மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.
மஹியங்கனை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது.
அந்த வகையில் நேற்று இரவு இரண்டு சிறுமிகள் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டதில் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தற்காலிக வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதோடு அன்றாடம் கூலிவேலை செய்து உழைப்பவர்களும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளனர். அத்தோடு கடற்தொழிலும் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளது.
பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பித நிலை அடைந்துள்ளதுடன் புனரமைப்பு செய்யப்படாத உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் குளங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் நந்நிக்கடல் மற்றும் நாயாறு கடல் ஏரிகள் பெருங்கடலை நோக்கி மிகவேகமாக நகர்கின்றது.
இடிமின்னல் தாக்கத்துடன் தொடரும் கடும் மழை காரணமாக தற்பொழுது சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழியிலான பெயர்ப்பலகை ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியிலுள்ள பொது மக்கள், பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பெயர்ப் பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்தில் அண்மையில் கட்டார் நாட்டின் அனுசரணையில் தண்ணீர் தாங்கி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்நாட்டின் தேசிய மொழியான அரபு மொழியினைத் தாங்கிய பெயர்ப் பலகையினை கிராம அலுவலகத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள அமைப்புக்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன் குறித்த அரபு மொழியாலான பெயர்ப்பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர்.
தமிழ் மக்கள் பெருமளவில் செறிந்து வாழும் குறித்த பிரதேசத்தில் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்தின் அரபுமொழி பெயர்ப்பலகையின் அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் எமது மக்களுக்கு நிதி அனுசரணை என்ற பெயரில் அரபு மொழியினை இலங்கைக்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இரட்டை நாக்குடையவர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றில் நடைபெறும் நாடகத்தில் பங்கேற்க விரும்பாத காரணத்தினால் நாம் அவையை விட்டு வெளியேறி சென்றோம். நாடாளுமன்றம் தற்பொழுது ரணில், சுமந்திரன் மற்றும் அனுர ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டில் பிரதமர் இல்லை, அவைத் தலைவர் இல்லை என கூறும் கரு ஜயசூரிய எவ்வாறு சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் என அழைக்கின்றார். இதன்மூலம் கரு ஜயசூரியவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகின்றது. இவ்வாறான ஓர் நிலைமையின் கீழ் நாடாளுமன்றில் அமர்ந்திருப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் மஹிந்த அணியினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. முதலாவதாக தினேஸ் குணவர்தன உரையாற்றியிருந்தார். தொடர்ந்து விமல் வீரவங்ச, டக்ளஸ், அநுர உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
இதன்போது விமல் வீரவங்ச மிகவும் ஆக்ரோசமாக உரையாற்றினார். இதன்போது ரணில் விக்ரமசிங்கவின் பெயரை கூறி உரையாற்றியிருந்தார்.
இவருடைய பேச்சுக்கு நாடாளுமன்றில் பெரும் சத்தம் போட்டதுடன், அவரை பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனர்.
தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெசூரிய செய்வது சட்டவிரோதமான செயல் எனக் கூறி விமலும் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துவிட்டார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி கண்டுள்ளது.
121 – 0 என்ற பெரும்பான்மையில் வாக்கெடுப்பு வெற்றி பெறற்தாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
யோசனையை சமர்ப்பித்த ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஆதரவாக 121 வாக்குகளை வழங்கின. எனினும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கக்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 7 பேரை பெயரிட்டிருந்தது. எனினும் அதற்கு 5 உறுப்பினர்களையே ஒதுக்க முடியும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அதனை ஆட்சேபித்து ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
தெரிவு குழு உறுப்பிர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை சபாநாயகர் இலத்திரனியல் முறையில் மேற்கொண்டார்.
அந்த வாக்கெடுப்பிற்கமைய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 121 வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளதென சபாநாயகர் அறிவித்துள்ளார்.
உலக இந்துக்களால் நேற்று (22.11) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் பாலமோட்டை பிரதேசத்தில் மாணவர்களால் இலங்கையில் வாழும் நான்கு மத குறியீடுகளை பயன்படுத்தி கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில் சிக்கிக்கொண்டன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த அர்ச்சகர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.
இதன்போது துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. அர்ச்சகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்.
அர்ச்சகர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டபோது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியாசாலைத் தகவல்கள் தெரிவித்தன. விபத்து இடம்பெற்றவேளை சாரதி பேருந்தை நிறுத்துவதற்காக முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பேருந்து மோதியுள்ளது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
மேற்படி விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பொன்னாலையைச் சேர்ந்த ரகுநாதன் புஸ்பகாந்தன் (வயது 33) என்பவர் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவரும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டது எனினும், வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் வரும்வரை போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமான “தி இந்துவிற்கு” வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய தேசிய கட்சியும், மகிந்த ராஜபக்ச தரப்பினரும் சர்வதேசமூகத்திற்கு காண்பிப்பதற்காகவும், தங்கள் பலத்தை காண்பிப்பதற்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தியுள்ளனர்.
இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் நலனிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தினார்கள்.
இந்நிலையில், வடக்கிலும், தெற்கிலும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஆகையினால், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன.
எனவே, அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து பணியாற்ற முடியும். சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.
எனினும், எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும். மக்கள் விடுதலை முன்னணியிடம் இரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை. அதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை.
