை என பிரவீனா அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணவனின் பிறந்தாளை தன்னுடைய இறந்தநாளாக பிரவீனா மாற்றியது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் பேருந்துகளில் நடக்கும் கொடுமை : பெண்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பாடசாலை மாணவிகள் உட்பட பெண்கள் அனைவருக்கும் பொலிஸார் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அந்த வகையில் இவ்வாறு தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களையும், மாணவிகளையும் ரகசியகமாக வீடியோ எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாபார நோக்கிலேயே இந்த மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது தொடர்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் மீடியாகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், பேருந்தில் சென்ற பெண்களையும், பாடசாலை மாணவிகளையும் பேருந்து நடத்துடனர் கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தங்காலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் 3 கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதுடன், அவரிடம் இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பாரிய விமானம்!!

உலகின் மிகப்பெரிய விமானமான A380 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

EK-408 ரக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கி செல்லும் போது இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இலங்கைக்கு மேல் பயணித்து கொண்டிருந்த போது 32 வயதான ஊழியர்கள் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை 10.25 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி டுபாயில் இருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த விமானம் ஒன்றும் கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மக்களை ஏமாற்றி வீதியில் யாசகம் செய்த பெண் பிடிபட்டார்!!

வவுனியா, மன்னார் வீதியில் மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் சென்றவர்களிடம் யாசகம் செய்த பெண் ஒருவர் ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் இருந்து பெண் ஒருவர் நடக்க முடியாதவராகவும், வாய் பேச முயாதவராகவும் தன்னை உருமாற்றம் செய்து வீதியில் இருந்து நகர்ந்துகொண்டு யாசகம் செய்துள்ளார்.

இதனை அவதானித்த பலரது மனம் நெகிழ்ந்துள்ளதுடன், குறித்த பெண் மீது இரக்கப்பட்டு உதவியாக சிறு தொகை பணங்களை வழங்கியதுடன், வாகனங்களில் சென்றோரும், வாகனங்களை நிறுத்தி பணம் வழங்கினர்.

குறித்த பெண் வீதியில் நகர்ந்து கொண்டு சென்றதாலும், வாகனங்கள் குறித்த பெண் மீது இரக்கம் கொண்டு திடீரென நிறுத்தி உதவிகள் வழங்கியதாலும், விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை உருவாக்கியிருந்தது.

குறித்த பெண் அவ்வாறு நகர்ந்துகொண்டு சுமார் 2 கிலோமீற்றர் தூரம் சென்று குருமன்காடு சந்தியை அடைந்தபோது பெண்ணின் அவலநிலை கண்டும், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை அவதானித்தும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களான கே.வசந்தரூபன் மற்றும் பா.சதீஸன் ஆகியோர் குறித்த பெண்ணுடன் சைகையில் உரையாடி அப் பெண்ணின் நிலை குறித்து மாவட்ட சமூக சேவை திணைக்களத்திற்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் ஆகியோர் குறித்த பெண்ணுக்கு சக்கர நாற்காலியை வழங்கினர். ஆனால் குறித்த பெண் தனக்கு அது வேண்டாம் எனவும், காசு தான் வேண்டும் எனவும் அடம் பிடித்ததுடன், அவ்வாறு நகர்ந்து செல்லவே முயன்றார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சமூக சேவைத் திணக்கள உத்தியோகத்தர்களும், ஊடகவியாளர்களும் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், வீதியால் சென்ற சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றில் குறித்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலைக்கு சென்ற அவர்கள் குறித்த பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்ததையடுத்து அந்தப் பெண் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

தான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும், யாசகம் செய்வதற்காக பஸ்சில் வவுனியா வந்ததாகவும் தெரிவித்துடன், ஒரு காலில் பிறப்பில் இருந்து சிறு குறைப்பாடு உள்ள போதும் நடக்கக்கூடியவர் எனவும் வாய்பேசுபவர் எனவும் தெரிவித்தார்.

தனது கணவர் கடல் தொழில் செய்பவர். அவர் இறந்து 6 வருடங்கள் சென்று விட்டது எனவும், தனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை திருமணம் செய்து விட்டார். ஏனைய பிள்ளைகளுக்காகவே தான் உருமாற்றம் செய்து இயலாதவர் போல் நடித்து யாசகம் செய்வதாகவும் கூறிய பெண் தான் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் எனத் தெவித்திருந்தார்.

