வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் மூவர் சித்தி !

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்   மூன்று  மாணவர்கள்  வெட்டு புள்ளிகளுக்கு  மேல் பெற்று  சித்தியடைந்துள்ளனர்.

J.லக்சன்  184 புள்ளிகள்

A.கம்சத்வன்  178 புள்ளிகள்

K.திரிஷாந்த்  168  புள்ளிகள்

ஆகிய மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளனர் .

வெளிநாடு ஒன்றை கதி கலங்க வைத்துள்ள இலங்கை இளைஞன்!!

இலங்கை இளைஞனின் செயற்பாடு காரணமாக தென்கொரியா அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

சோல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பினால் சுமார் 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் எரிந்து போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொரிய பாதுகாப்பு பிரிவினர் இலங்கை இளைஞனை கைது செய்துள்ளனர். இலங்கை இளைஞனினால் அனுப்பப்பட்ட வானவேடிக்கை வெடித்தமை காரணமாக இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வானவெடி எரிபொருள் சேமிப்பு தொட்டியில் விழுந்தமையினால் தீப்பற்றியுள்ளது. இதனால் அங்கிருந்த எண்ணெய் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளன.

கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் 27 வயதான ஒருவர் எனவும் அவர் தென்கொரியாவின் நிர்மாணிப்பு துறையில் பணி செய்வதாகவும் கூறப்படுகின்றது.

சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் எரிபொருளுக்காக யுத்தம் ஏற்படுமளவுக்கு சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பெருந்தொகையான எண்ணெய் எரிந்து நாசமாகியுள்ளமை தென்கொரிய அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் திடீரெனெ மறைந்து போன பொக்கிஷம்!!

இலங்கையின் பெரும் பொக்கிஷமான உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், சோல்டன், ஆனகுத்துவ, சேவன்தீவு, மன்னதீவு உட்பட பல பிரதேசங்களில் உப்பு உற்பத்தி தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களாக நிலவிய கடும் வரட்சியின் பின்னர் பெய்த அடைமழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உப்பு முழுவதும் கரைந்து போயுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையால் பாரிய இலாபத்தை தாம் ஈட்டியதாகவும், மழை காரணமாக தங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு உலக சந்தையில் பெரும் கிராக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிடிவதையால் பறிபோன தமிழ் மாணவனின் உயிர்!!

மட்டக்களப்பு – கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கல்லூரியில் இணையும் போது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரிக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவித்து வீட்டில் இருந்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் மாணவனின் மரணம் தொடர்பாக பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் 8கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியாவில் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான நேரத்திற்குள் பொலிசாரின் நடவடிக்கையின்போது 8 கிலோ 640 கிராம் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 11 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் மறைத்து எடுத்துச் செல்லவிருந்த 4கிலோ 140கிராம் கேரள கஞ்சாவுடன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த முகமட் இர்ஷாட் வயது 22 இளைஞனைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓமந்தை பொலிசாருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் கந்தசாமி பிரசாந்த் என்ற 21 வயது இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவ்விருவர்களிடமிருந்து 8கிலோ 640கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இவ்விரு இளைஞர்களையும் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் குப்பை கொட்டுவதற்கு 20 ஏக்கர் காணிக்கு ஆவணம் வழங்கப்படவில்லை !!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சாளம்பைக்குளம் பகுதியில் வவுனியா நகரசபையினருக்கு குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 ஏக்கர் காணிக்கு அரசாங்க அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்று வரையும் காணிக்கு ஆவணம் வழங்கப்படவில்லை என்று தமிழ் தெற்கு பிரதேச சபையின் தகவல் அலுவலகர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு தகவல் வழங்கப்பட்டு அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் இதுவரையில் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நகரிலிருந்து அகற்றப்பட்டுவரும் குப்பைகள் கொட்டுவதற்கு நகரசபையினருக்கு 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த காணிக்கு ஆவணம் வழங்கிவைக்கப்படவில்லை. அத்துடன் அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகளும் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவன் 173 புள்ளிகள் பெற்று சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பபிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவன் இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

விவசாயம், தச்சுவேலை மேற்கொண்டு வரும் தந்தையின் பராமரிப்பிலும் உறவினர்களின் பங்களிப்பிலும் சிகிச்சை பெற்றுவருவதாக விதுசனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவனின் உடல் நலத்தில் அவதானத்துடன் செயற்படுமாறும் வேறு தொற்றுக்குட்படாமல் வைத்தியர்களின் தீவிர அவதானத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகின்றார்.