இவ்வாறான வெளிப்படை தன்மை காணப்படுவதால் ஒருவருக்கு மற்றையவரின் நிலைப்பாடு தெரியும். எனவே நாங்கள் சிறப்பாக இணைந்து செயற்பட முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா பறன்நாட்டங்கல்லில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் பனிக்கர்புளியங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் தனுசியா பாலேந்திரன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்விற்கு அதிதிகள் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வில் முதியோரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், கலந்துகொண்டிருந்த முதியோருக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. அஞ்சலி, கிராம பொருளாதார உத்தியோகத்தர் திருமதி.நந்தீஸ்வரி, சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.அசீஸ், பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலை அதிபர் திருமதி.அருந்தவராணி, ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் நிகழ்த்தப்பட்டன . அதனைத் தொடர்ந்து வெளி இதழாசிரியர் ந.அருளானந் அவர்களினால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற செயலாளர் நா.கிருஷ்ணமூர்த்தி, ஈரநிலம் அமைப்பின் தலைவர் சுதன், பாடசாலை ஆசிரியர்கள், நொச்சி அரும்புகள் சிறுவர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சங்கத்துடன் இணைந்து மாவட்டங்களுக்கிடையில் நடைபெறவுள்ள கபடிச் சுற்றுப் போட்டி குறித்து வவுனியா மாவட்ட கபடி சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வவுனியா மாவட்ட கபடிச் சங்க உபதலைவர் ஜே.ஏ.டீ.லலித் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்ட கபடிச் சங்கமானது இம் மாவட்டத்தில் உள்ள மூவின மக்களையும் உள்வாங்கி மாவட்டத்திலும், இலங்கை கபடிச் சங்கத்திலும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக தொழிற்பட்டு வருவதுடன், பல கபடி செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் வரை இலங்கை கபடிச் சங்கத்துடன் தொடர்புகளையும் பேணிவந்துள்ளது.
இந்நிலையில் கண்டியைச் சேர்ந்த ஏ.சீ.ரட்நாயக்க என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓருவர் தனக்கு சார்பான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரை இணைத்து புதிய கபடிச் சங்கம் ஓன்றை மாவட்டத்தில் உருவாக்கி மோசடியான வகையில் இலங்கை கபடிச் சங்கத்துடன் இணைத்துள்ளார்.
எதிர்வரும் 24,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இலங்கை கபடிச் சங்கத்தின் அனுசரணையில் மாவட்ட மட்ட ஆண், பெண் அணிகள் பங்கு பற்றும் கபடிப் போட்டி ஓன்றினை நடத்தவும் ஏற்பாடுகளை புதிய சங்கம் செய்துள்ளது.
மாவட்ட மட்ட கபடிச் சங்கத்தை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் இச் செயற்பாட்டால் கபடி விளையாட்டு வீரர்கள் பலரும் பாதிப்படைத்துள்ளனர். இச் செயற்பாடு குறித்து வவுனியா மாவட்ட கபடிச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மரம்நடுகை மாதத்தினை முன்னிட்டு வவுனியா வடக்கின் கனகராயன்குளம் மையப்பகுதியினை அண்டிய ஏ9 வீதியின் ஒரு பக்கமாக மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு மாகோகனி மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் நேற்று (22.11.2018) காலை 10 மணியளவில் கனகராயன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் சிறப்பான முறையில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம், சபை செயலாளர் க. சத்தியசீலன், பிரதேசசபை உறுப்பினர்கள் ஜெக்கொடி ஜெயரூபன், நடராஐா விநாயகமூர்த்தி மற்றும் கனகராயன்குளம் முச்சக்கரவண்டிச்சங்கம், கமக்காரஅமைப்பு, வர்த்தக சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வீதியோரங்களில் மரங்களை நாட்டினர்.
உலக இந்துக்களால் இன்று (22.11.2018) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து புத்தளம், விலுக பிரதேசத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு வந்த வண்ணத்துப்பூச்சியே இவ்வாறு கமராவில் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மின்விளக்கிற்கு அருகில் வந்திருந்த நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சி 5.5 அங்குலம் அளவை கொண்ட பெரிய இனத்தைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகின்றது. வித்தியாசமான மஞ்சள் நிறத்தை இந்த வண்ணத்துப்பூச்சி கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது குறைவாக தான் உற்பத்தி செய்கிறது, அதாவது சூரியக் கதிர் ஒளி சக்தியானது 50% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பூமியானது மெது மெதுவாக அழிந்து விடும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகளை கொண்ட குழு அண்மையில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வில் மிக துல்லியமான தகவல்களை பெற உலகின் மிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது உலகம் முழுக்க மிக பிரமாண்டமான 7 தொலை நோக்கிகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த தொலைநோக்கிகளை அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சிலி மற்றும் உலகத்தின் வட்ட பாதை ஆகியவைகளுக்கு இடையே நிறுவப்பட்டுள்ளன. அதாவது 2 லட்சத்திற்க்கும் மேலான பால்வெளி மண்டலங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில்,
உலகத்தின் அழிவு என்றால் உலகம் ஒட்டுமொத்தமாக அப்படியே அழிந்து விடும் என்று அர்த்தமில்லை. நட்சத்திரங்கள் மற்றும் ஒளி தரக்கூடிய இதர கிரகங்களின் ஒளி சக்தி குறையும்.
தற்போது கிடைக்கப்பெறும் எல்லா ஒளியும் இல்லாத நிலையில், உலகம் மிகவும் குளிர்மையாகவும், இருள் சூழ்ந்தும், தனித்து விடப்பட்டது போன்று இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“உடனே உலகத்தின் அழிவிற்கு தயாராகி விடாதீர்கள் இது நடக்க ஒரு லட்சம் கோடி ஆண்டுகள் ஆகும், அதாவது ட்ரில்லியன் ஆண்டுகள் ஆகும்” என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.