இதன்போது குறித்த பெண் வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கிய சமூக சேவைத் திணைக்களமும், ஊடகவியலாளர்களும் குறித்த பெண்ணை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தனர்.

வவுனியா அலபொத்த குளத்தின் நீர் வெளியேற்றப்படுவதால் நெற்செய்கை பாதிப்பு : விவசாயிகள் விசனம்!!

வவுனியா அலபொத்த குளத்தின் நீர் வெளியேற்றப்படுவதால் தங்களது நெற்செய்கை பாதிக்கப்படுவதாக அலபொத்தகுளத்து நீரினை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது,

வவுனியா அலபொத்த குளத்தின் கீழ் மானாவரி நெற்செய்கையினை இருபத்து ஐந்து பங்காளர்களினால் முப்பது ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த முப்பது வருட காலமாக புனரமைக்கப்படாத இக்குளம் கடந்த மாதத்தில் புனரமைக்கப்பட்டிருந்து. இக்குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் இக்குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தோடு இக்குளத்திற்கு பிரதான வாய்க்கால் மூலமாக வரும் நீரினால் இக்குளத்தின் நீரேந்து பகுதியில் அமையப்பெற்ற வீதி மற்றும் வீடுகள் நீரினால் சூழப்படுவதனை தடுக்கும் நோக்கில் இப்பிரதான வாய்க்காலினை இக்குளத்தினை நேரடியாக தொடர்புபடுத்தும் நோக்கில் பாலம் (வென்டஸ் கோஸ்) அமைக்கும் செய்ற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக இக்குளத்தின் குறிப்பிட்டளவு நீரினை மட்டும் வெளியேற்றும் செயற்பாட்டினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கமக்கார அமைப்பினரால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்று இச்செயற்பாட்டிற்கு இப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், சில விவசாயிகள் கமக்கார அமைப்பினருடன் வாய்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நீரேந்து பகுதியில் காணப்படும் வீதியில் அமைக்கப்படும் பாலத்தின் (வென்டஸ் கோஸ்) காரணமாக ஆராய்வதற்காக அவ்விடம் வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ந.துரைராஜசிங்கம் இது தொடர்பாக ஆராய்ந்ததுடன் இது தொடர்பாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட விவசாயி கருத்து தெரிவிக்கையில், வீதி எமக்கு முக்கியமே அதற்காக அரசாங்கம் தந்த நிதியை வீனடித்து செல்ல விடமாட்டோம்.

மழைக் காலத்தில் இதனை செய்ய வந்துள்ளனர். இப்பாலத்தினை செய்வதற்காக நீரை திறந்து தாருங்கள் என்று சொன்னால் நீரை திறந்தும் வழங்க முடியாது, இதனை ஏற்கனவே இப்படித்தான் செய்யவுள்ளோம் என்று ஒரு முடிவினை எடுத்திருக்க வேண்டும்.

ஏன்எனில் கடனை வாங்கி, அடகு வைத்து வயல் விதைத்து விட்டு வயல் விளையவில்லை என்றால் என்ன செய்வது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவிஆணையாளர் இ.விஜயகுமாரிடம் கேட்கப்பட்ட போது, வவுனியாவில் முப்பது வருடத்திற்கு பின்னர் கைவிடப்பட்ட அலபொத்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கீழ் விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்கின்றனர். இக்குளத்திற்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்காலில் பாலம் (வென்டஸ் கோஸ்) அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக சில விவசாயிகளுக்கு முரண்பாடுகள் காணப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த குளத்தில் இருந்து நீர் திறந்து விடப்படுவதாகவும் இதனால் தாங்கள் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில் அந்த இக்குளத்திற்கான நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வேலைத்திட்டம் முடியும் வரை குளத்தின் நீர் மட்டத்தை 1 அடி குறைத்து பேணப்படுவதாகவும், அதன் பின்னர் நீர்வரத்து மூலம் நீரினை குளத்தில் தேக்கி கொடுக்கப்படும் என தீர்மாணம் எடுக்கப்பட்டிருந்தது.