மேலதிக சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுமாயின் இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்திரம் வரைவதில் திறமையுடைய மாணவன் இவ்வாறு இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 173 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 7மணியளவில் தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இராணுவத்தினரின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இரணுவத்தினரின் கனரக வாகனம் ஒன்றில் நிகழ்வினை ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்றிவரப் பொருட்களின் வாகனம் உணவகப் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது வவுனியாவிலிருந்து பல்சர் ரக மோட்டார் சைக்கிலுடன் கனரக வாகனம் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன் (வயது 25), அனுஸாந்தன் பவித்திரா (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரமண்டு வித்தியாயலத்திற்கு முன்பாக கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிலினை வழிமறித்துள்ளதாகவும் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் அப்பகுதில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீரப்பனை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

சந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது சகாக்களை கொலைசெய்வதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் பொலிஸார் தங்க வைத்தனர்.

அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறுமாறு கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து சண்முகப்பிரியாவுக்கு இந்திய மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகையும் மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை தனக்கு வழங்கப்டவில்லையென சண்முகப்பிரியா இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாவது,

வீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிப்படையினருக்கு நான் தெரிவித்தேன்.

அதனை அடிப்படையாகக் கொண்டே வீரப்பனும், அவரது சகாக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.

தற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய ,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார்.

ரூபா 6 இலட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூபா ஒரு இலட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் : ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு!!

நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பியால் தாக்கிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார்

அவரின் இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமீதாவின் மகள் லைலா அலிகான் (22) மற்றும் மகன் மீரான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அதில், தன் மீது தாக்குதல் நடக்கும் போது, மன்சூர்அலிகான் வேடிக்கை பார்த்ததாகவும், மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்!!

உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள மசூதியின் மேற்கூரையில் ரத்தக்கறையுடன் மூட்டை கட்டப்பட்ட சாக்குப்பை ஒன்று மீட்கப்பட்டது. அதில், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

காணாமல் போன சிறுமிதான் கொல்லப்பட்டாள் என பொலிசார் உறுதிசெய்தனர்.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முராத் நகரைச் சேர்ந்த கவுன்சிலரும் அவரது 3 சகோதரர்களும்தான் கொலை செய்திருக்கக் கூடும் என்றும், தேர்தல் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாயின் பிரிவை தாங்கமுடியவில்லை : தற்கொலை செய்து கொண்ட இளைஞன் நண்பர்களிடம் சொன்ன வார்த்தை!!

தமிழகத்தில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நல்லதம்பி – பாப்பாத்தி. கூலித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சுசிலா மற்றும் கோகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சக்திவேல் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாப்பாத்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த ஒரு வருடமாக தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவரை மகன் சக்திவேல் பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.

இதையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பாப்பாத்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல் இருந்த சக்திவேல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் அவரது தந்தை நல்லதம்பியும் உறவினர்களும் காப்பாற்றினார்கள்.

நேற்று தந்தை நல்லதம்பி கூலி வேலைக்குச் சென்ற பிறகு, சக்திவேல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் யாருக்கும் தெரியாமல் விஷம் வாங்கி வந்து வீட்டுக்குள் அருந்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே சக்திவேல் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். பின்னர், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இறந்த சக்திவேல் அம்மாவின் மரணத்தைத் தாக்கிக்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும், அவரின் நினைவலைகள் தன்னை வாட்டுவதாகவும் நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.