இத்தீர்மாணத்திற்கு எதிராக ஒரு பங்காளர் முரணாக இருந்திருந்தார். அந்த வகையில் அவருக்குரிய மேட்டுத்துரிசின் ஊடாக நீரினை பெற்றுக்கொடுத்த பின்னர் பள்ள துரிசின் ஊடாக நீரினை வழங்குவதன் மூலம் அவருக்குரிய வயலுக்குரிய நீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதையும் மீறி பாதிப்பு வரும் பட்சத்தில் அதற்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் திணைக்களம் உறுதியளிக்கப்பட்டு இப்பிரச்சனைக்கான தீர்வினை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.

அவளுக்காக ஒரு ஆணாக மாறினேன்… தனிமையில் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் : பெண்ணின் சோகக்கதை!!

 

பெண்ணின் சோகக்கதை

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனது காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றும்போது அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருப்பினும் இரண்டு பேரும் பெண் என்பதால் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அர்ச்சானா அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதாக முடிவு செய்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு இருவரும் இறுதிவரை வாழலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு அர்ச்சானா ஆணாக மாறியுள்ளார். அத்துடன் தனது பெயரை திபு எனவும் மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் சில காலம் சென்றதும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, தன்னை தனிமையில் தவிக்கவிட்டு தனது காதலி பிரிந்து சென்றுவிட்டதாக திபு குற்றஞ்சாட்டியுள்ளார்.

நான் ஆணாகவே வாழ விரும்புகிறேன் என்றும் என்னை போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எனது வாழ்க்கையை கதையாக எழுதவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

 

பதறவைக்கும் வீடியோ

தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாகலேறி வட்டம் ஏரிக்கரைப் பகுதியில் இன்று காலை சிறுத்தை ஒன்று நடமாடியதை, அந்த பகுதி வழியே சென்ற மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை இவர்கள் ஓடுவதைக் கண்டு, அவர்களை நோக்கி விரட்டி தாக்கியது.

இதனால் சித்தனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்கவுண்டர் பாரதி (45) மற்றும் அவரின் சித்தப்பா மகள் அலமேலு (42) மற்றும் சந்தோஷ் (25) ஆகிய மூவரும் காயமடைந்தனர். சிறுத்தை கிராமபப்பகுதியே சுற்றி வந்ததால், கிராமமக்கள் கற்கள் மற்றும் கட்டைகளை தூக்கி வீசியுள்ளனர்.

ஆனால் சிறுத்தை அருகிலிருந்த கரும்புத் தோட்டத்துக்குள் ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டது. காயமடைந்த பெண் உட்பட மூவரையும் மீட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் துரிதமாக ஈடுபட்டனர்.

பொலிசாரும் உடன் வந்ததால், அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை பதுங்கியுள்ளதை அறிந்த சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரும்புத் தோட்டத்துக்கு முன்பு குவிந்தனர்.

அவர்களை பொலிசார், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பலமுறை அறிவுறுத்தினர். கிராம மக்கள் சிறுத்தை பிடிபடுவதைப் பார்க்க ஆர்வமாக இருந்ததால், அங்கிருந்து செல்லவில்லை. கரும்புத் தோட்டத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து சிறுத்தையைப் பிடிக்க நெருங்கினர். அப்போது, சிறுத்தை கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து குதித்துத் தப்பியது.

கிராம மக்கள் சுற்றியும் திரண்டிருந்ததால், அவர்கள் மீது சிறுத்தை பாய்ந்தது. துரத்தித் துரத்தி தாக்கியதில் சிலர் காயமடைந்தனர். கரும்புத் தோட்டத்திலிருந்து தப்பி ஓடிய சிறுத்தை எங்குப் பதுங்கியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள முல்லைத்தீவு சிறுமியின் மரணம்!!

முல்லைத்தீவு சிறுமியின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இறப்புக்கான காரணம் ஒருவகை அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

முத்தையன்கட்டு, இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த சந்திரபாலன் சானுயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுமியின் உடல் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சிறுமியின் மரணத்திற்கு கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தோடு இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர்!!

அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் நிராகரித்திருந்தது.

அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா (Biloela) என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 2018ஆம் ஆண்டு பிரியாவின் இணைப்பு விசா (Bridging Visa) காலாவதியாகியதாக ‘பிரியா- நடேசலிங்கம்’ என்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற அந்நாட்டு எல்லைப்படை, அவர்களை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

பிலோயலா நகரில் வசித்து வந்த அவுஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.

அதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தற்போது அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

இவ்வாறான சூழலில், இவர்களை அவுஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அகதிகள் நல செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனைவருக்கும் கல்வி செயற்றிட்டம்!!

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் முதன் முறையாக கல்விக்கு முன்மாதிரியான செயற்திட்டம் இன்று (27.12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.சுஜன் தலைமையில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள 216 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி அனைவருக்கும் கல்வி செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களான செட்டிகுளம், நெடுங்கேணி, புளியங்குளம், சிதம்பரபுரம் போன்ற வசதியற்ற கிராமப்புறங்களிலுள்ள வசதியற்ற மாணவர்களின் விபரங்கள் மாவட்ட செயலகத்திலிருந்து பெறப்பட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் கற்றல் நிலைமைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு 216 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா சு.குமாரசாமி, வவுனியா சிறுவர்களின் நிலை தலைவர், வவுனியா மாவட்ட சிறுவர் சபை செல்வி சசிராஜ் அக்சயா,

வர்த்தகர் சங்கப் போசகரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன், மாவட்ட செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி, வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கரடியை செல்லப்பிராணியாக வளர்த்த நபர் : அவரையே கொன்று தின்ற கரடி : அதிர்ச்சி சம்பவம்!!

 

ரஷ்யாவில் நபர் ஒருவர் கரடியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நிலையில் வளர்த்த நபரையே கரடி கடித்து தின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sergey Grigoriyev (41) என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கரடி குட்டிகள் இரண்டை கண்டெடுத்த நிலையில் அதை கூண்டில் வைத்து வளர்த்து வந்தார்.பின்னர் ஒரு கரடி குட்டியை காட்டில் விட்ட Sergey இன்னொரு குட்டியை மட்டும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பழமொழிக்கேற்ப, தன்னை வளர்த்த Sergey-ஐ கொன்று கரடி தின்றுள்ளது. அவரின் எலும்புகள் வரை கரடி தின்றது. இந்நிலையில் Sergey-ஐ காணாமல் தவித்த அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தான் Sergey கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது. இதோடு அவர் வளர்த்த ஒரு நாய் குட்டியையும் கரடி கொன்று தின்றுள்ளது. இதையடுத்து ஆக்ரோஷமான அந்த கரடியை சமீபத்தில் வனவிலங்கு துறையினரும், பொலிசாரும் சேர்ந்து சுட்டு கொன்றனர்.

ஏற்கனவே கரடியானது Sergey-ஐ தாக்கியுள்ளது, இது குறித்து நண்பர்கள் எச்சரிக்கை செய்தும் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.

இறந்த தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த இளைஞன் : வெளியான மர்ம தகவல்கள்!!

கொல்கத்தாவில் இளைஞன் ஒருவர் இறந்துபோன தனது தாயின்உடலை அடக்கம் செய்யாமல் 18 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை கோரசந்த் பட்டாசார்யா நரம்பியல் நிபுணராக இருந்தவர்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாய் கிருஷ்ணா பட்டாசார்யா அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை இறந்த பிறகு, தாயும் மகனும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

18 நாள்களுக்கு முன்பு தாய் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். தாய் இறந்ததும் வீட்டில் உள்ள அனைத்து கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு இறந்த தாயுடன் இருந்துள்ளார் மைத்ரேய பட்டாசார்யா.

இந்நிலையில் தான் தனது தாயின் உடலை புதைக்க உதவி கேட்டபோதுதான் அவரது நண்பர் பொலிசிற்கு தகவல் தெரிவத்ததையடுத்து, பொலிசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது துர்நாற்றம் வீசியது. அதன்பின்னர் இறந்துபோன தாயின் சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ள மைத்ரேய பட்டாசார்யா, “நானும் என் அம்மாவும் மட்டுமே இந்த வீட்டில் வசித்து வருகிறோம்.