தப்பு செய்துவிட்டேன் : கணவருடன் சேர்த்து வையுங்கள்: குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னையில் குழந்தையை கொன்ற தாய், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை புருஷனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார்.

வெங்கண்ணா – உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த கடந்த 33 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சார்விக் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று உமா கூறியதன்பேரில் வெங்கண்ணா, வேளச்சேரி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்,

அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தியதில், குழந்தையை ஏரியில் வீசியதை அந்தப் பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர் என்று பொலிசார் உமாவிடம் கேட்டதும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை காணாமல் போனதிலிருந்து உமா அழாமல் இருந்தார். பொலிசாரின் இந்தக் கேள்வியைக் கேட்டபிறகு அவரின் கண்கள் கலங்கின. அதன்பிறகு அவரே உண்மையை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது அவருக்கு மார்பு வலித்துள்ளது. அதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய உமாவுக்கு ஆளாளுக்கு அறிவுரைகள், டிப்ஸ்களைக் கொடுத்துள்ளனர். அதையெல்லாம் அவர் பின்பற்றினாலும் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், குழந்தைக்குப் பால் கொடுப்பதை அவர் நிறுத்தியுள்ளார். பாலுக்காக குழந்தை அழுதபோது வலி காரணமாக அவர் பால் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் வலிக்கான மாத்திரைகள் அவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை, வெங்கண்ணா சாப்பிட அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தான் குழந்தையை அருகில் இருந்த ஏரிக்குள் தூக்கி வீசியுள்ளார். உமாவை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திவிட்டு புழல் பெண்கள் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதுவரை அமைதியாக இருந்த உமா, சிறையின் அருகே செல்லும்போது கதறி அழுதுள்ளார்.

சார், தப்பு பண்ணிட்டேன், தயவு செய்து என்னை என் புருஷனோடு சேர்த்துவைத்திடுங்க என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவருக்கு போலீஸார் ஆறுதல் கூறி சிறையில் அடைத்துள்ளனர்.

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் தொடர்ந்து பெற்றோருடன் நேரத்தை செலவிடும் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள குக்காட்டுப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குமார் சவுத்ரி மற்றும் பிரேம் தேவி தம்பதிகள்.

32 வயதான குமார் சவுத்ரி நகை வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீப காலமாக அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இதனால் தமது மனைவியை தங்களது இரண்டு பிள்ளைகளுடன் குமாரின் பெற்றோர் வீட்டில் சென்று தங்க கலந்து பேசியுள்ளனர்.

ஆனால் இது பிரேம் தேவிக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியுள்ளது. தமது கணவரிடம் தம்மால் அங்கு சென்று குடியிருக்க முடியாது என மறுத்துள்ளார்.

இருப்பினும் குமார் தொடர்ந்து தமது பெற்றோருடன் அதிக நேரத்தை செலவிட துவங்கினார். இது பிரேம் தேவிக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.

ஞாயிறன்று பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார் பிரேம் தேவி.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், எண்ணெயை ஊற்றிய பிரேம் தேவி மீது கொலை முயற்சிக்கு வழக்குப் பதியப்பட்டுள்ளது.

18 வயதில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன் : பெண்ணின் அதிர்ச்சிப் பதிவு!!

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.

தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன். வைரமுத்துவுக்கு அரசியல் ரீதியான தொடர்பு வலிமையாக இருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாரும் வெளிக்கொண்டு வர முன்வரமாட்டார்கள். ஆனால், எனக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உண்மை என கூறியுள்ளார்.

நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவர் : பரிதாபமாக பலியான சோக சம்பவம்!!

புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 26 வயதான Krupali Nikam. இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து Saudagar பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

Nashik Phata பகுதியை அடையும் போது பட்டம் விட பயன்படுத்தப்படும், மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அறுத்துள்ளது. இதில் நிலைகுலைந்த Krupali நடுவீதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பட்டம் விட்டவர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.