வயது முதிர்வால் என் அம்மாவால் தரையில் படுத்துத் தூங்க முடியவில்லை. கட்டில் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால் எங்கள் வீட்டில் இருந்த மர அலமாரியைக் கட்டில்போல் செய்து கொடுத்தேன். அதில்தான் என் அம்மா தினமும் படுத்து ஓய்வெடுப்பார்.

ஒரு நாள் காலை வீடு அழுக்காக இருந்ததால் அம்மா அதை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் வழுக்கி கீழே விழுந்துவிட்டார்.

அதனால் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவச் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. வங்கியில் பணம் கேட்டிருந்தேன். அது கைக்கு வரச் சற்று காலதாமதம் ஆகும் எனக் கூறினார்கள். அடுத்த சில நாள்களில் கால் வலி தாங்காமல் என் அம்மா இறந்துவிட்டார்.

கட்டிலில் படுத்திருக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது. அவர் இறந்தது எனக்கு நன்றாகத் தெரியும். உடனடியாக என் வீட்டில் உள்ள கதவுகளை மூடி அவர் உடலைப் பாதுகாத்துவந்தேன்.

ஒருவர் இறந்து 21 நாள்கள் கழித்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என என் அப்பா கூறுவார். அம்மாவுக்கும் அதில் அதிக நம்பிக்கையுண்டு. அந்த மங்களகரமான நேரத்துக்காகத்தான் காத்திருந்தேன். முதலில் இறந்த உடலுடன் இருப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. பிறகு, எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் கூறியதாவது, இவர்களது குடும்பத்தினர் யாரும் பேசமாட்டார்கள், வெளியிலும் வரமாட்டார்கள். முன்னதாக அவர் தந்தை இறந்தபோதும் பல மர்மங்கள் நிலவியது என கூறியுள்ளனர். பல மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இந்தவருடத்தில் இதுவரை 54 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!!

 

சுட்டுக்கொலை

நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்களுடன் சேர்ந்து இந்த வருடத்தின் இதுவரையில், துப்பாக்கி சூட்டுக்களினால் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 49 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிராண்பாஸ் – ஹேனமுல்லை வீட்டுத்தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ல் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒருவரான புளுமெண்டல் சங்க என்பரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தங்காலை – குடாவெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடை சோதனையில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்ந்து மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த வீதித் தடை ஊடாக பயணித்த சிற்றூர்ந்தை நிறுத்துமாறு காவல்துறையினர் சமிக்சை எழுப்பியுள்ளனர்.

எனினும், குறித்த சிற்றூர்ந்து காவல்துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, தப்பித்துச் செல்ல முயற்சித்தபோது, ஒரு காவல்துறை அலுவலரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குறித்த சிற்றூர்ந்து நிறுத்தப்படாமல் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிற்றூர்ந்தின் உரிமையாளரைக் கைதுசெய்வதற்காக தங்காலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, தங்காலை – குடாவெல்ல மீன்ப்பிடி துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய பல முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக தங்காலை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அடுத்தக்கட்ட விசாரணை நடவடிக்கைகள் காரணமாக குறித்த தகவல்களின் இரகசியத்தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று காலை 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

வட மாகாணத்தில் பெய்த கடுமையான மழைக்காரணமாக ஏற்பட்ட வைரஸ் தொற்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 23 ஆம் திகதி 9 வயது சிறுமி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடந்த 25 ஆம் திகதி திடீரென மரணத்தை தழுவினார். சிறுமி உயிரிழந்தமைக்கான காரணம் அறியாத வைத்தியர்கள் அவரை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது சிறுமி வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்வாயில் சடலமாக கிடந்த பெண் யார்?

ஹொரணை – மொரகாஹென – கனன்வில பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை, பம்பலபிட்டி – பொது குடியிருப்பு தொகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்பு தொகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட பரிசோதனையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

65 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது

வவுனியா நோக்கி பயணித்த இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து!!

 

இன்று பிற்பகல்(27.12) 1.30 மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில் அதனை முந்திச் செல்ல முற்பட்ட கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரண்டு டிப்பர் வாகன சாரதிகளும் வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் பெட்டி சேதமடைந்துள்ளது. மேலும் தரிப்பிடத்தில் நின்ற தனியார் பேரூந்தும் சேதமடைந்துள்ளது.

இதனால் சில நிமிடங்கள் ஏ9 போக்குவரத்து தடைப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.